Crossing Kosala | Ayodhya-Kanda-Sarga-049 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: வேதசுருதி, கோமதி, சியந்திகம் என்ற ஆறுகளைக் கடந்த ராமன். சுமந்திரனிடம் பேசிக் கொண்டே ரதத்தில் சென்றது...
புருஷவியாகரனான ராமனும், தன் பிதாவின் {தசரதரின்} ஆஜ்ஞையை {ஆக்கினையை / ஆணையை} நினைவுகூர்ந்து, எஞ்சிய ராத்திரியில் மஹத்தான தொலைவைக் கடந்தான்.(1) இவ்வாறு அவன் சென்று கொண்டிருந்தபோதே மங்கலகரமான அந்த இரவும் கழிந்தது. அவன் அந்த மங்கலகரமான சந்திப்பொழுதை வழிபட்டுவிட்டு, {அந்தக் கோசல நாட்டின்} எல்லையைக் கடந்து சென்றான்.(2) புஷ்பிக்கும் {மலரும்} வனங்கள் நிறைந்ததும், உழப்பட்டதுமான எல்லை கிராமங்களைக் கண்டும், அந்த கிராமங்களின் மத்தியில் வசிக்கும் மனுஷ்யர்களின் சொற்களைக் கேட்டும், மெதுவாகச் செல்வதைப் போலவே உத்தம ஹயங்களின் கதி லாகவத்தால் அவற்றை சீக்கிரமாகக் கடந்து சென்றான்.(3)
{அந்த கிராமவாசிகள் தங்களுக்குள் இவ்வாறு பேசிக் கொண்டனர்}, "காமவசப்பட்ட ராஜனுக்கு {தசரதனுக்கு} ஐயோ. ஆ! கொடூரியும், பாபியுமான கைகேயி இடைவிடாமல் பாபங்களைச் செய்கிறாள். தார்மீகனும், மஹாபிராஜ்ஞனும் {பெரும் நுண்ணறிவுமிக்கவனும்}, கருணையுள்ளவனும், இந்திரியங்களை வென்றவனுமான ராஜபுத்திரனை {இளவரசனான ராமனை} அவள் நாடுகடத்திவிட்டாள். அந்தக் கொடியவள், மரியாதைக்குட்பட்ட வரம்புகளைக் கடந்து கொடுங்கர்மங்களையே செய்கிறாள்.(4-6) மஹாபாகையும் {பெரும் அதிர்ஷ்டசாலியும்}, ஜனக நந்தினியும் {ஜனகனின் புதல்வியும்}, சதா சுகமாக இருந்தவளுமான சீதை எவ்வாறு துக்கத்தை அனுபவிப்பாள்?(7) சுதனிடம் சினேகமற்றவனான {மகனிடம் அன்பில்லாதவனான} தசரத ராஜன், தன் ஜனங்களின் பிரியத்திற்குரியவனும், குற்றமற்றவனுமான ராமனை இப்போது கைவிட விரும்புகிறான். அஹோ {என்ன ஆச்சரியம்?}" {என்று மக்கள் நிந்தித்துக் கொண்டிருந்தனர்}.(8)
வீரனான அந்த கோசலேஷ்வரன் {கோசல நாட்டின் தலைவனான ராமன்}, கிராமங்களில வாழும் மனுஷ்யர்களின் இந்த சொற்களைக் கேட்டவாறே கோசலத்தைக் கடந்து சென்று கொண்டிருந்தான்.(9) மங்கல நீரையும், வேதஸ்ருதி என்ற பெயரையும் கொண்ட நதியைக் கடந்து சென்றவன், அகஸ்தியர் அமர்ந்த {தென்} திசையை நோக்கிச் சென்று கொண்டிருந்தான்[1].(10) நீண்ட நேரம் இவ்வாறே சென்ற பிறகு, மங்கலஜலத்தைக் கொண்டதும், கோக்களால் {பசுக்களால்} அலங்கரிக்கப்பட்டதும், சாகரத்தை நோக்கிச் செல்வதுமான கோமதி நதியையும் கடந்து சென்றான்.(11) சீக்கிரமாகச் செல்லும் ஹயங்களின் {குதிரைகளின்} மூலம் கோமதியைக் கடந்து சென்ற ராகவன், மயூரங்கள், ஹம்சங்கள் {மயில்கள், அன்னங்கள்} ஆகியவற்றின் ஒலிகளால் நிறைந்த சியந்திகை நதியையும் கடந்து சென்றான்.(12)
[1] பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "அஹஸ்தியரின் திசை தென்திசையாகும். ராமன் தமஸை நதியைக் கடந்து வடக்கு நோக்கிச் சென்றான். அவன், இதுதான் அந்த இடமென அறிவதற்குக் கடினமான வேதஸ்ருதி நதியை அடைந்ததும் தென்திசை நோக்கித் திரும்பினான்" என்றிருக்கிறது. அதற்கு அடுத்த வரியிலேயே வரும் கோமதி ஆறு குழப்பத்தையே ஏற்படுத்துகிறது. கோமதியைக் கடந்துதான் தமஸையே வர முடியும். இங்கே காலதேசவர்தமானங்களையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும். வேதஸ்ருதி, மற்றும் 12ம் சுலோகத்தில் சொல்லப்படும் சியந்திகை போன்ற ஆறுகள் தமஸையைக் கடந்தும் இருந்திருக்கக்கூடிய வாய்ப்புகளும் உண்டு. அல்லது முந்தைய 48ம் சர்க்கத்திற்கு முன்னுள்ள செய்தியாக இந்த சர்க்கத்தின் செய்திகள் இருக்க வேண்டும்.
பூர்வத்தில் மனுராஜனால் இக்ஷ்வாகுவுக்கு தத்தம் செய்யப்பட்டதும், எண்ணிக்கையில் ராஷ்டிரங்கள் பலவற்றால் நிறைந்ததுமான மஹீயை {நிலத்தை} ராமன் வைதேஹிக்குக் காட்டிக் கொண்டே சென்றான்[2].(13) ஸ்ரீமானும், புருஷரிஷபனும், மதங்கொண்ட ஹம்சத்தின் சுவரத்தை {மயக்கும் அன்னத்தின் மொழியைக்} கொண்டவனுமான அவன் {ராமன்}, அந்த சாரதியை {தேரோட்டியான சுமந்திரனை} "சூதரே" என்று பெரும்பற்றுடன் அழைத்து {பின்வருமாறு} பேசினான்[3]:(14) "இனி எப்போது திரும்பி வந்து மாதாவுடனும், பிதாவுடனும் நான் சேரப்போகிறேன்? புஷ்பிக்கும் சரயுவின் எல்லையில் அமைந்த வனங்களில் எப்போது நான் வேட்டையாடப் போகிறேன்?(15) உலகில் மகிழ்ச்சிக்கென ராஜரிஷிகணங்களால் {வேட்டை} இஃது அங்கீகரிக்கப்பட்டது. சரயுவின் வனங்களில் வேட்டையாட எனக்கு அதிக விருப்பமில்லை. இவ்வுலகில் வனவேட்டை மகிழ்ச்சிக்காகவே ராஜரிஷிகளால் பின்பற்றப்பட்டது. காலங்களில் அது மனுஜர்களாலும், தன்விகளாலும் அதிகம் நாடப்பட்டது" {சில நேரங்களில் அந்த வேட்டையானது, மனுவின் மகன்களான மனிதர்களாலும், வில்லாளிகளாலும் அதிகம் நாடப்பட்டது" என்றான் ராமன்} .(16,17)
[2] நரசிம்மாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், "பூமி முழுவதும் இக்ஷ்வாகு வம்சத்தரசர்களுடையதாகவே இருக்கக் கோஸல தேசத்தை இக்ஷ்வாகுவினுடையதாகச் சொல்லுகை எப்படியெனில், இது அவனுடைய ஜன்மபூமியாகச் சொல்லப்பட்டது. மற்றை தேசங்களிலுள்ளவர்கள் யாவரும் அவனுக்குக் கப்பங்கட்டுகிறவர்களெனத் தெரிய வருகின்றது. ஆகையால் இது விரோதமில்லையென்று கண்டு கொள்வது" என்றிருக்கிறது.
[3] பி.எஸ்.கிருஷ்ணசுவாமி ஐயர் {தர்மாலயப்} பதிப்பின் அடிக்குறிப்பில், "திருவுளத்தில், யாரிடத்திலும் அசூயை, பொறாமை, காய்மாகாரம், எரிச்சல், தூறுகண், வன்கண், ஆற்றாமை, இவைகளில் எதுவும் எள்ளளவும் இல்லாதிருப்பதையும் எவ்வகையாலும் உவப்பு ஒன்றே மேலிட்டிருப்பதையும் நன்கு விளங்கக் காட்டுகிற பேச்சொலிக்கொண்டு பேசினார்" என்றிருக்கிறது.
அந்த சூதனின் {சுமந்திரனின்} அன்புக்குரியவனான அந்த இக்ஷ்வாகன் {ராமன்}, இவ்வாறு மதுரமான குரலில் பல்வேறு காரியங்களை அவனிடம் வழியெங்கும் பேசிக் கொண்டே சென்றான்.(18)
அயோத்தியா காண்டம் சர்க்கம் – 049ல் உள்ள சுலோகங்கள் : 18
Previous | | Sanskrit | | English | | Next |