Rishyasringa's arrival at Anga | Bala-Kanda-Sarga-10 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: அங்க நாட்டுக்கு ரிஷ்யசிருங்கரின் வருகை; ரோமபாதனின் மகள் சாந்தையை மணந்து கொண்ட ரிஷ்யசிருங்கர்...
இவ்வாறு ராஜனால் கேட்கப்பட்ட சுமந்திரன், இவ்வாறு மொழிந்தான், "ரிஷ்யசிருங்கர், எந்த உபாயங்களைக் கொண்டு மந்திரிகளால் அழைத்துவரப்பட்டார் என்பதைச் சொல்கிறேன், நான் சொல்பவை அனைத்தையும் உமது மந்திரிகளுடன் சேர்ந்து கேட்பீராக.(1)
புரோஹிதர்களுடன் கூடிய அந்த அமைச்சர்கள், {அங்க மன்னன்} ரோமபாதனிடம் இவ்வாறு {பின்வருமாறு} சொன்னார்கள், "அபாயமில்லாத இந்த உபாயத்தை நாங்கள் சிந்தித்திருக்கிறோம்.(2) வனவாசியான ரிஷ்யசிருங்கர் தவத்திலும், வேதகல்வியிலும் ஈடுபடுகிறாரேயன்றி, நாரீகளையோ {பெண்களையோ}, உலக விஷயங்களையோ, சுகத்தையோ அறிவாரில்லை.(3) நரர்களின் {ஆண்களின்} சித்தத்தை அமைதியடையச் செய்பவையும், இந்திரியங்களால் விரும்பப்படுபவையுமான அவற்றைக் கொண்டு அவரை நகரத்திற்கு அழைத்துவர விரும்புகிறோம். இது குறித்து உடனே தீர்மானிக்கப்படட்டும்.(4) {உம்மால்} வெகுவாகக் கொடையளிக்கப்பட்டவர்களும், அழகிகளும், நன்கு அலங்கரிக்கப்பட்டவர்களுமான கணிகையர் அங்கே சென்று பலவித உபாயங்களால் அவரை இங்கே கொண்டு வருவார்கள்" என்றனர்.(5)
இதைக் கேட்ட ராஜன், தன் புரோஹிதரிடம் {"அவ்வாறே ஆகட்டும்" என்று} மறுமொழி கூறிய பிறகு புரோஹிதர்களும், மந்திரிகளும் அவ்வாறே {ஏற்கனவே சொன்னது போலவே} செயல்பட்டனர்.(6) அதை {மன்னனின் ஆணையைக்} கேட்ட சிறந்த கணிகையர்[1] சிலர், அந்த மஹாவனத்திற்குள் பிரவேசித்து, எப்போதும் ஆசிரமத்திலேயே வசிக்கும் அந்த தீரரைத் தரிசிப்பதற்காக, அந்த ஆசிரமத்திற்கு அருகிலேயே வசித்து அந்த ரிஷி புத்ரரைக் காண முயற்சி செய்தனர்.(7,8அ) தந்தையின் ஆசிரமத்தில் எப்போதும் நிறைவுடன் இருந்த அந்தத் தவசி, {ஆசிரமத்தைவிட்டு} வெளியே வராதவர் என்பதால், நகரத்து, ராஷ்டிரத்து ஸ்திரீகளையோ, புருஷர்களையோ[2], வேறு எதையுமோ அதற்கு முன்பு கண்டவரில்லை.(8ஆ,9)
[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "எந்த அகராதியும் கணிகையர் என்பதற்குப் பரத்தை, விலைமகள் என்ற பொருளையே கொடுக்கும். ஆனால் இந்தியப் பின்புலத்தில் கணிகையரை விலைமகளாகவோ, பரத்தையாகவோ இழிந்த வகையில் எடுத்துக் கொள்ள முடியாது. அவர்கள் ஒரு வகைக் கலைஞர்கள். இசை, நடனம் ஆகியவற்றில் பெரும் திறமை கொண்டவர்கள்" என்றிருக்கிறது.
[2] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "அஃதாவது ஆண்பெண் பாகுபாட்டை அவர் அறிந்தவரில்லை. சுகமேதும் கண்டவருமில்லை. உயர்ந்த கதியை அடைவதற்காகத் தமது தந்தையால் அந்தப் பக்குவத்தில் வளர்க்கப்பட்டிருந்தார்" என்றிருக்கிறது.
விபாண்டகரின் மகனான அவர் {அந்த ரிஷ்யசிருங்கர்}, ஒருகாலத்தில் {தற்செயலாக} அந்த இடத்திற்கு வந்து, அந்த அழகிய பெண்களைக் கண்டார்.(10) சித்திரவேஷம் பூண்ட அந்த மடந்தையர் யாவரும், மதுரஸ்வரத்தில் கானம் செய்தபடியே அந்த ரிஷிபுத்ரரின் அருகில் வந்து இந்தச் சொற்களைப் பேசினர்,(11) "பிராமணரே, நீர் யார்? ஜனங்களற்ற இந்தக் கோர வனத்தில் தனியாகத் திரிந்து கொண்டிருக்கிறீரே? ஏன் இவ்வாறு திரிகிறீர்? இதை நாங்கள் அறிய விரும்புகிறோம் சொல்வீராக" {என்றனர்}.(12)
காமரூபம் {விரும்பத்தக்க வடிவம்} கொண்ட அந்த ஸ்திரீகளைப் போன்ற ரூபங்களை அந்த வனத்தில் கண்டவரில்லை என்பதால், தம் மதியில் பிறந்த நட்புடன் தமது தந்தையைக் குறித்த விபரங்களைச் சொல்லும் வகையில், அவர்,(13) "என் தந்தை விபாண்டகர், நான் அவருடைய ஔரஸசுதன் {உண்மையான மகன்}, ரிஷ்யசிருங்கன்[3] என்ற பெயரில் இப்புவி என்னை அறியும்.(14) காண்பதற்கு இனியவர்களே, எங்கள் ஆசிரமம் இங்கே சமீபத்தில் இருக்கிறது. அங்கே உங்கள் அனைவரையும் விதிப்பூர்வமாகப் பூஜிக்க விரும்புகிறேன்" என்றார்.(15)
[3] தேசிராஜுஹனுமந்தராவின் பதிப்பில், "அவர் தலையின் உச்சியில் கொம்புடன் பிறந்தவர். கொம்புடன் பிறந்த ரிஷி என்பதால் ரிஷ்யசிருங்கன் என்ற அவருடைய பெயர் பூமியில் புகழ்பெற்றிருந்தது" என்றிருக்கிறது.
ரிஷிபுத்திரரின் சொற்களைக் கேட்ட அவர்கள் அனைவரும் அந்த ஆசிரமத்தைக் காண மனத்தில் ஆசை கொண்டனர். பிறகு அவர்கள் அனைவரும் அங்கே சென்றனர்.(16) அந்த ரிஷிபுத்திரர் அங்கே சென்றதும் அவர்களைப் பூஜித்து, "இதோ அர்க்கியம் {வாய் மற்றும் கை கழுவும் நீர்}, இதோ பாத்யம் {கால் கழுவும் நீர்}, இதோ கனிகளும், கிழங்குகளும்" என்றார்.(17) அவர்கள் அனைவரும் நல்ல உற்சாகத்துடன் அந்தப் பூஜையை ஏற்றுக் கொண்டாலும் ரிஷியிடம் {விபாண்டகரின் வரவை எண்ணி} பீதியடைந்து சீக்கிரமாகச் சென்று விடவேண்டும் என்ற எண்ணத்தை அடைந்தவர்களாக.(18) "துவிஜரே, முக்கியமான இந்தக் கனிகளை எடுத்துக் கொள்வீராக. பத்திரமாக இருப்பீராக. விரைவில் இவற்றை உண்பீராக" என்றனர்.(19)
பிறகு அவர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் அவரை ஆலிங்கனம் செய்து மோதகங்கள் {லட்டுகள்}, விதம் விதமான சிறந்த பக்ஷ்யங்கள் {பணியாரம் போன்ற இனிப்பு வகைகள்} ஆகியவற்றை அவருக்குக் கொடுத்தனர்.(20) வனத்திலேயே நித்தியம் வசிக்கும் அந்தத் தேஜஸ்வி {பேரொளி படைத்தவர்}, இதற்கு முன்பு அவற்றைச் சுவைத்ததில்லை என்பதால் அவற்றை உண்டதும் கனிகள் என்றே அவற்றை நினைத்தார்.(21) அப்போது அந்த ஸ்திரீகள், அவரது தந்தையிடம் கொண்ட பீதியில் செல்பவர்களாக இருந்தாலும், விரதங்களும், நிவேத்யமும் {அறக்கடமைகளைச்} செய்ய வேண்டும் என்ற பாசாங்குடன் அந்த விப்ரரிடம் விடைபெற்றுச் சென்றனர்.(22)
காசியபரின் பேரரான அந்தத் துவிஜர், அவர்கள் அனைவரும் சென்ற பிறகு இதயம் கலங்கியவராகத் துக்கத்துடன் இருந்தார்.(23) அதற்கு அடுத்த நாளில், வீரியவானும், ஸ்ரீமானுமான அந்த விபாண்டகசுதன் {ரிஷ்யசிருங்கர்}, மனத்துக்கு இனியவர்களும், நன்கு அலங்கரிக்கப்பட்டவர்களுமான அந்த வாரமுக்யர்களை {கணிகையரைத்} தமது மனத்தில் மீண்டும் மீண்டும் சிந்தித்து, {முன்தினம்} அவர்களை எங்கே கண்டாரோ அதே இடத்திற்குச் சென்றார்.(24,25அ) அந்த விப்ரர் அங்கே வந்ததைக் கண்டு, இதயத்தில் மகிழ்ச்சியடைந்த அவர்கள் அனைவரும் அவரைச் சூழ்ந்து கொண்டு, "சௌம்யரே {நல்லியல்பைக் கொண்டவரே}, எங்கள் ஆசிரமத்திற்கு வாரும்" என்ற இந்தச் சொற்களைச் சொன்னார்கள்.(25ஆ,26) {மேலும் அவர்கள்}, "அங்கே மிகச்சிறந்த கனிகளும், கிழங்குகளும் இருக்கின்றன, அங்கே உண்மையில் விசேஷமான விருந்தோம்பல் நிச்சயம் நடக்கும்" என்றனர்.(27)
இதயத்திற்கு நிறைவைத் தரும் அவர்கள் அனைவருடைய சொற்களையும் கேட்டு அவர் அங்கே செல்ல நினைத்தார்; அந்த ஸ்திரீகளும் அவரை {அங்க தேசத்திற்கு} அழைத்துச் சென்றனர்[4].(28) மஹாத்மாவான அந்த விப்ரர் அங்கே அழைத்துச் செல்லப்பட்ட உடனேயே, ஜகத்துக்கு மகிழ்ச்சியை அளிக்கும் வகையில் {மழை} தேவன் மழையைப் பொழிந்தான்.(29) நராதிபன் {ரோமபாதன்}, மழையுடன் தன் தேசத்திற்கு வந்து கொண்டிருக்கும் விப்ரமுனியிடம் தன்னடக்கத்துடன் சென்று, தலையால் தரையைத் தீண்டி வணங்கி[5], விதிப்படி அர்க்கியம் கொடுத்து, {தன் வஞ்சனையைக் கருதி} அந்த விப்ரேந்திரர் {ரிஷ்யசிருங்கரின் தந்தையான விபாண்டகர்} கோபமடையாமல் இருக்க அவரிடம் வரத்தை வேண்டினான்.(30,31)
[4] மஹாபாரதம் வனபர்வம் பகுதி 111ல் ஒரேயொரு கணிகை ரிஷ்யசிருங்கரை அழைத்துச் சென்றதாக இருக்கிறது. மஹாபாரதத்தில் இந்தப் பகுதி இன்னும் விரிவாக இருக்கிறது.
[5] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பில், "வழிபடப்படும் தேவனிடம் முழுச் சரணாகதியை அடைந்ததை வெளிப்படுத்தும் பொருட்டு உடலின் எட்டு அங்கங்களும் தரையில் தீண்டும் வகையில் வணங்குவது சாஷ்டாகப் பிரணாமம் {சாஷ்டாக நமஸ்காரம்} என்றழைக்கப்படுகிறது" என்றிருக்கிறது. இங்கே ரோமபாதன் ரிஷ்யசிருங்கரின் முன் தன் தலை மட்டும் தரையைத் தீண்டும் வகையில் வணங்குகிறான்.
அந்த ராஜன் {ரோமபாதன்}, {நகருக்குச் சென்று} அந்தப்புரத்திற்குள் பிரவேசித்துக் கன்னிகை சாந்தையை விதிப்படி அவருக்கு {மணமுடித்துக்} கொடுத்து, {மனக்கவலை தீர்ந்து} மன அமைதியை அடைந்து மகிழ்ந்திருந்தான்.(32) மஹாதேஜஸ்வியான ரிஷ்யசிருங்கர், இவ்வாறே தம் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு வழிபடப்பட்டவராகத் தன் பார்யையான {மனைவியான} சாந்தையுடன் அங்கே {அங்க தேசத்தில்} வாழ்ந்திருந்தார். {என்றான் சுமந்திரன்}.(33)
பாலகாண்டம் சர்க்கம் –10ல் உள்ள சுலோகங்கள்: 33
Previous | | Sanskrit | | English | | Next |