Royal high way | Ayodhya-Kanda-Sarga-080 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: வனத்துக்குச் செல்ல அயோத்தி முதல் கங்கை வரையிலான பாதையைச் சிற்பிகள் செப்பனிட்டு சீர்திருத்தியது...
பிறகு பூமிப்பிரதேசங்களை அறிந்தவர்களும், சூத்திர கர்ம விசாரதர்களும் {நூல் பிடித்து அளப்பதில் நிபுணர்களும்}, சொந்த தொழில்களைச் செய்வதில் சூரர்களும், கனகர்களும் {சுரங்கம் தோண்டுபவர்களும்}, யந்திரகர்களும் {இயந்திரங்களைச் செய்யும் வல்லுநர்களும்},(1) கர்மாந்திகர்களும் {பணியாட்களும்}, ஸ்தபதிகளும் {கட்டடக் கலைஞர்களும்}, யந்திரகோவித புருஷர்களும் {இயந்திரப் பணிகளில் திறன்மிக்க மனிதர்களும்}, தச்சர்களும், மார்கிணர்களும் {சாலைகளை அமைப்பவர்களும்}, விருக்ஷதக்ஷகர்களும் {மரம் வெட்டுபவர்களும்},(2) கிணறு வெட்டுபவர்களும், மேடுபள்ளங்களைச் செப்பனிடுபவர்களும், சுண்ணம் பூசுவதில் திறன்மிக்கவர்களும், வம்ச கர்ம கிருத சமர்த்தர்களும் {பரம்பரைத் தொழில் செய்வதில் [கூடை முடைவதில், தோல் பதனிடுவதில்] திறன்மிக்கவர்களும்}, திரஷ்டாரர்களும் {கண்காணிப்பாளர்களும், மற்ற அனைவருக்கும்} முன்பே புறப்பட்டுச் சென்றனர்.(3) அந்த இடத்திற்கு மகிழ்ச்சியாகப் பிரயாணித்த பெரும் ஜனத்திரள், பௌர்ணமியில் மஹாவேகத்துடன் பெருகும் சாகரத்தைப் போலப் பிரகாசித்தது.(4)
பாதையைச் செப்பனிடுவதில் வல்லவர்கள், தத்தமக்குரிய வேலைகளை நிச்சயம் செய்து கொண்டு, விதவிதமான கருவிகளுடன் முன்னே சென்றனர்.(5) படர்ந்திருக்கும் கிளைகளையும், கொடிகளையும், புதர்களையும், மரவேர்களையும், கற்களையும், வித விதமான மரங்களையும் அவர்கள் வெட்டினர்.(6) சிலர், கோடரிகள், உளிகள், அரிவாள்கள் ஆகியவற்றால் வெட்டினர். இன்னும் சிலர், விருக்ஷங்களற்ற இடங்களில் விருக்ஷங்களை நட்டனர்.(7) மேலும் பலமிக்கவர்களான வேறு சிலர், வலிமைமிக்க விலாமிச்சை வேர்களை அகற்றி ஆங்காங்கே சமமற்றிருந்த பகுதிகளை சமமாக்கினர்.(8) இன்னும் சிலர், பாழுங்கிணறுகளையும், அகலமான குழிகளையும் மண்ணால் தூர்த்தனர். சிலர், சுற்றிலும் உள்ள பள்ளங்களை நிரவி சமமாக்கினர்.(9)
சில நரர்கள், பொடி செய்யத்தக்கவற்றை பொடித்தும், பிளக்க வேண்டியவற்றைப் பிளந்தும், பாலம் கட்டவேண்டிய இடங்களில் பாலங்களைக் கட்டினர்.(10) பல விதமான வடிவங்களையும், அளவுகளையும் கொண்டவையும், நீர் நிறைந்தவையும், சாகரத்திற்கு ஒப்பானவையுமான பிரவாஹங்களை {கால்வாய்களை} குறுகிய காலத்திற்குள்ளாகவே அவர்கள் அமைத்தனர்.(11) ஜலமற்ற வறண்ட இடங்களில், சுற்றிலும் திண்ணைகளால் அலங்கரிக்கப்பட்டவையும், பல்வேறு வடிவங்களைக் கொண்டவையுமான உத்தமமான கிணறுகளைத் தோண்டினர்.(12)
சேனைகள் செல்வதற்கான அந்தப் பாதை, சுண்ணாம்பால் பூசப்பட்டு, {இரு புறங்களிலும்} நன்கு பூத்த மரங்களுடன், மதங்கொண்ட பறவை கணங்களின் சப்தம் நிறைந்திருக்க, {இரு புறங்களிலும்} பதாகைகளாலும் {கொடிகளாலும்}, {சுற்றிலும்} நானாவித புஷ்பங்களாலும் அலங்கரிக்கப்பட்டு, சந்தனங்கலந்த நீர் தெளிக்கப்பட்டு ஸுரர்களின் பாதைக்கு ஒப்பாக {தேவர்களின் பாதை போல} ஒளிர்ந்தது.(13,14)
ஆணையின் பேரில் பணியில் நியமிக்கப்பட்ட நரர்கள், சுவைமிக்க பழங்கள் ஏராளமாகக் கிடைக்கக்கூடிய ரம்மியமான இடங்களில் யுக்தியுடன் பிறருக்கு ஆணையிட்டனர்.(15) மஹாத்மாவான பரதனுக்கென ஏற்படுத்தப்பட்ட நிவேசனங்களை {வசிப்பிடங்களை / கூடாரங்களைப்} பல வகை ஆபரணங்களால் அலங்கரித்தனர்.(16) தத்விதர்கள் {சோதிடர்கள்}, மஹாத்மாவான பரதனின் நிவேசனங்களை {வசிப்பிடங்களை} மங்கல நக்ஷத்திரங்கள், முஹூர்த்தங்களில் ஸ்தாபிக்கச் செய்தனர்.(17)
முழுமையும் மணல் பரப்பப்பட்டு, சுற்றிலும் அகழியால் சூழப்பட்டு, இந்திரகீலத்தைப் போல் அலங்கரிக்கப்பட்டு, அகன்ற வீதிகள் அமைக்கப்பெற்று,{18} வரிசையான மேடைகள் நிறைந்த மதிற்சுவர்கள் சூழ, பதாகைகளால் அலங்கரிக்கப்பட்டு, மஹாபாதைகள் நிர்மாணிக்கப்பட்டு,{19} ஆகாயத்தில் ஊர்ந்து செல்லும் விமானங்களைப் போன்ற நுனிகளுடன் அமைக்கப்பட்ட அந்த நிவேசனங்கள் {வசிப்பிடங்கள் / கூடாரங்கள்} சக்ரபுரத்தை {இந்திரனின் நகரத்தைப்} போல ஒளிர்ந்து கொண்டிருந்தன.(18-20)
விதவிதமான மரங்களுடன் கூடிய கானகத்தின் மத்தியில், குளிர்ந்ததும், தெளிந்ததுமான நீரையும், மஹா மீனங்களையும் {பெரும் மீன்களையும்} கொண்ட ஜாஹ்னவி {கங்கை} வரை நீண்டிருப்பதும்,(21) சிறந்த சிற்பிகளால் நிர்மாணிக்கப்பட்டதும், ரம்மியமானதுமான அந்த நரேந்திர மார்க்கம் {அரச பாதை}, தாரகை மண்டலங்களுடன் கூடிய சந்திரனால் இரவு நேரத்தில் ஒளியூட்டப்படும் தெளிந்த வானைப் போல ஒளிர்ந்து கொண்டிருந்தது.(22)
அயோத்தியா காண்டம் சர்க்கம் – 080ல் உள்ள சுலோகங்கள்: 22
Previous | | Sanskrit | | English | | Next |