Sunday, 25 July 2021

தசரதன் | பால காண்டம் சர்க்கம் - 06 (28)

Dasharata | Bala-Kanda-Sarga-06 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம் : தசரதனின் ஆட்சியில் குடிமக்கள் அனுபவித்த வளமும், இன்பமும்; நகர வடிவமைப்பு குறித்த வர்ணனை...


Dasharata

அயோத்தியெனும் இந்நகரத்தில் இருந்தே, வேதங்களை நன்கறிந்தவனும், {வளங்கள், படைகள், கல்விமான்கள் முதலிய} அனைத்தையும் திரட்டுபவனும், தீர்க்கதரிசனம் கொண்டவனும், பேரொளிபடைத்தவனும், குடிமக்கள், நகரவாசிகள் அனைவராலும் உயர்வாக மதிக்கப்படுபவனும்,(1) இக்ஷ்வாகுக்களில் அதிரதனும், வேதச் சடங்குகளைச் செய்பவனும், அறத்திற்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவனும், அனைத்தையும் கட்டுப்படுத்துபவனும், மஹரிஷி போன்ற ராஜரிஷியும், மூவுலகங்களிலும் புகழ்பெற்றவனும்,(2) பலவானும், பகைவரை அழிப்பவனும், நண்பர்கள் பலரைக் கொண்டவனும், புலன்களை வென்றவனும், தனமும், திரண்டிருக்கும் பிற பொருள்களும் கொண்டவனும், சக்ரனையும் {இந்திரனையும்}, வைஷ்ரவணனையும் {குபேரனையும்} போன்றவனும்,(3) உலகைக் காத்த மனுவைப் போலப் பேரொளி படைத்தவனுமான அந்தத் தசரத ராஜா இந்த உலகைப் பாதுகாத்து வந்தான்[1].(4)

[1] 'தசரதன்'' - தசம் - பத்து; ரதம் - தேர்; தசரதன் - ''ஏககாலத்தில் பத்துத் தேர்களை நடத்த வல்லவன்'' என்று பொருள்.

சத்தியத்தில் உறுதியாக இருப்பவனும், திரிவர்க்கமெனும் மூவகை குணங்களைச் சரியாகக் கடைப்பிடிப்பவனுமான அவன் {தசரதன்}, இந்திரன் அமராவதியை ஆள்வது போல அந்தச் சிறந்த நகரத்தில் இருந்து ஆட்சி செய்து வந்தான்.(5) அந்த நகரத்தில் வாழும் மக்கள், செல்வப்பகட்டுள்ளவர்களாகவும், தர்மாத்மாக்களாகவும், கல்விமான்களாகவும், தங்கள் தங்கள் தனத்தில் நிறைவடைந்தவர்களாகவும், பேராசை கொள்ளாதவர்களாகவும், சத்தியவாதிகளாகவும் இருந்தனர்.(6) அந்த உத்தம நகரத்தில் அற்ப வருமானம் உள்ள எவரும் இல்லை, அதேபோல மாடுகள், குதிரைகள், தனம், தானியங்கள் இல்லாமல், {அறம், பொருள், இன்பத்தில்} நிறைவில்லாத குடும்பி[2] ஒருவரும் அங்கே இல்லை.(7) காமாந்தகனாகவோ, கஞ்சனாகவோ, கொடூரனாகவோ, கல்வி கற்காதவனாகவோ, நாஸ்திகனாகவோ புருஷர் எவரையும் அயோத்தியில் காண முடியாது.(8)

[2] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "ஒரு சாதாரண குடும்பம் என்பது மனைவி, பெற்றோர் இருவர், மகன்கள் இருவர், மருமகள்கள் இருவர், மகள் ஒருத்தி, விருந்தினர் ஒருவர் என எண்ணிக்கையில் பத்து உறவினரைக் கொண்ட ஓர் இல்லற அமைப்பாகும்" என்றிருக்கிறது.

நரர்களிலும், நாரியைகளிலும் {ஆடவரிலும், பெண்டிரிலும்} அனைவரும் தர்மசீலர்களாகவும், நல்ல தற்கட்டுப்பாட்டையும், நல்ல பண்பையும், நல்ல ஒழுக்கத்தையும் கொண்டவர்களாகவும், தன்னிறைவு அடைந்தவர்களாகவும், மஹரிஷிகளைப் போன்றவர்களாகவும், மாசற்றவர்களாகவும் இருந்தனர்.(9) அங்கே காதுகுண்டலங்கள் இல்லாதவர்களும், தலைப்பாகையும், மாலைகளும் அற்றவர்களும், அற்ப போகம் கொள்பவர்களும் எண்ணெய் நீராடல் செய்யாதவர்களும், மேனியில் சந்தனம் பூசாதவர்களும், நறுமணப் பொருள் பூசாதவர்களும் என எவரும் கிடையாது[3].(10) முழு நிறைவின்றி உணவை உண்பவனும், ஈகை குணம் இல்லாதவனும், அங்க ஆபரணங்களாலும், தோள் வளைகளாலும் அலங்கரிக்கப்படாதவனும், இதயமற்றவனுமான எவனும் அங்கே காணப்படுவதில்லை.(11) வேள்வி நெருப்புகளை மூட்டாதவனும், யஜ்ஞங்களைச் செய்யாதவனும், அற்ப வாழ்வு வாழ்பவனும், கள்வனும், முறையற்ற கலவியில் பிறந்தவனுமான எவனும் அந்த அயோத்தியில் காணப்படுவதில்லை.(12)

[3] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "காதுகுண்டலங்கள் புலமையின் குறியீடுகளாகும். ஒருவன் பெறும் கல்விக்கும் தகுந்த அமைப்பில் அவற்றில் வகைகள் உள்ளன. தலைப்பாகைகள் சமூக அந்தஸ்தைக் குறிக்கும், மற்ற அலங்காரங்கள் அவர்களின் ஆடம்பரத்தைக் குறிக்கும்" என்றிருக்கிறது.

புலன்களை வென்றவர்களான பிராமணர்கள், {வேத கல்வியை} தானமளிப்பவர்களாகவும், {வேதம் பயிலும்} தியான சீலர்களாகவும் இருந்து கொண்டு, அவற்றுக்குப் பிரதி பெறுவதில் கோட்பாட்டுடன்[4] கூடியவர்களாகத் தங்கள் செயல்களை வழுவறச் செய்து வந்தார்கள்.(13) அங்கே நாத்திகர்களோ, பொய்யர்களோ, சாத்திரங்கேளாதவர்களோ, பொறாமையுள்ளவர்களோ, சக்தியற்றவர்களோ, கல்வி கல்லாதவர்களோ ஒருவரும் காணப்படுவதில்லை.(14) வேதாங்கங்களை அறியாதவர்களோ, விரதங்களைத் தவிர்ப்பவர்களோ, ஆயிரங்களில் கொடையளிக்காதவர்களோ, யாதொன்றிலும் இளைத்தவர்களோ, மனக்கலக்கமுற்றவர்களோ, வியாதியில் பீடிக்கப்பட்டவர்களோ ஒருவரும் காணப்படுவதில்லை.(15) அயோத்தியின் நரரிலோ {ஆடவரோ}, நாரீகளிலோ {பெண்டிரிலோ}, ஒருவரும் செல்வமற்றவராகவோ, சிறப்பற்றவராகவோ, ராஜனிடம் பக்தியற்றவராகவோ காணப்படுவது சாத்தியமில்லை.(16)

[4] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "அறிஞர்கள் பெறும் கொடைகள், பிச்சைக்காரர்கள் பெறும் பிச்சையைப் போன்றதோ, வறுமையில் உள்ளோர் பெறும் ஈகை போன்றதோ கிடையாது. அவர்கள் அனைவரிடமும் அவற்றைப் பெறுவதில்லை. தகுந்தோரிடம் இருந்து மட்டுமே பசுக்கள், தங்க நாணயங்கள், கிராமங்கள், கோவில்களைப் போன்ற நன்கொடைகளை ஏற்பதற்குச் சில விதிமுறைகள் இருக்கின்றன" என்றும், இன்னும் அதிகமும் இருக்கின்றன.

வர்ணங்கள் நான்கில் யாவரும், தேவதைகளையும், அதிதிகளையும் {விருந்தினர்களையும்} பூஜிப்பவர்களாகவும், நம்பிக்கைக்குரியவர்களாகவும், சிறப்புமிக்கவர்களாகவும், துணிவுமிக்கச் சூரர்களாகவும் இருந்தார்கள்.(17) அந்த உத்தம புரியில் {அயோத்தியில்}, நரர்கள் {மக்கள்} அனைவரும் தீர்க்காயுள், தர்மம், சத்தியம் ஆகியவற்றுடன் கூடியவர்களாக, புத்திரர்கள் {பிள்ளைகள்}, பௌத்திரர்கள் {பேரப்பிள்ளைகள்}, ஸ்திரீகள் ஆகியோருடன் வாழ்ந்தனர்.(18) க்ஷத்திரியர்கள் பிராமணர்களை மட்டுமே நாடியிருந்தனர், வைசியர்கள் க்ஷத்திரியர்களைப் பின்பற்றினர், சூத்திரர்கள் தங்கள் ஸ்வதர்மத்தை {தங்கள் கடமைகளைச்} செய்தபடியே மூன்று வர்ணங்களையும் உபசரித்து வந்தனர்.(19) முற்காலத்தில் இருந்த விவேகமிக்க மானவேந்திரனான மனுவைப் போலவே இந்த இக்ஷ்வாகுநாதனும் {தசரதனும்} அந்த நகரத்தை நன்றாகப் பாதுகாத்து வந்தான்.(20) எரிகொள்ளியைப் போல் திறன் மிக்கவர்களும், அவமதிப்பைப் பொறுக்காதவர்களும், கல்வி பயின்றவர்களுமான போர்வீரர்கள் கூடிய அந்த நகரமானது, சிங்கங்களுடன் கூடிய ஒரு குகையைப் போல இருந்தது.(21)

காம்போஜம், பாஹ்லீகம், வனாயு ஆகியவற்றிலும் {ஆகிய நாடுகளிலும்}, நதிகளிலும் {சிந்து நதிகளுக்கிடையில் உள்ள நிலங்களிலும்} பிறந்தவையும், இந்திரனின் குதிரையை {உச்சைஷ்ரவத்தைப்} போன்று சிறந்தவையுமான குதிரைகள் அங்கு நிறைந்திருந்தன.(22) விந்திய பர்வதத்தில் பிறந்தவையும், மதங்கொண்டவையும், இமயத்தில் பிறந்தவையும், பருத்தவையும், அதிபலம் கொண்டவையும், பெரும் பர்வதங்களைப் போன்றவையுமான யானைகள் அந்த நகரத்தில் நிறைந்திருந்தன.(23) ஐராவத குலத்தையும், மஹாபத்ம குலத்தையும் சார்ந்தவையும், அஞ்சநாம், வாமனாம் ஆகியவற்றைச் சார்ந்தவையும்,(24) பத்திரம், மந்திரம், மிருகம் போன்ற வகைகளைச் சார்ந்தவையும், பத்திர மந்திர மிருகக் கலப்பு, பத்திர மந்திரக் கலப்பு, பத்திர மிருகக் கலப்பு, மிருக மந்திரக் கலப்பு சார்ந்தவையும், சீற்றமிக்கவையுமான யானைகள் அங்கே மலைகளைப் போல நடந்து கொண்டிருந்தன[5].(25)

[5] பாலகாப்பிய முனிவர் எழுதிய "கஜ சாஸ்திரம்" என்ற நூலில், "பத்திரம், மந்தம், மிருகம் என்ற மூன்று ஜாதிகளில் இரண்டு ஜாதிகுணங்களும், லக்ஷணங்களும் உடையவை மிச்சிர ஜாதி என்றும், மூன்று ஜாதிகளின் குணங்களும் லக்ஷணங்களும் உள்ளவை ஸங்கீர்ண ஜாதி என்றும் கூறப்படுகின்றன. இத்தகைய ஜாதிகள் நான்கு யுகங்களில் உருவானதாகக் கூறப்படுகிறது. பத்திர ஜாதி கிருத யுகத்தைச் சேர்ந்தது. இஃது அழகும், கம்பீரமும் கூடிய சகல லக்ஷணங்களும் உடையது. அடுத்தடுத்த யுகங்களில் அதன் குணங்கள் குறைவுபட்டன. மந்த ஜாதி திரேத யுகத்தைச் சேர்ந்தது. மிருக ஜாதி துவாபர யுகத்தைச் சேர்ந்தது. கலப்பு ஜாதி கலியுகத்தைச் சேர்ந்தது" என்றிருக்கிறது. இது தமிழில் கே.எஸ்.சுப்பிரமணிய சாஸ்திரி மொழிபெயர்ப்பில், தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் நூலக வெளியீடாக 1958ல் வெளிவந்திருக்கிறது.

தசரதன் என்ற பெயரைக் கொண்ட அந்த ராஜா, அங்கே வசித்தபடி ஜகத்தை {உலகை} ஆண்டுக் கொண்டிருந்தபோது, அதன் {அந்த நகரத்தின்} பெயரை மெய்ப்பிக்கும் வகையில், அதன் வெளியேயும் இரண்டு யோஜனைகள் தொலைவுக்கு {நல்ல கோட்டைச் சுவர்களுடன்} அது பிரகாசித்துக் கொண்டிருந்தது.(26) பேரொளி படைத்தவனும், மஹானுமான அந்தத் தசரத ராஜன், நட்சத்திரங்களை ஆளும் சந்திரனைப் போலவே பகைவரை அடக்கி அந்த நகரத்தில் இருந்து ஆண்டு வந்தான்.(27) வலிமையான வாயில்களுடனும், உழல் தடிகளுடனும் கூடிய விசித்திரமான வீடுகளுடன் கூடியதும், மகத்தானதும், மங்கலமானதும், ஆயிரக்கணக்கான மக்களால் நிறைந்ததும், பெயருக்குப் பொருந்தும் வகையில் இருந்ததுமான அந்த அயோத்திபுரியில் உண்மையில் சக்ரனுக்கு இணையான மஹீபதியாக அவன் {மண்ணின் தலைவனாக அந்த தசரதன்} ஆட்சி செய்து வந்தான்.(28)
 

பாலகாண்டம் சர்க்கம் – 06ல் உள்ள சுலோகங்கள்: 28

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அசுவபதி அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அனசூயை அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இல்வலன் உமை கங்கை கசியபர் கபந்தன் கபிலர் கரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் குஹன் கேசினி கைகேயி கௌசல்யை கௌசிகி கௌதமர் சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபளை சரபங்கர் சாந்தை சித்தார்த்தர் சித்ரரதன் சிவன் சீதை சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சூர்ப்பணகை சூளி தசரதன் தர்ம்பிருதர் தனு தாடகை திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திலீபன் தூஷணன் நளன் நாரதர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பிரம்மதத்தன் பிரம்மன் பிருகு மந்தரை மயன் மருத்துக்கள் மஹோதயர் மாண்டகர்ணி மாரீசன் மோஹினி யுதாஜித் ரம்பை ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விபாண்டகர் விராதன் விஷ்ணு விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஹனுமான் ஹிமவான்