Diti's Sleep | Bala-Kanda-Sarga-46 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: இந்திரனைக் கொல்லும் ஒரு மகனை வேண்டிய திதி; திதியிடம் வந்த இந்திரன்; விரதம் தவறிய திதியின் கருவை ஏழு துண்டுகளாக வகுந்த இந்திரன்...
{விஷ்வாமித்ரர் தொடர்ந்தார்}, "இராமா, திதி தன் புத்திரர்கள் கொல்லப்பட்டதும் பரம துக்கமடைந்து, தன் பர்த்தாவும் {கணவரும்}, மாரீசருமான {மரீசியின் மகனுமான} காசியபரிடம் இதைச் சொன்னாள்:(1) "பகவானே, மஹாபலவான்களான உமது புத்திரர்களால் {ஆதித்யர்களால்} என் புத்திரர்கள் {தைத்தியர்கள்} கொல்லப்பட்டனர். தீர்க்க தவத்தால் அடையப்படக்கூடியவனும், சக்ரனை {இந்திரனைக்} கொல்பவனுமான ஒரு புத்திரனை {அடைய} நான் விரும்புகிறேன்.(2) {புத்திரர்களை இழந்த தாயாக} இந்நிலையில் இருக்கும் நான் தவம் செய்ய விரும்புகிறேன். இதை அனுமதிப்பதே உமக்குத் தகும்[1]. ஈஷ்வரனும் {உலகங்களை ஆளக்கூடியவனும்}, சக்ரனைக் கொல்லக்கூடியவனுமான கர்ப்பத்தை எனக்குத் தருவதே உமக்குத் தகும்" {என்றாள் திதி}.(3)
[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "ஒரு முனிவரின் மனைவி, ஒரு வாழ்க்கைத் துணையாகத் தன் கணவரின் தவ புண்ணியத்தில் தன் பங்கைப் பெற்றுக் கொள்ளக்கூடியவள் என்பதால், அவள் தனிப்பட்ட வகையில் ஆன்ம தவம் செய்ய விரும்பினால் தனது கணவனின் அனுமதியைப் பெற வேண்டும்" என்றிருக்கிறது.
மாரீசரும், மஹாதேஜஸ்வியுமான கசியபர், அவளது வாக்கியத்தைக் கேட்டு, பரம துக்கமடைந்து, மறுமொழியாக,(4) "தபோதனையே, அவ்வாறே ஆகட்டும். நீ மங்கலமாக இருப்பாயாக. தூய்மை அடைவாயாக. நீ சக்ரனை அழிக்கவல்ல புத்திரனைப் பெறுவாய்.(5) நீ தூய்மையடைந்தால், ஓராயிரம் வருடங்களுக்குப் பிறகு, மூவுலகங்களையும் அழிக்கவல்ல {காக்கவல்ல} புத்திரனை[2] என்னிடம் இருந்து பெறுவாய்" என்றார்.(6)
[2] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "சில பதிப்புகளில் திதி சொன்ன "திரைலோக்யஹந்தரம் {மூவுலகங்களை அழிக்கும்}" என்ற சொல் காசியபரின் பேச்சாக அளிக்கப்படுக்கிறது. சில பதிப்புகளில் திரைலோக்கியபர்த்தாரம் {மூவுலகங்களைக் காக்கும்} என்றிருக்கிறது. திதி ஒரு கொலைகாரனை புத்திரனாக விரும்பலாம். ஆனால் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் தந்தையான கசியபர், தன் அருளை வேண்டி நிற்கும் மூவுலகங்களை "அழிக்கும் மகனைப் பெறுவாய்" என்று சொல்லமுடியாது. சில பதிப்புகள் இந்த உரிச்சொல்லை வரப்போகும் திதியின் மகனுக்குப் பொருத்தாமல் இந்திரனுடன் இணைக்கின்றன" என்றிருக்கிறது. நரசிம்மாசாரியரின் பதிப்பில், "நீ மிகத் தவம் புரிந்து நன்கு ஆசாரத்துடன் பிள்ளை பிறக்குமளவும் பரிசுத்தியோடிருக்க வேண்டும். அப்படி இருந்தாயாயின் யுத்தத்தில் இந்திரனைக் கொல்லவல்லவனாகிய புதல்வனைப் பெறுவாய். ஆயிரமாண்டுகள் நிரம்பும் வரையில் சுசியாயிருப்பாயாயின் மூவுலகங்களையும் ஆளவல்லவனாகிய குமாரனை என் அனுக்கிரகத்தினால் பெறுவாய்" என்றிருக்கிறது. இங்கும் "மூவுலகங்களையும் ஆளவல்ல" என்றே இருக்கிறது. "அழிக்கவல்ல" என்றில்லை.
மஹாதேஜஸ்வியான அவர் இவ்வாறு சொல்லுவிட்டுத் தன் கையால் அவளைத் தட்டிக் கொடுத்து, அவளைத் தீண்டி {அவளைப் புனிதப்படுத்தி}, "அருளப்பட்டிருப்பாயாக" என்று சொல்லிவிட்டு தவம் செய்யப் புறப்பட்டுச் சென்றார்.(7) நரசிரேஷ்டா {மனிதர்களில் சிறந்த ராமா}, அவர் சென்ற பிறகு பரம மகிழ்ச்சியடைந்த திதி, {விசாலாபுரத்தின் முந்தைய பெயரான} குசப்லவத்தை அடைந்து உக்கிர தவம் செய்தாள்.(8) நரசிரேஷ்டா, அவள் தவம் செய்து கொண்டிருந்தபோது, ஸஹஸ்ராக்ஷன் {ஆயிரங்கண்களைக் கொண்ட இந்திரன்} மிக்க நல்ல குணங்களுடன் கூடியவனாக அவளுக்குப் பரிசரியங்களை {தொண்டுகளைச்} செய்து வந்தான்.(9) அந்த ஸஹஸ்ராக்ஷன், அக்னி, குசம் {தர்ப்பம்}, விறகு, நீர், பழம், கிழங்கு முதலியவற்றையும், தேவையான எந்தப் பிறவற்றையும் கொண்டு வந்தான்.(10) அந்தச் சக்ரன், உடலைப் பிடித்தல், உடலின் களைப்பை அகற்றும் வழிமுறைகள் ஆகியவற்றால் எந்நேரமும் திதிக்குத் தொண்டாற்றினான்.(11)
இரகுநந்தனா, ஓராயிரம் வருடங்கள் பூர்ணமடையப் பத்து வருடங்களே இருந்தபோது, பெரும் மகிழ்ச்சியுடன் இருந்த திதி அந்த சஹஸ்ராக்ஷனிடம் {இந்திரனிடம்} பேசினாள்:(12) "வீரியவான்களில் சிறந்தவனே, தவம் பயிலும் எனக்கு இன்னும் பத்து ஆண்டுகளே எஞ்சியிருக்கின்றன. நீ உன் பிராதரனை {உடன் பிறந்தானைக்} காணப்போகிறாய். நீ மங்கலமாக இருப்பாயாக.(13) புத்திரா, எவனை உனக்காகப் பெறப்போகிறேனோ, அவனை வெற்றியில் உற்சாகம் கொள்பவனாக நான் வளர்ப்பேன். புத்திரா, {பகைவரைக் குறித்த} பிணியின்றி {அச்சமின்றி} மூவுலகங்களையும் வென்று அவனுடன் அனுபவிப்பாயாக[3].(14) ஸுரசிரேஷ்டா {தேவர்களில் சிறந்தவனே}, மஹாத்மாவான உன் பிதாவிடம் நான் யாசித்ததால், "ஆயிரம் வருட முடிவில் ஒரு மகன் பிறப்பான்" என அவர் வரமளித்தார்" {என்றாள் திதி}.(15)
[3] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பில், "அல்லது, "புத்திரா, எவனை நான் வளர்க்கப் போகிறேனோ அவன் உன்னை வெல்வதில் உற்சாகம் கொள்பவனாக இருந்தாலும், மூவுலகங்களையும் வென்று உன்னுடன் அனுபவிக்கும்படி அவனிடம் சொல்வேன். நீ பிணியற்றவனாக {அச்சமில்லாதவனாக} இருக்கலாம்" என்றும் பொருள் கொள்ளலாம்" என்றிருக்கிறது. நரசிம்மாசாரியரின் பதிப்பில், "பத்து வருஷங்கள் நிறைந்த பின்பு உனது உடன் பிறந்தவனைக் காண்பாய். அவன் உன்னை வெல்லுவதற்கு உத்ஸாஹங் கொண்டிருப்பான். ஆயினும் உனக்காக அவனை யான் ஸமாதாநப்படுத்தி உன்னிடத்தில் நேசத்துடன் இருக்கச் செய்கின்றேன். நீ அவனுடன் கூடி மூவுலகங்களையும் வென்று மனக்கவலை தீர்ந்து ஸுகமாக வாழ்த்திருப்பாய்" என்றிருக்கிறது.
திதி இவ்வாறு சொன்ன பிறகு, தினேஷ்வரன் {சூரியன்} மத்தியை அடைந்ததும் {நடுப்பகலை அடைந்ததும்}, அந்த தேவி {திதி} கால்மாட்டில் தலை வைத்திருந்த நிலையில், அங்கேயே நித்திரையால் அபகரிக்கப்பட்டாள்[4].(16) சக்ரன், "கால்மாட்டில் தலை கிடப்பது நன்றன்று" என்று நினைத்தும், சிர ஸ்தானத்தில் அவளது பாதங்கள் இருப்பதைக் கண்டும் சிரித்து மகிழ்ச்சியடைந்தான்[5].(17) இராமா, பரமாத்மவானான புரந்தரன் {இந்திரன், அவளது} சரீர விவரம் அறிந்து பிரவேசித்து {அவளது உடலுக்குள் புகுந்து} அந்த கர்ப்பத்தை ஏழு துண்டுகளாகப் பிளந்தான்.(18) இராமா, கூரிய நூறு முனைகளைக் கொண்ட வஜ்ரத்தால் பிளக்கப்பட்ட அந்தக் கர்ப்பம், உரத்த குரலில் அழுத போது திதி விழிப்படைந்தாள்.(19)
[4] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "இங்கே தலைமாட்டில் கால் வைத்துப் படுப்பது என்பது பல்வேறு வகைகளில் ஊகிக்கப்படுகிறது. "அமர்ந்திருந்த அவள், தன் முட்டியில் தலைவைத்ததால், அவளது கேசம் பாதங்களைத் தொட்டது, அதனால் அவள் புனிதமற்றவளானாள்" என்பது ஒரு வகை. "அவள் கிழக்கிலோ, தெற்கிலோ தலை வைக்காமல் உறங்கினாள்" என்பது மற்றொரு வகை. இந்தியாவின் புராதனக் கட்டில்கள், தலைப்புறம், காற்புறம் என்பனவற்றைக் கொண்டிருந்தன. "அவள் கால் வைக்குமிடத்தில் தலை வைத்துப் படுத்தாள்" எனும் பொருள் இன்னொரு வகையானது. கட்டிலே இல்லாமல் தரையில் உறங்கினாலும், தலை கிழக்கிலோ, தெற்கிலோ இருக்க வேண்டும். மாறாக வடக்கிலோ, மேற்கிலோ இருக்கலாகாது. இறுதி வகையானது, "நடுப்பகலில் அவள் உறங்கினாள்" என்பதாகும். விரதக் காலத்தில், நடுப்பகல் உறக்கம் தவிர்க்கப்பட வேண்டும். எனவே அவளது நுட்பமான தவம் வீழ்த்தப்பட்டது" என்றிருக்கிறது.
[5] நரசிம்மாசாரியரின் பதிப்பில், "அந்தத் திதி இங்ஙனம் மொழிந்து, ஸூர்யன் ஆகாயமத்தியிற் சென்று, நடுப்பகலாகையில் நித்திரையால் தேகம் பரவசமாகத் தலைமாட்டில் கைவைத்துப் படுத்தனள். இந்திரன் இப்படி அவ்வம்மை சுசி தப்பிக் கால்மாட்டில் தலையையும், தலைமாட்டில் காலையுமாக வைத்துக் கொண்டு, நித்திரை போயிருப்பது கண்டு, "இவள் வீண் கர்வப்பட்டாள்" என்று தனக்குள் சிரித்துக் கொண்டு, அவளது கர்ப்பத்தைக் கெடுக்க அவகாசம் நேரிட்டது பற்றி ஸந்தோஷங்கொண்டு, அவளது சரீரத்தினுடன் புகுந்து, மிகவுந்தீரனாகையால், அக்கருவை ஏழு துண்டங்களாகப் பிளந்து விட்டனன்" என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், "பகலில் படுக்கையில் படுத்து நித்திரை செய்யப் பிரஸக்தி இல்லாமையால், ஆஸநத்திலிருந்து கொண்டே உறங்கும்போது, தலை சாய்ந்து காலில் படுவதால் அசுசித்வம் வந்ததென்று சிலர். தலை வைக்குமிடத்தில் காலையும், கால் வைக்குமிடத்தில் தலையையும் வைத்துப் படுத்தாளாகையால் அசுசித்வமென்று சிலர். கிழக்குத் தெற்குகளில் தலை வைக்க வேணுமென்கிற ஸ்ம்ருதிக்கு விரோதமாய்ப் படுத்தாளாகையால் அசுசித்வமென்று சிலர். மற்றுஞ்சிலர் கிருஷ்ணாஜினத்தின் {கருப்பு மான் தோலின்} தலைப்பக்கம் காலையும், கால்ப்பக்கம் தலையையும் வைத்துப் படுத்தாளாகையால், அசுசித்வம் வந்ததென்று கூறுவர்" என்றிருக்கிறது.
சக்ரன், "அழாதே, அழவேண்டாம்" என்று அந்தக் கர்ப்பத்திடம் சொன்னான். மஹாதேஜஸ்வியான வாசவன் {இந்திரன்}, அஃது அழுது கொண்டிருந்தாலும் துண்டுகளாக்கினான்.(20)
திதி, "கொல்லாதே, கொல்ல வேண்டாம்" என்று சொன்னாள். அப்போது சக்ரன், மாதுர்வசனத்தை {[பெரிய] அன்னையின் சொல்லைக்} கௌரவித்து {கருவறையில் இருந்து} வெளியேறினான்.(21)
வஜ்ர ஸஹிதனான சக்ரன், தன் கைகளைக் குவித்து திதியிடம் பேசினான்: "தேவி, பாதங்களில் தலைமுடி படுவது {கால்மாட்டில் தலைவப்பது} நன்றன்று. நீ அவ்வாறே {நடுப்பகலில்} உறங்கினாய்.(22) {உன் விரதம் கெட்டு, நான் உள்ளே செல்லும்} அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, போரில் சக்ரனைக் கொல்லக்கூடியவனை நான் ஏழு துண்டுகளாக்கினேன். தேவி, நான் செய்ததைப் பொறுப்பதே உனக்குத் தகும்" {என்றான் இந்திரன்", என்றார் விசுவாமித்ரர்}.(23)
பாலகாண்டம் சர்க்கம் – 46ல் உள்ள சுலோகங்கள் : 23
Previous | | Sanskrit | | English | | Next |