Sunday 18 September 2022

பரதன் புறப்பாடு | அயோத்தியா காண்டம் சர்க்கம் - 070 (30)

Departure of Bharata | Ayodhya-Kanda-Sarga-070 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: பரதன் தன் கனவைச் சொல்லிக் கொண்டிருந்தபோதே ராஜகிருஹத்தில் நுழைந்த தூதர்கள்; பரதனிடம் வசிஷ்டர் அனுப்பிய செய்தியைச் சொன்னது; பரதனும், சத்ருக்னனும் அயோத்திக்குப் புறப்பட்டது...

Bharata's departure from Girivraja Rajagrihapura

பரதன் தன் ஸ்வப்னத்தைச் சொல்லிக் கொண்டிருந்த போதே, சோர்வடைந்த வாகனங்களுடன் {குதிரைகளுடன்} கூடிய தூதர்கள், ரம்மியமானதும், பெரும் மாளிகை வாயிலைக் கொண்டதுமான ராஜகிருஹபுரத்திற்குள் பிரவேசித்து, அங்கே வரவேற்றுக் கொண்டிருந்த ராஜனையும், ராஜபுத்திரனையும் {பரதனின் தாய்வழி தாத்தனான அசுவபதியையும், தாய்மாமனான யுதாஜித்தையும்} சந்தித்தனர். அவர்கள் {அந்தத் தூதர்கள்} அந்த ராஜனின் {கேகய ராஜனான அசுவபதியின்} பாதத்தைத் தீண்டி, பரதனிடம் இந்தச் சொற்களைச் சொன்னார்கள்:(1,2) "புரோஹிதரும், சர்வ மந்திரிகளும் உம்மை குசலம் விசாரிக்கின்றனர். உமக்கு ஓர் அவசர காரியமிருப்பதால் துரிதமாகப் புறப்படுவீராக.(3) விசாலாக்ஷரே {நீண்ட விழிகளைக் கொண்டவரே}, இந்த மதிப்புமிக்க வஸ்திரங்களையும், ஆபரணங்களையும் பெற்றுக் கொண்டு, உமது மாதுலருக்குக் கொடுப்பீராக.(4) நிருபாத்மஜரே {ராஜபுத்திரரே}, இவற்றில் இருபது கோடியை நிருபதிக்கும் {உமது தாய்வழி தாத்தனான அசுவபதிக்கும்}, அதே போல {எஞ்சியவற்றில்} முழுமையாக பத்துக் கோடியை உமது மாதுலருக்கும் {தாய்மாமனான யுதாஜித்துக்கும்} கொடுப்பீராக" {என்றனர் தூதர்கள்}.(5) 

அன்பர்களிடம் பெரும்பற்று கொண்ட பரதன், அவை அனைத்தையும் பெற்றுக்கொண்டு, அந்தத் தூதர்கள் விரும்பிய பொருள்களைக் கொடுத்து, அவர்களைப் பெரிதும் பூஜித்து {அந்தத் தூதர்களிடம் பின்வருமாறு} சொன்னான்:(6) "என் பிதாவான தசரத ராஜா சுகமாக இருக்கிறாரென நம்புகிறேன். மஹாத்மாக்களான ராமரும், லக்ஷ்மணனும் ஆரோக்கியமாக இருக்கிறார்களென நம்புகிறேன்.(7) தர்மத்தையே நோக்கமாகக் கொண்டவளும், தர்மத்தை அறிந்தவளும், தர்மதர்ஷினியும், விவேகியுயான ராமரின் மாதாவும், ஆரியையுமான கௌசல்யை ஆரோக்கியமாக இருக்கிறாளா?(8) தர்மத்தை அறிந்தவளும், லக்ஷ்மணனையும், வீரனான சத்ருக்னனையும் பெற்றவளும், மத்திய மாதாவுமான சுமித்திரை ஆரோக்கியமாக இருக்கிறாளென நம்புகிறேன்.(9) சதா தன்னையே விரும்புகிறவளும், சண்டியும் {பிடிவாதமானவளும்}, குரோதம் நிறைந்தவளும், தன்னையே பெரும்புத்திசாலியாகப் பெருமைப்பட்டுக் கொள்பவளுமான என் மாதா கைகேயி ஆரோக்கியமாக இருக்கிறாளா? அவள் என்ன சொல்லி அனுப்பினாள்?" {என்று கேட்டான் பரதன்}.(10)

மஹாத்மாவான பரதன் இவ்வாறு கேட்டதும், தூதர்கள் பரதனிடம் மதிப்புமிக்க இந்தச் சொற்களைச் சொன்னார்கள்:(11) "நரவியாகரரே {மனிதர்களில் புலியே}, யாவருடைய குசலத்தை நீர் விரும்புகிறீரோ அவர்கள் குசலமாக இருக்கின்றனர். பத்மத்துடன் ஸ்ரீ {லக்ஷ்மி உமக்காக} காத்திருக்கிறாள்[1]. உமது ரதம் ஆயத்தமாகட்டும்" {என்றனர்}.(12)

[1] நரசிம்மாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், "இங்கு, ராஜ்ய லக்ஷ்மி உனக்கு நேரப் போகிறதென்று தூதர்களின் உட்கருத்து. அதை, அமங்கலந் தொலைவதற்காகச் சுபமாகச் சொன்னார்களென்று பரதனுக்குத் தோற்றும்படி மறைத்துச் சொல்லினர்" என்றிருக்கிறது.

இவ்வாறு சொல்லப்பட்டதும், பரதனும் அந்தத் தூதர்களிடம் {பின்வருமாறு} சொன்னான், "மஹாராஜாவிடம் {கேகயராஜரிடம்}, 'தூதர்கள் என்னை அவசரப்படுத்துகிறார்கள்' என்று சொல்லி, நான் அனுமதி கேட்கிறேன்" என்றான்.(13)

விரைவாகப் புறப்படும்படி தூதர்கள் கேட்டுக் கொண்டதும், பார்த்திவாத்மஜனான {ராஜபுத்திரனான} பரதன், அந்தத் தூதர்களிடம் இதைச் சொல்லிவிட்டு, தன் மாதாமஹரிடம் {தாய்வழி தாத்தனிடம்} இந்த வாக்கியத்தைச் சொன்னான்:(14) "இராஜரே, தூதர்கள் அவசரப்படுத்துவதால் நான் என் பிதாவிடம் செல்கிறேன். எப்போது நீர் என்னை மீண்டும் அழைக்கிறீரோ, அப்போது நான் திரும்ப வருகிறேன்" என்று சொன்னான்.(15)

இவ்வாறு பரதனால் சொல்லப்பட்டதும், அவனது மாதாமஹரான நிருபன் {தாய்வழி தாத்தனான மன்னன் அசுவபதி}, அந்த ராகவனின் சிரசை முகர்ந்து {பரதனின் உச்சிமுகர்ந்து}, இந்த சுப வாக்கியத்தைச் சொன்னான்:(16) "தாதா {குழந்தாய்}, நான் அனுமதியளிக்கிறேன் நீ செல்வாயாக. கைகேயீ சுப்ரஜா {கைகேயியின் நன்மகனே}, பரந்தபா {பகைவரை அழிப்பவனே}, உன் மாதா, பிதாவின் குசலத்தை விசாரிப்பாயாக.(17) தாதா {குழந்தாய்}, புரோஹிதரிடமும், முதன்மையான துவிஜர்களிடமும், பெரும் விற்களை தரித்தவர்களும், உன்னுடன் பிறந்தவர்களுமான ராமலக்ஷ்மணர்களிடமும் குசலம் விசாரிப்பாயாக" {என்றான் கேகய மன்னன்}.(18)

அதன் பிறகு அந்தக் கைகேயன் {அசுவபதி}, உத்தம ஹஸ்தத்தையும் {யானையையும்}, சித்திர {பல்வேறு வண்ணங்களிலான} கம்பளங்களையும், மான் தோல்களையும், தனங்களையும் விருந்தோம்பலுடன் பரதனிடம் கொடுத்தான்.(19) பிறகு அந்த கேகயன் {அசுவபதி}, அந்தக் கைகேயி புத்திரனை {பரதனைக்} கௌரவிக்கும் வகையில், இரண்டாயிரம் தங்க நாணயங்களையும், ஆயிரத்து அறுநூறு அச்வங்களையும் {குதிரைகளையும்} தனமாக {பரிசாகக்} கொடுக்க ஆணையிட்டான்.(20) அதேபோலவே அந்த அசுவபதி {பரதனின் தாய்வழி தாத்தனான கேகயராஜன்}, விருப்பத்திற்குரியவர்களும், விசுவாசிகளும், குணம் பொருந்திய தொண்டர்களுமான சில அமாத்யர்களையும் {அமைச்சர்களையும்} பரதனுக்குக் கொடுத்தான்.(21)

மாதுலன் {தாய் மாமன் யுதாஜித்}, ஐந்திரசிர மலையில் பிறந்தவையும், பிரிய தரிசனம் கொண்டவையுமான {காண்பதற்கு இனிமையானவையுமான} ஐராவத நாகங்களையும் {ஐராவத குலத்தைச் சார்ந்த யானைகளையும்}, நன்கு பயிற்றுவிக்கப்பட்டவையும், சீக்கிரமாகச் செல்லக்கூடியவையுமான கழுதைகளையும் {கோவேறு கழுதைகளையும்} தனமாகக் கொடுத்தான்.(22) மேலும் அந்தப்புரத்தில் வளர்ந்து நன்கு ஊட்டம்பெற்றவையும், பெரும்பலம் கொண்டவையும், வியாகரத்தின் {புலியின்} வீரியத்தையும், பலத்தையும் கொண்டவையும், பேருடல் படைத்தவையும், கோரைப்பற்களையே ஆயுதமாகப் பயன்படுத்தக்கூடியவையுமான நாய்களையும் உபாயனமாக {காணிக்கையாகக்} கொடுத்தான்.(23) 

கைகேயீ புத்திரனான பரதன், புறப்படும் அவசரத்தில் இருந்ததால், கேகயேந்திரன் {தாய்வழி தாத்தனான அசுவபதி} தத்தம் செய்த தனங்களில் ஆனந்தமடையவில்லை.(24) தூதர்களின் அவசரத்தாலும், தான் கண்ட ஸ்வப்னத்தினாலும் அப்போது அவனது ஹிருதயத்தில் பெருங்கவலை உண்டானது.(25) 

அந்த ஸ்ரீமான் {பரதன்}, மஹத்தான தன் வேஷ்மத்தை {மாளிகையைக்} கடந்து, நர, நாக, அச்வங்கள் {மனிதர்கள், யானைகள், குதிரைகள்} நிறைந்த உத்தம ராஜ மார்க்கத்தில் சென்றான்.(26) அந்த உதாரதீ {உன்னத மனங்கொண்ட பரதன்}, அதையும் கடந்த பிறகு அந்தப்புரத்தைக் கண்டான், அதன்பிறகு ஸ்ரீமான் பரதன் எந்தத் தடையுமின்றி அதற்குள் {அந்தப்புரத்திற்கு} நுழைந்தான்.(27) பிறகு அந்த பரதன், தன் மாதாமஹரிடமும் {தாய்வழி தாத்தனான அசுவபதியிடமும்}, மாதுலனான {தாய்மாமனான} யுதாஜித்திடமும் விடைபெற்றுக் கொண்டு, ரதத்திலேறி சத்ருக்னனுடன் {அங்கிருந்து} புறப்பட்டான்.(28) 

இவ்வாறு பரதன் புறப்பட்டபோது, விசித்ர ரத்னங்களால் அலங்கரிக்கப்பட்டவையும், ஒட்டகங்கள், எருதுகள், குதிரைகள், கோவேறுக் கழுதைகள் ஆகியன பூட்டப்பட்டவையுமான நூற்றுக்கணக்கான ரதங்களில் பணியாட்கள் அவனைப் பின்தொடர்ந்து சென்றனர்.(29) அபேத சத்ருவான {பகைவரற்றவனான} மஹாத்மா பரதன், {படை} பலத்தால் பாதுகாக்கப்பட்டவனாக, சத்ருக்னனுடன் சேர்த்துத் தனக்குப் போதுமான அமாத்யர்களையும் {அமைச்சர்களையும்} அழைத்துக் கொண்டு, இந்திரலோகத்தில் இருந்து ஒரு சித்தன் புறப்படுவதைப் போல அந்த கிருஹத்திலிருந்து {மாளிகையிலிருந்து} புறப்பட்டான்.(30)

அயோத்தியா காண்டம் சர்க்கம் – 070ல் உள்ள சுலோகங்கள்: 30

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இந்திரஜித் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சம்பாதி சரபங்கர் சாகரன் சாந்தை சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகி தூஷணன் நளன் நாரதர் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் மண்டோதரி மதங்கர் மந்தரை மயன் மருத்துக்கள் மஹோதயர் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாயு வாலி வால்மீகி விகடை விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை