நான் அமர்ந்திருந்த இருக்கையின் வலப்பக்க சாளரமருகில், திண்டிவனத்தைச் சேர்ந்தவரும், ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலரும் (VAO), சிற்றிதழ் ஆசிரியருமான திரு.ஏ.சீனிவாசன் அவர்களும், எதிர் இருக்கையின் வலப்பக்க சாளரமருகில் அரசூரைச் சேர்ந்த அர்ச்சகர் திரு.ஆசைத்தம்பி அவர்களும் அமர்ந்திருந்தனர். எனக்கு நேரெதிரே ஒரு பெரியவர் அமர்ந்திருந்தார். எதிர் இருக்கையின் இடப்பக்கம் காலியாக இருந்தது. பெட்டியின் நடைபாதையைத் தாண்டிய எதிர் இருக்கையில், பல்வேறு வணிக நிறுவனங்களில் பணியாற்றியும், தனியாக வணிக நிறுவனம் நடத்தியும் ஓய்வுபெற்ற திரு.குணசேகர் அமர்ந்திருந்தார். அவருக்கு எதிரே ஐஐடியைச் சேர்ந்த திரு.செல்வா அமர்ந்திருந்தார். இவர்கள் ஒவ்வொருவரும் அவரவர் வழிகளில் பேராளுமைகளாகத் திகழ்ந்தனர். அந்நேரத்தில் எங்கள் கேபினில் இரண்டு இருக்கைகள் காலியாக இருப்பதாகத் தெரிந்தது. செல்வாவின் அருகில் வந்தமர்ந்து பேசிக் கொண்டிருந்த தூத்துக்குடியைச் சேர்ந்த மருத்துவ மாணவர் ஆறுமுகம் என் இடப்பக்க இருக்கைக்கு உரியவர் என்பது பின்னர் தெரிந்தது. இரண்டு ஒன்றாகிவிட்டது. "ஒருவேளை அந்த இருக்கைக்குரிய நபரும் வேறு இடத்தில் இருக்கலாம்; பின்னர் வந்து சேர்ந்து கொள்ளலாம்" என்று தோன்றியது.
நண்பர் க.சீனிவாசன் அவர்களைக் கைபேசியில் அழைத்து, "என்ன சார்? உங்க சீட்ல ஒக்காந்திட்டீங்களா? அங்க ஏதாவது இடம் காலியா இருக்கா?" என்று கேட்டேன். "இங்க ஒருத்தரோட ஒய்ஃப் BE1 கோச்சுல இருக்காங்களாம். அவங்க என் சீட்டுக்கு வந்தா, நான் உங்க கோச்ல இருக்குற அவங்க சீட்டுக்கு வந்திடுவேன்" என்றார். "சரி டிடிஆர் வந்து டிக்கெட்ட செக் பண்ணதுக்கு அப்பறம் பாத்துக்கலாம் சார்" என்று சொல்லி இணைப்பைத் துண்டித்தேன்.
சிறிது நேரத்தில், என் வலப்பக்கத்தில் அமர்ந்திருந்த சிற்றிதழ் ஆசிரியர் திரு.ஏ.சீனிவாசன் அவர்கள், தன் சிற்றிதழின் ஒரு பிரதியைக் கொடுத்து அங்கே இருந்த அனைவரிடமும் தன்னை அறிமுகம் செய்து கொண்டார். அப்படி அவர் பேசிக் கொண்டிருந்தபோது அவரும், அவருக்கு எதிர் இருக்கையில் அமர்ந்திருந்த அர்ச்சகர் திரு.ஆசைத்தம்பி அவர்களும் பக்கத்து ஊர்க்காரர்கள் என்பதை அறிந்து கொண்டு, பரஸ்பரம் அங்கங்குள்ள சூழ்நிலைகளை விசாரித்துக் கொண்டனர். அதன்பிறகுதான் எங்கள் கேபினில் உள்ளவர்களின் பெயர்களையும், அவர்கள் ஒவ்வொருவரும் பேசிக் கொள்ளும்போது அறிந்து கொண்டேன். அதைத்தான் முதல் பத்தியில் குறிப்பிட்டிருந்தேன்.
டிக்கெட் பரிசோதகர் வந்து இருக்கைகளையும், ஆட்களையும் சரிபார்த்துக் கொண்டிருந்தபோது, என் எதிரிருக்கையின் இடப்பக்க இருக்கைக்கு உரிய நபர் வரவில்லை என்பது தெரிந்தது. மகிழ்ச்சியடைந்தேன். என்னுடன் வந்த நண்பருக்கும் என் எதிரிலேயே இருக்கை வாய்க்கப் போகிறது. அந்த இருக்கைக்கு விண்ணப்பித்தும், காப்புத் தொகைக் கட்டியும் வந்து சேராத அந்த மஹாத்மாவை மனதாரப் புகழ்ந்தேன். மனித மனம்தான் எத்தனை வக்கிரம் வாய்ந்தது. வாழ்வில் ஒருவருக்கும் கிட்டமுடியாத மகோன்னதமான பயணத்தில் ஒருவர் கலந்து கொள்ள முடியாமல் போனது மற்றொருவனுக்கு மகிழ்ச்சியைத் தருகிறதே. இந்த நினைப்பு வெட்கத்தால் என்னைக் கூனிக்குறுகச் செய்தது.
டிக்கெட் பரிசோதகர் வந்து சென்றதும், BE3 பெட்டியில் உள்ள என் நண்பரின் நிலை என்ன என்பதை அறிந்து வரச் சென்றேன். போகிற வழியில் தென்படும் அனைத்து முகங்களையும் மனத்தால் எடைபோட்டுக் கொண்டே சென்று கொண்டிருந்தேன். ஒவ்வொரு முகமும் எத்தனையெத்தனை உணர்வுகளை வெளிப்படுத்துகின்றன என்பதை ஆய்வு செய்யும் மனம்தான் எத்தனை உற்சாகங்கொள்கிறது? BE1 பெட்டியிலிருந்து BE2 பெட்டியைக் கடக்கும்போது, கழிவறையின் அருகில், கைகள், முகங்களை அலம்பும் தொட்டியின் எதிரில் ஒரு பெர்த் இருப்பதைக் கண்டேன். அதில் மூன்று போலீசாரும் இருந்தனர். பெட்டிகளை இணைக்கும் வழியைக் கடந்து சென்றபோது அங்கும் சில போலீசாரைக் கண்டேன். இப்படியே ஒவ்வொரு பெட்டியின் இரண்டு முனைகளிலும் இரண்டோ, மூன்றோ போலீசார் இருந்தனர். எங்கள் பயணம் முழுவதும் அவர்கள் எங்களைப் பாதுகாத்து வந்தனர். எந்த நிலையத்தில் ரயில்வண்டி நின்றாலும், உடனே கீழே இறங்கி மற்ற பெட்டிகளிலிருந்தோ, நிலையத்திலிருந்து புதிதாகவோ வேறு பயணிகள் யாரும் எங்கள் பெட்டிகளை அணுகிவிடாதபடி அரணாக அணிவகுத்து நின்றனர். எங்கள் பெட்டிகளில் வந்த பயணியர் கீழே இறங்கினால், அவர்களையும் அந்த அரணைத் தாண்டிச் செல்ல விடுவதில்லை. எங்கள் அடையாள அட்டைகளைக் கொண்டும், தொப்பிகளைக் கொண்டும் எங்களை எளிதாக அடையாளங்காண்பதற்காகவே பயணத்தின் தொடக்கத்தில் எப்போதும் அவற்றைத் தரித்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டோம். அந்தக் காவலர்கள் எப்போதும் எங்களிடம் நல்ல முறையில் நடந்து கொண்டனர்.
BE3 பெட்டியை அடைந்ததும், நண்பர் சீனிவாசன் இருக்கைக்குச் சென்று அவரது எதிரில் இருந்தவரை நெருக்கியபடி அமர்ந்தேன். "என்ன சார், ஒங்க கோச்ல என்ன நிலைமை?" என்று கேட்டார் நண்பர். "ஒரு எடமிருக்கு; பாப்போம்" என்றேன். "நேரமாகிடுச்சே இப்போவே வந்திடவா?" என்றார். "சரி" என்று நான் சொல்வதற்குள், அவருக்கு எதிரில் நடைபாதை சாளரமருகில் அமர்ந்திருந்த விஜயபாரதம் இதழின் முன்னாள் நிர்வாகி திரு.சிவக்குமார் அவர்களிடம் என்னை அறிமுகம் செய்து வைத்தார். அவரும் என்னிடம் தன்னை அறிமுகம் செய்து கொண்டார். BE1 கோச்சில் இருக்கிறார் என்று என் நண்பர் சொன்னது அவரது மனைவியைத்தான் என்பதையும் அறிந்து கொண்டேன். திரு.சிவக்குமார் அவர்களிடம் விடைபெற்றுக் கொண்டு நாங்கள் இருவரும் BE1 கோச்சில் உள்ள எங்கள் கேபினுக்குச் சென்றோம். அங்கே ஏற்கனவே அறிமுகாகியிருந்தவர்களுக்கு என் நண்பர் க.சீனிவாசன் அவர்களை அறிமுகம் செய்து வைத்தேன்.
இடமிருந்து இராண்டமவர் சௌதாமணி, அதற்கடுத்தவர் நான் குறிப்பிடும் மற்றொரு பெண்மணி வலக்கடைசியில் இருப்பவர் ஆறுமுகம்
தூர்தர்ஷன் முன்னாள் செய்தி வாசிப்பாளரும், பாஜக நிர்வாகியுமான சௌதாமணி அவர்கள் எங்கள் பயணத்தில் கலந்து கொள்ளும் 216 பேரையும் ஒருங்கிணைக்கும் அணியில் இருந்தார். அவ்வப்போது ஒவ்வொரு கேபினாக வந்து சில அறிவிப்புகளை அறிவிப்பார். காலை உணவு வழங்கப்பட்டு, நாங்கள் அனைவரும் உண்டு முடித்ததும், ஒவ்வொருவரிடமும் வந்து விசாரித்தார். அவரும், அவருடன் இருந்த மற்றொரு பெண்மணியும் இந்த எட்டு நாள் பயணம் முழுவதும் பிஞ்சுகளை கவனித்துக் கொள்ளும் அன்னையரைப் போல அனைவரையும் கவனித்துக் கொண்டனர். அவ்வகையில் இந்தப் பயணத்தில் உடன் வந்த அனைவரும் இவர்களுக்குக் கடமைப்பட்டிருக்கின்றனர்.
ஆசைத்தம்பி அவர்கள் சாளரக் காட்சிகளைக் கண்டவாறே இங்கே என்ன விளைகிறது, அங்கே மண் எப்படி இருக்கிறது என்று பார்த்துப் பார்த்துச் சொல்லிக் கொண்டிருந்தார். அர்ச்சகராக இருந்தாலும் விவசாயமும் செய்து வருகிறாராம். பயிர்களின் வகைகள், மண் வகைகள், உரப்பொருட்கள், தண்ணீர் பாய்ச்சும் முறைகள் என பல விஷயங்களைப் பேசிக் கொண்டே வந்தார். எனக்கு எதிரே அமர்ந்திருந்த பெரியவர், தமக்கு வேண்டியவர்கள் இருக்கும் வேறு கேபினுக்குச் சென்றுவிட்டார். அந்த இருக்கை காலியானதால் திரு.ஆசைத்தம்பி அவர்கள் யாருக்கோ போன் பேசி அழைத்தார். எதிர்முனையில் இருந்தவர் வசதியாக அமர்ந்து விட்டார் போலும். அதனால் இங்கே வரவில்லை. அதற்குள் மற்றொருவர் இடம் காலியாக இருப்பதை அறிந்து எனக்கு எதிரில் அமர்ந்து கொண்டார். பெயர் இராஜசேகரன், அரசூரைச் சேர்ந்தவர். விவசாயம் செய்தவர். இப்போது பெட்டிக் கடை வைத்திருக்கிறார். இவை பேச்சுவாக்கில் விசாரித்து அறிந்தவை. ஆசைத்தம்பியும், ராஜசேகரனும் ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள் என்பதால் பல விஷயங்களை அன்யோன்யமாகப் பேசி வந்தனர். அதேபோல நானும், என் நண்பரும் எங்கள் தொழில் நிமித்தமாக எங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தோம். மற்றவர்களும் அவ்வாறே இருவராகவோ, மூவராகவோ பேசிக் கொண்டிருந்தனர். பிறகு, எங்கள் கேபினில் இருந்த ஒவ்வொருவரும் தங்கள் தொழில் குறித்தும், அவரவர் செய்யும் இதரப் பணிகள் குறித்தும் அறிமுகம் செய்து கொண்டோம்.
பரபரப்பு அடங்கியிருந்த வேளையில், ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த சடகோபன் அவர்கள் நடைபாதையில் வந்து கொண்டிருந்தார். என்னை அடையாளங்கண்டு என் அருகே அமர்ந்து, மஹாபாரதம், ஹரிவம்சம், தற்போது செய்து வரும் இராமாயணம் ஆகியவற்றைப் புகழ்ந்து பாராட்டினார். என்னைச் சுற்றிலும் இருந்த அனைவரும் தங்கள் பேச்சை நிறுத்திவிட்டு, நாங்கள் பேசிக் கொண்டிருப்பதைக் கவனித்தனர். சடகோபன் சென்ற சிறிது நேரத்தில், சிறுவாணி வாசகர் மையத்தின் ஜி.ஆர்.பிரகாஷ் அவர்கள் நான் வசதியாக அமர்ந்திருக்கிறேனா என்பதை அறிந்து போக அங்கே வந்தார். கொஞ்ச நேரம் அமர்ந்து பேசிவிட்டு, அவரும் சென்ற பிறகு எங்கள் கேபினில் இருந்த ஒவ்வொருவரும் மஹாபாரதம் குறித்தும், அது நிறைவடைய எத்தனை வருடங்கள் ஆயிற்று எனவும் தனித்தனியாக விசாரித்தனர். அதில் சிற்றிதழ் ஆசிரியர் ஏ.சீனிவாசன், வணிகம்புரிந்து ஓய்வு பெற்றவரான பெரியவர் குணசேகர், மருத்துவ மாணவர் ஆறுமுகம் ஆகியோர் பெரும் வியப்படைந்தனர்.
மதியம் உணவு முடிந்து ஆர அமரப் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது யூடியூர் திருமதி சுஜாதா வேணுகோபாலன் அவர்கள், பயணிகளிடம் காசி குறித்த செய்திகளைக் கேட்டுப் பேட்டி எடுத்துக் கொண்டிருந்தார். மருத்துவ மாணவர் ஆறுமுகம் அவர்கள், திருவாசகம், தேவாரம், சிவபுராணம் உள்ளிட்ட பலவற்றிலிருந்து செய்யுள்களை மேற்கோள்காட்டி அருமையான பேட்டியொன்றைக் கொடுத்தார். எனக்கு அத்தனை வியப்பு. வயது இருபதோ, இருபத்தொன்றோ இருக்கும். இதற்குள் இவ்வளவு ஞானமா? ஞானசம்பந்தரைக் காணாத குறைக்கு ஆறுமுகத்தைக் காண்கிறோமென மனம் சொன்னது. அந்த யூடியூபர் சென்றதும் ஆறுமுகத்தை அழைத்துப் பாராட்டினேன். "அங்கிள், நீங்க எவ்ளோ பெரிய ஆள், நீங்க இப்படிலாம் சொல்றது உங்க பெருந்தன்மையக் காட்டுது" என்றார். "எப்பா, உன்னோட சேர்ந்து காசிக்கு வர்றது எனக்கு எவ்வளவு பெரிய பெருமை தெரியுமா?" என்றேன். பிறகு, இதுபோன்ற இலக்கியங்களில் எவ்வாறு பரிச்சயம் ஏற்பட்டது, யார் சொல்லிக் கொடுத்தார்கள்? எப்போதிருந்து இவற்றைப் பயில்கிறார் என்பன குறித்த பலவற்றை அவரிடம் விசாரித்தேன். எங்கள் கேபினில் இருந்த குணசேகர், செல்வா, ஏ.சீனிவாசன் ஆகியோர் ஆறுமுகத்தை உச்சிமுகராக் குறையாக பாராட்டு மழை பொழிந்தனர். அதுமுதலே நானும் ஆறுமுகமும் நெருக்கமாகிவிட்டோம்.
விஜயவாடா நெருங்கும்போது இசைமுழக்கம் காதைப் பிளந்தது. என்ன என்று பார்ப்பதற்குள், "காசிக்கு போறவங்கள வரவேற்று, வழி அனுப்ப ஸ்டேசன்ல மக்கள் காத்திக்கிட்டு இருக்காங்களாம்" என்று யாரோ ஒருவர் சொன்னார். "வணக்கம் காசி", "வாழ்க தமிழ்", "பாரத் மாதா கி ஜய்", "வந்தே மாதரம்" போன்ற முழக்கங்கள் விண்ணை முட்டின. நல்ல வரவேற்பினை நல்கினர் விஜயவாடா மக்கள். கீழே இறங்கி அந்த உற்சாகத்தில் கலந்து கொண்டு திரும்பும்போது, சிறுவாணி வாசக மையத்தின் ஜி.ஆர்.பிரகாஷ் அவர்களுடனும், என் நண்பர் க.சீனிவாசன் அவர்களுடனும் சேர்த்து ஒரு பெண்மணி புகைப்படம் எடுத்துத் தந்தார். அங்கே ஒரு மூட்டை இலந்தைப் பழங்களையும், வாழைத்தார்களையும் பயணியருக்குக் கொடுத்தனர். அஃது ஒரு கோச்சைத் தாண்டி எங்கள் பெட்டிக்கு வரவில்லை என்பது வேறுவிஷயம். விஜயவாடா ரயில்நிலையத்தில் ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டோம்.
விஜயவாடா தாண்டியதும், ஆசைத்தம்பி அவர்களுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. எங்கிருந்து அழைப்பு வந்தததோ அந்த இடத்திற்கே நேரடியாகக் கேட்டுவிடுமளவுக்கு உரத்த குரலில் பேசிய அவர், "ப்பா, ராஜமரியாதையோட போயிட்டிருக்கோம்பா, இந்தப் பக்கம் நாலு போலீசு, அந்தப் பக்கம் நாலு போலீசு. சாப்பாடெல்லாம் அருமையா இருக்கு. ஏசி கோச்சு. அருமையா பிரயாணிக்குறோம். எந்தக் குறையும் இல்ல" என்றார். அனேகமாக அவருக்கு வந்த அழைப்புகள் அனைத்திற்கும் இவ்வாறே பதில் சொல்லிக் கொண்டிருந்தார். இராஜசேகரும் அவ்வாறே சொன்னார் என்றாலும், மிக மென்மையாகச் சொல்லிக் கொண்டிருந்தார். குணசேகர் அவர்கள் அப்போதைக்கப்போது தன் மனைவிக்குச் செய்திகளைச் சொல்லிக் கொண்டிருந்தார். அக்கம்பக்கத்து கேபின்களிலும் பேச்சுகள் இவ்வாறே இருந்தன.
இவ்வாறான பேச்சுகள் தொடரும்போது எப்படியும் பாரதப் பிரதமரையும் பாராட்ட வேண்டிவரும் அல்லவா? அப்படி ஒரு கேபினில் மோதியை யாரோ பாராட்டப் போக, மற்றொருவர் சூடாகி விவாதித்துக் கொண்டிருந்தார். "அவரு அப்பன் வீட்டு பணத்துலயா குடுக்கிறாரு? நம்ம பணம்யா?" என்றார். ஒவ்வொரு கேபினையும் தாண்டும்போது, "கம்யூனிசம்", "தமிழ் ஈழ விடுதலை", "தனித்தமிழ் நாடு" போன்ற தலைப்புகளில் பயணிகள் விவாதிப்பதையும் கேட்டேன். எங்கள் பெட்டியின் ஒரு மூலையில் திடீரென்று ஒரே கூச்சலும் குழப்பமாக இருந்தது. என்ன என்று விசாரித்தால், சில பெண்கள் பாடல்களைப் பாடி வந்தார்களாம். அதில் இயேசுவின் பெருமைகளைச் சொல்லும் பாடல்களைப் பாடினார்களாம். அதை ஒரு பெண்மணி கேட்கப் போக, "இது ஒன்னும் ஆன்மீகச் சுற்றலா இல்ல. தமிழுக்கான சுற்றுலா?", "அவங்க பாடினா, உங்களுக்கு ஏன் எரியுது", "மதப்பிரச்சனைகளையெல்லாம் இங்கே கொண்டு வர்றாதீங்க?" போன்ற குரல்களும் ஆங்காங்கே எழுந்தன. பயண ஒருங்கிணைப்பாளர்கள் வந்து அந்தப் பிரச்சனையைத் தீர்த்து வைத்தனர். பிரச்சனைகளை யார் உண்டாக்குகிறார்கள்? யார் பாதிக்கப்படுகிறார்கள்? என்பதில் தமிழகத்தில் பிறந்தோரின் புரிதல் பார் புகழும் உச்சத்தில் கோலோச்சிக் கொண்டிருக்கிறது.
இரவு உணவை முடித்துக் கொண்டு, சிறிது நேரம் பேசிவிட்டு அனைவரும் உறங்க ஆயத்தமானோம். எனக்கு நடுப்படுக்கையும், என் நண்பர் க.சீனிவாசன் அவர்களுக்கு மேல் படுக்கையும் கிடைத்தன. நண்பருக்கு கால் பிரச்சனை இருப்பதால் நான் மேல் படுக்கையை எடுத்துக் கொண்டேன். மேல் படுக்கையில் ஒடுக்கமான பக்கத்தில் தலைவைத்தால் மூச்சு முட்டுவது போலத் தோன்றியது. மறுபக்கம் தலைவைத்துப் படுத்தேன். ஏசி காற்று முகத்திற்கு நேராக வீசியது. போர்வையால் முகத்தையும் சேர்த்து மூடிக்கொண்டு படுத்துறங்கினேன்.
அதிகாலை 4.30க்கெல்லாம் விழிப்புத் தட்டியது. வேறு யாரும் எழவில்லை. மேலிருந்து கீழே இறங்கினால் அனைவருக்கும் தொந்தரவாக இருக்கும். சரி கொஞ்சம் நேரம் படுத்தே கிடப்போம் என்று நினைத்து, இரவில் மின்னூட்டம் கொடுக்கப் பொருத்தியிருந்த கைபேசியை எடுத்தேன். கிண்டில் மென்பொருளைத் திறந்து, பாரதியின் மனைவி திருமதி.செல்லம்மா அவர்கள் எழுதிய "பாரதியார் சரித்திரத்தை" எடுத்தேன். அப்புத்தகத்தில் உள்ள செய்திகளை என் நினைவில் மீளுருவாக்கம் செய்யத் தொடங்கினேன். ஏற்கனவே படித்ததுதான் என்றாலும், அனுமான் படித்துறைக்குச் செல்ல நேர்ந்தால் இந்நினைவுகள் ஏற்படுத்தும் சிலிர்ப்பை முழுமையாக அடைவதற்காக சற்று வேகமாகவே பக்கங்களை நகர்த்திச் சென்றேன். படித்துறையை அடைவதற்கு இன்னுமொரு நாள் மீதமிருக்கையிலேயே கூட உண்மையில் மேனியெங்கும் புல்லரித்தது.
மணி ஐந்தானதும், மேல்படுக்கையைவிட்டு மெல்ல இறங்கினேன். காலைக்கடன்களை முடித்துக் கொண்டு, முடிந்த அளவுக்கு புறத்தையும், அகத்தையும் தூய்மை செய்து கொண்டு, மீண்டும் என் கேபினுக்கு வந்தேன். இன்னும் அனைவரும் தூங்கிக் கொண்டுதான் இருந்தனர். கீழ்ப்படுக்கையில் ஆசைத்தம்பி அவர்கள் சற்று ஒடுங்கிப் படுத்திருந்தார். அந்த இருக்கையிலேயே நான் சற்று ஒடுங்கி அமர்ந்து கொண்டேன். டீ வந்தது. ஒவ்வொருவராக எழுந்து, டீயைக் குடித்துவிட்டுத் தங்கள் காலைக்கடன்களை முடித்து விபூதி பட்டைகளுடன் ஆதிகால முனிசிரேஷ்டர்களைப் போலப் பரிசுத்தமாக வந்தமர்ந்தனர். எங்கு சென்று கொண்டிருக்கிறோம் என்று கைபேசி மென்பொருளில் தேடியபோது ஜபல்பூரை நோக்கிச் சென்று கொண்டிருப்பது தெரிந்தது. முந்தைய நாளைப் போலவே ஆசைத்தம்பி அவர்கள் நிலங்களின் தன்மை, பயிர் ஆகியவற்றை விளக்கிக் கொண்டே வந்தார். இன்னும் எங்கள் கேபினில் இருந்த அனைவரும் நாள் முழுவதும் அரசியல், ஆன்மிகம், பண்பாடு, அவரவரின் உள்ளூர் நிகழ்வுகளெனப் பல செய்திகளைப் பேசிக் கொண்டே சென்றோம்.
மத்தியபிரதேசத்தின் ஜபல்பூரில் பாஜகவினரும், பொதுமக்களும் இசை முழக்கத்துடன் எங்களுக்கு வரவேற்பளித்தனர். அனைவருக்கும் திலகமிட்டு, கழுத்தில் அணியும் மங்கலத் துண்டைப் போர்த்தினர். எங்கள் பெட்டிகளில் இருந்த பலரும் கீழே இறங்கி வரவேற்புக்குழுவினருடன் கொண்டாடிவிட்டு மீண்டும் ரயிலில் ஏறினர். எங்களின் காசி பயணத்தை இத்தனை மக்கள் கொண்டாடுகிறார்கள் என்பதைக் காணும் போது மனம் மகிழ்ச்சியில் திளைத்தது. சமோசா, பிஸ்கட்டுகள் வந்தன. ஒரு மூட்டை நிறைய கமலா ஆரஞ்சுப் பழங்களும் வந்தன என்று நினைவு. சிறிது நேரத்தில் காலை உணவையும் உண்டோம். மனமும், வயிறும் நிறைந்திருந்தன. மத்தியபிரதேசத்தின் கத்னி, சத்னா ரயில்வே நிலையங்களிலும் மேற்கண்டவாறே வரவேற்பு பலமாக இருந்தது.
சத்னா என்றதும் உடனே நினைவுக்கு வந்தது, 2019ல் அப்பாவின் அஸ்தியைக் கரைப்பதற்காகக் காசி சென்றபோது நடந்த நிகழ்வுதான். சென்னை திரும்புவதற்கு நாங்கள் முன்பதிவு செய்திருந்தது பட்னா எக்ஸ்பிரஸ் என்ற நினைவு. காசியில் காரியங்களையெல்லாம் முடித்துவிட்டு நாங்கள் முன்பதிவு செய்திருந்த ஸ்லீப்பர் பெட்டியில் சென்னை நோக்கித் திரும்பும்போது, இரவில் சத்னாவின் அருகில் ரயில் மெதுவாகச் சென்று கொண்டிருந்தது. எங்கள் பக்கத்துக் கேபினில் ஓர் அலறல் சத்தம். சாளரத்தைத் திறந்து வைத்துக் கொண்டு வேடிக்கைப் பார்த்து வந்த ஒரு பெண்மணியின் கழுத்தில் இருந்து பொன்னாலான தாலிச் சங்கிலியை அந்தச் சாளரத்தின் வழியே கள்வன் எவனோ பறித்துவிட்டான். அந்தப் பெண்மணிக்குக் கழுத்தில் காயம். சங்கிலி வலுவாக இருந்திருந்தால் உயிருக்கே கேடாக முடிந்திருக்கலாம். இன்னும் இரண்டு மூன்று கோச்சுகளிலும் அதே போன்ற நிலைமை. டிடிஆரிடம் பேசி, ஓடும் ரயிலிலேயே காவல்துறையில் புகாரளித்தனர் அந்தப் பெண்மணியின் உறவினர்கள். சங்கிலி போனது போனதுதான். இதுபோன்ற நிகழ்வுகள் இங்கே அடிக்கடி நடப்பது வழக்கந்தான் என்பதையும் கேள்விப்பட்டோம். காவல்துறை பந்தோபஸ்துடன் ஏசி கோச்சில் செல்லும்போது அது குறித்துக் கவலைப்பட வேண்டாமெனினும், அந்நிகழ்வு ஏற்படுத்திய பீதியை எங்கள் கேபின் இருந்த அனைவருடனும் பகிர்ந்து கொண்டேன். இப்போதாவது அந்த வழக்கம் ஒழிந்துவிட்டதா என்பது தெரியவில்லை.
சத்னாவைக் கடந்து, மதிய உணவெல்லாம் முடிந்ததும் மாணிக்பூர் என்ற நிலையத்தில் ரயில் கொஞ்சம் நேரம் நின்றது. எங்கள் பெட்டிகளுக்கு யாரும் வந்துவிடாமல் காவல்துறையினர் அரணாக அணிவகுத்து நின்று கொண்டிருந்தனர். வண்டியை எடுக்க சிறிது நேரமானதால் ஒருசிலர் கீழே இறங்கிப் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது எங்கள் பெட்டியின் பக்கமாக கோலாஹலாஸ் டிவி சீனிவாசன் அவர்கள் வந்து கொண்டிருந்தார். என்னுடன் இருந்தவர்கள் அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அவரும் பரபரப்பில்லாமல் இருந்ததால், நானும் அவருடன் ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டேன். போலீசார் விசில் ஊதியதும் அனைவரும் ரயிலில் ஏறிக் கொண்டோம். ரயில் மீண்டும் புறப்பட்டது.
அனைவரும் அமர்ந்து மீண்டும் பேசத் தொடங்குகையில், "ஒரு வேளை காசிக்கு இரவு 7.30 மணிக்கெல்லாம் போயிட்டோம்னா, ஓட்டல் ரூம்ல பேகெல்லாம் வச்சிட்டு, கங்கைக் கரைக்குப் போகணும்" என்றேன். "அங்க பயங்கரக் குளிர்னு சொல்றாங்க. அதெல்லாம் போகாதீங்க" என்றார் பெரியவர் குணசேகர். "யாரும் வரலனாலும் நான் தனியாவாவது போகத்தான் போறேன். எப்படியும் நம்ம தங்குற ஓட்டல் ஏதாவதொரு படித்துறை கிட்டதான் இருக்கும்" என்றேன். "அங்கிள், நான் வர்றேன் அங்கிள்" என்றார் ஆறுமுகம். "சரி ஆறுமுகம். நாம எதிர்பார்க்கிற மாதிரி டைமுக்குப் போனா பாக்கலாம்" என்றேன்.
இரயில் 7.30 மணிக்கெல்லாம் தீன்தயாள் உபாத்யாயா நிலையத்தை அடைந்தது. இந்த ரயில் நிலையம் முன்பு மொகல் சராய் என்று அழைக்கப்பட்டு வந்தது; 2018ல் பெயர் மாற்றம் பெற்றது. நிலையத்தில் இறங்கிய அனைவருக்கும் மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. வந்திருந்த ஒவ்வொரு பயணிக்கும் மாலை மரியாதைகள் செய்து, சிவப்புக் கம்பள வரவேற்புக் கொடுத்தனர். ரயில் 7.30 மணிக்கு வந்தடைந்திருந்தாலும், நாங்கள் இறங்கிய நடைமேடையிலிருந்து, ரயில் நிலையத்திற்கு வெளியே எங்களுக்காகக் காத்திருந்த பேருந்துகளைச் சென்றடைவதற்குள் 8.30 ஆகியிருந்தது. அவ்வளவு தடபுடலான உற்சாக வரவேற்பு. அன்று ஒவ்வொருவர் கழுத்திலும் எத்தனையெத்தனை மாலைகள் விழுந்தனவோ, அதை பரமனே அறிவான். ஒவ்வொரு பயணியும் தன்னை ஒருநாள் முதல்வராகவோ, பிரதமராகவோ நிச்சயம் உணர்ந்திருப்பார் என்றால் அது மிகையல்ல. அந்த மாவட்டத்தின் கலெக்டர், எஸ்பி போன்றோரும், பாஜகவினரும், பொதுமக்கள் பலரும் அவ்வளவு மகிழ்ச்சியுடன் எங்கள் அனைவரையும் வரவேற்றனர்.
வாத்திய முழக்கங்களும், மங்கல கோஷங்களும் ககனத்தையே பிளந்திருக்கும். (இதை கோலாஹலாஸ் டிவி சீனிவாசன் அவர்கள் அற்புதமான காணொளியாகவே பகிர்ந்திருக்கிறார். விருப்பமிருப்போர் அவரது யூடியூப் சேனலைப் பார்க்கவும்). ஒருவரும் முதல்வருக்கு ஜே, பிரதமருக்கு ஜே, எங்கள் தலைவருக்கு ஜே என்று கதறவில்லை. "பாரத் மாதா கி ஜய்" என்றும், "வணக்கம் காசி", "தமிழ்வாழ்க", "வந்தே மாதரம்" என்றும்தான் கர்ஜித்தனர். இரயிலைவிட்டு இறங்கிய முதல் அடியில் இருந்து, ரயில் நிலையத்தின் முகப்பு வளாகத்தில் வைத்த இறுதி அடி வரை சிவப்புக் கம்பளத்தில்தான் அனைவரும் நடந்து வந்தோம். எங்கள் மூன்று பெட்டிகளைத் தவிர மற்ற பெட்டிகளில் வந்த பயணிகளுக்கு நிச்சயம் அது சிரமத்தை அளித்திருக்கும் என்றாலும், அவர்களும் இந்தக் கொண்டாட்டங்களில் கலந்து கொண்டு எங்களைப் பார்த்து மகிழ்ச்சியுடன் கையசைத்தனர். இவர்கள் மட்டுமா இனி எங்கள் பயணம் முழுவதும் நாங்கள் காண இருந்த மக்கள் அனைவரும் அன்பை மட்டுமே வெளிப்படுத்தினார்களேயன்றி, எங்களுக்காகக் காத்திருப்பதில் வருத்தப்படுவதாக ஒரு அறிகுறியையும் வெளிப்படுத்தவில்லை.
முற்றாக பேட்டரியிலேயே இயங்கும் 8 பேருந்துகள் எங்களுக்காகக் காத்திருந்தன. ரயிலில் இருந்த போதே 28 நபர்கள் கொண்ட குழுக்களாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் எங்களைப் பிரித்திருந்தனர். எங்கள் குழுவின் பெயர் "கவிக்குயில்" என்பதாகும். இது எங்களுடன் வந்த ஒருவர் (எங்கள் குழுவின் தலைவர்) நடத்தும் பத்திரிகையின் பெயரெனப் பின்னர் அறிந்தேன். அனைவருக்கும் அவரவருக்குரிய பேருந்தின் எண் தெரியும். பேருந்துகளில் அனைவரும் அடைக்கலமானதும், பேருந்துகள் ஒவ்வொன்றாக ரயில் நிலையத்தைவிட்டு மெல்ல மெல்ல நகர்ந்தன. கவிஞர் சுராகி எங்கள் பேருந்து எண் 6ல் இல்லை என்பது நண்பர்களான எங்கள் இருவருக்கும் வருத்தம்தான். இரவு 9.30 இருக்குமென நினைக்கிறேன். பேருந்துகள் "ஹோட்டல் யுக்" என்ற உணவுவிடுதியில் நின்றன. அனைவருக்கும் அங்கேயே இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தெலங்கானா தாண்டும் வரை நன்றாக இருந்த ரயில் உணவு, அதன் பிறகு வேகாத அரிசிச் சோற்றுடன் சலிப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் இங்கே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரவுணவு தென்னிந்திய முறையில் தயாரிக்கப்பட்டு பஃபே முறையில் தமிழ் மக்களாலேயே பரிமாறப்பட்டது. உணவும் நல்ல பதத்தில் சுவையாக இருந்தது. பத்து மணிக்கு மேல் நாங்கள் தங்க வேண்டிய நவ்நீதா கிராண்ட் ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டும். இருவருக்கு ஓரறை என்ற முறையில் அனைவருக்கும் அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. அருமையான அறைகள். திட்டமிட்டபடி இறங்கிய அன்றே கங்கையில் நீராட முடியவில்லையே என்பது மட்டுமே குறையாக இருந்தது.
காசியில் இறங்கியதும் எங்களுக்கென நிர்ணயம் செய்யப்பட்ட ஒருங்கிணைப்பாளர் சம்பந்தம் அவர்கள், ஒவ்வொரு அறையாகத் தட்டி, "நாளைக்குக் காலைல 8 மணிக்கெல்லாம், குளிச்சு முடிச்சுட்டு டிபனுக்குத் தயாராகிடணும்" என்றார். "இந்தப் பயணத்திட்டத்துல கங்கைல குளிக்கிறதுக்கு ஏதாவது ஏற்பாடு இருக்கா?" என்று அவரிடம் கேட்டேன். "இல்லை சார். எல்லாரையும் பாதுகாக்க முடியாதில்லையா?" என்றார். ஆறுமுகமும், செல்வாவும் எங்களுக்கு எதிரறையில் தங்கியிருந்தனர். ஆறுமுகத்திடம், "காலைல 5 மணிக்கு ரெடியா இரு. கங்கைக்குப் போவோம்" என்றேன். "இங்கிருந்து ரொம்ப தொலைவா காட்டுது அங்கிள்" என்று தன் தொலைபேசியைக் காட்டினார் ஆறுமுகம். "பாத்துக்கலாம்பா, காலைல ரெடியா இரு" என்று சொல்லிவிட்டு, என் அறைக்குத் திரும்பி, உடற்தூய்மையை மீட்டுக் கொண்டு நிம்மதியாகப் படுத்துறங்கினேன். காசியில் கிடக்கும்போது நிம்மதிக்கா பஞ்சமேற்படும்?
- தொடரும்...