Friday, 5 November 2021

சுனசேபன் | பால காண்டம் சர்க்கம் - 61 (24)

Shunashepa | Bala-Kanda-Sarga-61 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: அம்பரீசனின் வேள்விக் குதிரையைக் களவாடிய இந்திரன்; ரிசீகரின் மகன் தன்னை வேள்வி விலங்காகக் கொடுக்க முன்வந்தது...

Shunashepa Ambarisha Richika Satyavati

{சதாநந்தர் ராமனிடம் தொடர்ந்தார்}, "நரசார்தூலா {மனிதர்களில் புலியே ராமா}, மஹாதேஜஸ்வியான விஷ்வாமித்ரர், வனவாசிகளான ரிஷிகள் அனைவரும் திரும்பிச் செல்வதைக் கண்டு அவர்களிடம் சொன்னார்:(1) "தக்ஷிண {தென்} திசையைச் சார்ந்திருக்கும் போது இந்தப் பெரிய இடையூறு நேரிட்டிருக்கிறது. மற்றொரு திசைக்குச் சென்று அங்கே தவம் புரிவோம்.(2) மஹாத்மாக்களே, விசாலமான மேற்குத் திசையில் புஷ்கர {தடாகக்} கரையில் அமைந்த பரம தபோவனங்களில் நாம் சுகமாக தவம் புரியலாம்" {என்றார் விஷ்வாமித்ரர்}.(3)

மஹாதேஜஸ்வியான அந்த மஹாமுனி இவ்வாறு சொல்லிவிட்டு புஷ்கரையை அடைந்து, கிழங்குகளையும், பழங்களையும் உண்டு, எவராலும் இடையூறு ஏற்படாத வண்ணம் உக்ர தவம் செய்தார்.(4) இந்தக் காலத்தில் அம்பரீசன் என்று புகழ்பெற்றவனும், அயோத்யாபதியுமான ஒரு மஹான் ஒரு யஜ்ஞம் செய்ய முற்பட்டான்.(5) அந்த யஜ்ஞத்தின் முக்கிய விலங்கை {வேள்வி விலங்கை} இந்திரன் அபகரித்தான். விலங்கு தொலைந்ததும் விப்ரர்கள் ராஜனிடம் {அம்பரீசனிடம்} இவ்வாறு சொன்னார்கள்:(6) "இராஜாவே, நீ கொண்டு வந்த விலங்கு உன் துர்நயத்தால் {உன்னுடைய ஊக்கமின்மையால்} தொலைந்தது. நரேஷ்வரா {மனிதர்களின் தலைவா}, காக்கப்படாத தோஷங்கள் ராஜனுக்கு அழிவை ஏற்படுத்தும்.(7) எனவே புருஷரிஷபா {மனிதர்களில் காளையே}, இதற்கான மஹா பிராயச்சித்தமாக {தொலைந்து போன} அதே விலங்கையோ, ஒரு நரனையோ சீக்கிரம் கொண்டு வருவாயாக. யஜ்ஞ கர்மங்கள் தொடர்கின்றன" {என்றனர் புரோஹிதர்கள்}.(8)

புருஷரிஷபா {மனிதர்களில் காளையே, ராமா}, மஹாபுத்திமானான அந்த ராஜா {அம்பரீசன்}, உபாத்யாயர்களின் வசனத்தைக் கேட்டு ஆயிரம் பசுக்களுக்கு மாற்றாக ஒரு யஜ்ஞ விலங்கைத் தேடினான்.(9) இரகுநந்தனா, அந்த மஹீபதி பல தேசங்கள், ஜனபதங்கள், நகரங்கள், வனங்கள், புண்ணிய ஆசிரமங்கள் வழியாக {தேடிச்செல்லும் போது} பிருகுதுங்க மலையில், பாரியை {மனைவி}, புத்திர {மகன்கள்} சஹிதராகச் சுகமாக அமர்ந்திருக்கும் ரிசீகரை தரிசித்தான்.(10,11)

மஹாதேஜஸ்வியும், அளவற்ற ஆற்றல் படைத்தவனுமான அந்த ராஜரிஷி {அம்பரீசன்}, தவத்தால் ஒளிவீசும் அந்த மஹரிஷியை வணங்கி, அவரது அருளைப் பெற்று, குசலம் {நலம்} விசாரித்தான். அவன், ரிசீகரிடம் இந்தச் சொற்களைச் சொன்னான்:(12,13அ) "பெரும்நற்பேறு பெற்றவரே, பார்க்கவரே {பிருகுவின் வழித்தோன்றலே}, நூறாயிரம் பசுக்களுக்கு ஈடாக உமது சுதனை {மகனை} யஜ்ஞ விலங்காக நீர் அளித்தால் என் காரியம் நிறைவேறும்.(13ஆ,14அ) தேசங்கள் எங்கும் சென்றும் யஜ்ஞவிலங்கை {வேள்வி விலங்கை} அடைந்தேனில்லை. விலை பெற்றுக் கொண்டு இவர்களில் ஒரு சுதனை தத்தம் செய்வதே உமக்குத் தகும்" {என்றான் அம்பரீசன்}.(14ஆ,15அ)

இவ்வாறு சொல்லப்பட்டதும், மஹாதேஜஸ்வியான ரிசீகர், இந்தச் சொற்களைச் சொன்னார்: "நரசிரேஷ்டா {மனிதர்களில் சிறந்தவனே, அம்பரீசா}, நான் ஒருபோதும் ஜேஷ்டனை {மூத்தவனை} விற்க மாட்டேன்" {என்றார் ரிசீகர்}.(15ஆ,16அ)

ரிசீகரின் சொற்களைக் கேட்டவளும், மஹாத்மாக்களின் மாதாவுமானவள், நரசார்தூலனான அம்பரீசனிடம் இந்தச் சொற்களைச் சொன்னார்:(16ஆ,17அ) "பகவானான பார்க்கவரால் {பிருகுவின் வழித்தோன்றலான ரிசீகரால்} ஜேஷ்ட சுதனை விற்கமுடியாது. பார்த்திபா, கனிஷ்டன் {இளையவன்} சுனகன் என் அன்புக்குரியவன். எனவே பிரபுவே, கனிஷ்டனை ஒருபோதும் நான் கொடுக்க மாட்டேன்.(17ஆ,18) நரசிரேஷ்டா, பொதுவாக ஜேஷ்டன் பிதாவுக்குப் பிடித்தமானவன், கனிஷ்டன் மாதாவுக்குப் பிடித்தமானவன். எனவே நான் கனிஷ்டனைக் காக்கிறேன்" {என்றாள் ரிசீகரின் மனைவி}[1].(19)

[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "ரிசீக முனிவரின் மனைவி, பாலகாண்டம் 34ம் சர்க்கத்தில் சொல்லப்பட்ட விஷ்வாமித்ரரின் தமக்கை சத்தியவதி ஆவாள். இதே போல் மஹாபாரதத்திலும் {சபாபர்வம் 78:28} குந்தி இளைய மகனான சகாதேவனிடம், "காட்டுக்குப் போகாதே" எனக் கெஞ்சுகிறாள். அன்னையருக்கு இளைய மகனிடம் தனி அன்பு உண்டு என்பது அங்கும் நிரூபணம் ஆகிறது" என்றிருக்கிறது.

இராமா, அந்த முனிவரும் {ரிசீகரும்}, முனிபத்தினியும் {சத்தியவதியும்} இவ்வாறு சொன்னதும், மத்தியமனான {நடு மகனான} சுனசேபன் தானாக இந்த வாக்கியத்தைச் சொன்னான்:(20) "இராஜபுத்திரரே, பிதா ஜேஷ்டன் விற்பனைக்கில்லை என்கிறார், மாதாவோ கனிஷ்டன் {விற்பனைக்கில்லை} என்கிறார். மத்தியமனான நானே விற்பனைக்குரியவன் என்று கருதுகிறேன். நீர் என்னை அழைத்துச் செல்வீராக" {என்றான் சுனசேபன்}.(21)

மஹாபாஹுவே {பெருந்தோள்களைக் கொண்டவனே}, ரகுநந்தனா, அந்த பிரம்மவாதி {சுனசேபன்} சொன்ன வாக்கியத்தின் முடிவில் அந்த ராஜன் பொன், வெள்ளி, ரத்தினங்களின் கோடி குவியல்களையும், நூறாயிரம் பசுக்களையும் கொடுத்தான். பிறகு அந்த நரேஷ்வரன் சுனசேபனை அழைத்துக் கொண்டு பரமபிரீதியுடன் சென்றான்.(22,23) மஹாதேஜஸ்வியும், பெரும்புகழ் பெற்றவனும், ராஜரிஷியுமான அந்த அம்பரீசன் சுனசேபனை விரைந்து ரதத்தில் ஏற்றிக் கொண்டு வேகமாகச் சென்றான்" {என்றார் சதாநந்தர்}.(24)

பாலகாண்டம் சர்க்கம் – 61ல் உள்ள சுலோகங்கள் : 24

Previous | Sanskrit | English | Next

Labels

அக்னி அசுவபதி அம்சுமான் அம்பரீசன் அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இராமன் இலக்ஷ்மணன் உமை கங்கை கசியபர் கபிலர் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் குஹன் கேசினி கைகேயி கௌசல்யை கௌசிகி கௌதமர் சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபளை சாந்தை சித்தார்த்தர் சித்ரரதன் சிவன் சீதை சுக்ரீவன் சுதாமன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சூளி தசரதன் தாடகை திதி திரிசங்கு திரிஜடர் திலீபன் நளன் நாரதர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பிரம்மதத்தன் பிரம்மன் பிருகு மந்தரை மருத்துக்கள் மாரீசன் மோஹினி யுதாஜித் ரம்பை ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ரோமபாதன் லவன் வசிஷ்டர் வஸு வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விபாண்டகர் விஷ்ணு விஷ்வாமித்ரர் ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸோமதை ஸ்கந்தன் ஹனுமான் ஹிமவான்