Go to the terrible jungle | Ayodhya-Kanda-Sarga-018 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: தந்தையின் துக்கத்திற்கான காரணத்தை கைகேயியிடம் கேட்ட ராமன்; மன்னன் அளித்த இரு வரங்களைக் குறித்து அவனிடம் சொன்னது. தந்தையின் உறுதிமொழியைக் காக்குமாறு ராமனைத் தூண்டிய கைகேயி...
அந்த ராமன், தன் பிதா{தசரதன்} சுபமான ஆசனமொன்றில் முகம் வாடி தீனமாகக் கைகேயி சகிதராக அமர்ந்திருப்பதைக் கண்டான்.(1) அவன் பணிவுடனும், தற்கட்டுப்பாட்டுடனும் முதலில் தன் பிதாவின் சரணங்களையும் {பாதங்களையும்}, அதன்பின் கைகேயியின் பாதங்களையும் வணங்கினான்.(2)
அந்த நிருபதியோ {தசரதனோ}, "இராமா" என்ற வசனத்தைச் சொல்லிவிட்டு, கண்கள் நிறைந்த கண்ணீருடன், பார்க்கவோ, பேசவோ இயலாத தீனனாக இருந்தான்.(3) பயத்தை உண்டாக்கும் இந்த ரூபத்தில் நரபதியை இதற்கு முன் ஒருபோதும் கண்டிராததால், அந்த ராமனே கூட, பாதம் பன்னகத்தில் பதிந்தவனைப் போல பயத்தால் பீடிக்கப்பட்டான் {பாம்பை மிதித்துவிட்டவனைப் போல அச்சத்தால் பீடிக்கப்பட்டான்}.(4) அந்த மஹாராஜன் {தசரதன்}, இந்திரியங்கள் களிப்பின்றி சோகத்தாலும், குற்றவுணர்வாலும் மழுங்கி, பெருமூச்சு விட்டபடியே, அலைகள் வீசுகின்ற சாகரத்தைப் போலவும், கிரஹண காலத்து ஆதித்யனை {சூரியனைப்} போலவும், பொய் மொழிந்த ரிஷியைப் போலவும் மனந்தளர்ந்து கலக்கமடைந்தான்.(5,6)
சிந்தனைக்கு அப்பாற்பட்ட அந்த நிருபதியின் {தசரதனின்} சோகத்தைக் குறித்துச் சிந்தித்தவனும் {ராமனும்}, பௌர்ணமி கால சமுத்திரத்தைப் போலப் பெரிதும் கலக்கமடைந்தான்.(7) கூர்மதியுடையவனும், பிதாவின் நன்மையை விரும்புகிறவனுமான ராமன், {பின்வருமாறு} சிந்தித்தான், "இன்றுதான் நிருபதி என்னிடம் மகிழ்ச்சியற்றவராக இருக்கிறார். அஃது ஏன்?(8) மற்ற நேரங்களில் பிதா கோபமாக இருந்தாலும் என்னைக் கண்டதும் அருளுடையவராகிவிடுவார். அத்தகையவர் இன்று என்னைக் கண்ட பிறகும் ஆயாசத்துடன் {சோர்வுடன்} இருப்பது ஏன்?" {என்று நினைத்தான் ராமன்}.(9)
அந்த ராமன், சோகத்தால் பீடிக்கப்பட்டு தீனனாகி, ஒளிகுன்றிய வதனத்துடன் கைகேயியை வணங்கி இந்த வசனத்தைச் சொன்னான்:(10) "அறியாமையினால் நான் ஏதும் தவறிழைக்கவில்லை அல்லவா? என்னிடம் பிதா ஏன் கோபமாக இருக்கிறார் என்பதைச் சொல்வாயாக. உன்னால் மட்டுமே இவரைத் தணிவடையச் செய்ய முடியும்.(11) என்னிடம் எப்போதும் வாஞ்சை கொண்ட இவர், வதனம் நிறம் இழந்து தீனராகும்படி மனமும் தளர்ந்து, ஏன் என்னிடம் பேசாதிருக்கிறார்?(12) சரீரத் துன்பமோ, மனத்துன்பமோ இவரைப் பீடிக்கவில்லை அல்லவா? சதா சுகமாக இருப்பதும் துர்லபமே {எப்போதும் நலமாக / மகிழ்ச்சியாக இருப்பதும் அரிதே}.(13) காண்பதற்கினிய பரதனுக்கோ, பெரும்பலமிக்க சத்ருக்னனுக்கோ, என் மாதாக்களுக்கோ சிறு அசுபமும் ஏற்படவில்லை அல்லவா?(14) பிதா சொன்னதைச் செய்யாமல், மஹாராஜருக்கு நிறைவேற்படுத்தாமல் நிருபர் கோபமடைந்திருந்தால், நான் ஒரு முஹூர்த்த காலமும் ஜீவிக்க விரும்பமாட்டேன்.(15) எந்த நரன் {மனிதன்} தான், இகத்தில் தான் இருப்பதற்கான மூலம் {வேர்} எவரோ, அந்தப் பிரத்யக்ஷ தைவதைக்கு {தந்தையான அந்தக் கண்கண்ட தெய்வத்திற்குக்} கீழ்ப்படியாமல் இருப்பான்?(16) உன் அபிமானத்தாலும் {அன்பில் கொண்ட கர்வத்தாலும்}, கடுமையான உன் கோபத்தாலும் இவரது மனம் கலங்க நீ ஏதும் சொல்லவில்லை அல்லவா?(17) தேவி, இந்த மனுஜாதிபரிடம் முன்பில்லாத விகாரம் {மாற்றம்} இப்போது தென்படுவதேன்? கேட்கும் எனக்கு இக்காரியத்தில் உண்மையைச் சொல்வாயாக" {என்று கேட்டான் ராமன்}.(18)
மஹாத்மாவான ராகவனால் இவ்வாறு சொல்லப்பட்டதும், கைகேயி அச்சமில்லாமலும், லஜ்ஜையில்லாமலும் ஆத்மஹிதத்திற்காக {வெட்கமில்லாமலும் தன்நலத்திற்காக} இந்தச் சொற்களைச் சொன்னாள்:(19) "இராமா, ராஜா கோபிக்கவில்லை. இவருக்கு விசனம் {துன்பம்} ஏதும் இல்லை. இவரது மனத்தில் ஏதோ இருக்கிறது. பயத்தால் உன்னிடம் அதைச் சொல்லாமல் இருக்கிறார்.(20) அன்புக்குரியவனான உனக்கு ஏற்பில்லாத சொற்கள் அவரிடம் இருந்து வெளிப்பட மறுக்கின்றன. அவர் எனக்கு ஓர் உறுதியளித்திருந்தார். அந்தக் காரியம் உன்னால் நிச்சயம் செய்யப்பட வேண்டும்.(21) நெடுங்காலத்திற்கு முன்னர், இந்த ராஜா என்னைப் பூஜித்து, வரத்தையும் தத்தம் செய்தார். இப்போது அதற்காக வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்.(22) இந்த விஷாம்பதி {தசரத மன்னர்}, எனக்கு வரத்தைத் தத்தம் செய்துவிட்டு, ஜலம் வற்றிய இடத்தில் வீணாக சேது பந்தனம் செய்ய {அணை கட்ட} விரும்புகிறார்.(23) இராமா, சத்தியமே தர்மமூலம் {சத்தியமே தர்மத்தின் வேர்} என்பதை நல்லோர் அறிவார்கள். {இதனால்} புண்பட்டிருக்கும் {தசரத} ராஜா, உன் நிமித்தம் அதை {சத்தியத்தைக்} கைவிடாதிருக்கட்டும்.(24) சுபமாகவோ {நன்மையாகவோ}, அசுபமாகவோ {தீமையாகவோ} இருப்பினும் ராஜா அதை உனக்குச் சொல்வதாக இருந்தார். இருப்பினும் அவை அனைத்தையும் நீ செய்வதாக இருந்தால் நிச்சயம் நானே அவற்றை உனக்குச் சொல்வேன்.(25) இராஜரால் சொல்லப்பட்டவை உன்னிடம் தவறாத நிலையில், இவர் உன்னிடம் சொல்லாமல் இருப்பதை நான் உனக்குச் சொல்வேன்" {என்றாள் கைகேயி}.(26)
கைகேயி சொன்ன இந்த வசனத்தைக் கேட்ட ராமன் துன்புற்று, நிருபனின் சந்நிதானத்தில் அந்த தேவியிடம் {மன்னன் தசரதனின் முன்னிலையில் கைகேயியிடம்} இதைச் சொன்னான்:(27) "அஹோ, சீ சீ, என்னைக் குறித்து இவ்வகைச் சொற்களை நீ சொல்லவும் தகுமோ தேவி? இராஜா சொன்னால் நான் பாவகனிலும் {அக்னியிலும்} குதிப்பேன். எனக்கு இதத்தை விரும்புகிறவரும், குருவும், நிருபருமான என் பிதா ஆணையிட்டால், கடும் விஷத்தையும் நான் உண்பேன், கடலுக்குள்ளும் மூழ்குவேன்.(28,29) எனவே தேவி, ராஜா விரும்புவதை எனக்குச் சொல்வாயாக. நான் பிரதிஜ்ஞை செய்கிறேன். இராமன் நாவு முரண்பட்ட இரண்டைப் பேசமாட்டான் {இராமன் ஒன்றைச் சொல்லிவிட்டு மற்றொன்றைச் செய்ய மாட்டான்}" (என்றான் ராமன்}.(30)
அநாரியையான கைகேயி, நேர்மையானவனும், சத்தியவாதியுமான அந்த ராமனிடம் இந்தக் கொடூர வசனத்தைச் சொன்னாள்:(31) "இராகவா, நெடுங்காலத்திற்கு முன்னர், தைவாசுர மஹா யுத்தத்தின்போது கணைகளால் துளைக்கப்பட்டு, என்னால் பாதுகாக்கப்பட்ட உன் பிதா, வரங்கள் இரண்டை எனக்கு தத்தம் செய்தார்.(32) இராகவா, அதன்படியே இப்போது பரதன் அபிஷேகம் பெறுவதையும், நீ தண்டகாரண்யம் செல்வதையும் இந்த ராஜரிடம் நான் யாசித்தேன்[1].(33) நரசிரேஷ்டா {மனிதர்களிற் சிறந்த ராமா}, உன் பிதாவையும், உன்னையும் சத்தியப்ரதிஜ்ஞர்களாக்கிக் {ஏற்றுக் கொண்ட உறுதிக்கு உண்மையுள்ளவர்களாக்கிக்} கொள்ள நீ விரும்பினால், நான் சொல்லும் இந்த வாக்கியத்தைக் கேட்பாயாக.(34) உன் பிதாவின் ஆணைக்குக் கீழ்ப்படிந்து, அவர் உறுதி அளித்ததைப் போலவே, நவபஞ்ச வருஷங்கள் {பதினான்காண்டுகள்} அரண்ய பிரவேசம் செய்வாயாக.(35) இராகவா, இந்த ராஜர் உனக்குச் செய்த அபிஷேக ஏற்பாடுகளின் படியே பரதன் முழுமையாக அபிஷேகிக்கப்பட வேண்டும்.(36) நீ இந்த அபிஷேகத்தைக் கைவிட்டு தண்டகாரண்யத்தைப் புகலிடமாக அடைந்து, ஜடாதாரியாகவும், மரவுரி தரித்தவனாகவும் அங்கே சப்தசப்த வருஷங்கள் {பதினான்கு ஆண்டுகள்} வசிப்பாயாக.(37) பரதன், நானாவித ரத்தினங்களுடன் கூடியதும், வாஜி, ரத, குஞ்சரங்கள் {குதிரை, தேர், யானைகள்} நிறைந்ததுமான கோசலபுரியில் {கோசல தேசத்தின் தலைநகரான அயோத்தியில்} வசித்தவாறே இந்த வசுதையை {பூமியை} ஆளட்டும்.(38) காருண்யத்தில் மூழ்கியவரும், சோகத்தால் பீடிக்கப்பட்ட வதனத்தை {முகத்தைக்} கொண்டவருமான இந்த நரேந்திரர் {மனிதர்களின் மன்னரான இந்த தசரதர்}, இதனாலேயே உன்னைக் காண இயலாதவராக இருக்கிறார்.(39) இரகுநந்தனா, நரேந்திரரின் சொற்களின்படியே செயல்பட்டு அவரை விடுவிப்பாயாக. இராமா, உன்னுடைய வாய்மையினால் இந்த நரேஷ்வரரைக் காப்பாயாக" {என்றாள் கைகேயி}.(40)
[1] ஆழி சூல் உலகம் எல்லாம் பரதனே ஆள நீ போய்த்தாழ் இருஞ்சடைகள் தாங்கி தாங்க அருந்தவம் மேற்கொண்டுபூழி வெங்கானம் நண்ணி, புண்ணியத் துறைகள் ஆடிஏழிரண்டு ஆண்டின் வா என்று இயம்பினன் அரசன் என்றாள்- கம்பராமாயணம் 1601ம் பாடல்பொருள்: கடலால் சூழப்பட்ட உலகம் எல்லாம் பரதனே ஆளட்டும். நீ நாட்டை விட்டுச் சென்று தொங்கும் பெருஞ்சடையை தரித்து தாங்குவதற்குரிய தவத்தை ஏற்று புழுதி நிறைந்த கொடிய காட்டை அடைந்து புண்ணியத் தீர்த்தங்களில் நீராடி பதினான்கு ஆண்டுகள் கழித்த பின்பு திரும்பி வா என்று அரசன் இயம்பினான் என்றாள்.
அவள் இவ்வாறு கொடுஞ்சொற்களைப் பேசிக் கொண்டிருந்தாலும் ராமன் சோகத்தை அடையவில்லை. மஹானுபாவனான ராஜாவோ {வலிமைமிக்க மன்னனான தசரதனோ} புத்திர சோகத்தால் பெரிதும் பீடிக்கப்பட்டவன் ஆனான்.(41)
அயோத்தியா காண்டம் சர்க்கம் – 018ல் உள்ள சுலோகங்கள் : 41
Previous | | Sanskrit | | English | | Next |