இவ்வருடம் ஏப்ரல் முதல், நண்பர்களிடம், "திருப்பியும் ஒரு தடவ காசிக்குப் போகணும்" என்று அப்போதைக்கப்போது சொல்லிக் கொண்டிருந்தேன். நாட்கள்தான் நகர்ந்து கொண்டிருந்தனவேயொழிய அதற்கான வழியும், நேரமும் கிட்டாதிருந்தன. விஸ்வநாதன் அருள்கூர வேண்டுமே. ஏற்கனவே இரண்டு முறை காசி சென்றிருக்கிறேன்[1] என்றாலும் மீண்டும் செல்ல வேண்டுமென்று ஏதோவொன்று மனத்தைத் தூண்டிக் கொண்டே இருந்தது. அடுத்த சுற்றுலா என்று யார் பேசினாலும், "காசிக்குப் போலாமே?" என்று அவர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தேன்.
[1] 2014ம் ஆண்டில் நண்பர்களுடன் ஏற்கனவே காசி சென்றிருந்தேன். அந்தப் பயணக் குறிப்புகளை அறிய https://mahabharatham.arasan.info/2014/05/A-Trip-to-Ganga.html , https://mahabharatham.arasan.info/2014/05/A-Trip-to-Ganga2.html , https://mahabharatham.arasan.info/2014/05/A-Trip-to-Ganga3.html என்ற சுட்டிகளுக்குச் செல்லவும். இரண்டாம் முறை சென்றது என் தந்தையின் அஸ்தியைக் கரைக்க என்பதால், அது குறித்த பயணக்குறிப்பேதும் எழுதவில்லை.
இந்நிலையில், நவம்பர் தொடக்கத்தில் என்று நினைக்கிறேன், ராஷ்டிரிய சுவயம் சேவகரும், என் தொழில் வாடிக்கையாளரும், நண்பருமான கவிஞர் சுராகி (சு.ராதாகிருஷ்ணன்) அவர்கள் தொலைபேசியில் அழைத்திருக்கிறார். அவசரமேதுமில்லாமல் அழைக்கக்கூடிய நபரல்ல அவர். இருப்பினும், ஏதோ வேலையாக இருந்ததாலும், கைபேசியை சைலன்ட் மோடில் வைத்திருந்ததாலும் அவரது அழைப்பை நான் உணரவில்லை. சிறிது நேரங்கழித்துதான் பதிலுக்கு அவரை அழைத்தேன்.
"காசி தமிழ் சங்கமம்னு ஒரு நிகழ்ச்சி, காசில நடக்கப் போகுது. மத்திய அரசே ஏற்பாடு செய்யுது. நீங்க வர்றீங்களா?" என்றார்.
விஸ்வநாதனின் குரல் செவிப்பறைகளில் விழுவதை உணர்ந்த நான், "காசினா மறுப்பேனா சார்? எவ்வளவு பட்ஜெட்?" என்று கேட்டேன்.
"எல்லா செலவுகளையும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே கவனிச்சிப்பாங்க. அதுக்காக உள்ள பிரத்யேக வலைத்தளத்தில் நீங்க பதிவு செஞ்சுக்கணும்" என்றார்.
அவர் சொன்ன அடுத்த வினாடியே https://kashitamil.iitm.ac.in/ என்ற வலைத்தளத்தில் பதிவு செய்து கொண்டு, என் நண்பர்கள் ஒவ்வொருவரையும் அழைத்து, "இப்படி ஒரு வாய்ப்பிருக்கு. நீங்களும் பதிவு செஞ்சுக்கோங்க" என்று சொன்னேன். நண்பர்களில் பலருக்கு நேரமும், சூழ்நிலையும் ஒத்துழைக்கவில்லை. விக்ரம் ஆப்செட் பிரிண்டர்ஸ் உரிமையாளரும், என் நண்பருமான க.சீனிவாசன் மட்டும், "நீங்க போறீங்கனா நானும் வர்றேன்" என்றார். நான் எனக்குப் பதிவு செய்து கொண்டதற்கும், அவருக்கு நான் பதிவு செய்ததற்கும் இடையில் 2 மணிநேரம் இருக்கும். இவ்வாறு பதிவு செய்து கொண்டோமே தவிர, 2,500 பேரை அழைத்துச் செல்வதாக அறிவித்தாலும் 35,000 விண்ணப்பங்கள் வந்து சேர்ந்தன என்ற செய்தியால், "நமக்கு வாய்ப்பில்லை" என்றே நம்பிக் கொண்டிருந்தோம். "ஒரு முயற்சி செய்து பார்க்கிறோம். கனிந்தால் அந்த விளைச்சலை அனுபவிக்கப் போகிறோம்" என்ற நினைவே மனத்தில் உறைந்திருந்தது. நவம்பர் 22ம் தேதி காசிக்குப் புறப்படும் 3ம் குழுவான "இலக்கியம்" பிரிவில் விண்ணப்பித்திருந்த எங்களுக்கு 17ந்தேதி வரை எந்த அறிவுப்பும் வராததால், "சரி இம்முறை வாய்ப்பில்லை போலும். ஆனால் நிச்சயம் காலந்தாழ்த்தாமல் சொந்த செலவிலாவது மிக விரைவில் காசிக்குச் செல்ல வேண்டும்" என அன்று நாங்கள் சந்தித்த போது பேசிக்கொண்டோம்.
நண்பர் க.சீனிவாசன் அவர்கள் என் அலுவலகத்தில் இருந்து சென்று 5 நிமிடந்தான் இருக்கும், "Congratulations for being shortlisted for Kasi Tamil sangamam" என்ற அறிவிப்பு மின்னஞ்சலில் வந்தது. எனக்கெல்லாம் அவ்வளவு மகிழ்ச்சி. நண்பருக்குச் சில அவசர வேலைகள் இருந்ததால் சற்றுத் தயங்கத் தொடங்கினார். "இந்த வாய்ப்பெல்லாம் கிடைக்காது சார். முடிஞ்சளவுக்கு வர்றதுக்கு முயற்சி பண்ணுங்க. காப்புப் பணமா ரூ.1500/- கட்டி, திருப்பியும் ஒரு பதிவு செய்யச் சொல்லியிருக்காங்க. அந்தப் பணமும், நம்ம திரும்புவதற்குள்ள திரும்பி வந்துடும். என்ன சொல்றீங்க?" என்று கேட்டேன். "சரி" என்றார். இவ்வாறு பணத்தைக் கட்டிவிட்டு காத்திருந்த 17 முதல் 22 வரை ஒரு யுகமாகத் தெரிந்தது. அந்தப் பெருங்காலத்திற்குள் எங்களுக்கு வேண்டிய ஏற்பாடுகள் அனைத்தையும் செய்து கொண்டோம். நண்பரும் விடிய விடிய வேலை செய்து தன் பணிகள் அனைத்தையும் நிறைவேற்றிய திருப்தியுடன் நவம்பர் 22க்காகக் காத்திருந்தார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் அவ்வப்போது தொடர்பு கொண்டபடியே இருந்தனர்.
புறப்பட வேண்டிய அன்று காலை 6.30க்கெல்லாம் திருவொற்றியூரில் மெட்ரோவில் ஏறினேன். அடுத்த ஸ்டேசனில் நண்பர் க.சீனிவாசன் காத்திருந்தார். காலை 7.15க்கு ரிப்போர்ட்டிங் டைம். 9.15க்கு கயா எக்ஸ்பிரஸ் புறப்படும். 7 மணிக்கெல்லாம் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் மத்திய தொடருந்து நிலையத்தை (சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேசனை) அடைந்தோம். எப்போதும் 8 மணிக்கு எழுந்து பழகியவன், அன்று 4.30 மணிக்கெல்லாம் எழுந்ததால், இவ்வளவு நேரத்திற்கெல்லாம் பசிக்கத் தொடங்கியிருந்தது. ரயில் நிலையத்திலேயே உள்ள ஓர் உணவு விடுதியில் காலை சிற்றுண்டியை முடித்துக் கொண்டு வெளியே வந்தால், கோலாஹலாஸ் டிவி சீனிவாசன் அவர்கள் வந்து கொண்டிருந்தார். முன்பின் அறிமுகமில்லாதவரெனினும், அடிக்கடி தொலைக்காட்சியில் தோன்றி நம் மனத்துக்கு இசைவான கருத்துகளை அடுக்கும் அவருக்கு வணக்கந்தெரிவித்து விட்டு, கவிஞர் சுராகியைக் கைபேசியில் தொடர்பு கொண்டேன். 6.30 மணிக்கே வந்துவிட்டதாகவும், கயா எக்ஸ்பிரஸ் நிற்கும் நடைமேடைக்கு முன்பு காசி தமிழ் சங்கமப் பயணிகளுக்கென நாற்காலிகள் போடப்பட்டிருக்கும் இடத்தில் தான் இருப்பதாகவும் தெரிவித்தார்.
நாங்கள் அமர்ந்த நாற்காலிகளுக்கு முன் வரிசையில் சிறுவாணி வாசகர் மையத்தின் ஜி.ஆர்.பிரகாஷ் அவர்கள் அமர்ந்திருந்தார். ஏற்கனவே கோயம்பத்தூரில் நடந்த "மஹாபாரதம் நிறைவு விழாவில்" சந்தித்திருப்பதால் எளிதாக அடையாளங்கண்டு விசாரித்தார். வ.வே.சு.ஐயர் அவர்கள் எழுதிய புத்தகம் ஒன்றையும், பாரதியார் புகைப்படமொன்றையும், சிறுவாணி வாசகர் மையத்தின் துண்டறிக்கைகள் சிலவற்றையுங் கொடுத்துச் சில நிமிடங்கள் உரையாடிக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் கவிஞர் சுராகி அவர்கள், கோலாஹலாஸ் டிவி சீனிவாசன் அவர்களிடம் என்னை அறிமுகம் செய்து வைத்தார். எங்களை வழியனுப்பி வைப்பதற்காக திருவொற்றியூரில் இருந்து திரு.கோட்டீஸ்வரன் தலைமையிலான "சமூக சேவை சங்கத்தினர்" வந்திருந்தனர். வயது எண்பதானாலும் அசராமல் சமூகத் தொண்டுகளைச் செய்துவரும் அவர் வந்து, மரியாதைகள் செய்து வழியனுப்பி வைத்தது நாங்கள் பெற்ற பாக்கியம். அப்போது, விஜயபாரதம் பத்திரிகையின் துணை ஆசிரியர் திரு.பிரவீன் குமார் அவர்களும் எங்களிடம் தன்னை அறிமுகம் செய்து கொண்டார்.
காசிக்குச் செல்லும்போது எவ்வாறு இருக்க வேண்டும், என்னென்ன பொருள்களை வைத்திருக்க வேண்டுமென நிகழ்வேற்பாட்டு நிர்வாகிகள் மைக்கில் எங்களுக்கு அறிவுறுத்தினர். பிறகு ஒவ்வொருவராகச் சென்று அவர்கள் அளித்த அடையாள அட்டையையும், பயணத்திற்குத் துணையான பொருள்களுடன் பரிசளிக்கப்பட்ட பையையும் பெற்றுக் கொண்டோம். இரயில் புறப்படுவதற்கு 15 நிமிடங்கள் இருக்கையில், எங்களை வழியனுப்பி வைப்பதற்காக பாஜகவின் மாநிலத் துணைத் தலைவர் வி.பி.துரைசாமி அவர்கள் வந்திருந்தார். ஒவ்வொருவருக்கும் ஒரு ரோஜாப்பூவும், தண்ணீர் பாட்டிலும் கொடுத்தார். எனக்கு 3ர்ட் ஏசியில் BE1 பெட்டியில் 24ம் இருக்கையும், நண்பர் சீனிவாசனுக்கு BE3 பெட்டியில் 40ம் இருக்கையும் ஒதுக்கப்பட்டிருந்தது. கவிஞர் சுராகிக்கு எந்தப் பெட்டி என்பதைக் கேட்கவில்லை. அவரவர் பெட்டிக்குச் சென்று, எவரெவர் நம் கேபினில் உடன் பயணிக்கப் போகின்றனர் என்பதை அறியும் ஆவலுடன் தங்கள்தங்கள் இருக்கைகளில் அமர்ந்தோம். நல்ல மங்கல வாழ்த்து கோஷங்களுடன் ரயில் மெல்ல நகர்ந்தது. மணி சரியாக 9.15 ஆகியிருந்தது.
- தொடரும்...