Saturday, 17 September 2022

துர்ஸ்வப்னம் | அயோத்தியா காண்டம் சர்க்கம் - 069 (21)

Bad Dream | Ayodhya-Kanda-Sarga-069 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: தூதர்கள் கிரிவ்ரஜ நகருக்குள் நுழைந்த அதே இரவில் பரதன் ஒரு கெட்ட கனவைக் கண்டான்; தன் நண்பர்களிடம் தன் கனவை விளக்கிச் சொன்ன பரதன்...

Bharata in sorrow due to the dream

எந்த ராத்திரியில் தூதர்கள் அந்நகருக்குள் பிரவேசித்தார்களோ, அதே ராத்திரியில் பரதன் பிரியமற்ற ஒரு ஸ்வப்னத்தை {விரும்பத்தகாத கனவை} கண்டான்.(1) இராஜாதிராஜனின் புத்திரன் {தசரதனின் மகனான பரதன்}, அந்த பிரியமற்ற ஸ்வப்னத்தைக் கண்டதும், அந்த ராத்திரி விடியும் வேளையில் பெரிதும் பரிதபித்துக் கொண்டிருந்தான்.(2) பிரியவாதிகளான அவனது நண்பர்கள், அவனது கவலையை அறிந்து, அவனது ஆயாசத்தைப் போக்க அந்த சபையில் கதைகளை உரைக்க ஏற்பாடு செய்தனர்.(3) அவனது சாந்திக்காக சிலர் வாத்தியங்கள் இசைக்கவும், சிலர் நாடகங்கள் நடத்தவும் ஏற்பாடு செய்தனர், வேறு சிலர் விதவிதமான ஹாஸ்யங்களை {நகைச்சுவைகளைச்} சொல்லிக் கொண்டிருந்தனர்.(4) இராகவனும், மஹாத்மாவுமான பரதனை, கோஷ்டிஹாஸ்யங்களின் {நகைச்சுவைக் கூட்டங்களின்} மூலம் மகிழ்விக்க பிரியவாதிகளான அவனது சகாக்களால் முடியவில்லை.(5)

சகாக்கள் சூழ இருந்த ஒரு பிரியசகன், பரதனிடம் {பின்வருமாறு} சொன்னான்: "சகாவே, நண்பர்களால் ஊக்கப்படுத்தப்பட்டாலும் நீ ஏன் மகிழ்ச்சியடையவில்லை?" {என்று கேட்டான்}.(6)

பரதன், இவ்வாறு பேசிய தன் நண்பனிடம் மறுமொழியாக, "இந்தத் துன்பம் என்னிடம் வந்த காரணத்தைக் கேட்பாயாக.(7) நான் ஒரு ஸ்வப்னத்தைக் கண்டேன். என் பிதா அழுக்கடைந்த உடலுடனும், விரிந்த தலைமயிருடனும், சிகரத்தில் இருந்து கோமயஹ்ரதத்திற்குள் {கலங்கிய சாணி மடுவிற்குள்} விழுந்தார்.(8) அந்த கோமயஹ்ரதத்தில் மிதந்து கொண்டிருந்த அவர், தன் குவிந்த கைகளில் தைலத்தை {எண்ணெயைப்} பருகி, மீண்டும் மீண்டும் சிரித்துக் கொண்டிருப்பதை நான் கண்டேன்.(9) அதன் பிறகு திலோதனம் {எள் ஓரையை} உண்டுவிட்டு, தன் அங்கங்கள் முழுவதும் தைலத்தைத் தேய்த்துக் கொண்டு, மீண்டும், மீண்டும் சிரம் {தலை} கீழாக அந்த தைலத்திற்குள்ளே மூழ்கினார்.(10) 

மேலும் அந்த ஸ்வப்னத்தில் சாகரம் உலர்ந்து போகவும், சந்திரன் ஜகத்தின் புவியில் விழவும், இருள் மூடப்பெற்று ஒன்றுந் தோன்றாதிருக்கவும், ராஜவாகன நாகத்தின் {அரசன் பயணிக்கும் யானையின்} தந்தங்கள் துண்டுகளாக ஒடிந்து விழவும், ஜுவலிக்கும் ஜாதவேதஸம் {நெருப்பு} திடீரென்று அணைந்து போகவும், பிருத்வி பிளக்கவும், விதவிதமான மரங்கள் பட்டுப் போகவும், பர்வதங்கள் சுழன்று புகைந்து போகவும் நான் கண்டேன்.(11-13) 

கருப்பு வஸ்திரங்களை அணிந்து ஒரு இரும்புப் பீடத்தில் அமர்ந்திருந்த இந்த ராஜரை {தசரதரைக்} கண்டு, கிருஷ்ணபிங்கள {கரிய, செம்பழுப்பு} நிறத்துடன் கூடிய பிரமாதைகள் {பெண்கள்} பரிஹசித்துக் கொண்டிருந்தனர்.(14) செம்மாலைகளால் அலங்கரிக்கப்பட்டவரும், உடலில் சந்தனம் பூசப்பட்டவருமான அந்த தர்மாத்மா {தசரதர்}, கழுதைகளால் இழுக்கப்படும் ரதத்தில் அமர்ந்து தென்திசையை நோக்கிச் சென்றார்.(15) சிவப்பு வஸ்திரங்களுடன் கூடியவர்களும், விகார முகம் படைத்தவர்களுமான ராக்ஷசிகள், பரிகசித்துக் கொண்டே ராஜரை இழுத்துச் செல்வதை நான் கண்டேன்.(16) ராத்திரியில் இவ்வாறான இந்தப் பயங்கரத்தை {பயங்கரக் கனவை} நான் கண்டதால், நானோ, ராமரோ, ராஜாவோ, லக்ஷ்மணனோ மரிக்கக்கூடும்.(17) எந்த நரர் கழுதைகள் பூட்டப்பட்ட யானத்தில் {வாகனத்தில்} செல்பவராக ஸ்வப்னத்தில் காணப்படுகிறாரோ, அவரது சிதையில் புகை பெருகி உயர்வதை அதிசீக்கிரத்தில் காணலாம்.(18) 

இதன் நிமித்தம் நான் தீனமடைந்திருப்பதாலேயே உங்களுக்குப் பிரதிபூஜை செய்யாமல் இருக்கிறேன். என் கண்டம் {தொண்டை} வறண்டுவிட்டது. என் மனமும் ஸ்வஸ்தமாக இல்லை {மனம் நிலைகொள்ளாமல் இருக்கிறது}.(19) பயஸ்தானத்தை {அச்சத்தின் வேரை} நான் காணவில்லை. ஆனால் அந்த பயத்தை நான் உணர்கிறேன் {அனுபவிக்கிறேன்}. என் ஸ்வரத்தின் {குரலின்} நாண்கள் உடைகின்றன. என் பொலிவு பாழாகிவிட்டது.(20) நான் என்னை வெறுக்கிறேன். ஆனால் அதற்கான காரணத்தைத்தான் காண முடியவில்லை. சிந்தனைக்கப்பாற்பட்ட தரிசனமாக ராஜாவைக் குறித்துப் பூர்வத்தில் கற்பனையும் செய்யப்படாத, சிந்திக்க முடியாத அநேக ரூபங்களிலான இத்தகைய துர்ஸ்வப்னத்தால் இந்த மகத்தான பயம் என் ஹிருதயத்திலிருந்து விலகாமல் இருக்கிறது" {என்றான் பரதன்}.(21)

அயோத்தியா காண்டம் சர்க்கம் – 069ல் உள்ள சுலோகங்கள் : 21

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அசுவபதி அத்ரி அம்சுமான் அம்பரீசன் அனசூயை அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இல்வலன் உமை கங்கை கசியபர் கபிலர் கரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் குஹன் கேசினி கைகேயி கௌசல்யை கௌசிகி கௌதமர் சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபளை சரபங்கர் சாந்தை சித்தார்த்தர் சித்ரரதன் சிவன் சீதை சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சூர்ப்பணகை சூளி தசரதன் தர்ம்பிருதர் தாடகை திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திலீபன் தூஷணன் நளன் நாரதர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பிரம்மதத்தன் பிரம்மன் பிருகு மந்தரை மருத்துக்கள் மஹோதயர் மாண்டகர்ணி மாரீசன் மோஹினி யுதாஜித் ரம்பை ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விபாண்டகர் விராதன் விஷ்ணு விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸோமதை ஸ்கந்தன் ஹனுமான் ஹிமவான்