Gangaavatarana | Bala-Kanda-Sarga-44 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: கங்கையை பூமிக்குக் கொண்டு வந்த பகீரதனைப் பாராட்டிய பிரம்மன்; பகீரதனின் மகளாக கங்கையை அருளிய பிரம்மன்; கங்கையின் புனித நீரை பித்ருக்களுக்குக் காணிக்கையளிக்க சொன்ன பிரம்மன்...
{விஷ்வாமித்ரர் தொடர்ந்தார்}, "கங்கையால் பின்தொடரப்பட்ட அந்த ராஜா {பகீரதன்}, அவர்கள் {ஸகரனின் மகன்கள்} பஸ்மமாகிக் கிடந்த சாகரத்திற்குச் சென்று, பூமியின் தளத்திற்குள் {பாதாளத்திற்குள்} பிரவேசித்தான்.(1) இராமா, கங்கையின் நீரில் பஸ்மம் {சாம்பல்} நனைந்த போது, சர்வ லோக பிரபுவான பிரம்மன் அந்த ராஜனிடம் {பகீரதனிடம்} பேசினான்:(2) "நரசார்தூலா {மனிதர்களில் புலியே, பகீரதா}, மஹாத்மாவான ஸகரனின் அறுபதாயிரம் புத்திரர்களும் தங்கள் நிலை கடந்து {பிரேதமெனும் நிலையைக் கடந்து} தேவர்களைப் போல சொர்க்கத்தை அடைவார்கள்.(3) பார்த்திபா, சாகரத்தின் ஜலம் இவ்வுலகத்தில் இருக்கும் வரை ஸகராத்மஜர்கள் {சகரனின் மகன்கள்} யாவரும் தேவர்களைப் போன்ற திவ்ய ஸ்தானத்தில் இருப்பார்கள் {சொர்க்கத்தில் வசித்திருப்பார்கள்}.(4) இந்த கங்கை உன் மூத்த மகளாகட்டும். {கங்கையைப் பூமிக்குக் கொண்டு வந்த} உன் செயலால் இனிமேல் அவளது பெயரும் உன் பெயராலேயே {பாகீரதி என்று} இந்த உலகில் புகழுடன் நிலைத்திருக்கும்[1].(5) திவ்யமான கங்கை, திரிபதகை என்ற பெயரிலும், பாகீரதி என்றும் {என்ற பெயரிலும்} அழைக்கப்படுவாள். {சுவர்க்கலோகம், பூலோகம், பாதாளலோகமென} மூன்று பாதைகளைப் புனிதப்படுத்துவதால் இவள் திரிபதகை என்று நினைவுகூரப்படுவாள்.(6)
[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "இந்த சுலோகத்திற்கு, "நீ கங்கையின் தந்தை நிலையை அடைந்ததால், அவள் இனி பாகீரதி என்றழைக்கப்படுவாள். உன் பெயர் அவளது குடும்பப் பெயராகட்டும்" என்றும் பொருள் கொள்ளலாம்" என்றிருக்கிறது.
இராஜனே, மனிதாதிபா, நீ இதை {கங்கையின் நீரை} உன் பிதாமஹர்கள் {பாட்டன்மார்} அனைவருக்கும் நீர்க்காணிக்கையாக அளித்து {உன்} பிரதிஜ்ஞையை {உறுதிமொழியை} நிறைவேற்றிக் கொள்வாயாக.(7) இராஜனே, மகத்தானவனும், தர்மவான்களில் சிறந்தவனுமான உன் மூதாதையால் {ஸகரனால்} கூட அந்நேரத்தில் {தன் வாழ்நாளில்} தன் மனோரதத்தை நிறைவேற்றிக் கொள்ள முடியவில்லை.(8) வத்ஸா {ஐயா}, உலகில் ஒப்பற்ற தேஜஸ்வியும், கங்கையைக் கொண்டு வர பிரார்த்தித்தவனுமான {உன் பாட்டன்} அம்சுமானாலும் தன் பிரதிஜ்ஞையை நிறைவேற்ற முடியவில்லை.(9) அநகா {குறையற்ற பகீரதா}, ராஜரிஷியும், குணவானும், மஹரிஷிகளுக்குச் சமமான தேஜஸ்வியும், தவத்தில் எனக்கு இணையானவனும், க்ஷத்ர {காக்கும்} தர்மத்தை திடமாகக் கடைப்பிடித்தவனும், அதிதேஜஸ்வியும், பெரும் நற்பேறு பெற்றவனும், கங்கையைப் பிரார்த்தித்தவனுமான உன் பிதா திலீபனுக்கும் அது சாத்தியப்படவில்லை[2].(10,11)
[2] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "10ம் சுலோகத்தின் உள்ளடக்கம் சில வேளைகளில் 9ம் சுலோகத்துடன் சேர்த்துப் படிக்கப்பட்டு திலீபன் என்பதற்குப் பதில் அம்சுமான் என்றும் பொருள் கொள்ளப்படுகிறது" என்றிருக்கிறது.
புருஷரிஷபா {மனிதர்களில் காளையே}, உலகில் உன்னால் நிறைவேற்றப்பட்ட அந்தப் பிரதிஜ்ஞையானது பெரும் போற்றுதலுக்குரியது.(12) அரிந்தமா {பகைவரை ஒடுக்குபவனே}, உன்னால் ஏற்பட்ட இந்தக் கங்காவதரணத்தால் தர்மத்தின் அடிப்படையிலான அடித்தளத்தை நீ அமைத்திருக்கிறாய்.(13) நரோத்தமா {மனிதர்களில் உத்தமனே}, புருஷ சிரேஷ்டா {மனிதர்களில் சிறந்தவனே}, உசிதமான இந்நீரில் எப்போதும் நீ நீராடுவாயாக. அதன் மூலம் தூய்மையடைந்து புண்ணிய பலத்தையும் அடைவாயாக[3].(14) உன் பிதாமஹர்கள் {பாட்டன்மார்கள்} அனைவருக்கும் நீர்க்கிரியை செய்வாயாக. நீ நலமாக இருப்பாயாக. நான் செல்கிறேன். நிருபா {பகீரத மன்னா}, நீ உன் உலகத்திற்குச் செல்வாயாக" {என்றான் பிரம்மன்}.(15)
[3] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "பிற ஆறுகளின் நீர்களில் ரஜஸ்வலை தோஷம், அதாவது மாதவிடாயின் தீட்டு உண்டு. சூரியன் கடக சிம்ம ராசிகளில் திரியும் இரண்டு மாதங்களிலும், புதுவெள்ளம் பாயும்போதும், பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாயைப் போன்று ஆறுகளுக்கும் தீட்டு ஏற்படும். ஆனால் கங்கை, வற்றாதவள் என்பதால் இந்தத் தடைகளுக்கு அப்பாற்பட்டு எப்போதும் புனிதப்படுத்துபவளாகவே இருக்கிறாள். இந்த சர்க்கத்தின் இறுதிக் குறிப்பில் கங்கை குறித்த மேலதிக தகவல்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன {அடுத்த அடிக்குறிப்பில் இருக்கின்றன}." என்றிருக்கிறது.
பெரும் மகிமைமிக்கவனும், தேவர்களின் ஈசனுமான சர்வலோக பிதாமஹன் {பிரம்மன்} இவ்வாறு சொல்லிவிட்டு, வந்தவாறே தேவலோகத்திற்குச் சென்றான்.(16) ராஜரிஷியும், பெரும் புகழ்பெற்றவனுமான ராஜா பகீரதன், வழிமுறைப்படியும், நியாயப்படியும் ஸாகரர்களுக்கு உத்தம உலகம் கிட்ட உத்தம நீரைக் காணிக்கையளித்துத் தூய்மையடைந்து தன் நகரத்தில் பிரவேசித்தான். நரசிரேஷ்டா {மனிதர்களில் சிறந்த ராமா}, நோக்கங்கள் நிறைவேறியவனான அவன், தன் ராஜ்ஜியத்தை நல்ல முறையில் ஆட்சி செய்தான்.(17,18) இராகவா, அவனை மீண்டும் தங்கள் நிருபனாக {மன்னனாக} அடைந்த குடிமக்கள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர். அவனும் தன் நோக்கங்கள் நிறைவடைந்து, ஜுவரம் நீங்கி, சோகத்தில் இருந்து விடுபட்டான்.(19)
இராமா, கங்கையைக் குறித்து விஸ்தாரமாக நான் உனக்குச் சொல்லியிருக்கிறேன். நீ செழிப்புடன் மங்கலமாக இருப்பாயாக. சந்தியா காலம் {செவ்வந்தி} கடந்து செல்கிறது.(20) தன்யத்தையும் {செழிப்பையும்}, புகழையும், ஆயுளையும், புத்திரர்களையும், சுவர்க்கத்தையும் பெருகச் செய்யும் இதை {கங்காவதரணத்தைக்} கேட்பவர்கள் விப்ரர்களாக {பிராமணர்களாக} இருந்தாலும், க்ஷத்திரியர்களாக இருந்தாலும், இதரர்களாக இருந்தாலும் பித்ருக்களும், தேவர்களும் அவர்களிடம் நிறைவடைவார்கள்.(21,22அ) காகுத்ஸ்தா, சுபமானதும், ஆயுளை வளர்ப்பதுமான இந்த கங்காவதரண ஆக்யானத்தை {கங்கை இறங்கி வந்த கதையைக்} கேட்பவன் எவனுக்கும் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும், அவனது பாவங்கள் அனைத்தும் முழுமையாக நாசமாகும், ஆயுளும் {நீண்ட வாழ்நாளும்}, கீர்த்தியும் {புகழும்} பெருகும்" {என்றார் விசுவாமித்ரர்}[4].(22ஆ,23)
[4] 3ம் அடிக்குறிப்பில் சொல்லப்பட்டுள்ள படி தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பில் இந்த அத்தியாயத்தின் இறுதிக் குறிப்பாகப் பின்வருவன சொல்லப்பட்டுள்ளன: கிட்டத்தட்ட அனைத்துப் புராணங்களிலும் கங்கையின் புனிதம் தொடர்பான தொன்மம் இடம்பெறுகிறது. எனவே அவள் எப்படிப் புனிதப்படுத்துபவளாக இருக்கிறாள் என்று வினவப்பட்டு, எதிர் கேள்வியும் கேட்கப்படுகிறது. சாத்திரங்கள் பலவும் இதைப் பற்றி விரிவாகக் கூறுகின்றன. விஷ்ணு புராணத்தில், இந்த ஆறு விஷ்ணுவின் இடது கால் கட்டைவிரலில் இருந்து வெளிப்பட்டது என்று சொல்லப்படுகிறது. அப்படிப்பட்டவள் சிவனின் சடையில் மூழ்கி மீண்டும் வெளிப்படுவதால் பாவமகற்றுபவளாகத் திகழ்கிறாள். அந்த ஆறானவள் மிகப் பிற்காலத்தில் சிவனின் சிரசில் விழுந்தாலும், அவளது பிறப்பிடம் விஷ்ணுவின் பாதம் என்பதால் அவள் முன்பும் புனிதமானவளே. சிவனின் சிரசில் விழுந்த பிறகு அவள் பெரும் வேகத்தில் பூமியில் பாய்கிறாள். எனவே, அவளது வேகமும், துரிதமும் மட்டுமே கூடப் புனிதப்படுத்தும் காரணிகளாக அமைகின்றன. திரிவிக்கிரம {வாமன} புராணத்தில் ஓரிடத்தில், "விஷ்ணுவின் அவதாரமான வாமனனின் அழுத்தத்தால் அண்டம் துளைக்கப்பட்டதும், வெளியில் தேவ கங்கையாக இருந்த நீர் உலகத்திற்குள் வந்தது" என்றிருக்கிறது. மற்றோரிடத்தில், "பிரம்மன் விஷ்ணுவின் பாதங்களைக் கழுவ, அவனது கமண்டதலத்தில் இருந்து பாய்ந்தவளே கங்கை" என்று சொல்லப்படுகிறது. இன்னுமோர் இடத்தில், "தர்மமே பிரம்மனின் ஆணையின் பேரில் கங்கையாகப் பாய்ந்தது" என்றிருக்கிறது. இவை மூன்றையும் ஒன்றிணைத்து, "பிரம்மன் விஷ்ணுவின் பாதங்களைக் கழுவிக் கொண்டிருந்தபோது நீர் போதாமையால், தர்மத்தை நீராகப் பாயுமாறு ஆணையிட்டான், வாமனன் அண்டத்தைத் துளைத்தபோது தர்மமே கங்கையாகப் பாய்ந்தது" என்றும் சொல்லப்படுகிறது. யோகம் வேறொரு நோக்கில் இதைக் காண்கிறது. யோகிகளின் மஹாகுரு சிவன் என்பதால், ஒருவனின் உடலில் ஒவ்வொரு நொடிப்பொழுதும் கங்கை பாய்கிறாள் என்று கொள்கின்றனர். இராமாயணத்தின் அயோத்தியா காண்டத்தில், "புனித ஆறான கங்கை, புனிதமான சிவனின் சிரசில் விழுந்தாள்" என்று சொல்லப்படுகிறது. அதாவது சிவனும், கங்கையும் தங்கள் தங்கள் இயல்பிலேயே புனிதப்படுத்துபவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்குள் ஒருவருக்கொருவர் உதவியும் செய்து கொள்கிறார்கள். சுய தர்மத்தால் ஒருவன் உயிரினங்களுக்கு உதவுவதை விடப் புனிதமடையச் செய்வது வேறென்ன இருக்க முடியும்?" என்றிருக்கிறது. பகீரதன், கங்காவதரணக் கதை மஹாபாரதத்தில் வனபர்வம் பகுதி 106-109 ல் இடம்பெறுகிறது.
பாலகாண்டம் சர்க்கம் – 44ல் உள்ள சுலோகங்கள் : 23
Previous | | Sanskrit | | English | | Next |