Saturday 6 November 2021

தீர்க்காயுள் | பால காண்டம் சர்க்கம் - 62 (28)

Longevity | Bala-Kanda-Sarga-62 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: விஷ்வாமித்ரர் தமது மகன்களைச் சபித்து, சுனசேபனைக் காத்து தம் தவத்தைத் தொடர்ந்தது...

Shunashepa

{சதாநந்தர் ராமனிடம் தொடர்ந்தார்}, "நரசிரேஷ்டா, ரகுநந்தனா, பெரும்புகழ் பெற்றவனான அந்த ராஜா {அம்பரீசன்}, சுனசேபனை அழைத்துச் சென்று மத்தியான வேளையில் புஷ்கரக் கரையில் ஓய்வெடுத்தான்.(1) அவன் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது, பெரும்புகழ்பெற்ற சுனசேபன் முக்கியப் புஷ்கரத்திற்குச் சென்று ரிஷிகளுடன் தவம் செய்து கொண்டிருந்த தன் மாதுலரான {தாய்மாமனான} விஷ்வாமித்ரரைத் தரிசித்தான்.(2,3அ)

இராமா, தாகத்தால் சிரமமடைந்து, முகம் வாடி, தீனனாக {பரிதாப நிலையில்} இருந்த அவன் அந்த முனிவரின் {விசுவாமித்ரரின்} மடியில் விழுந்து இந்த வாக்கியத்தைச் சொன்னான்:(3ஆ,4அ) "சௌம்யரே, முனிபுங்கவரே, எனக்கு மாதாவும் இல்லை, பிதாவும் இல்லை எனும்போது ஞாதிகளையும் {தாயாதிகளையும்}, பந்துக்களையும் {உறவினர்களையுங்} குறித்து என்ன சொல்ல? தர்மத்திற்காக நீர் என்னைக் காப்பதே தகும்.(4ஆ,5அ) நரசிரேஷ்டரே, நீர் யாவரையும் காப்பவர், யாவருக்கும் நன்மை செய்பவர். ராஜாவின் காரியமும் நிறைவேற வேண்டும். நான் அழிவடையாமல் தீர்க்காயுளுடன் இருந்து, உத்தமமான ஒப்பற்ற தவங்களைச் செய்து, சுவர்க்கலோகம் செல்ல விரும்புகிறேன்.(5ஆ,6) அநாதையான {நாதனற்ற} எனக்கு தெய்வீக உணர்வுடன் மனமிரங்கி நீர் நாதனாக வேண்டும். புத்திரனைக் காக்கும் பிதாவைப் போல இந்த வருத்தத்தில் இருந்து என்னைப் பாதுகாப்பதே உமக்குத் தகும்" {என்றான் சுனசேபன்}.(7)

மஹாதபஸ்வியான விஷ்வாமித்ரர் இந்த வசனத்தைக் கேட்டுப் பலவிதங்களில் அவனை சாந்தப்படுத்தி, தமது புத்திரர்களிடம் இதைச் சொன்னார்:(8) "நன்மையை விரும்பும் பிதாக்கள் என்ன காரணத்திற்காகப் புத்திரர்களைப் பெறுகிறார்களோ அந்தப் பரலோக நன்மைக்கான காலம் இதோ வந்திருக்கிறது[1].(9) இந்த பாலன் முனிசுதனாவான். இவன் என்னைச் சரணடைந்திருக்கிறான். புத்திரர்களே, இவனுக்கு ஜீவனை அளித்துப் பிரியத்தைச் செய்ய வேண்டும்.(10) நீங்கள் அனைவரும் நற்செயல்களைச் செய்கிறீர்கள். நீங்கள் அனைவரும் தர்மத்தைப் பின்பற்றுகிறீர்கள். {உங்களில் ஒருவன்} நரேந்திரனின் விலங்காகி {அம்பரீச மன்னனின் யஜ்ஞ விலங்காகி} அக்னியை நிறைவடையச் செய்வீராக.(11) சுனசேபன் நாதனுள்ளவனாவான். யஜ்ஞம் இடையூறின்றி நிறைவேறும். தேவர்கள் நிறைவடைவார்கள். என் வாக்கும் தவறாது" {என்றார் விஷ்வாமித்ரர்}.(12)

[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "ஒரு தந்தை இம்மையில் சமூகத்திற்கு நல்லது செய்யும் காரணத்திற்காகவும், மறுமையில் சுவர்க்கத்தில் உரிய இடத்தைப் பெறுவதற்காகவும் மகன்களைப் பெறுகிறான். எனவே, இவனை அகால மரணத்தில் இருந்து காத்து நல்லது செய்து, சுவர்க்கத்தில் எனக்குரிய இடத்தை ஈட்டுவதற்கான செயலைச் செய்யுங்கள் என்று விஷ்வாமித்ரர் தம் மகன்களிடம் கோருகிறார்" என்றிருக்கிறது.

நரசிரேஷ்டா {மனிதர்களிற்சிறந்த ராமா}, மனுஷ்யந்தன் முதலிய சுதன்கள் {விஷ்வாமித்ரரின் மகன்கள்} முனிவரின் வசனத்தைக் கேட்டு அஹங்காரமடைந்து பரிகாசத்துடன் இதைச் சொன்னார்கள்:(13) "விபுவே, ஆத்மசுதர்களை {தன் பிள்ளைகளைக்} கைவிட்டு, அன்னிய சுதனை {மற்றவர் மகனைக் காப்பது} நாய் மாமிச போஜனம் செய்வதைப் போன்ற அகாரியமென எங்களுக்குத் தோன்றுகிறது" {என்றனர்}[2].(14)

[2] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "விஷ்வாமித்ரர், "நாய் இறைச்சி உண்டது" குறித்துத் தமது மகன்கள் உட்படக் கிட்டத்தட்ட அனைவராலும் இகழப்படுகிறார். விஷ்வாமித்ரர் ஒருமுறை உணவு கிடைக்காத போது நாயின் இறைச்சியை உண்ண முயன்று கையும் களவுமாகப் பிடிபட்டார் என்ற ஒரு கதை மஹாபாரதத்தில் இருக்கிறது. பிற்காலத்தில் வசிஷ்டரின் மகன்களைச் சபித்த போதும் விஷ்வாமித்ரரின் சாபக் கருப்பொருளாக நாய் இறைச்சியே அமைந்தது. இப்போதும் கூட அதே கருப்பொருளைக் கொண்டே தம் மகன்களையும் சபிக்கப்போகிறார்" என்றிருக்கிறது. மஹாபாரதம் சாந்தி பர்வம் 141ம் அத்தியாயத்தில் விஷ்வாமித்ரர் நாய் இறைச்சி உண்ண முயன்ற கதை வருகிறது. 

அந்த முனிபுங்கவர் {விசுவாமித்ரர்} தமது புத்திரர்களின் வசனத்தைக் கேட்டு குரோதத்தால் கண்கள் சிவக்கப் பேசத் தொடங்கினார்:(15) "என் வாக்கியத்தை மீறினீர்கள். வெறுக்கத்தக்க வகையிலும், எனக்கு மயிர்க்கூச்சம் ஏற்படும் வகையிலும் கடினமொழிகளை உரைத்து தர்மத்தைத் தள்ளி குற்றஞ்சாட்டுகிறீர்கள்.(16) நீங்கள் அனைவரும் வாசிஷ்டர்களைப் போன்ற ஜாதியராகி {வசிஷ்டரின் மகன்கள் அடைந்த முஷ்டிக ஜாதியாகி} நாய் மாமிச போஜனம் செய்து பிருத்வியில் (புவியில்) முழுமையாக ஆயிரம் வருடங்கள் திரிவீராக" {என்று சபித்தார்}.(17)

தமது புத்திரர்களைச் சபித்த அந்த முனிவரர், அச்சத்தில் இருந்த சுனசேபனுக்குப் பாதிப்பில்லாமல் அவனைப் பாதுகாக்கும் வகையில் இவ்வாறு பேசினார்:(18) "சிவந்த மாலைகள் சாற்றப்பட்டதும், சந்தனம் பூசப்பட்டதுமான வைஷ்ணவ {விஷ்ணுவை தேவதையாகக் கொண்ட} யூபத்தை அடைந்ததும், பவித்ரமான பாசக்கயிற்றால் கட்டப்படும்போது இந்தச் சொற்களை அக்னியிடம் சொல்வாயாக.(19) முனிபுத்திரனே {சுனபேசனே}, அம்பரீசன் யஜ்னத்தில் இவ்விரண்டு திவ்யமான பாடல்களைப் பாடினால் {மந்திரங்களைச் சொன்னால்} உன் எண்ணம்[3] நிறைவேறும்" {என்றார் விஷ்வாமித்ரர்}.(20)

[3] நரசிம்மாசாரியன் பதிப்பின் அடிக்குறிப்பில், "சாவாமற் பிழைக்க வேணுமென்னுங்கருத்து" என்றிருக்கிறது.

சுனசேபன் அவ்விரண்டு பாடல்களையும் மிகக் கவனமாகக் கேட்டுக் கொண்டு ராஜசிம்மனான அம்பரீசனிடம் சென்று,(21) "மஹாபுத்திமானே, ராஜசிம்மரே, வருவீராக நாம் சீக்கிரம் செல்வோம். ராஜேந்திரரே, தீக்ஷை பெறுவீராக" என்று சொன்னான்.(22)

அந்த நிருபதி {மக்கள் தலைவனான அம்பரீசன்} ரிஷிபுத்திரனின் இந்த வாக்கியத்தைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்து சோம்பலின்றி யஜ்ஞ மண்டபத்திற்கு சீக்கிரமாகச் சென்றான்.(23) அந்த ராஜா, சதஸ்யர்களின் {வேள்வி செய்விப்பவர்களின்} அனுமதியைப் பெற்று, பவித்ரமான காரியங்களுக்கு ஆயத்தம் செய்து அவனைச் செவ்வாடைகள் உடுத்தச் செய்து யஜ்ஞவிலங்காக்கி யூபத்தில் பாதுகாப்பாகக் கட்டினான்.(24)

அந்த முனிபுத்திரன் {சுனசேபன்} கட்டப்பட்டதும் ஸுரர்களான இந்திரன், இந்திரானுஜன் {இந்திரனின் தம்பியான உபேந்திரன் [விஷ்ணு]} ஆகிய இருவரையும் விதிப்படி சொல்லப்படும் மேன்மையான சொற்களால் {மந்திரங்களால்} நிறைவடையச் செய்தான்.(25) இராகவா, ரஹஸ்ய ஸ்துதியால் நிறைவடைந்த சஹஸ்ராக்ஷன் {ஆயிரங்கண் இந்திரன்} பெரும் பிரீதியுடன் சுனசேபனுக்கு தீர்க்காயுளை வழங்கினான்.(26) நரசிரேஷ்டா, ராமா, சஹஸ்ராக்ஷனின் அருளால் அந்த ராஜனும் {அம்பரீசனும்} யஜ்ஞ பலனைப் பலமடங்குகளாக அடைந்தான்.(27) நரசிரேஷ்டா, தர்மாத்மாவும், மஹாதபஸ்வியுமான விஷ்வாமித்ரர், புஷ்கரையில் மீண்டும் ஆயிரம் வருடங்கள் தவமிருந்தார்" {என்றார் சதாநந்தர்}.(28)

பாலகாண்டம் சர்க்கம் – 62ல் உள்ள சுலோகங்கள் : 28

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சம்பாதி சரபங்கர் சாகரன் சாந்தை சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்முகி தூஷணன் நளன் நாரதர் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் மண்டோதரி மதங்கர் மந்தரை மயன் மருத்துக்கள் மஹோதயர் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மைனாகன் மோஹினி யுதாஜித் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாயு வாலி வால்மீகி விகடை விபாண்டகர் விபீஷணன் விராதன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை