Victorious hero in chariot made of gems | Ayodhya-Kanda-Sarga-017 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: நெடுஞ்சாலையில் தன் நண்பர்களும், மக்களும் பேசுவதைக் கவனித்தவாறே சென்று தன் தந்தையின் அரண்மனைக்குள் நுழைந்த ராமன்...
மகிழ்ச்சிமிக்க நண்பர்களுடன் ரதத்தில் ஏறிய ஸ்ரீமான் ராமன், பதாகைகள், துவஜங்களுடன் கூடியதும், அகிற்புகையால் நறுமணம் கமழ்ந்து கொண்டிருப்பதும், நானாவித ஜனங்களுடன் கூடியதுமான அந்த நகரத்தைக் கண்டான்.(1) அகில் தூபத்துடன் கூடியதும், மேகங்களுக்கு ஒப்பான வெண்ணிற கிருஹங்களுடன் {வீடுகளுடன்} பிரகாசிப்பதுமான ராஜமார்க்கத்தின் மத்தியில் அவன் சென்று கொண்டிருந்தான்.(2) உத்தமமான அந்த ராஜ பாதையில், மேலான சந்தன, உத்தம அகிற் கட்டைகளும், கந்தங்களும் நிறைந்திருந்தன, மேலும் வெண்பட்டுப் பீதாம்பரக் குவியல்களும், துளையில்லா முத்துகளும், பிரகாசிக்கும் உத்தம ஸ்படிகங்களும், விதவிதமான புஷ்பங்களும், பல்வேறு வகைப் பக்ஷணங்களும் இருந்தன.(3-5) அந்த ராஜபாதை, திவியில் {சொர்க்கத்தில்} உள்ள தேவ பாதையைப் போன்று இருப்பதையும், அதிலுள்ள சந்திகள் {முச்சந்திகளும், நாற்சந்திகளும்}, தயிர், அக்ஷதை, ஹவிஸ், பொரி, சந்தன, அகிற்தூபங்கள், நானாவித மாலைகள், கந்தங்கள் ஆகியவற்றால் வழிபடப்படுவதையும் அவன் கண்டான்.(6,7அ)
நண்பர்கள் கூறும் பல்வேறு ஆசீர்வாதங்களைக் கேட்டவாறும், அவரவருக்குத் தகுந்தபடி நரர்கள் அனைவரும் {பின்வருமாறு} சொல்வனவற்றை அங்கீகரித்தவாறும் அவன் சென்று கொண்டிருந்தான்.(7ஆ,8அ) "இன்றே அபிஷேகத்தை ஏற்பாயாக. உன் பிதாமகர்களாலும், பரபிதாமகர்களாலும் பின்பற்றப்பட்ட மார்க்கத்தை ஏற்றுப் பரிபாலனம் செய்வாயாக" {என்றும்},(8ஆ,9அ) "இராமன் ராஜனானால், அவனது பிதா ஆண்டபோதும், அவனது பிதாமகர்கள் ஆண்டபோதும் இருந்ததைவிட அதிகமாக நாம் அனைவரும் மகிழ்ச்சியடைவோம்" {என்றும்}.(9ஆ,10அ) "ராஜ்ஜியத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் நகரத்திற்குள் ராமன் செல்வதை இன்று கண்டாலே போதும், நாம் உண்ணவும் வேண்டாம், பிற செயல்களைச் செய்யவும் வேண்டாம்" {என்றும்}.(10ஆ,11அ) "எல்லையற்ற காந்தியைக் கொண்ட ராமன், ராஜ்ஜியத்தில் அபிஷேகிக்கப்படுவதை விடப் பிரியமான காரியம் நமக்கு வேறேதும் கிடையாது" {என்றும் அவர்கள் பேசிக் கொண்டனர்}.(11ஆ,12அ)
இராமன், தன்னைக் குறித்துத் தன் நண்பர்களால் சொல்லப்பட்ட இந்த நற்சொற்களைக் கேட்டாலும், அவற்றில் பிடிப்பில்லாமல் அந்த மஹாபாதையில் சென்று கொண்டிருந்தான்.(12ஆ,13அ) இராகவன் வெகு தொலைவுக்குச் சென்று விட்டாலும், ஒருவராலும் தங்கள் கண்களையோ, மனங்களையோ அந்த நரோத்தமனிடம் இருந்து விலக்கிக் கொள்ள முடியவில்லை.(13ஆ,14அ) எவர் ராமனைக் காணவில்லையோ, எவரை ராமன் காணவில்லையோ அவரைச் சர்வலோகமும் நிந்தித்தது. அத்தகையவருடைய மனமே கூட அவரைப் பழித்தது[1].(14ஆ,15அ) தர்மாத்மாவான அவன் {ராமன்} சதுர்வர்ணத்தாரிடமும், வயோதிகர்கள் அனைவரிடமும் தயையுடன் நடந்து கொண்டான். எனவே அவர்கள் அனைவரும் அவனிடம் அர்ப்பணிப்புடன் இருந்தனர்.(15ஆ,16அ) அந்த நரபதி சுதன் {ராமன்}, நாற்சந்திகளையும், தேவ பாதைகளையும், புனித மரங்களையும், ஆலயங்களையும் தன் வலப்புறத்தில் வைத்துக் கொண்டு அவை யாவற்றையும் கடந்து சென்றான்.(16ஆ,17அ)
[1] பி.எஸ்.கிருஷ்ணசுவாமி ஐயர் {தர்மாலயப்} பதிப்பில், "ஸ்ரீராமர், வெகுதூரம் போய்விட்டாலும் கூடப் புருஷோத்தமராகும் அவரைவிட்டு ஏதேனுமொரு மானிடனும் மனதைத்தானாகட்டும், இரு கண்களைத்தானாகட்டும் பெயர்த்திழுத்துக் கொள்ள முடியாதிருந்தனன். எவனொருவன் ஸ்ரீராமரை உள்ளபடி அறியாதிருக்கின்றானோ ஸ்ரீராமர் எவனொருவனை அனுக்கிரகிக்கில்லையோ அவன் உலகில் அல்பனாய் காலங்கழிப்பான். தனது ஆத்மா இவனை காலக்ரமத்தில் கண்டிக்கும்" என்றிருக்கிறது. நரசிம்மாசாரியர் பதிப்பில், "புருஷர்களில் ஒருவனாயினும், ராமன் கண்பார்வையைக் கடந்து வெகுதூரம் போயினபின்பும் அவனது மோஹனாகாரத்தில் படிந்திருக்கிற மனத்தையாவது, கண்களையாவது திருப்பிக் கொள்ள வல்லவனாகவில்லை. இனி அருகிலிருக்கும் பொழுது அவர்கள் அப்படி இருப்பார்களென்பது சொல்ல வேண்டுமோ? இனி பெண்களின் பரோமாதிசயத்தை எவ்விதம் உரைக்கலாகும்? எவன் ராமனைப் பாராதிருக்கின்றானோ, ராமனும் யாதொருவனைக் காணாதிருப்பானோ, அவன் உலகமெங்கும் நிந்தனைக் கிடமாயிருப்பான். உலகமேயன்று அவன் தானும் அவனை நிந்தித்துக் கொள்வான்" என்றிருக்கிறது.
அந்த ராஜபுத்திரன் {ராமன்} ராஜகுலத்தை {அரசவசிப்பிடத்தை} அணுகி, சிறந்த கிருஹமும், பிரகாசத்தில் ஜுவலிப்பதும், பிருத்வியில் மஹேந்திரனின் வசிப்பிடத்திற்கு ஒப்பானதுமான தன் பிதாவின் {தசரதனின்} மாளிகைக்குள் பிரவேசித்தான். கைலாச சிகரத்தைப் போலவும், மேகக்கூட்டங்களைப் போலவும், வானத்தை மறைக்கும் வெண்ணிற விமானங்களைப் போலவும் தெரியும் விதவிதமான மங்கல கோபுரங்களுடன் கூடியதும், ரத்ன ஜாலங்களால் அலங்கரிக்கப்பட்டதுமான அந்த வர்தமானத்திற்குள் {அரசமாளிகைக்குள்} அவன் பிரவேசித்தான்[2].(17ஆ-20அ)
[2] ஆண்டு இனையராய் இனைய கூற அடல்வீரன்தூண்டு புரவிப் பொரு இல் சுந்தர மணித்தேர்நீண்ட கொடி மாட நிரை வீதி நிறையப் போய்பூண்ட புகழ் மன்னன் உறை கோயில் புகலோடும்- கம்பராமாயணம் 1593ம் பாடல்பொருள்: அங்கே இவ்வாறானவர்கள் இவ்வாறு கூற வெற்றிவீரனாகிய ராமன், சுமந்திரனால் தூண்டப்பட்ட குதிரைகள் பூட்டப்பட்டிருந்த ஒப்பற்ற சுந்தர மணித்தேரில் சென்று, நீண்ட கொடிகளுடன் கூடிய மாடங்கள் வரிசையாக உள்ள வீதி மக்களால் நிறைந்திருக்க, புகழை ஆபரணமாகப் பூண்டிருந்த தசரத மன்னன் தங்கியிருக்கும் அரண்மனையை அடைந்தான்.
அந்த நரோத்தமன் {மனிதர்களிற்சிறந்த ராமன்}, தனுவீரர்களால் காக்கப்பட்ட மூன்று உள்கட்டுகளையும், தனுவீரர்களால் காக்கப்பட்ட மேலும் இரு உள்கட்டுகளையும் வாஜிகளுடன் {குதிரைகளுடன்} கடந்து, இன்னும் இரு உள்கட்டுகளைப் பாதநடையாகக் கடந்து சென்றான்.(20ஆ,21அ) இவ்வாறு அனைத்து உள்கட்டுகளையும் கடந்து சென்ற அந்த தசரதாத்மஜன் {ராமன்}, ஜனங்கள் அனைவரையும் திருப்பி அனுப்பிவிட்டு, அந்தப்புரத்தைத் தனிமையில் அடைந்தான்.(21ஆ,22அ) அந்த நிருபாத்மஜன் {மன்னனின் மகனான ராமன்} தன் பிதாவிடம் {தசரதனிடம்} சென்ற போது, மகிழ்ச்சியடைந்த ஜனங்கள் அனைவரும், சந்திரோதயத்தைக் காணக் காத்திருக்கும் சரிதம்பதியை {ஆறுகளின் கணவனான கடலைப்} போல, அவன் திரும்பி வருவதைக் காண அங்கேயே காத்திருந்தனர்.(22ஆ-உ)
அயோத்தியா காண்டம் சர்க்கம் – 017ல் உள்ள சுலோகங்கள் : 22
Previous | | Sanskrit | | English | | Next |