Churning of Milk Ocean | Bala-Kanda-Sarga-45 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: விசாலாபுரத்தை அடைந்ததும் பாற்கடல் கடையப்பட்ட கதையைச் சொன்ன விஷ்வாமித்ரர்; ஹாலாஹல நஞ்சு; பாற்கடலில் திரட்டப்பட்ட அமுதம்; நஞ்சுண்ட சிவன்; விஷ்ணுவின் ஆமை அவதாரம்...
இலக்ஷ்மணனும், ராகவனும் {ராமனும்} விஷ்வாமித்ரரின் வசனத்தைக் கேட்டுப் பரம ஆச்சரியம் அடைந்து விஷ்வாமித்ரரிடம் பேசினர்:(1) "பிராமணரே, நீர் சொன்ன பெருங்கதைகளான கங்காவதரணமும், ஸாகரம் {தோண்டப்பட்டு} நிறைக்கப்பட்டதும் புண்ணியமானதாகவும், அதியற்புதமானதாகவும் இருக்கிறது.(2) பரந்தபரே {பகைவரை எரிப்பவரே}, நீர் சொன்ன கதைகள் யாவைற்றையும் முழுமையாகச் சிந்தித்ததால் இந்த ராத்திரியானது எங்களுக்கு க்ஷணம் {ஒரேயொரு கணம்} போல உருண்டு சென்றது.(3) விஷ்வாமித்ரரே, சௌமித்ரியுடன் {லக்ஷ்மணனுடன்} சேர்ந்து இந்த சுபக்கதையைச் சிந்திக்கும்போதே மொத்த ராத்திரியும் கடந்துவிடும்" {என்றான் ராமன்}[1].(4)
[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "இராமனின் பேச்சைப் பொறுத்தவரையில் இந்தச் சுலோகங்களின் அமைப்பு ஒரு தொடர்ச்சியைக் கொடுக்கவில்லை. பிற பதிப்புகள் தொடர்ச்சியான விளக்கத்தைக் கொண்டுள்ளன" என்றிருக்கிறது. நரசிம்மாசாரியரின் பதிப்பில், மேற்கண்ட 2ம் சுலோகம் வரை இராமன் பேசுவதாக அமைந்திருக்கிறது. அதன் பிறகு குசன் இராமாயணத்தைத் தொடர்வதைப் போல, "விச்வாமித்ர மாமுனிவர் சொன்ன அவ்வழகான கதையைச் சிந்தித்துக் கொண்டே அவ்விருவரும் அன்றிரவெல்லாங் கடக்கச் செய்தனர்" என்றிருக்கிறது. மன்மதநாததத்தர், பிபேக்திப்ராய் ஆகியோரின் பதிப்புகளில் மேற்கண்ட வகையிலேயே 1 முதல் 4ம் சுலோகம் வரையுள்ள செய்தி இருக்கிறது. ஹரிபிரசாத் சாஸ்திரி பதிப்பில் நரசிம்மாசாரியரின் பதிப்பில் தமிழில் உள்ளதைப் போன்றே ஆங்கிலத்தில் இருக்கிறது.
பொழுது விடிந்தபோது, அரிந்தமனான {பகைவரை ஒடுக்குபவனான} ராகவன் {ராமன்}, ஆஹ்னிக கர்மங்களை {காலைச் சடங்குகளை} செய்துவிட்டு, தவத்தையே தனமாகக் கொண்ட விஷ்வாமித்ரரிடம் இந்த வாக்கியத்தைச் சொன்னான்:(5) "சிறந்ததும், கேட்கத்தகுந்ததும் கேட்டோம். தெய்வீக இரவும் கடந்தது. ஆறுகளில் முதன்மையானதும், புண்ணியம் நிறைந்ததும், மூன்று பாதைகளில் செல்வதுமான இந்த நதியை இனி நாம் கடப்போம்.(6) சுகமான அமரத்தகுந்ததும், புண்ணிய கர்மங்களைச் செய்யும் ரிஷிகளுக்கானதுமான இந்த ஓடம், பகவானான நீர் இங்கே வந்திருக்கிறீர் என்பதை அறிந்து துரிதமாக வந்திருக்கிறது" {என்றான் ராமன்}.(7)
மஹாத்மாவான ராகவனின் அந்த வசனத்தைக் கேட்ட கௌசிகர் {விசுவாமித்ரர்}, ரிஷி சங்கத்துடன் {முனிவர்கள் கூட்டத்துடனும், ராகவர்கள் இருவருடனும் கங்கையைக்} கடக்க ஆயத்தமானார்.(8) அவர்கள், உத்தர தீரத்தை {கங்கையின் வட கரையை} அடைந்தும் ரிஷி கணங்களைப் பூஜித்தனர் {உடன் வந்த முனிவர்களை வழிபட்டு அனுப்பி வைத்தனர்}. பிறகு கங்கைக் கரையில் சற்றே ஓய்ந்து, {அதன் பிறகு பயணித்து} விசாலாபுரியைக் கண்டனர்.(9) அதன் பிறகு அந்த முனிவரர் {விசுவாமித்ரர்}, ரம்மியமானதும், திவ்யமானதும், சுவர்க்கத்திற்கு ஒப்பானதுமான விசாலை நகரத்திற்கு ராகவர்களுடன் {ராமலக்ஷ்மணர்களுடன்} சென்றார்.(10)
அப்போது மஹாபிரஜ்ஞை கொண்டவனான {அனைத்தையும் அறிந்து கொள்ளும் ஆவல் கொண்ட} ராமன், குவிந்த கைகளுடன் மஹாமுனி விஷ்வாமித்ரரிடம் உத்தமமான விசாலாபுரியைக் குறித்து விசாரித்தான்:(11) "மஹாமுனிவரே, விசாலையின் ராஜவம்சத்தைக் குறித்துக் கேட்க விரும்புகிறேன். மங்கலமாக இருப்பீராக. நான் பரம குதூகலத்துடன் இருக்கிறேன்" {என்று கேட்டான் ராமன்}.(12)
அந்த முனிபுங்கவர் {முனிவர்களில் சிறந்த விசுவாமித்ரர்}, ராமனின் அந்த வசனத்தைக் கேட்டு விசாலையின் புராதனத்தை {பழங்கதையைச்} சொல்ல ஆரம்பித்தார்:(13) "இராமா, சொல்லப்பட்ட படியே, கேட்கப்பட்ட படியே சக்ரனின் கதையைக் கேட்பாயாக. இராகவா, இந்த தேசத்தில் என்ன நடந்தது என்பதையும் சுருக்கமாகக் கேட்பாயாக.(14) பெரும்பேறு பெற்ற ராமா, பூர்வத்தில், கிருத யுகத்தில் திதியின் புத்திரர்கள் மஹாபலவான்களாக இருந்தனர். அதிதியின் புத்திரர்கள் வீரியவான்களாகவும், தார்மிகர்களாகவும் இருந்தனர்[2].(15) நரவியாகரா {மனிதர்களில் புலியே}, அந்த மஹாத்மாக்களின் புத்தியில், "ஜரையற்றவர்களாகவும் {மூப்பற்றவர்களாகவும்}, மரணமற்றவர்களாகவும், பிணியற்றவர்களாகவும் இருப்பது எவ்வாறு?" என்று தோன்றியது.(16)
[2] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "திதியானவள், அதிதியின் தமக்கையும், காசியப முனிவரின் முதல் மனைவியும் ஆவாள். அவளது மகன்களே அசுரர்கள் என்றழைக்கப்பட்டனர். பின்னர் ராக்ஷசர்கள் என்றும் பெயரிடப்பட்டனர். காசியப முனிவரின் இரண்டாம் மனைவியான அதிதி, பின்னர் தேவர்கள் என்றழைக்கப்பட்ட ஸுரர்களின் சந்ததியைப் பெற்றாள். இந்த இரு பெண்களும் தக்ஷப்ரஜாபதியின் மகள்களாவர்" என்றிருக்கிறது.
இதைச் சிந்தித்துக் கொண்டிருந்த அந்த விபஷ்சிதர்களின் {புத்திசாலிகளின்} புத்தியில், "பாற்கடலைக் கடைந்தால் {அமுத} ரசம் கிடைக்கும்" என்று தோன்றியது.(17) பிறகு, அளவற்ற ஆற்றலைக் கொண்டவர்களான அவர்கள், {பாற்கடலைக்} கடைய நிச்சயித்துக் கொண்டு, வாசுகியைக் கயிறாக்கி, மந்தரத்தை {மந்தர மலையை} மத்தாக்கி {பாற்கடலை} முற்றாகக் கடைந்தனர்.(18) ஆயிரம் வருடங்கள் கடந்ததும் கயிறாக இருந்த சர்ப்பத்தின் தலைகள் அங்கே அதிவிஷத்தைக் கக்கி {தங்கள்} பற்களால் {மந்தர} மலையைக் கொத்தின.(19) {இதனால்} அக்னிக்கு ஒப்பான ஹாலாஹல மஹாவிஷம் உற்பத்தியானது. இதனால் தேவர்கள், அசுரர்கள், மனுஷர்கள் உள்ளிட்ட ஜகம் முழுவதும் தகித்தது {எரிந்தது}.(20) அப்போது தேவர்கள், மஹாதேவனும், பசுபதியும், சங்கரனுமான ருத்திரனிடம் சரணம் அடைந்து, "காப்பாயாக. எங்களைக் காப்பாயாக" என்று அவனிடம் வேண்டினர்.(21)
பிரபுவான தேவ ஈஷ்வரனிடம் {சிவனிடம்} தேவர்கள் இவ்வாறு வேண்டிக் கொண்டிருந்தபோது, சங்கு சக்கரதரனான ஹரி {விஷ்ணு} அங்கே தன்னை உடனே வெளிப்படுத்திக் கொண்டான்.(22) ஹரி புன்னகைத்தவாறே சூலதரனான ருத்திரனிடம் பேசினான்: "ஸுரசிரேஷ்டே {தேவர்களில் சிறந்தவனே}, தேவர்கள் கடையும்போது முதலில் வெளிப்படுவது உனதாகும் என்பதால், ஸுரர்களில் முதன்மையான பிரபுவாக {அக்ரபூஜையாக} நீயே முதலில் பூஜிக்கப்படும் இந்நிலையில் இந்த விஷத்தை நீயே பருகுவாயாக" {என்றான் விஷ்ணு}.(23,24)
ஸுரசிரேஷ்டன் {தேவர்களில் முதன்மையான விஷ்ணு} இவ்வாறு சொல்லிவிட்டு உடனே அங்கிருந்து மறைந்ததும், தேவர்களின் பயத்தைக் கண்டும், சாரங்கியின் {சாரங்க வில் தரித்த விஷ்ணுவின்} வாக்கியத்தைக் கேட்டும் அவன் {சிவன்}, கோரமான ஹாலாஹல விஷத்தை அமுதம் போல் பருகினான்.(25,26அ) தேவர்களின் ஈசனான பகவான் ஹரன் {சிவன்}, தேவர்களை விட்டுச் சென்றதும் {கைலாசத்திற்குச் சென்றதும்}, தேவாசுரர்கள் அனைவரும் {பாற்கடலைக்} கடைவதைத் தொடர்ந்தனர்.(26ஆ,27அ) இப்போதோ மத்தாக இருந்த உத்தம பர்வதம் {மந்தர மலை} பாதாளத்திற்குள் பிரவேசித்தது {மூழ்கியது}. எனவே தேவர்களும் கந்தர்வர்களும் மதுசூதனனை {விஷ்ணுவை} வேண்டினர்:(27ஆ,28அ) "மஹாபாஹுவே, நீயே சர்வபூதங்களின் {அனைத்து உயிரினங்களின்} கதியாவாய். விசேஷமாக திவௌகஸர்களின் {சொர்க்கவாசிகளின்} கதியாவாய். எங்களை நீ காப்பாயாக. இந்த கிரியை {மலையை} உயர்த்துவதே உனக்குத் தகும்" {என்று தேவர்கள் வேண்டினர்}.(28ஆ,29அ)
ரிஷிகேசனான ஹரி, இதைக் கேட்டு ஆமை வடிவை ஏற்று {கூர்ம அவதாரம் செய்து} அந்தப் பர்வதத்தைத் தன் முதுகில் நிறுத்தி அந்தக் கடலில் {அடித்தளமாகக்} கிடந்தான்.(29ஆ, 30அ) லோகாத்மாவும், உத்தம புருஷனுமான கேசவன், தேவர்களின் மத்தியில் நின்று, பர்வதத்தின் உச்சியைத் தன் கைகளில் தாங்கிக் கடைந்தான்.(30ஆ,31அ) இவ்வாறே ஆயிரம் வருடங்கள் கடந்ததும், தண்டம் கமண்டலம் ஆகியவற்றுடன் கூடியவனும், தன்வந்தரி என்ற பெயரைக் கொண்டவனும், ஆயுர்வேதபுமானுமான {ஆயுள் அறிவியலின் ஆளுமையுமான} தர்மாத்மா முதலில் தோன்றினான்.
நல்லழகு பொருந்திய அப்சரஸ்கள் பிறகும் {அந்தக் கடலில் இருந்து} உதித்தனர்.(31ஆ,32) மநுஜசிரேஷ்டா {மனிதர்களில் சிறந்தவனே, ராமா}, அப்புவை {நீரை} முழுமையாகக் கடைந்ததும் அதிலிருந்த ரஸத்தில் {பாலில்} இந்த வரஸ்திரீகள் {சிறந்த பெண்கள்} உற்பத்தியானதால் அப்ஸரஸ்கள் என்ற பெயரைப் பெற்றனர்[3].(33) காகுத்ஸ்தா, எழிலொளியுடன் கூடிய அந்த அப்சரஸ்கள் அறுபது கோடி பேராவர். அவர்களின் பரிசாரிகைகள் {பணிப்பெண்கள்} கணக்கிலடங்காதோராவர்.(34) தேவர்கள், தானவர்கள் ஆகியோரில் எவரும் அவர்களைக் கொள்வதில்லை {மணந்து கொள்வதில்லை}. எவராலும் கைப்பற்றப்படாதவர்கள் என்பதால் அவர்கள் சாதாரணர்களாக {அனைவருக்கும் பொதுவானவர்களாக} அறியப்படுகிறார்கள்[4].(35)
[3] நரசிம்மாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், "அப்பென்றால் ஜலம், இங்கு ஜலம்போல் த்ரவமாகி அதன் விகாரமாகிய பாலைச் சொல்லுகிறது. அதினின்றுமுண்டான ரஸம் அப்ரஸம். அதினின்று பிறந்தவர் அப்ஸரஸ்ஸுக்கள். "அப்ரஸர்" என்றுரைக்க வேண்டியிருக்க, "ரஸசப்தம்" வ்யாகரண ஸூத்ரத்தின்படி "ஸரஸ்" என்று மாறிக்கிடக்கிறது. ஆகையால் "அப்ஸரஸ்" என்று காரணப் பெயராயிருக்கின்றது" என்றிருக்கிறது.
[4] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "இந்த அப்சரஸ்கள், தேவர்களையோ, தானவர்களையோ கணவர்களாகத் தேர்ந்தெடுப்பதை அலட்சியம் செய்யும் தேவகன்னிகளாவர். பின்னர் மேனகை விஷ்வாமித்ரர் கதையில் அவர்கள் பிள்ளைகளைப் பெறுபவர்களானார்கள். அப்ஸு ரஸத்தில் இருந்து வந்ததால் நீரின் ரஸத்தில் பிறந்தவர்கள் என்ற பொருளில் அவர்கள் அப்ஸரஸ்கள் என்று அழைக்கப்படுகின்றனர். சொற்பிறப்பியல் அடிப்படையில் இந்தப் பெயரிடலானது, வேறெதையும் விட ஒலிக்கு இணங்க வழிநடத்தப்படுவதாகத் தெரிகிறது. சொற்பிறப்பியலுக்கான சிறப்பான சான்று பின்வருவதாகும். அஸுரன் என்ற சொல்லானது, அஸு {முழுமையான ஆன்ம வாழ்வு} என்ற சொல்லில், ர {அற்ற} என்ற பின்னொட்டைச் சேர்த்து உண்டானது. நூதனமான சொற்பொருள் மாற்ற செயல்முறையால் இஃது அரக்கன் என்று பொருள் கொள்ளப்படுகிறது" என்றிருக்கிறது. இங்கே குறிப்பிடப்படும் சான்று இந்த சர்க்கத்தின் 37, 38ம் சுலோகங்களுடன் ஒப்பிடத்தக்கது.
இரகுநந்தனா, பிறகு வருண கன்னியான மஹாபாகை {பாக்கியம் பொருந்திய} வாருணி, தன்னைக் கைப்பற்றுவாரைத் தேடியபடியே உயர வந்தாள்.(36) இராமா, வருணனின் மகளான அவளை திதியின் புத்திரர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. வீரா, குறையற்றவளான அவளை அதிதியின் சுதன்கள் {தேவர்கள்} ஏற்றுக் கொண்டனர்.(37) இதனால் தைத்தியர்கள் அஸுரர்கள் {என்றழைக்கப்பட்டனர்}. அதிதியின் மகன்கள் ஸுரையான {ஸுராபானமான} வாருணியின் கைப்பற்றியதால் ஸுரர்கள் {என்றழைக்கப்பட்டனர்}[5].(38)
[5] நரசிம்மாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், ""வாருணி" யென்றால் கள்ளு. அதற்கு அதிஷ்டாந்தேவதை இங்கு வாருணியென்னப்பட்டது. ஸுரையென்றால் கள்ளு. இதுவே வாருணியென்றுரைக்கப்படுகின்றனது. "ஸுரா ஏதாமஸ்தீதி ஸுரா:" அந்த வாருணியை உடையவர்களாகையால் ஸுரர்கள். மத்வர்த்தத்தில் "அர்சாசித்வாத் அச்ப்ரத்யய:" இங்ஙனமே (ஸுரா நாஸ்தி ஏஷாமிதி அஸுரா:) அந்த வாருணியில்லாதவராகையால் அஸுரர்கள்" என்றிருக்கிறது.
நரசிரேஷ்டா {மனிதர்களில் சிறந்த ராமா, அதன்பிறகு} ஹயசிரேஷ்டம் {குதிரைகளில் சிறந்த} உச்சைஷ்ரவம், கௌஸ்து மணி ரத்தினம், அதே போல உத்தமமான அமிருதம் ஆகியவை உதித்தன.(39) இராமா, இதன் {அமுதத்தின்} காரணமாக இந்தக் குலங்களின் {ஸுராஸுர [தேவாசுர] குலங்களின்} பேரழிவு நேரிட்டது. அப்போது அதிதியின் புத்திரர்கள், திதியின் புத்திரர்களைக் கொன்றனர்.(40) வீரா, அஸுரர்கள், ராக்ஷசர்கள் அனைவரும் ஒரு தரப்பில் குவிந்தனர். மூவுலக மோஹனத்தில் {மயக்கத்தில்} மஹா கோர யுத்தம் நேரிட்டது.(41)
அனைத்தும் அழிவடைந்தபோது மஹாபலவானான விஷ்ணு, மாய மோஹினி வடிவை ஏற்று அமுதத்தை துரிதமாகக் கைப்பற்றினான்.(42) அழிவில்லா உத்தம புருஷனான விஷ்ணுவை யுத்தத்தில் எதிர்த்துச் சென்றவர்கள், விஷ்ணு பிரபையில் {விஷ்ணுவின் நெருப்பில்} எரிந்து தூளாகினர்.(43) தைத்தியர்களுக்கும் {திதியின் மகன்கள்}, ஆதித்யர்களுக்கும் {அதிதியின் மகன்களுக்கும்} இடையில் நடந்த கோரமான மஹாயுத்தத்தில் வீரர்களான அதிதியாத்மஜர்கள் {அதிதியின் மகன்கள்} திதியின் புத்திரர்களை மொத்தமாக அழித்தனர்.(44) புரந்தரன் {பகைவரின் நகரங்களை அழிப்பவனான இந்திரன்}, திதியின் புத்திரர்களை அழித்து ராஜ்ஜியத்தை அடைந்து இன்புற்று, ரிஷி சங்கத்தினருடனும், சாரணர்களுடனும் உலகங்களை ஆண்டான்" {என்றார் விசுவாமித்ரர்}.(45)
பாலகாண்டம் சர்க்கம் – 45ல் உள்ள சுலோகங்கள் : 45
Previous | | Sanskrit | | English | | Next |