Mandakini | Ayodhya-Kanda-Sarga-095 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: மந்தாகினி ஆற்றின் அழகை சீதையிடம் வர்ணித்த ராமன்...
அப்போது அந்தக் கோசலேச்வரன் {ராமன்}, மலையில் இருந்து விலகி, சுப ஜலத்துடன் கூடிய ரம்மியமான மந்தாகினி நதியை மைதிலியிடம் காட்டினான்.(1)
ராஜீவலோசனனான {தாமரைக் கண்ணனான} ராமன், சந்திரனுக்கு ஒப்பான வதனமுடையவளும், அழகிய இடையுடையவளுமான விதேஹ ராஜன் {ஜனகனின்} மகளிடம் {பின்வருமாறு} பேசினான்:(2) "விசித்திரமான {பல்வேறு வகையான} மணற்திட்டுகளைக் கொண்டதும், ஹம்ச சாரஸங்களால் {அன்னப்பறவைகளாலும், நாரைகளாலும்} சேவிக்கப்படுவதும், மலர்களால் மறைக்கப்பட்டதுமான இந்த ரம்மியமான மந்தாகினி நதியைப் பார்.(3) புஷ்பங்களையும், பழங்களையும் கொண்ட நானாவித மரங்களால் மறைக்கப்பட்ட இதன் தீர்த்தங்கள் {கரைகள்} ராஜராஜனின் {குபேரனின்} தாமரையோடையைப் போல ஒளிர்ந்து கொண்டிருக்கின்றன.(4) மிருகங்கள் {மான்கூட்டங்கள்} பருகி கலங்கடித்த கலங்கலான நீரைக் கொண்ட இந்த ரமணீகரமான தீர்த்தங்கள் இப்போது என்னுள் உற்சாகத்தைத் தூண்டுகின்றன.(5)
பிரியே {அன்பே}, ஜடையும், மான்தோலும், சிறந்த மரவுரியுந் தரித்த ரிஷிகள் குறிப்பிட்ட காலங்களில் இந்த மந்தாகினி நதியில் மூழ்கி எழுகின்றனர்.(6) விசாலாக்ஷி {நீள்விழியாளே}, கடும் விரதங்களைக் கடைப்பிடிக்கும் வேறு சில முனிவர்களும், நியமப்படி தங்கள் கைகளை உயர்த்தி இங்கே சூரியனை உபாசிக்கிறார்கள்.(7) நதிக்கரைகளில் இலைகளையும், புஷ்பங்களையும் உதிரச் செய்யும் மாருதனால் {காற்றால்} சிகரங்களை {உச்சிகளை} அசைக்கும் மரங்கள், பர்வதமே ஆடுவதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகின்றன.(8)
சில இடங்களில் மணி போல் தெளிந்த நீரைக் கொண்டதும், சில இடங்களில் மணற்திட்டுகளுடன் ஒளிர்வதும், சில இடங்களில் சித்தர்களால் நிறைந்ததுமான இந்த மந்தாகினி நதியைப் பார்.(9) மெல்லிடையாளே, வாயுவால் அசைக்கப்பட்ட புஷ்பங்களில் சிலகுவியல்கள் சிதறிக் கிடப்பதையும், மற்றவை ஜலமத்தியில் மிதப்பதையும் பார்.(10) கல்யாணி, இனிய குரல் படைத்த சக்கரவாகப் பறவைகள் சுபமான துவனிகளை வெளியிட்டுக் கொண்டு அவற்றின் {பூக்குவியலின்} மேல் வீற்றிருக்கின்றன.(11) நகரத்தில் {அயோத்தியாபுரியில்} வசிப்பதைக் காட்டிலும், நீ தரிசிக்கும் அழகிய மந்தாகினியையும், சித்திரகூடத்தையும் தரிசிப்பதையே நான் அதிகம் விரும்புகிறேன்.(12)
களங்கங்களில் இருந்து விடுபட்டவர்களும், தபம், கட்டுப்பாடு, பொறுமை ஆகியவற்றை நாடுபவர்களுமான சித்தர்கள் நித்தமும் இதன் ஜலத்தைக் கலக்குவதால், நீயும் என்னுடன் {இந்நதிக்குள்} இறங்குவாயாக.(13) பாமினியே {அன்புக்குரியவளே}, சீதையே, செந்தாமரைகளையும், வெண்தாமரைகளையும் மூழ்கச் செய்து, ஒரு சகியை {தோழியைப்} போல மந்தாகினி நதிக்குள் இறங்குவாயாக.(14) வனிதையே, வியாலங்களை {காட்டு விலங்குகளை} புரஜனங்களாகவும் {நகர மக்களாகவும்}, இந்தப் பர்வதத்தை அயோத்தியாகவும், இந்த நதியையே சரயுவாகவும் நீ நித்தம் கருதி வருகிறாய்.(15)
வைதேஹி, தர்மாத்மாவான லக்ஷ்மணன் என் ஆணைகளுக்குக் கீழ்ப்படிகிறான், நீயும் என்னிடம் பிரியத்துடன் அனுகூலமாக இருக்கிறாய்.(16) உன்னுடன் சேர்ந்து, மூன்று வேளை நீராடி, தேன், கிழங்கு, பழங்களை உண்ணும் நான் இனி ராஜ்ஜியத்தையோ, அயோத்தியையோ விரும்பமாட்டேன்.(17) {ஒன்றோடு ஒன்றுடனான} பகை மறந்து நீர் பருக வரும் கஜ {யானை}, சிம்ம வானரங்களுடன் {குரங்குகளுடன்} கூடியதும், முற்றும் மலர்ந்த எண்ணற்ற மலர்களால் அலங்கரிக்கப்பட்டதுமான இந்த ரம்மியமான இடத்தில்[1] களைப்பு விலகாதவர்கள்; சுகமடையாதவர்கள் எவருமில்லை" {என்றான் ராமன்}.(18)
[1] நுரைக் கொழுந்து எழுந்து ஓங்கி நுடங்கலால்நரைத்த கூந்தலின் நங்கை மந்தாகினிஉரைத்த சீதை தனிமையை உன்னுவாள்திரைக்கை நீட்டி செவிலியின் ஆட்டினாள்- கம்பராமாயணம் 1947ம் பாடல்பொருள்: கொழுந்து போல் ஓங்கியெழும் நுரைகள் வளைந்து சூழ்வதால், நரைத்த கூந்தலைக் கொண்ட நங்கை போலுள்ள மந்தாகினி {கங்கை}, இங்கே பாடப்படும் சீதையின் தனிமையை கருதி செவிலித் தாய் போல அலைகளாகி கைகளை நீட்டி அவளை நீராட்டினாள்.
இரகுவம்ச வர்தனனான ராமன், அந்த ஆற்றை {மந்தாகினி நதியைக்} குறித்து இவ்வாறான தகுந்த பல சொற்களைப் பேசியபடியே நயன அஞ்சனம் {கண்மை} போல் பிரகாசிக்கும் ரம்மியமான சித்திரகூடத்தில் தன் பிரியசகியுடன் {அன்புக்குரிய தோழியுடன்} சஞ்சரித்தான்.(19)
அயோத்தியா காண்டம் சர்க்கம் – 095ல் உள்ள சுலோகங்கள்: 19
Previous | | Sanskrit | | English | | Next |