River Kaushiki | Bala-Kanda-Sarga-34 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: குசநாபனின் மகன் காதியின் பிறப்பு; விஷ்வாமித்ரரின் சகோதரி கௌசிகி நதியாகத் தோன்றியது...
{விசுவாமித்ரர் தொடர்ந்தார்}, "இராகவா {ரகு குல ராமா}, பிரம்மதத்தன் திருமணம் செய்து சென்றதும் புத்திரரில்லாதவனானவன் {குசநாபன்} புத்திரலாபத்திற்காகப் பௌத்ரீமிஷ்டியை {புத்திரர்களைப் பெறுவதற்கான புத்திரகாமேஷ்டி யஜ்ஞத்தைத்} தொடங்கினான்.(1) அந்தச் சடங்கு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, பரமோதாரனும் {பெருந்தயாளனும்}, பிரம்மசுதனுமான {பிரம்மனின் மகனுமான} குசன், மஹீபதியான {பூமியின் தலைவனான தன் மகன்} குசநாபனிடம் பேசினான்:(2) "புத்திரா, உன்னைப் போன்றே நல்ல தார்மீகனான {சிறந்த தர்மவானான} காதி என்ற புத்திரனை நீ பெறுவாய். அவனால் நீ இவ்வுலகில் நீடித்த புகழடைவாய்" {என்றான் குசன்}.(3)
இராமா, அந்தக் குசன், மஹீபதியான குசநாபனிடம் இவ்வாறு சொல்லிவிட்டு, ஆகாயத்தில் நுழைந்து, சனாதனமான {தொன்மையான} பிரம்மலோகத்திற்குச் சென்றான்.(4) அவ்வாறே {குசன் சொன்னபடியே} சில காலத்திற்குப் பிறகு நுண்ணறிவுமிக்கக் குசநாபனுக்குக் காதி என்ற பெயரில் பரமதர்மிஷ்டர் ஒருவர் பிறந்தார்.(5) காகுத்ஸ்தா, பரமதார்மீகரான அந்த காதியே என் பிதா ஆவார் {தந்தையாவார்}. இரகுநந்தனா, அந்தக் குச வம்சத்தில் பிறந்ததால் நான் கௌசிகன் ஆனேன் {கௌசிகன் என்ற பெயரைப் பெற்றேன்}.(6)
இராகவா, நல்விரதங்களைக் கொண்டவளும், சத்தியவதி என்ற பெயரைக் கொண்டவளுமான என் தமக்கை ரிசீகருக்கு {திருமணம் செய்து} கொடுக்கப்பட்டாள்.(7) அவள் தன் பர்த்தாவை {கணவரைத்} தொடர்ந்து சரீரத்துடன் {உடலுடன்} சொர்க்கத்திற்குச் சென்றாள். அந்த பரமோதாரையே {பெருந்தயாளரான என் தமக்கை சத்தியவதியே} கௌசிகீ மஹாநதியாகப் பாய்கிறாள்[1].(8) உலகத்திற்கு நல்ல காரியம் செய்யும் விருப்பத்தில் திவ்யமாகவும், ரம்யமாகவும் பாயும் புண்யோதகையான {புண்ணிய ஆறான} என் தமக்கை ஹிமவந்தத்தை {இமயமலையை} உறைவிடமாகக் கொண்டாள்.(9)
[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "இந்த ஆறே தற்போது கோசி ஆறு என்று அழைக்கப்படுகிறது" என்றிருக்கிறது. இந்த ஆறு திபெத்தில் தோன்றி, நேபாளம் வழியாகப் பாய்ந்து இந்தியாவின் பீகார் மாநிலத்தில் கங்கை ஆற்றில் கலக்கிறது. இது கங்கையின் மிகப்பெரிய துணையாறுகளில் ஒன்றாகும்.
இரகுநந்தனா, எனவே என் தமக்கையான கௌசிகியிடம் கொண்ட சினேகத்தில் உறுதியுடன் இமயத்தின் சாரல்களில் நான் சுகமாக வசித்து வருகிறேன்.(10) சத்தியத்திலும் தர்மத்திலும் உறுதியுடன் இருந்தவளும், பதிவிரதையும், மஹாபாகையும் {பெரும் நற்பேறு பெற்றவளும்}, புண்ணியவதியுமான அந்தச் சத்தியவதியே ஆறுகளில் சிறந்த கௌசிகீ ஆனாள்.(11) இராமா, என் நியமத்தால் அவளைவிட்டு சித்தாசிரமம் வந்தடைந்து[2], உன் தேஜஸ்ஸால் நான் சித்தியடைந்தேன்.(12) மஹாபாஹுவே ராமா, இதுவே என்னுடைய வம்ச, தேச உற்பத்தியாகும் {பிறப்பின் வரலாறாகும்}. நீ என்னிடம் கேட்டவற்றை நான் சொல்லிவிட்டேன்.(13)
[2] சித்தாசிரமத்தின் இருப்பிடத்தை அறிய இந்த சுலோகமும் பயன்படும். மேலே சொல்லப்படும் கோசி ஆறு கங்கைக்கு வடக்கில் இருப்பது. முன் சர்க்கங்களில் சொல்லப்பட்ட சோணை ஆறு கங்கைக்குத் தெற்கில் இருப்பது. தாடகை வனம் தாண்டி சித்தாசிரமம் சென்றதாகவும் முன் சர்க்கங்களில் குறிப்பிருக்கிறது.
காகுத்ஸ்தா, நான் கதை சொல்லிக் கொண்டிருக்கும் போதே அர்த்தராத்திரியும் {பாதி இரவும்} கடந்துவிட்டது. நித்திரை செய்வாயாக. பத்ரமாக {மங்கலமாக} இருப்பாயாக. இங்கே {உறங்காமல் விழித்திருப்பதால்} நமது வழியில் இடையூறு ஏற்படலாகாது.(14) இரகுநந்தனா, மரங்கள் அசையவில்லை, மிருக பக்ஷிகள் அனைத்தும் {விலங்குகளும், பறவைகளும்} அடங்கிவிட்டன. திசைகளில் இரவின் இருள் வியாபித்திருக்கிறது.(15) சந்திப்பொழுது மெல்லக் கடந்து, நக்ஷத்திர தாரை கணங்களுடனும், ஜோதிகளுடனும் கூடிய சொர்க்கத்தின் கூரையானது {வானம்}, பல கண்களைக் கொண்டதைப் போன்ற தோற்றத்தை அளிக்கிறது.(16) குளிர்ந்த கதிர்களைக் கொண்ட சசியும் {நிலவும்}, இருண்ட உலகில் தன் பிரபையால் உலகப் பிராணிகளின் {உயிரினங்களின்} மனங்களை மகிழ்வித்தபடியே உதிக்கிறான்.(17) இரவுலாவி பூதங்கள் {உயிரினங்கள்}, யக்ஷ ராக்ஷச சங்கங்கள், ரௌத்திரமான {பச்சை மாமிசம் உண்ணும்}பிஷிதாஷனங்கள் அனைத்தும் ஆங்காங்கே திரிகின்றன" {என்றார் விசுவாமித்ரர்}.(18)
மஹாதேஜஸ்வியான அந்த மஹாமுனி {விசுவாமித்ரர்}, இவ்வாறு சொல்லி நிறுத்திக் கொண்டார். முனிவர்கள் அனைவரும், "இது நன்று, நல்லது" என்று சொல்லி அவரைப் பெரிதும் பூஜித்தனர்.(19) {மேலும் அவர்கள்}, "இந்தக் குசிக வம்சம், தர்மத்தில் எப்போதும் அர்ப்பணிப்புள்ளது. இந்தக் குச வம்சத்தைச் சேர்ந்த நரோத்தமர்களும் {மனிதர்களில் சிறந்தவர்களும்}, மஹாத்மாக்களும் பிரம்மனுக்கு ஒப்பானவர்களாவர்.(20) அவர்களிலும் பெரும்புகழ்பெற்ற விஷ்வாமித்ரரெனும் நீரும் விசேஷமானவரே {பிரம்மனுக்கு ஒப்பானவரே. ஆறுகளில் சிறந்த கௌசிகியும் உமது குலத்திற்கு மகிமை சேர்ப்பவளே" {என்றனர் அம்முனிவர்கள்}.(21)
அந்த முனிஷார்தூலர்களால் இவ்வாறு புகழப்பட்ட ஸ்ரீமான் குசிகாத்மஜர் {குசிகனின் வழித்தோன்றலான விசுவாமித்ரர்} நிறைவடைந்து, அஸ்த மலைக்குள் ஓயச் செல்லும் அம்சுமானை {சூரியனைப்} போல நித்திரையடைந்தார்.(22) சௌமித்ரியுடன் {லக்ஷ்மணனுடன்} கூடிய ராமனும் {அந்த வரலாற்றைக் கேட்டு} சற்றே ஆச்சரியமடைந்து, அந்த முனிஷார்தூலரைப் புகழ்ந்து நித்திரையின் {நித்ராதேவியின்} மடியில் துயில் கொண்டான்.(23)
பாலகாண்டம் சர்க்கம் – 34ல் உள்ள சுலோகங்கள் : 23
Previous | | Sanskrit | | English | | Next |