Monday 27 September 2021

கங்கை | பால காண்டம் சர்க்கம் - 43 (41)

Ganga | Bala-Kanda-Sarga-43 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: பூமிக்குப் பாய்ந்து வந்த கங்கை; கங்கையைத் தலையில் தாங்க ஒப்புக்கொண்ட சிவன்; தன் பாட்டன்மாரின் சாம்பலை நோக்கி கங்கையை அழைத்துச் சென்ற பகீரதன்...

Birth of Ganga on Earth

{விஷ்வாமித்ரர் தொடர்ந்தார்}, "இராமா, அந்த தேவதேவன் {பிரம்மன்} சென்ற பிறகு, அவன் {பகீரதன்}, தன்னுடைய கால் கட்டைவிரலால் வசுமதியை {பூமியை} அழுத்தியபடியே நின்றான்[1]. அவ்வாறே அவன் மேலும் ஓராண்டு காலம் தவம் செய்தான்.(1) ஓராண்டு பூர்ணமடைந்ததும் சர்வலோக நமஸ்கிருதனும் {உலகங்கள் அனைத்தாலும் வழிபடப்படுபவனும்}, உமாபதியுமான பசுபதி {சிவன்}, அந்த ராஜனிடம் {பகீரதனிடம்} இதைச் சொன்னான்:(2) "நரசிரேஷ்டா {மனிதர்களில் சிறந்தவனே}, நான் உன்னிடம் பிரீதியடைந்தேன். உன் பிரியத்தை {விருப்பத்தை} நான் நிறைவேற்றுவேன். சைலராஜனின் மகளை {மலைமகளான கங்கையை} என் சிரசில் தரிப்பேன்" {என்றான் சிவன்}.(3)

[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "பகீரதன், மாறா நோக்குடனும், அசைவில்லா உடலுடனும், தன் கைகளை உயர்த்திய படியே இரவும், பகலும் காற்றை மட்டுமே உண்டு ஓராண்டு காலம் தவம் செய்து யோகச் செறிவை அதிகரித்து வந்ததே பூமியைப் பெரிதும் அழுத்தியது" என்றிருக்கிறது. நரசிம்மாசாரியர் பதிப்பில், "பகீரத வேந்தன் பூமியில் காற்கட்டைவிரலை ஊன்றிக் கொண்டு நின்று புஜங்களிரண்டையும் உயரத்தூக்கி நிறுத்தி வாயுபக்ஷணஞ் செய்து கொண்டு எவ்விதத்திலும் அவலம்பமின்றி இரவும் பகலும் மொட்டை மரம் போல் அசையாமல் நின்று நிலை பெற்று ஒரு வருஷ காலம் சிவனை உபாஸித்தான்" என்றிருக்கிறது.

இராமா, அதன்பிறகு உலகங்கள் அனைத்தாலும் வழிபடப்படும் மூத்த ஹைமவதி {ஹிமவானின் மூத்த மகளான கங்கை}, அதி மஹா ரூபத்தை ஏற்று, சகிக்க முடியாத வேகத்தை அடைந்து, ஆகாசத்தில் இருந்து மங்கலமான சிவனின் சிரசில் விழுந்தாள் என்று சொல்லப்படுகிறது.(4,5அ) தாங்கிக் கொள்ளப்பட முடியாத அந்த கங்கா தேவி, "என் பிரவாஹங்களால் சங்கரரை எடுத்துக் கொண்டு பாதாளத்திற்குள் புகுவேன்" எனச் சிந்தித்தாள்.(5ஆ,6அ)

முக்கண்களைக் கொண்ட பகவான் சிவன், அவளது கர்வத்தை அறிந்து குரோதமடைந்து, அவளை அடக்குவதில் புத்தியைச் செலுத்தினான்.(6ஆ,7அ) இராமா, அந்தப் புண்யை {கங்காதேவி}, இமயத்துக்கு ஒப்பான {சிவனின் தலைமயிராலான} ஜடா மண்டலங்களால் சூழப்பட்டு அந்த ருத்திரனின் புண்ணியமான தலையில் விழுந்து அடங்கினாள்.(7ஆ,8அ) அவள் என்னதான் முயற்சி செய்தாலும் மஹீயை {பூமியை} அடையும் சக்தியற்றவளாக ஜடாமண்டலத்தைவிட்டு வெளியேற இயலாதவளானாள்.(8ஆ,9அ) அந்த தேவி எண்ணற்ற ஆண்டுகள் அங்கேயே {அந்த சடையின் சுழல்களில்} சுழன்று கொண்டு இருந்தாள். அவள் காணப்படாததால் பகீரதன் மீண்டும் அதே காரியத்திற்காக {கங்கையை பூமிக்குக் கொண்டு வருவதற்காக} உறுதிமிக்க பரம தவத்தில் ஈடுபட்டான்.(9ஆ,10அ)இரகுநந்தனா, அதனால் {அந்த தவத்தால்} பெரிதும் மகிழ்ந்த ஹரன், கங்கையை பிந்துசரஸில் விழவிட்டான்.(10ஆ,11அ) அவ்வாறு அவள் விடுபட்ட போது, ஏழு பிரவாஹங்கள் உண்டாகின. மங்கல ஜலங்கொண்ட ஹலாதினி, பாவனி, நளினி {பிரம்மபுத்திரா} என்ற மூன்றும் {மூன்று பிரவாஹங்களும், ஏழாம் பிரவாஹமான} சுபமான கங்கையும் கிழக்கு முகமாகப் பாய்ந்தன.(11ஆ,12) சுபநீரோட்டம் கொண்ட ஸுசக்ஷு, ஸீதை, மஹாநதியான ஸிந்து என்று மூன்றும் மேற்கு முகமாகப் பெருகிச் சென்றன.(13) அவர்களில் சப்தமி {ஏழாமவளான கங்கை}, பகீரதனின் ரதத்தைப் பின்தொடர்ந்து சென்றாள். மஹாதேஜஸ்வியும், ராஜரிஷியுமான பகீரதன், திவ்யமான தேரில் அமர்ந்து முன்னே செல்ல, கங்கை அவனைப் பின்தொடர்ந்து சென்றாள்.(14,15அ) ஆகாயத்திலிருந்து சங்கரனின் சிரசுக்கு வந்து, அங்கிருந்து தரணியை {பூமியை} அடைந்த அவளது ஜலம் தீவிர சத்தத்தை வெளியிட்டபடியே பாய்ந்தது[2].(15ஆ,16அ) அப்போது வசுந்தரை {பூமியானவள்}, விழுந்தவையும், மேலும் விழுந்து கொண்டிருப்பவையுமான மத்ஸ்யங்கள் {மீன்கள்}, ஆமைகள், சங்குகள், சிசுமார கணங்கள் {முதலை முதலிய நீர்வாழ் உயிரினங்கள்} ஆகியவற்றுடன் ஒளிர்ந்தாள்.(16ஆ,17அ)

[2] தேசிராஜுஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "கங்கையாறு திரிபதகையென்றும், அதாவது மூவழிகளில் பாய்பவள் என்றும் அழைக்கப்படுகிறது. அவள் இமயத்திலிருந்தும் சொர்க்கத்திற்கும், சொர்க்கத்தில் இருந்து சிவனின் தலைக்கும், அங்கிருந்து பூமிக்கும் பாய்ந்ததே மூவழி என்று சொல்லப்படுவது ஒருவகை எண்ணம். மேலுள்ள சுலோகங்களில் சொன்னபடி கிழக்கு, மேற்குத் திசைகளிலும், பகீரதனைப் பின்தொடர்ந்து தெற்குத் திசையிலும் என அவள் மூவழிகளில் பாய்கிறாள் என்பது மற்றொரு எண்ணம். மேற்கு நோக்கிப் பாயும் சிந்து இப்போது இண்டஸ் என்று அழைக்கப்படுகிறது, கிழக்கும் நோக்கிப் பாயும் நளினி இப்போது பிரம்மபுத்திரா என்று அழைக்கப்படுகிறது. கங்கையோ தெற்கு நோக்கிப் பாய்ந்து கடலை அடைகிறாள்" என்றிருக்கிறது. நரசிம்மாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், "இவ்விடத்தில் கங்கை ஸ்வர்க்காகசபூமிகளாகிற மூன்று இடங்களிலும் ப்ரவஹித்தபடியால் த்ரிபதகை என்னும் பெயர் பெற்றதென்று சிலர் சொல்லுகின்றனர். மூன்று திசைகளிலும் ப்ரவஹித்தபடியால் அந்தப் பெயர் வந்ததென்று சிலர் சொல்லுகின்றனர்" என்றிருக்கிறது.

பிறகு, தேவர்கள், ரிஷிகள், கந்தர்வர்கள், யக்ஷர்கள் ஆகியோரும் சித்த கணங்களும் அவ்வாறு அவள் ஆகாயத்திலிருந்து பூமியில் பாய்வதை ஆவலுடன் கண்டனர்.(17ஆ,18அ) அப்போது தேவர்களில் சிலர் நகரம் போன்ற அளவும், வடிவமும் கொண்ட விமானங்களிலும், வேறு சிலர் ஹயங்களிலும் {குதிரைகளிலும்}, இன்னுஞ் சிலர் கஜங்களிலும் {யானைகளிலும்} அந்த இடத்திற்கு வந்தனர்.(18ஆ,19அ) உலகில் அற்புதமானவளும், ஒப்பற்றவளும், உத்தமமானவளுமான கங்கையின் பாய்ச்சலை ஆவலுடன் கண்ட தேவகணங்கள் அளவில்லா பரபரப்படைந்தன.(19ஆ,20அ)

அந்த ஸுரகணங்களுடைய ஆபரணங்களுடைய மினுமினுப்பு மேகங்களற்ற வானத்தில் நூறு சூரியர்கள் ஒளிரும் தோற்றத்தைக் கொடுத்தது.(20ஆ,21அ) அந்நேரத்தில் சிம்சுமார, உரகக் கணங்களும் {முதலைகளும், பாம்புகளும்}, நெளியும் மீன்களும் விழுந்தது, ஆகாசத்தில் மின்னல் கீற்றுகள் மின்னுவதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியது.(21ஆ22அ) ஆயிரம் வழிகளில் தெரித்துச் சென்று, வெளுத்து விழும் நுரைகளால் நிரம்பிய ஆகாயமானது, ஹம்சங்களுடன் {அன்னப்பறவைகளுடன்} கூடிய கூதிர் கால வெள்ளி மேகங்களால் சூழப்பட்டதைப் போலத் தென்பட்டது.(22ஆ,23அ) அவள், சில இடங்களில் துரிதமாகவும், வேறெங்கும் வளைந்து நெளிந்தும், சில இடங்களில் நேராகவும், வேறெங்கும் மெதுவாகவும், சில இடங்களில் பெருகி வழிந்தும், சில இடங்களில் நிதானமாகவும், மெத்தனமாகவும் பாய்ந்தாள்.(23ஆ,24அ) சில இடங்களில் நீரோடு நீர் மோதி, மேலும் திரும்பியோடி அலையாக எழுந்து வசுதையின் {பூமியின்} மீது விழுந்தது.(24ஆ,25அ) சங்கரனின் சிரத்தில் இருந்து நழுவிய பின்பு பூமியின் பரப்பில் விழுந்த நிர்மலமான {தூய்மையான} அந்த நீர், கல்மஷங்களை அகற்றும் வகையில் ஒளிர்ந்தது.(25ஆ,26அ)

அங்கே ரிஷி கணங்களும், கந்தர்வர்களும் வசுதையின் தலத்தில் {பூமியின் பரப்பில்} வசிப்பவர்களும் பவனின் அங்கத்தில் விழுந்த நீரை பவித்ரமானதாகக் கருதி பருகுகின்றனர்.(26ஆ,27அ) சாபத்தால் சொர்க்கத்தில் இருந்து வசுதாதலத்தில் {பூமியின் பரப்பில்} விழுந்தவர்களும், அதில் அபிஷேகம் செய்து {நீராடி} கல்மஷங்கள் அகன்று தூய்மையடைகின்றனர்.(27ஆ,28அ) அவர்கள், அந்தச் சுப நீரைக் கொண்டு தங்கள் பாவங்களைக் கழுவிக் கொண்டு, மீண்டும் ஆகாசத்தை அடைந்து, தங்கள் தங்கள் புண்ணிய உலகங்களுக்குச் செல்கின்றனர்.(28ஆ,29அ) உலகமானது, அந்த அற்புத நீரால் மகிழ்ச்சியடைகிறது. உலக மக்கள் கங்கையால் தலையில் அபிஷேகம் செய்து, பாவங்கள் முழுமையாக அகன்று எப்போதும் மகிழ்ச்சியடைகின்றனர்.(29ஆ,30அ)

மஹாதேஜஸ்வியும், ராஜரிஷியுமான பகீரதன் திவ்ய தேரில் அமர்ந்து முன்னே பயணிக்க, அவனைத் தொடர்ந்து கங்கையும் பின்னே சென்றாள்[3].(30ஆ,31) இராமா, ரிஷிகணங்களும், தேவர்கள் அனைவரும், தைத்திய, தானவ, ராக்ஷச, கின்னர, மஹா உரக, கந்தர்வ, யக்ஷர்களில் சிறந்தவர்களும், சர்ப்பங்களும், அப்சரஸ்களும் பிரீதியடைந்து, பகீரதனின் ரதத்தைத் தொடர்ந்து செல்லும் கங்கையின் பின்னால் சென்றனர். அவர்களுடன் ஜலசாரிகளும் {நீர்வாழ் உயிரினங்களும்} சென்றன.(31ஆ-33அ) இராஜா பகீரதன் எங்கெல்லாம் சென்றானோ அங்கெல்லாம் மகத்தானவளும், ஆறுகளில் சிறந்தவளும், சர்வ பாப பிரநாசினியுமான {பாவங்கள் அனைத்தையும் முழுமையாக அழிப்பவளுமான} கங்கையும் சென்றாள்.(33ஆ,34அ)

[3] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "இந்த சுலோகம் 14ம் சுலோகத்தைப் போன்றே இருக்கிறது" என்றிருக்கிறது.

கங்கை அவ்வாறு பாய்ந்த போது, யஜமானரும் {யாகங்களைச் செய்பவரும்}, அற்புத கர்மங்களைச் செய்பவரும், மஹாத்மாவுமான ஜஹ்னுவின் யஜ்ஞவாடத்தை {வேள்விக்களத்தை} முழுமையாக மூழ்கடித்தாள்.(34ஆ,35அ) இராகவா, அவளது செருக்கை அறிந்து எரிச்சலடைந்த ஜஹ்னு, {அனைவரும்} பரம ஆச்சரியமடையும் வகையில் கங்கையின் ஜலம் முழுவதையும் குடித்தார்.(35ஆ,36அ) அப்போது கந்தர்வர்களும், தேவர்களும், ரிஷிகளும் பெரிதும் ஆச்சரியமடைந்தனர். பிறகு அவர்கள் மனிதர்களில் சிறந்தவரும், மஹாத்மாவுமான ஜஹ்னுவை பூஜித்து, கங்கை அந்த மஹாத்மாவின் மகளெனும் நிலையை அடைய வேண்டினர்.(36ஆ,37) மஹாதேஜஸ்வியான அந்த பிரபு {ஜஹ்னு}, மிகவும் மகிழ்ச்சியடைந்து தமது இரு காதுகளின் வழியே நீரை விடுவித்தார். எனவே, கங்கை ஜஹ்னுவின் மகளாகி ஜாஹ்னவி என்று புகழடைந்தாள்.(38) கங்கை மீண்டும் பகீரதனின் ரதத்தைப் பின்தொடர்ந்து சென்றாள். ஆறுகளில் மிக மேன்மையான அவள், சாகரத்தையும் அடைந்து[4], அவனது கர்மத்தை சித்திக்கச் செய்து {பகீரதனின் நோக்கத்தை நிறைவடையச் செய்து}, ரஸாதலத்தையும் அடைந்தாள்.(39,40அ)

[4] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "சிலர், சாகரம் என்ற சொல்லுக்கு ஸகரனின் மகன்கள் தோண்டிய பாதாளம் என்று பொருள் கொண்டு கடலில் அவளது பயணத்தைத் தவிர்க்கின்றனர்" என்றிருக்கிறது. நரசிம்மாசாரியரின் பதிப்பில், "நதிகளிற்சிறந்த அக்கங்கையானது, மீளவும் பகீரதனுடைய ரதம் போகும் வழியாகப் பின்றொடர்ந்து அவனுடைய காரிய ஸித்திக்காகச் சென்று ஸமுத்திரத்தில் விழுந்து பாதாளத்திற்குச் சென்றது" என்றிருக்கிறது. ஸகரனின் மகன்களான ஸாகரர்கள் தோண்டியதில் உண்டானதே ஸாகரம் என்பது தொல்வழக்கு.

இராஜரிஷியான பகீரதன், பெரும் முயற்சி செய்து கங்கையை அழைத்துச் சென்று தன்னுடைய பிதாமஹர்கள் {பாட்டன்மார்} பஸ்மமாகக் கிடக்கும் இடத்தைக் கண்டு மனவருத்தமடைந்தான்.(40ஆ,41அ) இரகோத்தமா {ரகுக்களில் சிறந்தவனே, ராமா}, உத்தமமான கங்கை நீர் அந்தப் பஸ்மத்தை நனைத்தது. அவர்கள் {ஸகரனின் மகன்கள்}, தங்கள் பாவங்கள் தூய்மையடைந்து சுவர்க்கத்தை அடைந்தனர்" {என்றார் விசுவாமித்ரர்}.(41ஆ,இ)

பாலகாண்டம் சர்க்கம் – 43ல் உள்ள சுலோகங்கள் : 41

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இந்திரஜித் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சம்பாதி சரபங்கர் சாகரன் சாந்தை சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் ததிமுகன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகி துவிவிதன் தூஷணன் நளன் நாரதர் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பனஸன் பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் மண்டோதரி மதங்கர் மந்தரை மயன் மருத்துக்கள் மஹோதயர் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாயு வாலி வால்மீகி விகடை விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை