Vishnu Avatar | Bala-Kanda-Sarga-15 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: ரிஷ்யசிருங்கரின் தலைமையில் புத்ரகாமேஷ்டி யஜ்ஞம்; ஆகுதிகளைப் பெறத் திரண்ட தேவர்கள்; பிரம்மனிடம் தேவர்களின் வேண்டுதல்; ராவணனை அழிப்பதாகச் சொன்ன விஷ்ணு...
மேதாவியும், வேதமறிந்தவருமான ரிஷ்யசிருங்கர், சிறிது நேரம் தியானித்து, உபாயத்தை அறிந்து மன்னனிடம் {தசரதனிடம்},(1) "புத்ர காரணத்துக்காக அதர்வத்தின் தோற்றுவாயில் மந்திரங்களுடன் சொல்லப்பட்டுள்ள புத்ரீய {புத்திரர்களை ஈய/ பிள்ளைகளைப் பெறுவதற்கான} இஷ்டி சடங்கை {புத்ரகாமேஷ்டி யஜ்ஞத்தை} முறையாகச் செய்யப்போகிறேன்" என்றார்.(2) பிறகு அந்தத் தேஜஸ்வி {ஒளிமிக்க ரிஷ்யசிருங்கர்}, மந்திரங்களுடன் கூடிய கர்மங்களைச் செய்து, அக்னியில் ஹோமமும் செய்து புத்ர காரணத்திற்கான புத்ரீய இஷ்டி சடங்கைத் தொடங்கினார்.(3)
அப்போது தேவர்களும், சித்தர்களும், பரமரிஷிகளும் ஆகுதிகளில் தங்கள் பாகத்தைப் பெற விதிப்படி அங்கே கூடினர்[1].(4) முறைப்படி அந்தக் கூட்டத்தில் கூடிய தேவர்கள், லோக கர்த்தனான பிரம்மனிடம் இந்தச் சொற்களில்,(5) "பகவானே, ராவணன் என்ற பெயர்படைத்த ராக்ஷசன், உம்முடைய அருளாலும், தன்னுடைய வீரியத்தினாலும் எங்கள் அனைவரையும் பாடாய்ப் படுத்துகிறான். எங்களால் அவனைக் கட்டுப்படுத்த முடியவில்லை.(6) பகவானே, அவனது தவத்தை மெச்சி உம்மால் கொடுக்கப்பட்ட வரங்களை மதித்து எப்போதும் அவன் செய்யும் அனைத்தையும் பொறுத்துக் கொள்கிறோம்.(7) துர்மதி படைத்த அவன் மூன்று உலகங்களையும் கொடுமைப்படுத்துகிறான்; திக் பாலர்களை வெறுக்கிறான்; திரிதசராஜனான சக்ரனை {தேவர்களின் மன்னனான இந்திரனைத்} தாக்க விரும்புகிறான்.(8) வெல்லப்பட முடியாதவனான அவன், தான் பெற்ற வரத்தின் மோஹத்தால் ரிஷிகளையும், யக்ஷர்களையும், கந்தர்வர்களையும், அசுரர்களையும், பிராமணர்களையும் கொடுமைப்படுத்துகிறான்.(9) சூரியன் அவனை வாட்டுவதில்லை, மாருதன் {வாயு} அவன்மீது வேகமாக வீசுவதில்லை, அலைகளின் தலைவனான சமுத்திரனும் அவனைக் கண்டு அலைபாய்வதில்லை.(10) அந்தக் காரணத்தால் கோரத்தோற்றமுடைய அந்த ராக்ஷசன், எங்களுக்கு மஹாபயத்தை ஏற்படுத்துகிறான். பகவானே, அவனது அழிவுக்கான உபாயத்தை ஏற்படுத்த கருதுவீராக" என்றனர்.(11)
[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பில், "முக்தியை அடைந்து தெய்வீக வசிப்பிடங்களில் வாழும் இந்த தெய்வீகர்கள், மனிதர்களின் உலகில் நுழைவதில்லை. அவர்கள் பூமியில் எங்கெல்லாம் யஜ்ஞம் நடைபெறுகிறதோ அங்கே ஆகுதிகளில் தங்கள் பாகத்தைப் பெறுவதற்காக அக்னி பீடத்திற்கு மேல் ஆகாயத்தில் கூடுகின்றனர்" என்றிருக்கிறது.
ஸுரர்கள் {தேவர்கள்} அனைவரும் இவ்வாறு சொன்னதும், சிறிது நேரம் சிந்தித்த அவன் {பிரம்மன்}, "அந்த துராத்மாவின் {துர் ஆத்மா/ கெட்டவனின்} வதத்திற்கான உபாயம் இதுவே.(12) அவன் {ராவணன்}, 'கந்தர்வர்களாலோ, யக்ஷர்களாலோ, தேவர்களாலோ, ராக்ஷசர்களாலோ கொல்லப்படக்கூடாது' என்று கேட்டான். நானும், 'அவ்வாறே ஆகட்டும்' என்று சொன்னேன்.(13) அந்த ராக்ஷசன் மானிடர்கள் மீது கொண்ட அவமதிப்பால் அவர்களைக் குறித்துச் சொல்லவில்லை. எனவே அவன் மானிடராலேயே கொல்லப்பட வேண்டும். அவனுக்கு வேறு மிருத்யு {மரணம்} இல்லை" என்றான் {பிரம்மன்}.(14)
பிரம்மனால் சொல்லப்பட்ட இந்த இனிய வாக்கியத்தைக் கேட்ட தேவர்களும், மஹரிஷிகள் அனைவரும் பெரும் மகிழ்ச்சியடைந்தனர்.(15) அதேவேளையில் பேரொளி படைத்தவனும், சங்கு சக்கரக் கதா பாணியும், பீதாம்பரம் தரித்தவனும், புடம்போட்ட தங்கத்தாலான கேயூரம் அணிந்தவனும், ஜகத்பதியுமான {அண்டத்தின் தலைவனுமான} விஷ்ணு, உத்தம ஸுரர்களால் துதிக்கப்பட்டவனாகவும், நீரைக் கொடுப்பவன் {கருமேகத்தின்} மீதிருக்கும் சூரியனைப் போலவும் வைனதேயன் {கருடன்} மீதேறி வந்து,(16,17) பிரம்மனைச் சந்தித்து, அங்கே நின்று சிந்தித்துக் கொண்டிருந்த போது, ஸுரர்கள் அனைவரும் அவனைப் பணிந்து துதித்து,(18) "விஷ்ணுவே, தர்மவானும், புகழ்பெற்றவனும், மஹரிஷிகளைப் போன்ற தேஜஸ் படைத்தவனுமான தசரத ராஜன், ஹ்ரீ ஸ்ரீ கீர்த்தி[2] ஆகியோருக்கு ஒப்பான மூன்று பாரியைகளை {மனைவிகளைக்} கொண்டிருக்கிறான். அந்த அயோத்தியாதிபதியின் தலைவனான விஷ்ணுவே, நீ உன்னை நான்காகப் பிரித்துக் கொண்டு அவர்களின் புத்திரர்களாகப் பிறப்பாயாக.(19,20,21அ) அவர்களில் {தசரதனின் மனைவிகளுக்குப் பிறந்து} நீ மானிடராவதன் மூலம், ஓ! விஷ்ணுவே, உலகங்களுக்கு முள்ளாய் இருப்பவனும், எரிச்சலூட்டுபவனும், தேவர்களால் கொல்லப்பட முடியாதவனுமான ராவணன் சமரின் {போரில்} கொல்லப்படுவான்.(21ஆ,22அ) அந்த மூர்க்க ராக்ஷசன், தன்னுடைய வீரிய மிகுதியால் தேவர்களையும், கந்தர்வர்களையும், சித்தர்களையும், ரிஷிகளையும் துன்புறுத்தி வருகிறான்.(22ஆ,23அ) ரௌத்திரத்துடன் கூடிய அவன், ரிஷிகளையும், நந்தனவனத்தில் மகிழ்ந்திருக்கும் கந்தர்வர்களையும், அப்ஸரஸ்களையும் முழுமையாக {சொர்க்கங்களில் இருந்து} வீழ்த்துகிறான்.(23ஆ,24அ) சித்தர்கள், கந்தர்வர்கள், யக்ஷர்களாகிய நாங்கள் முனிகளுடன் சேர்ந்து உண்மையில் அவனை வதம் செய்யும் காரியத்திற்காக உன்னிடம் சரணாகதி அடைகிறோம்.(24ஆ,25அ) பரந்தபா, தேவா, தேவர்களின் சத்ருக்களை வதம் செய்வதில் எங்கள் பரமகதியாக இருக்கும் நீ, மனிதர்களின் உலகத்தில் பிறக்க மனங்கொள்வாயாக" என்றனர்.(25ஆ,26அ)
[2] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "ஹ்ரீ, ஸ்ரீ, கீர்த்தி என்போர் தக்ஷப்ரஜாபதியின் மகள்களாவர். அதில் ஹ்ரீ அற மனம் படைத்த ஹிருலேகையாவாள். இராமனைப் பெற்ற ராணி கௌசல்யை அவளது குணத்தைக் கொண்டவள். ஸ்ரீ அனைத்திலும் செழிப்பான ஸ்ரீகாரையாவாள். ராணி சுமித்திரை அவளது குணத்தைக் கொண்டவள் என்பதாலேயே லக்ஷ்மணனை ராமனுடன் காட்டுக்குச் செல்ல அறிவுறுத்துகிறாள். கீர்த்தி என்பவள் புகழ் ஆவாள். கைகேயியின் புகழ் நன்கறியப்பட்டதே. கைகேயி இல்லாமல் இந்தக் காவியத்தைக் கற்பனையும் செய்ய முடியாது. எனவே அவள் எதிர்மறையாகத் தெரிந்தாலும் மகிமைமிக்கவளே" என்றிருக்கிறது.
திரிதஷபுங்கவனும் {தேவர்களில் உயர்ந்தவனும்}, சர்வலோகநமஸ்கிருதனும் {உலகங்கள் அனைத்தாலும் மதிக்கப்படுபவனும்}, தேவேசனுமான {தேவர்களின் ஈசனுமான) விஷ்ணு இவ்வாறு துதிக்கப்பட்டபோது, தர்மத்திற்குக் கட்டுப்பட்ட அந்தக் கூட்டத்தில் பிதாமஹனை {பிரம்மனை} முன்னிட்டுக் கொண்டு தேவர்கள் அனைவரிடமும் பேசும் வகையில்,(26ஆ,27) "பயம் வேண்டாம். நீங்கள் பத்திரமாக இருப்பீர்கள். குரூரனும், துராத்மாவும், தேவர்களுக்கும், ரிஷிகளுக்கும் பயத்தை உண்டாக்குபவனுமான ராவணனை, அவனது புத்திரர்கள், பௌத்திரர்களுடனும், அமாத்யர்களுடனும் {அமைச்சர்களுடனும்}, மித்ரர்கள் {நண்பர்கள்}, ஞாதிக்கள் {உற்றார்}, பந்துக்களுடனும் {உறவினருடனும்} யுத்தத்தில் அழித்து, பத்தாயிரம் ஆண்டுகளும், இன்னும் ஆயிரம் வருடங்களும் {அதாவது பதினோராயிரம் ஆண்டுகள்} பிருத்வியை {பூமியை} ஆண்டவாறே மானுடலோகத்தில் வசித்திருப்பேன்" என்றான் {விஷ்ணு}.(28,29,30அ)
ஆத்மாவானான {அன்பு மனம் கொண்ட} விஷ்ணு தேவன், இவ்வாறு தேவர்களுக்கு வரத்தை அளித்து விட்டு, தான் மனிதனாகப் பிறக்கப் போகும் ஜன்மபூமியை {தான் பிறக்கப் போகும் இடத்தைக்} குறித்து மனத்தில் சிந்தித்தான்.(30ஆ,31அ) அந்தத் தாமரைக்கண்ணன் {விஷ்ணு}, தன்னை நான்காகப் பிரித்துக் கொண்டு தசரத மன்னனைத் தந்தையாக ஏற்க நினைத்தான்.(31ஆ,32அ)
அப்போது திவ்யரூபம் கொண்ட தேவ, ரிஷி, கந்தர்வ, ருத்ர, அப்சரஸ் கணங்கள் அந்த மதுசூதனனை {விஷ்ணுவைத்} துதிக்கத் தொடங்கி(32ஆ,இ) "தற்புகழ்ச்சி செய்பவனும், உக்ரதேஜஸ் கொண்டவனும், ஆணவம் அதிகரித்தவனும், தேவர்களின் தலைவனை {இந்திரனை} வெறுப்பவனும், அனைவரையும் ஓலமிடச் செய்பவனும், தவசிகளுக்கு முள்ளாய் இருப்பவனும், தவசிகளை அச்சுறுத்துபவனுமான ராவணனை அழிப்பாயாக.(33) வெட்டிப் பெருமை பேசும் உக்ரனான ராவணனை, அவனது படைகள், சுற்றத்தார் அனைவருடன் கொல்வாயாக. அமளியின்றி நீண்ட காலத்திற்குப் பிறகு மன வருத்தம் தீர்ந்து, தோஷங்களேதும் இல்லாமல் குற்றங்குறைகளற்ற சுவர்லோகத்தை {வைகுண்டத்தை} அடைவாயாக" என்றனர்.(34)
பாலகாண்டம் சர்க்கம் –15ல் உள்ள சுலோகங்கள்: 34
Previous | | Sanskrit | | English | | Next |