Thursday 22 July 2021

அயோத்தி மாநகரம் | பால காண்டம் சர்க்கம் - 05 (23)

Ayodhya described | Bala-Kanda-Sarga-05 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம் : தசரத மன்னனின் மாநகரம்; அதன் ஆடம்பரமும், மகிமையும், குடிமக்களும்...

Golden miniature of Ayodhya in Ajmeer Lal mandir

ஒரு காலத்தில், தீவுகளுடன் கூடிய மொத்த பூமியைப் பிரஜாபதிகள் {குடிமுதல்வர்கள்} தொடங்கி பல ஜயசீலர்களும் {வெற்றியாளர்களும்} ஆண்டனர்,{1} {அவர்களில்} சகரன் என்ற பெயரைக் கொண்டவன் அறுபதாயிரம் புத்ரர்கள் சூழப் போரிடப் புறப்பட்டு சாகரத்தை {பெருங்கடலை} ஆழமாக்கினான்[1].{2} இத்தகைய மஹாத்மாக்கள் தோன்றியதும், இக்ஷ்வாகு என்ற பெயரைக் கொண்டதுமான ராஜவம்சத்திலேயே உயர்வாக மதிக்கப்படும் இந்த ராமாயணம் தோன்றியது.{3}(1-3) இத்தகைய ஒன்றையே தர்மம், காமம், அர்த்தம் ஆகியவற்றுடன் முழுமையாக {குசனும், லவனுமாகிய} நாங்கள் உரைக்கப் போகிறோம். குதர்க்கமின்றி தொடக்கத்திலிருந்து இது கேட்கப்படட்டும்.(4)

[1] ஸகரனின் {சகரனின்} அறுபதாயிரம் புத்திரர்களால் வெட்டப்பட்டதால் (ஆழமாக்கப்பட்டதால்) சமஸ்கிருதத்தில் கடலுக்கு ''ஸாகரம்'' என்று பெயர் ஏற்பட்டது.  

தனதானியங்களில் செழித்ததும், மகிழ்ச்சி நிறைந்ததும், பெரியதுமான ஒரு மஹாஜனபதம், சரயு தீரத்தின் அருகில் கோசலம் என்ற பெயரில் அமைந்திருக்கிறது.(5) அங்கே மானவேந்திரனான {மனிதர்களின் மன்னனான} மனுவால் கட்டப்பட்டதும், அயோத்தி என்ற பெயரில் உலகங்களில் புகழ்பெற்றதுமான ஒரு நகரம் இருக்கிறது[2].(6) செழிப்பு நிறைந்ததும், நன்கு வகுக்கப்பட்ட மஹாபதங்களை {நெடுஞ்சாலைகளைக்} கொண்டதுமான அந்த மஹாபுரி {பெருநகரம்}, பனிரெண்டு யோஜனைகள் நீளமும், மூன்று யோஜனைகள் அகலமும் கொண்டதாக இருந்தது[3].(7) நன்கு அமைக்கப்பட்ட பெரும் ராஜமார்க்கங்கள், பூக்கள் தூவப்பட்டவையாகவும் எப்போதும் நீரில் நனைந்தவையாகவும் ஒளிர்ந்து கொண்டிருந்தன.(8) மஹாராஷ்டிர விவர்தனனான {பேரரசைச் செழிக்கச் செய்பவனான} ராஜா தசரதன், தேவபதி {இந்திரன்} தேவலோகத்தில் வசிப்பதைப் போல, அந்த நகரத்தையே {அயோத்தியையே} தன் வசிப்பிடமாக்கிக் கொண்டான்.(9)

[2] அயோத்தி - ''அயோத்யா'' எனும் சொல்லுக்கு ''யுத்தத்தில் அசைக்க முடியாதது'' என்று பொருள்.

[3] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "1 அங்குலம் என்பது ¾ இன்ச் கொண்டது; 4 அங்குலங்கள் 1 தனுகிரகம் {வில்லின் கைப்பிடி அளவு}; 8 அங்குலங்கள் 1 தனுமுஷ்டி {உயர்த்தப்பட்ட கட்டைவிரலுடன் கூடிய முஷ்டியின் அளவு}; 12 அங்குலங்கள் 1 விதஸ்டி {உள்ளங்கையை விரித்தால் கட்டை விரலின் நுனி முதல், சுண்டு விரலின் நுனி வரையுள்ள அளவு}; 2 விதஸ்டிகள் 1 அரத்னி {அல்லது ஒரு முழம்}; 4 அரத்னிகள் 1 தண்டம் / தனுஸ் {ஒரு வில்லின் அளவு - 6 அடி}; 10 தண்டங்கள் 1 ரஜ்ஜு {60 அடி}; 2 ரஜ்ஜுக்கள் 1 பரிதேசம் {120 அடி}; 2000 தனுஸ்கள் 1 குரோசம் {2000 x 6 = 12,000 அடி} [இது கோரடம் என்றும் அழைக்கப்படுகிறது - இது 4000 யார்டுகள் அளவைக் கொண்டது]; 4 குரோசங்கள் 1 யோஜனை {12,000 x 4 = 48,000 அடி = 14,630 மீட்டர் = 14.63 கி.மீ. = 9.09 மைல்கள்}. ஆனால் பிரிட்டிஷ் வருவாய் துறை 5 மைல்கள் என்ற கணக்கில் ஒரு யோஜனையைக் கொள்கிறது. அகராதிகள் பலவும் அவ்வாறே சொல்கின்றன. இந்த அளவீடுகள் குறித்து கௌடில்யரின் அர்த்த சாஸ்திரத்தில் இன்னும் அதிக தகவல்கள் கிடைக்கின்றன" என்றிருக்கிறது.

கோட்டை தோரணங்களால் {நுழைவாயில்களால்} சூழப்பட்ட அது, நன்கு அமைக்கப்பட்ட முற்றங்களுடனும், இயந்திரங்கள், ஆயுதங்கள் ஆகிய அனைத்துடனும், சிற்பிகள் அனைவருடனும் கூடியதாக இருந்தது.(10) {துதிக்கும்} சூதர்கள், {விடியலில் எழுப்பும்} மாகதர்கள் ஆகியோரால் நிறைந்ததாகவும், செழிப்பானதாகவும், பெரும்பிரகாசம் கொண்டதாகவும், கொடிக்கம்பங்களுடன் கூடிய மாடி வீடுகளுடனும், நூற்றுக்கணக்கான சதக்னிகளுடன்[4] கூடியதாகவும்  அஃது இருந்தது.(11) பெண்களுக்கு நடனங்கற்றுத் தரும் நட்டுவர் கூட்டத்துடன் கூடிய அஃது, அனைத்துப் புறங்களிலும் மாந்தோட்டங்களால் சூழப்பட்டும், கோட்டைச் சுவர்களால் அலங்கரிக்கப்பட்டும் இருந்தது.(12) அந்நியர்கள் கடக்க முடியாத கம்பீரமான அகழிகளைக் கொண்ட அது, குதிரைகளாலும், யானைகளாலும், எருதுகளாலும், ஒட்டகங்களாலும், கழுதைகளாலும் {கோவேறு கழுதைகளாலும்} நிறைந்திருந்தது.(13) கப்பங்கட்டுவதற்காக வந்திருக்கும் அக்கம்பக்கத்து ராஜாக்களின் கூட்டத்தாலும்,  பல்வேறு தேசங்களில் வசிப்பவர்களான வணிகர்களாலும் அது நிறைந்திருந்தது.(14)

[4] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "இதைக் கொண்டு நூற்றுக் கணக்கானோரைக் கொல்லலாம். இது முட்களுடன் கூடிய ஆயுதம் என்றும் சொல்லப்படுகிறது" என்றிருக்கிறது. கிசாரி மோகன் கங்குலி, மஹாபாரதம் கர்ண பர்வம் பகுதி 97ல் உள்ள அடிக்குறிப்பொன்றில், "சதக்னி {சதம்+அக்னி} என்றால் நூறு கொல்லிகள் என்று பொருள்; ஏவுகணைகளில் {ராக்கெட்டுகளில்} ஒருவகையாக இருக்க வேண்டும்" என்று விளக்குகிறார். 

விலைமதிப்புமிக்க ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டவையும், பர்வங்களை {மலைகளைப்} போன்றவையும், பல அடுக்கு மாடிகளைக் கொண்டவையுமான மாளிகைகளால் நிறைந்திருந்த அஃது {அந்த அயோத்தி} இந்திரனின் அமராவதியைப் போன்றிருந்தது.(15) அஷ்டபதி {சொக்கட்டான் என்றுமழைக்கப்படும் விளையாட்டுப் பலகை} போன்று ஆச்சரியமான வகையில் அமைக்கப்பட்டிருக்குமதில், பெண்களின் கூட்டங்களும் {நாரீகணங்களும்}, விலைமதிப்புமிக்க அனைத்து வகை ரத்தினக் குவியல்களும் நிறைந்த ஏழடுக்கு மாளிகைகள் காட்சிக்கு இனியவையாக இருந்தன.(16) பயன்படுத்தாத இடமென்றேதும் இல்லாமல் சமமான நிலங்களில் நெருக்கமாகவும், நன்றாகவும் கட்டப்பட்டிருக்கும் அவற்றில் {அந்த மாளிகைகளில்} நெல்தானியங்கள் நிறைந்திருந்தன, அங்குள்ள நீர் கரும்புச்சாற்றைப் போன்றிருந்தது.(17) துந்துபி {பேரிகைகள்}, மிருதங்கங்கள், வீணை, பணவம் {உடுக்கைகள்} ஆகியவற்றால் ஒலிக்கப்படும் அது {நகரம்} பூமியில் மிகச் சிறந்ததாகத் திகழ்ந்தது.(18)  

சித்தர்களின் தவத்தால் அடையப்பட்ட தெய்வீக விமானம் போல அஃது இருந்தது, நன்கு திட்டமிடப்பட்டு அமைக்கப்பட்டிருந்த அதன் மாடக்கூடங்கள் உத்தம மக்களால் நிறைந்திருந்தது.(19) கரநளினம் கொண்ட அந்த விசாரதர்கள் {திறன்மிக்கவர்கள்}, முன்னும் {தந்தை, பாட்டன்}, பின்னும் {பிள்ளை, பேரப்பிள்ளை என} யாருமில்லாமல் தனித்திருப்பவர்களைக் கொல்லாதவர்களாகவும், தப்பி ஓடுபவர்கள் {அவர்கள் தப்பி ஓடும்} ஒலியைக் கொண்டுக் கணைகளால் கொல்லக்கூடியவர்களாகவும் இருக்கிறார்கள்.(20) வனத்தில் முழங்கும் பருத்த சிங்கங்கள், புலிகள், காட்டுப்பன்றிகள் ஆகியவற்றைத் தங்கள் கை பலத்தைப் பயன்படுத்தியும், கூர்முனை ஆயுதங்களைப் பயன்படுத்தியும் அவர்கள் கொல்கிறார்கள்.(21) இவ்வகையிலானோரும், ஆயிரக்கணக்கான பெருந்தேர் வீரர்களும் நிறைந்த அந்த நகரத்தில் ராஜா தசரதன் வசிக்கிறான்.(22) அக்னி வழிபாட்டாளர்களும், நற்குணங்கள் அனைத்தும் பொருந்தியவர்களும், வேதவேதாங்கங்களை நன்கறிந்தவர்களும், ஆயிரக்கணக்கில் கொடையளிப்பவர்களும், சத்தியத்தில் நிலைநிற்பவர்களும், மஹாத்மாக்களும், ஒப்பற்ற மஹரிஷிகளும், சாதாரண ரிஷிகளும், உத்தம பிராமணர்களும் அதை {தசரதனின் வசிப்பிடத்தை / அயோத்தி மாநகரைச்} சூழ்ந்திருக்கின்றனர்.(23)
 

பாலகாண்டம் சர்க்கம் – 05ல் உள்ள சுலோகங்கள்: 23

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவித்தர் அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இந்திரஜித் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகசி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சரமை சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் ததிமுகன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூஷணன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பனஸன் பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மஹோதரன் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மால்யவான் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை வித்யுஜ்ஜிஹ்வன் விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை