Wednesday 4 May 2022

வன தோஷம் | அயோத்தியா காண்டம் சர்க்கம் - 028 (26)

The inconvenience of forest | Ayodhya-Kanda-Sarga-028 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: வன வாழ்வின் கடினங்களை எடுத்துரைத்த ராமன்; சீதையைத் தன்னுடன் காட்டுக்கு வர வேண்டாமெனத் தடுப்பது...

Rama and Sita

தர்மஜ்ஞனும், தர்மவத்ஸலனுமான அவன் {தர்மத்தை அறிந்தவனும், தர்மத்தை விரும்புபவனுமான ராமன்}, வனத்தின் துக்கங்களை இவ்வாறு சிந்தித்ததால், தன்னிடம் பேசிக்கொண்டிருந்த சீதையை அழைத்துச் செல்ல உடன்பட்டானில்லை.(1) கண்களில் கண்ணீர் நிறைந்த அவளிடம் ஆறுதலாகப் பேசிய அந்த தர்மாத்மா, அவளை அவளது முடிவில் இருந்து திருப்புவதற்காக மீண்டும் இந்த வாக்கியங்களைப் பேசினான்:(2) "சீதா {சீதையே}, மஹாகுலத்தில் பிறந்தவளும், தர்மத்தில் எப்போதும் அர்ப்பணிப்புள்ளவளுமான நீ, என் மனத்திற்கு சுகம் உண்டாகும் வகையில் இங்கே சுவதர்மத்தை {உன் கடமையைச்} செய்ய வேண்டும்.(3) சீதா, அபலையே {பலமற்றவளே}, எந்தக் காரியத்தை நான் சொல்கிறேனோ அதை நீ செய்வாயாக. வனத்தில் உள்ள பல தோஷங்களை {துன்பங்களைக்} குறித்துப் பேசும் என்னிடம் இருந்து அவற்றை அறிவாயாக.(4) 

சீதா, வனவாசம் குறித்த உன்னுடைய இந்த எண்ணத்தைக் கைவிடுவாயாக. வனத்தின் அடர்ந்த பகுதிகளில் உண்மையில் பல தோஷங்கள் இருக்கின்றன.(5) உன் ஹிதத்தை புத்தியில் கொண்டே நான் இதைச் சொல்கிறேன். துக்கம் மேவும் வனத்தை ஒருபோதும் நான் சுகமானதாகக் கருதவில்லை.(6) கிரிகளில் இருந்தும், அருவிகளில் இருந்தும் விழும் நாதமும், மலைக்குகைகளில் வசிக்கும் சிங்கங்கள் எழுப்பும் நாதமும் கேட்பதற்கு துன்பத்தைத் தருபவை. எனவே வனம் துக்கமயமானது.(7) மஹா மிருகங்கள், அச்சமற்றவையாகவும், மதங்கொண்டவையாகவும், சூனியத்தில் {வெற்றிடத்தில்} விளையாடியபடியே {நம்மைக்} கண்டதும் எதிர்த்தோடி வரும். எனவே வனம் துக்கமயமானது.(8) 

முதலைகள் நிறைந்தவையும், சகதியுடன் கூடியவையுமான சரிதங்கள் {ஓடைகள்} மத்த கஜங்களாலும் {மதங்கொண்ட யானைகளாலும்} கடப்பதற்கரியவை. எனவே வனம் எப்போதும் துக்ககரமானது.(9) கொடிகளாலும், முட்களாலும் மறைக்கப்பட்டவையும், காட்டுக் கோழிகளின் எதிரொலியுடன் கூடியவையும், {குடிப்பதற்கும்} நீரற்றவையுமான மார்க்கங்கள் அடைவதற்கரிதானவை. எனவே வனம் துக்கமயமானது.(10) களைப்பால் சிரமப்படுபவன் ராத்திரிகளில் உதிர்ந்த இலைகளையே படுக்கையாகக் கொண்டு உறங்க வேண்டும். எனவே, வனம் துக்ககரமானது.(11) சீதா, கட்டுப்பாடான மனத்துடன் பகலும், இரவும் விருக்ஷங்களில் {மரங்களில்} இருந்து விழும் பழங்களில் மட்டுமே சந்தோஷத்தை அடைய வேண்டியிருக்கும். எனவே, வனம் துக்கமயமானது.(12)

மைதிலி {மிதிலையின் இளவரசியான சீதையே}, அவரவர் பிராணனுக்குத் தகுந்த படி உபவாசம் இருக்க வேண்டியிருக்கும். மரவுரியும், சடாமுடியும் தரிக்க வேண்டியிருக்கும்.(13) தேவர்கள், பித்ருக்கள், நாடிவரும் அதிதிகள் {விருந்தினர்} ஆகியோரை விதிப்பூர்வமாக எப்போதும் பூஜிக்க வேண்டும்.(14) வனத்தில் திரிபவன், நியமத்துடன் கூடிய மனத்துடன், காலாகாலத்தில் ஒவ்வொரு நாளும் மும்முறை அபிஷேகம் செய்து கொள்ள {நீராட} வேண்டும். எனவே, வனம் துக்ககரமானது.(15) பாலே {சிறுமியே}, ரிஷிகள் விதித்தபடி வேதிகைகளில் ஒருவன் தானே மலர்களைக் கொணர்ந்து காணிக்கை அளிக்க வேண்டும். எனவே, வனம் துக்கமயமானது.(16) 

மைதிலி, வனத்தில் திரிபவர்கள், ஆகாரக் கட்டுப்பாட்டுடன் அங்கே கிடைப்பவற்றைக் கொண்டு சந்தோஷமடைய வேண்டும். எனவே, வனம் துக்கமயமானது.(17) அங்கே {வனத்தில்}, காற்றும், இருளும் அதிகம் இருக்கும். பசியும் மகத்தான பயங்களும் இருக்கும். எனவே வனம் துக்ககரமானது.(18) பாமினி {மதிப்புக்குரியவளே}, பல்வேறு வடிவங்களிலான ஊர்வன பலவும் பிருத்வியில் செருக்குடன் திரிந்து கொண்டிருக்கும். எனவே, வனம் துக்ககரமானது.(19) நதிநிலையங்களில் உள்ள சர்ப்பங்கள், நதிகளைப் போலவே வளைந்தோடி பாதையை மறிக்கும். எனவே,  வனம் துக்ககரமானது.(20) அபலையே {பலமற்றவளே}, பூச்சிகள், விருச்சிகங்கள் {தேள்கள்}, புழுக்கள், கொசுக்கள், ஈக்கள் எப்போதும் அனைவரையும் பீடித்துக் கொண்டிருக்கும். எனவே, வனம் துக்கமயமானது.(21) 

பாமினி, வனத்தில் மரங்களும், குசப் புற்களும் {தர்ப்பைகளும்}, அனைத்துப் பக்கங்களிலும் கிளைகளைப் பரப்பி கூர்முனைகளுடன் விரிந்திருக்கும் மூங்கில்களும் இருக்கும். எனவே, வனம் துக்ககரமானது.(22) அரண்ய வாசம் செய்பவன், பல்வேறு காயக்லேசங்களையும் {உடல் சிரமங்களையும்}, பயங்களையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எனவே வனம் துக்கமயமானது.(23) குரோதமும், லோபமும் {கோபமும், பேராசையும்} கைவிடப்பட வேண்டும். அர்ப்பணிப்புடன் தபம் செய்யப்பட வேண்டும். பயப்பட வேண்டியவற்றிலும் பயப்படாதிருக்க வேண்டும். எனவே, வனம் எப்போதும் துக்கமயமானது.(24) வனத்தின் பல தோஷங்களை இப்போது ஆலோசித்து, வனம் பொறுத்துக் கொள்ள முடியாதது என்பதை உணர்ந்தேன். எனவே நீ வனத்திற்கு வருவேனெனச் சொல்லாதே" {என்றான் ராமன்}.(25)

மஹாத்மாவான ராமனின் மனம் வனத்திற்கு அழைத்துச் செல்ல உடன்படாதபோது, சீதை துக்கமடைந்தாள். அவள், ராமனின் வசனத்தை ஏற்காத பின்பு அவனிடம் இதைப் பேசினாள்.(26)

அயோத்தியா காண்டம் சர்க்கம் – 028ல் உள்ள சுலோகங்கள் : 26

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இந்திரஜித் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சம்பாதி சரபங்கர் சாகரன் சாந்தை சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகி தூஷணன் நளன் நாரதர் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் மண்டோதரி மதங்கர் மந்தரை மயன் மருத்துக்கள் மஹோதயர் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாயு வாலி வால்மீகி விகடை விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை