Lakshmana's Anger | Ayodhya-Kanda-Sarga-096 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: பெரும்படையின் ஆரவாரத்தை அருகில் கேட்ட ராமன்; உண்மையை அறிய லக்ஷ்மணனைத் தூண்டியது; பரதனின் படையைக் கண்ட லக்ஷ்மணனின் கோபம்...
இவ்வாறு அந்த கிரியில் பாயும் {மந்தாகினி} நதியை, மைதிலியான {மிதிலையின் இளவரசியான} அந்த சீதையிடம் காட்டி, கிரிபிரஸ்தத்தில் {அந்தச் சித்திரகூட மலைச்சாரலில்} அமர்ந்து, மாமிசம் கொடுத்து அவளை நிறைவடையச் செய்தான் {அவளது பசியைத் தீர்த்தான் ராமன்}.(1) தர்மாத்மாவான அந்த ராகவன், சீதையிடம், "இது தூய்மையானது {புத்தம் புதிய இறைச்சி}, இது சுவையானது, இது அக்னியில் நன்கு சமைக்கப்பட்டது" என்றான்.(2)
அவன் இவ்வாறு அங்கே அமர்ந்திருந்த போது, நெருங்கி வரும் பரதனின் சைனியம் எழுப்பிய புழுதியும், சப்தமும் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்தன.(3) இதற்கிடையில் அந்த மஹத்தான சப்தத்தைக் கேட்டு பீதியால் பீடிக்கப்பட்ட அந்தந்த இனங்களைச் சார்ந்த மதங்கொண்ட தலைமை விலங்குகள், ஆங்காங்கே திசைகள் அனைத்திலும் ஓடின.(4) அந்த ராகவன் {ராமன்}, சைனியத்தால் உண்டான அந்த சப்தத்தையும் கேட்டான்; ஓடிக்கொண்டிருக்கும் அந்தத் தலைமை விலங்குகள் அனைத்தையும் கண்டான்.(5)
ஓடும் அவற்றைக் கண்டும், அவற்றின் அலறலைக் கேட்டும், தேஜஸ்ஸுடன் பிரகாசித்துக் கொண்டிருந்த சௌமித்ரியான லக்ஷ்மணனை நோக்கி ராமன் {பின்வருமாறு} சொன்னான்:(6) "ஐயோ லக்ஷ்மணா, சுமித்ராசுப்ரஜா {சுமித்திரையின் நன்மகனே}, இடியின் கம்பீரத்துடன் கூடிய பயங்கரமான ஆரவாரவொலி அதோ கேட்கிறது பார்.(7) அரண்யத்தின் தலைமை கஜங்கள் {யானைகள்}, மஹாவனத்தின் மஹிஷங்கள் {எருமைக்கடாக்கள்} என மிருகங்கள் அனைத்தும் சிம்மத்தால் பீதியடைந்தவற்றைப் போலத் திடீரெனப் பல்வேறு திசைகளில் ஓடுகின்றன.(8) சௌமித்ரியே, எந்த ராஜாவோ, ராஜகுமாரனோ மிருக வேட்டைக்கு வந்திருக்கிறானா? அல்லது குரூரவிலங்குகள் {நாய்கள்} ஏதேனும் திரிகின்றனவா? என்பதை அறிவாயாக.(9) லக்ஷ்மணா, இது பக்ஷிகளும் அடைவதற்கரிய கிரியாகும். இவை யாவற்றையும் சீக்கிரத்தில் உள்ளபடியே துல்லியமாகக் கண்டறிவாயாக" {என்றான் ராமன்}.(10)
அந்த லக்ஷ்மணன் துரிதமாகச் சென்று புஷ்பித்திருக்கும் ஒரு சால மரத்தில் {ஆச்சா மரத்தில்} ஏறி, திசைகள் அனைத்திலும் பார்வைச் செலுத்தி, பூர்வதிசையை {கிழக்குத் திசையை} நோக்கினான்.(11) பிறகு வடக்கை நோக்கி நிமிர்ந்த போது, ரத {தேர்கள்}, அச்வ {குதிரைகள்}, கஜங்கள் {யானைகள்} நிறைந்ததும், சிறந்த காலாட்படையுடன் கூடியதுமான ஒரு மஹத்தான சம்முவை {படையைக்} கண்டான்.(12) அச்வகஜங்களை சம்பூர்ணமாகக் கொண்டதும் {குதிரைகள், யானைகளால் நிறைந்ததும்}, துவஜங்களால் அலங்கரிக்கப்பட்ட ரதங்களுடன் {கொடிகளால் அலங்கரிக்கப்பட்ட தேர்களுடன்} கூடியதுமான அந்த சேனையைக் குறித்து ராமனிடம் சொல்லிவிட்டு, இந்தச் சொற்களையும் {லக்ஷ்மணன்} சொன்னான்:(13) "ஆரியரே {பெருமானே}, அக்னியை அணைப்பீராக. சீதை குகைக்குச் செல்லட்டும் {மறைவான இடத்திற்குச் செல்லட்டும்}. உமது வில்லில் நாணேற்றுவீராக. சரங்களுடன், கவசமுந்தரித்து ஆயத்தமாக இருப்பீராக" {என்றான் லக்ஷ்மணன்}.(14)
புருஷவியாகரனான {மனிதர்களிற்புலியான} ராமன், லக்ஷ்மணனிடம் மறுமொழியாக, "சௌமித்ரியே, இது யாருடைய படை என்று நினைக்கிறாய்? சரியாகப் பார்" என்றான்.(15)
இராமன் இவ்வாறு சொன்னதும், பாவகனை {அக்னியைப்} போல கொதித்துக் கொண்டிருந்த லக்ஷ்மணன், அந்த சேனையை எரித்து விடுபவனைப் போல {பின்வரும்} வாக்கியங்களைச் சொன்னான்:(16) "கைகேயிசுதனான பரதன், {மன்னனுக்குரிய} அபிஷேகத்தைப் பெற்று, ராஜ்ஜியத்தை மிகச் சரியாக {குறைவின்றி} அடையும் விருப்பத்தில் நம்மிருவரையும் கொல்ல வருகிறான் என்றே வெளிப்படுகிறது[1].(17) அதோ மிகப் பெரியதும், அழகான கிளைகளுடன் கூடியதுமான மரம் பிரகாசமாகத் தெரிகிறது. அந்த {சீமை அத்தி / மாதுளை மரத்தின் சின்னம் பொறிக்கப்பட்ட} கோவிதாரத்வஜம் ரதத்தின் மீது ஜொலிக்கிறது.(18) சிலர் தங்கள் விருப்பப்படி சீக்கிரமாகச் செல்லும் அச்வங்களின் {குதிரைகளின்} மீதேறி வருகின்றனர். இன்னும் சிலர் கஜங்களின் {யானைகளின்} மேலேறி மகிழ்ச்சியுடன் பிரகாசிக்கின்றனர்.(19) வீரரே, நாம் தனுசுகளை எடுத்துக் கொண்டு, இந்த கிரியில் தஞ்சம் அடையலாம், அல்லது முழு தயாரிப்புகளுடன் ஆயுதபாணிகளாக இங்கேயே இருக்கலாம்.(20)
[1] பரதன் இப்படைகொடு பார்கொண்டவன் மறம்கருதி உள் கிடந்தது ஓர் கறுவு காதலால்விரதம் உற்று இருந்தவன் மேல் வந்தான் இதுசரதம் மற்று இலது எனத் தழங்கு சீற்றத்தான்- கம்பராமாயணம் 2401ம் பாடல்பொருள்: நிலத்தைக் கைப்பற்றி ஆளும் பரதன், தன் மனத்தில் உள்ள வஞ்சனையோடு கூடிய ஒரு பேராசையால், இந்தச் சேனையைக் கொண்டு போர் செய்யக் கருதி, தவ விரம் மேற்கொண்டுள்ள ராமன் மேல் படையெடுத்து வந்திருக்கிறான். இதுவே உண்மை; வேறொன்றும் இல்லை என்று எண்ணி பெருங்கோபமடைந்தான் லக்ஷ்மணன்.
இராகவரே, அந்த கோவிதாரத்வஜம் நம் வசமாகுமா? உமக்கும், சீதைக்கும், எனக்கும் உண்டான மகத்தான விசனத்திற்கு {துன்பத்திற்குக்} காரணமான பரதனை நாம் காண்போமா?(21) ஹே! வீரரே, ராகவரே, எவன் நிமித்தமாக சாசுவதமான {அழிவில்லாத} ராஜ்ஜியத்தை நீர் இழந்தீரோ, அத்தகைய பகைவனான பரதன் இங்கே வருகிறான். அவனை நான் வதம் செய்யப் போகிறேன்.(22) இராகவரே, பரதனை வதம் செய்வதில் தோஷமேதும் நான் காணவில்லை. பூர்வத்தில் தீங்கிழைத்தவனைக் கொல்வது அதர்மமென விதிக்கப்படவில்லை.(23) இராகவரே, பரதன் தர்மத்தைக் கைவிட்ட பூர்வ அபகாரியாவான் {பூர்வத்தில் அபகாரம் செய்திருக்கிறான் / தீங்கிழைத்திருக்கிறான்}. அவன் கொல்லப்பட்டதும் மொத்த வசுந்தரையையும் {பூமியையும்} ஆள்வீராக.(24)
இராஜ்ஜியத்தில் பேராசை கொண்ட கைகேயி, ஹஸ்தியால் {யானையால்} முறிக்கப்படும் மரத்தைப் போல இன்று போரில் என்னால் கொல்லப்படும் அவளது புத்திரனை பெருந்துக்கத்துடன் காணப்போகிறாள்.(25) கைகேயியையும், {மந்தரை உள்ளிட்ட} அவளைச் சேர்ந்தவர்களையும், மற்றுமுள்ள அவளது பந்துக்களையும் {உறவினர்களையும்} நான் வதம் செய்யப் போகிறேன். இன்று மேதினி {பூமி} ஒரு மஹாபாபத்திலிருந்து விடுபடப் போகிறது.(26) மாநதரே {கௌரவத்தை அளிப்பவரே}, அடக்கி வைத்திருந்த குரோதத்தையும் {கடுங்கோபத்தையும்}, அசத்காரத்தையும் {அநீதியால் அடைந்த அவமானத்தையும்}, விறகின் மீது {இடப்படும்} ஹுதாசனனை {நெருப்பைப்} போல சத்ரு சைனியங்களின் மீது இன்று பிரயோகிக்கப்போகிறேன்.(27)
இன்று என் கூரிய சரங்களால் சத்ருக்களின் சரீரங்களைச் சிதைத்து, சித்திரகூடத்தின் இந்தக் கானகத்தை குருதியால் நனைக்கப் போகிறேன்.(28) என்னுடைய சரங்களால் ஹிருதயம் பிளக்கப்படும் குஞ்சரங்களையும் {யானைகளையும்}, துரகங்களையும் {குதிரைகளையும்}, என்னால் வீழ்த்தப்படும் நரர்களையும் இழிந்த விலங்குகள் {நாய்கள்} இழுத்துச் செல்லப் போகின்றன.(29) இந்த மஹாவனத்தில் பரதனையும், அவனது சைனியத்தையும் ஒழித்து, என் சரங்களுக்கும், தனுசுக்கும் நான் பட்டிருக்கும் கடனில் இருந்து விடுபடுவேன்" {என்றான் லக்ஷ்மணன்}.(30)
அயோத்தியா காண்டம் சர்க்கம் – 096ல் உள்ள சுலோகங்கள்: 30
Previous | | Sanskrit | | English | | Next |