காலை 5 மணிக்கெல்லாம் நானும், க.சீனிவாசன், ஆறுமுகம், செல்வா ஆகியோரும் மெதுவாக எங்கள் அறைகளில் இருந்து கீழே இறங்கி வந்தோம். வரவேற்பறையில் பணியாட்கள் உறங்கிக் கொண்டிருந்தனர். அவர்களை எழுப்பாமல் மெதுவாக வெளியே சென்றோம். காலை பனி சில்லென்றிருந்தது. கைகளில் மாற்றுத்துணிகளுடன் கூடிய பையை மட்டும் எடுத்துக் கொண்டு எங்கள் அறை இருந்த ஓட்டலின் சந்துகளைத் தாண்டி ரோட்டில் இறங்கி நடந்தோம். ஆறுமுகம் சொன்னது போல கங்கை செல்வதற்கு கூகிள் மேப்ஸ் அதிக தூரத்தைத் தான் காட்டியது. நடந்து சென்ற சிறிது தூரத்திற்குள் ஆட்டோக்கள் இரண்டு நிற்பதைக் கண்டோம். எங்கள் நால்வரில் மற்ற மூவருக்கும் இந்தி தெரியும்.
ஒடுகலான காசியின் சந்துகளைப் பார்த்துக் கொண்டே ஆட்டோவில் பயணித்தோம். இன்னும் விடிந்திருக்கவில்லை. உடலை நன்கு மறைத்திருந்தாலும் அந்தக் குளிரில் நடுங்கத்தான் செய்தோம். ஆறுமுகம் ஆட்டோ டிரைவரின் அருகில் அமர்ந்திருந்தார். "ரொம்பக் குளிருது அங்கிள்" என்றார். "நீ வேண்ணா இங்க வா ஆறுமுகம். நான் முன்ன போறேன்" என்றேன். "வேண்டாம் அங்கிள். கொஞ்ச தூரந்தான் இருக்கு" என்றார். இரவிதாஸ் காட் அருகே ஆட்டோ நின்றது.
அங்கிருந்து கரையில் இறங்கி மணல் மற்றும் படித்துறைகளின் வழியாகவே நீராடத் தகுந்த இடத்தைத் தேடிச் சென்றோம். சாகரர்களுக்குக் குலக்கடன் தீர்த்த பகீரதனின் புதல்வி, சாந்தனுவின் மனைவி, பீஷ்மரின் அன்னை அமைதியாகப் பாய்ந்து கொண்டிருந்தாள். பூலோக மாந்தரின் பாபம் போக்க தன்னைக் கீழிறக்கி ஆகாயத்தில் இருந்து பாய்ந்து வரும் அந்த தேவலோக மங்கையை என் வாழ்வில் மூன்றாம் முறையாக தரிசிக்கிறேன். மேனி புல்லரித்தது. மயிர்க்கால்கள் சிலிர்த்து நிற்பது குளிரில்தானோ? மனத்தில் தோன்றிய எண்ணத்தினால்தானோ? தெளிவாக வரையறுக்க முடியவில்லை. இரவில் இருந்த அவசரம் இப்போது இல்லை. மேனியில் தழுவிக் கொள்ளும் முன்னம் விழியால் பருகிவிடவே மனம் துடித்தது. என்ன செய்வது நேரமில்லையே? 7 மணிக்குள் ஓட்டலுக்குத் திரும்ப வேண்டும்.
துளசி காட் வரை நடந்து சென்றோம். இந்த நேரத்திலும் ஓரளவு கூட்டம் இருக்கவே செய்கிறது. அங்கிருந்த அழகான படித்துறையில் நாங்கள் கொண்டு வந்த பைகளை வைத்தோம். செல்வா காவல் இருந்தார். மற்ற இருவரும் நீரில் இறங்கத் தயங்கிக் கொண்டு நின்றனர். கீழே நீரில் ஒரு பெரியவர் காலை சந்திக்கான தன் வழிபாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். ஒரு பெண்மணி பூஜைக்குத் தேவையான பொருள்களை படிக்கட்டில் தயார் செய்து கொண்டிருந்தார். இருவருக்கும் எந்த இடையூறும் செய்துவிடாத கவனத்துடனும், மனமெல்லாம் மஹாபாரதக் கங்கையை நிறைத்துக் கொண்டும் நீரில் இறங்கி கங்காதேவியின் மடியில் தவழத் தொடங்கினேன். வெளியில் இருந்த குளிர் நீரில் இல்லை. அன்னையின் அரவணைப்பு எப்படியிருக்குமோ அதற்குச் சற்றும் குறைந்ததல்ல கங்கையின் ஸ்பரிசம்.
கங்கையின் மறுகரையின் மரங்களுக்குள் மறைந்திருந்த தினகரன், பழுத்துச் சிவந்த கனியைப் போல அடிவானில் உதித்துக் கொண்டிருந்தான். என் நினைவில் தோன்றிய மட்டும் என் வம்சத்தில் தோன்றிய பெரியோர் அனைவரின் பெயர்களையும், முகங்களையும் நினைத்துக் கொண்டு ஒவ்வொருவருக்கும் நீர்க்காணிக்கை அளித்தேன். "வேள்விக் குதிரையைத் தேடி, சாகரம் தோண்டிய சகரனின் மகன்களுக்கு நற்கதியை அளித்த பாகீரதியே, மறுமையடைந்த எங்கள் பெரியோர் அனைவருக்கும் நற்கதியை அளிப்பாயாக. உலக மாந்தரனைவரையும் செழிக்கச் செய்வாயாக" என்று மனதார வேண்டிக் கொண்டேன். நண்பர் க.சீனிவாசன் வந்தார், மூன்று முழுக்கு மூழ்கினார். அப்படியே கரைக்குத் திரும்பி, பைகளைக் காத்துக் கொண்டிருந்த செல்வாவை அனுப்பி வைத்தார். உடன் ஆறுமுகமும் வந்தார். செல்வா நீருக்குள் இறங்கியதும் தெரியவில்லை, கரைக்குத் திரும்பியதும் தெரியவில்லை. வந்த வேகத்திலேயே திரும்பிவிட்டார். நீருக்குள் இறங்கிய ஆறுமுகத்திடம், அவர்கள் குடும்பத்துப் பெரியவர்களை நினைத்துக் கொண்டு நீர்க்காணிக்கை அளிக்கச் சொன்னேன். அவரும் செய்தார். இந்தப் பயணத்தில் இன்னுமொரு முறை கங்கையில் இறங்க முடியுமோ? முடியாதோ? என்ற எண்ணத்தால் தாயை விட்டுப் பிரிய மனமில்லாமல் அடம்பிடிக்கும் பச்சிளங்குழந்தைகளைப் போல குறைந்தது அரை மணிநேரமோ, அதிகபட்சம் ஒரு மணிநேரமோ நண்பர்கள் வற்புறுத்தியும் எழாமல் இருந்தோம். யுகமேயென்றாலும் அதற்கோர் எல்லை வகுக்கப்பட்டிருக்கிறதே. அந்த ஜஹ்னு முனிவரின் காதில் இருந்து வெளிப்பட்ட ஜாஹ்னவியை மனதார வணங்கிக் கரையேறி, நெற்றிநிறைய பட்டை தீட்டிக் கொண்டு, ஒரு படித்துறையில் இருந்த கங்கையன்னையின் ஆலயத்தில் தொழுது அஸி கட்டை அடைந்தோம். இந்த அஸி கட், "அஸி" என்ற நதி கங்கையில் கலக்கும் இடத்தினருகினில் இருக்கிறது. இந்த இடத்திற்கும் கங்கையில் வருணை என்ற ஆறு கலக்கும் இடத்திற்கும் இடையில் கிடக்கும் பகுதியே வாராணசியானது.
மீண்டும் ஆட்டோ நின்ற இடத்திற்கு வந்து சேர்வதற்குள் நண்பர் சீனிவாசன் அவர்கள், மிளகாய்ப்பொடி தூவிய இட்லிகளை வாங்கி வந்தார். விலை மிகவும் மலிவு என்றும் சொன்னார். ஆளுக்கொன்றை எடுத்தோம். நன்றாகத்தான் இருந்தது. அங்கேயே ரோட்டோரக் கடையில் விற்ற டீயைப் பருகினோம். இன்னும் மண்குவளையில் டீ தருகிறார்கள். ஆட்டோவில் ஏறி மீண்டும் ஓட்டலை அடையும்போது மணி ஏழாகியிருந்தது. இன்னும் பலர் புறப்படவே இல்லை. அறைக்குச் சென்று ஈரத்துணிகளைக் காய வைத்துவிட்டு மீண்டும் வெளியே வந்தபோது, பெரியவர் குணசேகரன், ராஜசேகரன் ஆகியோர் உணவருந்துவதற்காக எங்களுக்காகக் காத்திருந்தனர். "கங்கா ஸ்நானம் ஆச்சா?" என்றார் குணசேகரன். "ஆமாம் சார். முழு திருப்தி" என்றேன். "இங்கயும் ஆச்சு. ஓட்டல்ரூம்லயும் கங்கைத் தண்ணிதானே சார் வருது?" என்றார். "சரிதான் சார்" என்றேன். நேற்று ரயிலில் கேட்டபோது மறுத்த குணசேகரனுக்கு இப்போது வருத்தம் என்பது அவரது முக வாட்டத்திலேயே தெரிந்தது.
எங்களுக்கென காலை உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஓட்டல் யுக்கிற்குச் சென்றோம். உணவுண்டு வெளியே வந்ததும், நேற்றுப் பயணித்த பேட்டரி பேருந்து தயாராக இருந்தது. காலை 9 மணி நெருக்கத்தில் விஸ்வநாதர் சந்நிதியை அடைந்தோம்.
பொதுவாக நாங்கள் சென்ற இடம் வரை பேருந்துகளை அனுமதிப்பதில்லை என்று பிற்பாடு அறிந்தோம். மொத்தம் ஆறு வண்டிகள். ரயில் பெட்டிகளைப் போல இடைவெளியில்லாமல் ஒன்றாகத் தான் செல்ல வேண்டும். முன்னால் ஒரு பேட்ரல் ஜீப், பின்னாலும் பந்தோபஸ்துக்குப் போலீசார். வழிநெடுகிலும் போக்குவரத்து நெருக்கடி. ஆங்காங்கே எங்களுக்காகப் போக்குவரத்தை முற்றிலும் நிறுத்தியிருந்தனர். போக்குவரத்து ஸ்தம்பித்திருந்த அந்நிலையிலும் எங்களுக்காக வழிவிட்டுக் காத்திருந்த பாதசாரிகளும், இருசக்கர, மூன்று சக்கர ஓட்டுநர்களும் மகிழ்ச்சியாக எங்களை நோக்கிக் கையசைத்தனர். ஒருசிலர், "வணக்கம் காசி" என்றும் சொல்லினர் போலும். குளிரூட்டப்பட்ட பேருந்து என்பதால் அவ்வொலி எங்களை அடையவில்லை. உதட்டசைவு அவ்வாறே தெரிந்தது.
பின்னிருக்கையின் இறுதியில் அமர்ந்திருந்ததால் எங்கள் பேருந்துக்குள் இருந்த ஒவ்வொருவரையும், வெளியில் இருந்த அனைவரையும் நன்றாகப் பார்க்க முடிந்தது. முன்னர் குறிப்பிட்டிருந்த ரயில் நிகழ்வில், முற்போக்கு பேசியிருந்த ஓர் ஆசிரியர், "என்னதான் இருந்தாலும் மோதியப் பாராட்டித்தாம்பா ஆகணும். இவ்வளவுலாம் யாராலும் செய்ய முடியாது" என்றார். "ஏதேது, தமிழ்நாட்டில் நீரே மோதிக்குப் பிரச்சாரம் செய்வீர் போல" என்றார் ஒருவர். "செஞ்சுட்டா போச்சு; வஞ்சமா செஞ்சுடலாம்" என்றார் ஆசிரியர் நமட்டுச் சிரிப்புடன்.
காசி விசுவநாதனின் வாசலருகில் நிற்கிறோம். அரசியலெதற்கு? நாங்கள் நுழையப் போவது முக்கியஸ்தர்களுக்கு மட்டுமே உரிய வாயில் என்பது அதற்குள் நுழையுமுன் எங்களுக்குத் தெரியாது. வாயிலுக்குள் நுழையும்போதே மேனி ரோஜா மலர் மாரியில் நனைந்தது, ஓதப்படும் மந்திரங்களால் காதுகள் நிறைந்தன. நாட்டின் பிரதமரை வரவேற்பது போல எங்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக வரவேற்றனர். வேறு வழியில் வருவாரின் நீண்ட வரிசை கண்ணில் பட்டது. நாங்கள் விசுவநாதனைத் தரிசிக்கும் வரை அவர்கள் அத்தனை பேரும் காக்க வைக்கப்பட்டனர். எளியோரைத் தடுத்துப் பகட்டாகச் செல்லும் பகல்வேஷக்காரர்களைப் போலச் செல்கிறோமே என்று உடல் கூசியது. இருப்பினும் மத்திய அரசுக்கு எங்கள் பாதுகாப்பு முக்கியமானது. சிறு கீறல் ஏற்பட்டாலும் அதை வைத்து அரசியல் செய்ய ஏகப்பட்ட குள்ளநரிகள் காத்திருக்கின்றன. என்னதான் தவிர்க்க நினைத்தாலும், அரசியல் முட்டிக்கொண்டு வந்து நிற்கத்தான் செய்கிறது.
"ஒரு காலத்தில் மக்களின்றி முக்தர்களால் மட்டுமே நிறைந்திருந்த இந்தப் புண்ணியத்தலத்தில் இந்த எண்ணம் வேண்டாமே. மனத்தை சிவத்திடம் நிலைக்கச் செய்வோம்" என்று அக்கம்பக்கம் பாராமல் ஒருமுகப்பட முயன்று கொண்டிருந்தேன். ஆண்டவனை வேண்டி கைகளை விரித்த போது கைகளில் தாமிரக் கும்பத்தில் கங்கை நீர் கொடுக்கப்பட்டது. வரிசையாகச் சென்றோம். விசுவநாதனுக்கு எங்கள் கைகளில் இருந்த நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதுபோன்ற தரிசனம் பெற என்ன பாக்கியம் செய்தோம்? "பாரதத்தின் தலைமகன் பல்லாண்டு வாழ வேண்டும்; நாடு செழிக்க வேண்டும்; உடன் நாங்களும் வளமும், நலமும் பெற வேண்டும்" என்று வேண்டிக் கொண்டேன். அனேகமாக அனைவரும் அவ்வாறே வேண்டியிருப்பர். கோடி கோடியாகக் கொட்டிக் கொடுத்தாலும், இதுபோன்ற தரிசனம் வாய்க்காதே.
- தொடரும்...