Trishanku Svarga | Bala-Kanda-Sarga-60 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: சுவர்க்கத்திற்கு உயர்ந்த திரிசங்கு; இந்திரனால் சுவர்க்கத்திலிருந்து தள்ளப்பட்டது; அவனுக்காக மற்றொரு சுவர்க்கத்தை உண்டாக்கிய விஷ்வாமித்ரர்...
{சதாநந்தர் ராமனிடம் தொடர்ந்தார்}, "மஹாதேஜஸ்வியான விஷ்வாமித்ரர், மஹோதயருடன் கூடிய வாசிஷ்டர்களின் {வசிஷ்டரின் மகன்களுடைய} தபோபலம் அழிந்ததை அறிந்து, ரிஷிகளின் மத்தியில் இதை அறிவித்தார்:(1) "இக்ஷ்வாகுவின் வழித்தோன்றலும், திரிசங்கு என்று நன்கு அறியப்பட்டவனும், தர்மிஷ்டனும், நல்லவனுமான இவன், தன் சரீரத்துடன் தேவலோகம் செல்ல விரும்பி என்னை சரணடைந்திருக்கிறான்.(2,3அ) இவன் தன் சரீரத்துடன் தேவலோகம் செல்ல வழிவகுக்கும் யஜ்ஞத்தை என்னுடன் சேர்ந்து நீங்கள் அனைவரும் நடத்தித் தர வேண்டும்" {என்றார் விஷ்வாமித்ரர்}.(3ஆ,4அ)
விஷ்வாமித்ரரின் சொற்களைக் கேட்டவர்களும், தர்மத்தை அறிந்தவர்களுமான மஹரிஷிகள் அனைவரும் விரைவாக ஒன்று சேர்ந்து தர்மத்திற்குப் பொருந்தும் இந்தச் சொற்களைத் தங்களுக்குள் பேசினர்:(4ஆ,5அ) "குசிகனின் வழித்தோன்றலும், பரமகோபம் அடைபவருமான இம்முனிவர் சொன்னவை அனைத்தையும் செய்வோம். இதில் ஐயமில்லை. இல்லையென்றால் அக்னிக்கு ஒப்பான இந்த பகவான் கடுஞ்சாபம் அளிப்பார்.(5ஆ,6) எனவே, இக்ஷ்வாகுவின் வழித்தோன்றல் {திரிசங்கு}, விஷ்வாமித்ரரின் தேஜஸ்ஸால் சரீரத்துடன் திவம் {சுவர்க்கம்} செல்லும் வகையில் நாம் யஜ்ஞத்தைச் செய்வோம். அனைவரும் காரியத்தைத் தொடங்குவோம்" {என்று தங்களுக்குள் பேசிக்கொண்டனர்}.(7,8அ)
இவ்வாறு சொன்ன அந்த மஹரிஷிகள், அதற்கான பணிகளைச் செய்யத் தொடங்கினர். மஹாதேஜஸ்வியான விஷ்வாமித்ரர் {அந்த யஜ்ஞத்தின்} யாஜகரானார் {அத்வர்யுவானார்}.(8ஆ,9அ) மந்திரங்களை நன்குணர்ந்த ரித்விஜர்களும், கல்பங்களுக்கு {சாத்திரங்களுக்கு} இணக்கமான மந்திரங்களை விதிப்படி சொல்லி அனைத்துக் கர்மங்களையும் செய்தனர்.(9ஆ,10அ)
நெடுங்காலத்திற்குப் பிறகு, மஹாதேஜஸ்வியான விஷ்வாமித்ரர், ஹவிர்ப்பாகங்களைக் கொடுப்பதற்காக தேவர்கள் அனைவரையும் ஆவாஹநம் செய்தார் {மந்திரங்களைச் சொல்லி நல்ல முறையில் அழைத்தார்}.(10ஆ,11அ) எனினும் தேவர்கள் எவரும் ஹவிர்ப்பாகங்களை ஏற்க வரவில்லை. பெருங்கோபமடைந்த விஷ்வாமித்ர மஹாமுனி, ஸ்ருவத்தை {ஹோமம் செய்யும் அகப்பையை} உயர்த்தி, குரோதத்துடன் திரிசங்குவிடம் இதைச் சொன்னார்:(11ஆ,12) "நரேஷ்வரா {மனிதர்களின் தலைவா, திரிசங்குவே}, நான் அடைந்த தவத்தின் வீரியத்தைப் பார். இத்தகையவனான நான் உன்னை சரீரத்துடன் சுவர்க்கத்திற்கு அனுப்புவேன். நராதிபா, அடைதற்கரிய திவத்தை {சுவர்க்கத்தை} உன் சரீரத்துடன் அடைவாயாக.(13,14அ) ராஜாவே, என்னால் அடையப்பட்ட தவத்தின் பலன் சிறிதாவது இருக்குமல்லவா? அந்த தேஜஸின் மூலம் நீ சரீரத்துடன் திவம் {சுவர்க்கம்} செல்வாயாக" {என்றார் விஷ்வாமித்ரர்}.(14ஆ,15அ)
காகுத்ஸ்தா {ராமா}, அந்த முனிவர் இவ்வாறு சொல்லி, மற்ற முனிவர்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அந்த நரேஷ்வரன் {மனிதர்களின் தலைவனான திரிசங்கு} தன் சரீரத்துடன் திவம் {சுவர்க்கம்} நோக்கி எழுந்தான்.(15ஆ,16அ) ஸுரகணங்கள் {தேவர்கள்} அனைவருடன் கூடிய பாகசாசனன் {இந்திரன்}, ஸ்வர்க்கலோகம் வந்த திரிசங்குவைக் கண்டு இந்த வசனத்தைச் சொன்னான்:(16ஆ,17அ) "திரிசங்குவே, நீ இன்னும் ஸ்வர்க்கத்தை உனதாக்கவில்லை. நீ திரும்பிச் செல்வாயாக. குருசாபம் அடைந்த மூடா, சரீரந்திரும்பி {தலைகீழாகப்} பூமியில் விழுவாயாக" {என்றான் இந்திரன்}.(17ஆ,18அ)
மஹேந்திரனால் இவ்வாறு சொல்லப்பட்டதும் அந்தத் திரிசங்கு, தபோதனரான விஷ்வாமித்ரரை நோக்கி, "என்னைக் காப்பீராக" என்று உரக்கக் கதறியபடியே வானத்தில் இருந்து விழுந்தான்.(18ஆ,19அ) அவன் {திரிசங்கு} உரக்கக் கதறியதைக் கேட்ட கௌசிகர் {விஷ்வாமித்ரர்} தீவிர கோபமடைந்து, "நில், நிற்பாயாக" என்று சொன்னார்.(19ஆ,20அ)
ரிஷிகளின் மத்தியில் மற்றொரு பிரஜாபதியை {படைப்பாளனான பிரம்மனைப்} போல இருந்த அந்த தேஜஸ்வி {விசுவாமித்ரர்}, தக்ஷிணமார்க்கத்தில் {தென் திசையின் வழியில்} வேறு சப்தரிஷிகளைப் படைத்தார். பெரும் புகழ்பெற்ற அவர் {விஷ்வாமித்ரர்}, முனிகளின் மத்தியில் நின்று குரோதமடைந்தவராக தக்ஷிண திசையில் புதிய நக்ஷத்திர மாலையை {நட்சத்திரங்களின் வரிசையைப்} படைத்தார்.(20ஆ-22அ) நக்ஷத்திர வம்சங்களையும் படைத்துக் குரோதக்கறை படிந்தவராக, "மற்றொரு இந்திரனை உண்டாக்குவேன். அல்லது இந்த லோகம் இந்திரனற்றதாக இருக்கட்டும்" என்று சொல்லிவிட்டு, மேலும் குரோதத்துடன் அவர் வேறு தேவர்களையும் படைக்கத் தொடங்கினார்.(22ஆ,23)
அப்போது ரிஷிகளும், ஸுரர்களும், அஸுரர்களும் பெருங்கலக்கமடைந்து, மஹாத்மாவான விஷ்வாமித்ரரிடம் நற்சொற்களைச் சொல்லும் வகையில்,(24) "தபோதனரே, பெரும் நற்பேறு பெற்றவரே, குருசாபத்தால் வீழ்ந்த இந்த ராஜன், சரீரத்துடன் திவம் {சுவர்க்கம்} செல்வது ஒருபோதும் தகாது" என்றனர்.(25)
முனிபுங்கவரான கௌசிகர், தேவர்களின் வசனத்தைக் கேட்டு, பாராட்டத்தக்க இந்த வாக்கியத்தை அந்த தேவர்கள் அனைவரிடமும் சொன்னார்:(25) "நீங்கள் மங்கலமாக இருப்பீராக. பூபதியான இந்தத் திரிசங்குவை சரீரத்துடன் உயர்த்துவதாக இவனிடம் செய்த பிரதிஜ்ஞையை மெய்யற்றதாக்கும் உற்சாகம் எனக்கில்லை.(27) சரீரத்துடன் கூடிய சாஷ்வத ஸ்வர்க்கம் திரிசங்குவுக்கு அமையட்டும். மேலும் எவை {என்னால்} படைக்கப்பட்டனவோ, அந்த நக்ஷத்திரங்கள் அனைத்தும் என்னுடையவையாகவே இந்த லோகங்கள் இருக்கும் வரை உறுதியாக நிலைத்திருக்கட்டும். ஸுரர்கள் அனைவரும் இதை ஏற்பதே தகும்" {என்றார் விஷ்வாமித்ரர்}.(28,29)
இவ்வாறு சொல்லப்பட்டதும் தேவர்கள் அனைவரும் அந்த முனிபுங்கவரிடம் மறுமொழியாக, "அவ்வாறே ஆகட்டும். முனிசிரேஷ்டரே, நீர் மங்கலமாக இருப்பீராக. இந்த நக்ஷத்திரங்கள் அநேகமும் வைஷ்வாநரபாதைக்கு {சோதிமண்டல வழிக்கு} வெளியே ஆகாயத்தில் தங்கள் தங்கள் இடங்களில் நிலைத்திருக்கட்டும். ஜொலித்துக் கொண்டிருக்கும் ஜோதிகளின் மத்தியில் அமரரைப் போல் திரிசங்குவும் இருந்தாலும் இவன் தலைகீழாகவே நிலைத்திருக்கட்டும்.(30-32அ) சுவர்க்கம் செல்பவனைத் தொடர்வதைப் போலவே கிருதார்த்தனும், கீர்த்திமானுமான இந்த நிருபசத்தமனை {மன்னர்களில் சிறந்த திரிசங்குவை} இந்த ஜோதிகள் அனைத்தும் பின் தொடரட்டும்" என்றனர்.(32ஆ,33அ)
தேவர்கள் அனைவராலும் துதிக்கப்பட்டவரும், மஹாதேஜஸ்வியும், தர்மாத்மாவுமான விஷ்வாமித்ரரும் ரிஷிகளின் மத்தியில் தேவர்களிடம், "ஏற்கிறேன்" என்று சொன்னார்.(33ஆ,34அ)
நரோத்தமா {மனிதர்களில் சிறந்த ராமா}, யஜ்ஞம் முடிந்த பின்னர் மஹாத்மாக்களான தேவர்கள், தபோதனர்களான ரிஷிகள் ஆகியோர் அனைவரும் வந்தவாறே சென்றனர்" {என்றார் சதாநந்தர்}[1].(34)
[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "திரிசங்கு, சூர்யாருணனின் {திரையாருணனின்} மகனாவான். உண்மையில் இவனது பெயர் சத்தியவிரதனாகும். திரிசங்கு என்பது இவனது புனைப்பெயராகும். இவன் மூன்று சாபங்களைப் பெற்றவன் என்பதால் திரிசங்கு என்ற பெயர்பெற்றான் என்று ஹரிவம்சம் குறிப்பிடுகிறது. அது பின்வருமாறு: அறம் சார்ந்த இவனது தந்தை இவனை நாடு கடத்துகிறான். வசிஷ்டர் அதைத் தடுக்காததால் திரிசங்கு அவரிடம் பெருங்கோபம் கொள்கிறான். எனவே, தந்தையின் சாபம் முதல் சாபம். அடுத்தது வசிஷ்டரின் கறவை மாட்டைக் கொன்று இரண்டாம் சாபத்தைப் பெறுகிறான். விஷ்வாமித்ரரின் மகன்களுக்கு உணவளிக்க முடியாத காரணத்தால் வசிஷ்டரின் பசுவைக் கொன்று அவர்களுக்கு உணவளிக்கிறான். விஷ்வாமித்ரர் தன் நாட்டையும், குடும்பத்தையும் துறந்து தவம் செய்யச் சென்றுவிட்டதால் அவரது மனைவியையும், அவரது மகன்களையும் திரிசங்குவே காத்துவந்தான். அந்த நன்றிக்கடனுக்காகவே இப்போது திரிசங்குவுக்கு உதவும் வகையில் விஷ்வாமித்ரர் அவனைச் சுவர்க்கத்திற்கு அனுப்ப முயல்கிறார். மூன்றாவது சாபம் புனிதமற்ற இறைச்சியை உண்டதால் அவனுக்கு விளைகிறது. இவ்வாறே திரிசங்கு மூன்று சாபங்களைப் பெறுகிறான்" என்றும் இன்னும் அதிகமும் இருக்கிறது. அதைப் படிக்க https://valmikiramayan.net/utf8/baala/sarga60/bala_60_frame.htm என்ற சுட்டிக்குச் செல்லவும். இங்கே குறிப்பிடப்படும் ஹரிவம்சம் பகுதியைப் படிக்க https://harivamsam.arasan.info/2020/03/Harivamsa-Harivamsa-Parva-Chapter-12.html https://harivamsam.arasan.info/2020/04/Harivamsa-Harivamsa-Parva-Chapter-13.html என்ற இரண்டு சுட்டிகளுக்குச் செல்லவும்.
பாலகாண்டம் சர்க்கம் – 60ல் உள்ள சுலோகங்கள் : 34
Previous | | Sanskrit | | English | | Next |