Friday, 10 October 2025

கரடியின் கீதம் | யுத்த காண்டம் சர்க்கம் – 113 (54)

A song of a bear | Yuddha-Kanda-Sarga-113 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராமனின் வெற்றிச் செய்தியை சீதையிடம் சொன்ன ஹனுமான்; செய்தி கேட்டு மகிழ்ச்சியடைந்த சீதை; கரடி பாடிய கீதம்...

Hanuman speaking to Sita

இவ்வாறு ஆணையிடப்பட்ட மாருதாத்மஜன் {வாயு மைந்தன்} ஹனுமான், நிசாசரர்களால் {இரவுலாவிகளான ராக்ஷசர்களால்} பூஜீக்கப்படும் லங்காம்புரீக்குள் பிரவேசித்தான்.(1) அவன் லங்காம்புரீக்குள் பிரவேசித்து, விபீஷணனைப் பின்தொடர்ந்தான். அப்போது அந்த ஹனுமான் விருக்ஷவாடிகைக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டான்.{2} சீதைக்குத் தெரிந்தவனான அந்த ஹரி {குரங்கான ஹனுமான்} எது நியாயமோ அந்த வதிப்படியே உள்ளே பிரவேசித்தான். சசி {சந்திரன்} இல்லாமல் {நீராடாமல்} களையிழந்த ரோகிணியைப் போலிருந்தவளைக் கண்டான்.{3} அவள், ராக்ஷசிகள் சூழ விருக்ஷமூலத்தில் {மரத்தடியில்} ஆனந்தமற்றவளாக இருந்தாள். அவன் அமைதியாக அவளை அணுகி, பணிவுடன் வணங்கி நின்றான்.(2-4)

மஹாபலவானான ஹனூமந்தன் அங்கே வந்தும் {சீதா} தேவி  அமைதியாக இருந்தாள். தான் {ஏற்கனவே} அவனைக் கண்டிருப்பதை நினைவில் கொண்டு வந்த பிறகு மகிழ்ச்சியடைந்தாள்.(5) பிலவகோத்தமனான ஹனூமான் {தாவிச் செல்பவர்களில் மேன்மையான ஹனுமான்} அவளது சௌம்யமான முகத்தைக் கண்டு, ராமனின் சர்வ வசனத்தையும் {பின்வருமாறு} சொல்லத் தொடங்கினான்:(6) "இராமர், சுக்ரீவலக்ஷ்மணர்களுடனும், சஹாயனான விபீஷணனுடனும், ஹரீக்களின் பல சஹிதமாகவும் குசலமாக இருக்கிறார் {குரங்குகளின் படையுடன் கூடியவராகவும் நலமாக இருக்கிறார்}.(7) சத்ருவைக் கொன்ற அரிந்தமரும், சித்தார்த்தருமான அவர், உன் குசலத்தை {நலத்தை} வினவுகிறார். ஹரிக்களுடன் {குரங்குகளுடன்} கூடிய ராமரால், விபீஷணனின் சஹாயத்தையும்,{8} லக்ஷ்மணரின் நயத்தையும் கொண்டு, தேவி, வீரியவானான ராவணன் கொல்லப்பட்டான்.(8,9அ) 

தேவி, போற்றுதலுக்குரியவளே, உனக்குப் பிரியமானதைச் சொல்லப் போகிறேன்.{9ஆ} தர்மஜ்ஞையே, உன் பிரபாவத்தினால், போரில் மஹானான ராமரால் இந்த விஜயம் அடையப்பட்டிருக்கிறது. {ராமர் உனக்குச் சொல்லியனுப்பியது,} "சீதே, பிணியில் இருந்து விடுபட்டு ஸ்வஸ்தமடைவாயாக {சோகத்தைக் கைவிட்டு நலமடைவாயாக}[1].(9ஆ,10) சத்ருவான ராவணன் கொல்லப்பட்டான். இலங்கையும் வசப்படுத்தப்பட்டது. உன்னை வென்றெடுக்காமல், நித்திரை கொள்ள முடியாத என்னால் திடத்துடன் மஹோததியில் சேது {பெருங்கடலில் பாலம்} கட்டப்பட்டது. இப்படியே பிரதிஜ்ஞை நிறைவேறியது.(11,12அ) இராவணாலயத்தில் இருப்பதில் கலக்கங்கொள்ள வேண்டாம். இந்த லங்கையின் ஐஷ்வர்யம் விபீஷணனுக்குரியதாகச் செய்யப்பட்டிருக்கிறது.(12ஆ,13அ) எனவே நிம்மதி அடைவாயாக. உன் சொந்த கிருஹத்தில் வசிப்பதைப் போலத் தேறுதல் அடைவாயாக. இவனும் {இந்த ஹனுமானும் / விபீஷணனும்}[2] உன்னை தரிசிக்கும் உற்சாகத்தில் மகிழ்ச்சியுடன் வருகிறான்" {இதுவே ராமர் உனக்கு அனுப்பிய செய்தி என்றான் ஹனுமான்}.(13ஆ,14அ)

[1] தர்மாலயப் பதிப்பில், "தர்மசீலையே, பாக்கியவசமாய் பிழைத்திருக்கிறாய். எனது வெற்றியானது மனதிற்கொள்ளப்படட்டும். ஜானகி, நமக்கு வெற்றியானது கிடைத்து விட்டது. துயரமற்றவளாய் மனநிம்மதியுள்ளவளாக இருபாபயாக" என்றிருக்கிறது. நரசிம்மாசாரியர் பதிப்பில், "என்னுடைய தேவீ! உனக்கு ப்ரிய ஸமாசாரத்தைச் சொல்லுகிறேன். உன்னை மிகுதியும் சந்தோஷப்படுத்திகிறேன். பாதிவ்ரத்யதர்மம் தெரிந்தவளே! என் பாக்யத்தினால் நீ ஜீவித்திருக்கின்றனை. நீ இல்லாத பக்ஷத்தில் நான் ஜயித்தது வீணேயாய்விடும். ஸீதே! என் பராக்ரமத்தினால் நமக்கு யுத்தத்தில் ஜயம் உண்டாயிற்று. ஆகையால் நீ இனி மனவருத்தம் தீர்ந்து ஸுகாயிருப்பாயாக" என்றிருக்கிறது. கோரக்பூர் கீதாபிரஸ் பதிப்பில், "தேவி! உனக்குப் பிரியமான செய்தியைச் சொல்லியனுப்பியிருக்கிறேன். (வெற்றிச் செய்தியைக் கேட்டதுமே, நீ மகிழ்ந்திருப்பாய்.) உனக்கு மேன்மேலும் சந்தோஷத்தைக் கொடுக்க விரும்புகிறேன். அறம் அறிந்தவளே! நான் செய்த போரில் வெற்றி பெற்றுள்ளேன். நல்ல காலமாக நீயும்  உயிருடன் இருக்கிறாய். (நான் போர் தொடங்கியதே உனக்காகத்தானே!) சீதே! நமக்கு வெற்றி கிடைத்துவிட்டது. மனக்கவலை நீங்கி, நீ நிம்மதியாக இருப்பாயாக" என்றிருக்கிறது. "பாக்கியவசமாய் பிழைத்திருக்கிறாய்" என்று ராமன் சொல்வதாக வருகிறது. ஆங்கிலப்பதிப்புகளிலும் இந்தப் பகுதியில் ராமன் எங்கிருந்து பேசுகிறான் என்பதில் குழப்பம் இருக்கிறது. மூலத்தையும், ஆங்கில மொழிபெயர்ப்புகளையும் மீண்டும் மீண்டும் பார்க்கையில், மன்மதநாததத்தர் பதிப்பில் ராமன் எங்கிருந்து பேசுகிறான் என்று கொடுக்கப்பட்டுள்ளதோ, அதுவே ஓரளவுக்கு சரியாக வருவதால், அங்கிருந்தே இங்கும் கொடுக்கப்படுகிறது. 

[2] விவேக் தேவ்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "இஃது அநேகமாக ஹனுமனைப் பற்றிய குறிப்பாக இருக்கலாம். ஆனால் அந்த விஷயம் குறிப்பிடப்படாததால், ராமன் விபீஷணனையே குறிப்பிட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது" என்றிருக்கிறது.

இவ்வாறு சொல்லப்பட்டதும், சசிக்கு {சந்திரனுக்கு} ஒப்பான முகம் கொண்டவளான அந்த சீதா தேவி, மகிழ்ச்சியில் மூழ்கி அசைய இயலாதவளாக இருந்தாள்.(14ஆ,15அ) அப்போது ஹரிவரன் {குரங்குகளில் சிறந்தவனான ஹனுமான்} மறுமொழி கூறாத சீதையிடம், "தேவி, நீ சிந்திப்பதென்ன? எனக்கு மறுமொழி கூறாதிருப்பதேன்?" {என்று கேட்டான்}.(15ஆ,16அ)

ஹனூமதனால் இவ்வவாறு சொல்லப்பட்டதும், தர்மத்தின் பாதையில் திடமாக இருந்த சீதை, பரம பிரீதியடைந்தவளாக கண்ணீரால் அடைக்கப்பட்டக் குரலில் {பின்வருமாறு} கூறினாள்:(16ஆ,17அ) "பர்த்தாவின் விஜயம் {கணவனின் வெற்றி} சார்ந்த பிரியத்திற்குரிய இதைக் கேட்டதும் பெரும் மகிழ்ச்சியில் ஒரு க்ஷணம் வாக்கியமற்றவாளானேன்.(17ஆ,18அ) பிலவங்கமா {தாவிச் செல்பவனே}, எவ்வளவு சிந்தித்த பிறகும், என் பிரியத்திற்குரிய செய்தியைச் சொன்ன உனக்குப் பிரதிமரியாதை செய்யத் தகுந்த எதையும் இங்கே நான் பார்க்கவில்லை.(18ஆ,19அ) பிரியத்திற்குரிய செய்தியைச் சொன்ன உனக்கு தத்தம் செய்யத் தகுந்ததும், சுகமடையத் தகுந்ததுமான எதையும் பிருத்வியில் நான் பார்க்கவில்லை. (19ஆ,20அ) ஹிரண்யமோ, ஸ்வர்ணமோ {வெள்ளியோ, பொன்னோ}, விதவிதமான ரத்தினங்களோ, திரி லோகங்களிலும் உள்ள ராஜ்யமோ இதைச் சொன்ன உனக்கு தகுந்தவைல்ல" {என்றாள் சீதை}.(20ஆ,21அ)

வைதேஹியால் இவ்வாறு சொல்லப்பட்டதும், சீதை நோக்கி நின்று கொண்டிருந்த பிலவங்கமன் {தாவிச் செல்பவனான ஹனுமான்}, கைக்கூப்பி வணங்கி, மகிழ்ச்சியுடன் {பின்வரும்} மறுமொழியைக் கூறினான்:(21ஆ,22அ) "அநிந்திதே {நிந்திக்கத்தகாதவளே}, பர்த்தாவின் பிரியஹிதங்களில் ஈடுபடுபவளும், பர்த்தாவின் விஜயத்தை விரும்புகிறவளுமான நீ மட்டுமே சினேகிதத்துடன் கூடிய இத்தகைய வாக்கியத்தைச் சொல்லத் தகுந்தவள்.(22ஆ,23அ) சௌமியமானவளே, சாரத்துடனும், சினேகிதத்துடனும் கூடிய உன்னுடைய இந்த வசனமே, விதவிதமான ரத்தினங்களைவிடவும், தேவராஜ்யத்தைவிடவும் மேன்மையானது.(23ஆ,24அ) சத்ருவைக் கொன்று விஜயமடைந்த ராமர் நல்ல நிலையில் இருப்பதை நான் பார்க்கிறேன். இது தேவராஜ்ஜியத்தையும், பிற குணங்களையும் நான் அடைந்துவிட்டேன் என்பதன் அர்த்தமாகும்" {என்றான் ஹனுமான்}.(24ஆ,25அ)

ஜனகாத்மஜையான மைதிலி, அவனது அந்த வசனத்தைக் கேட்ட பிறகு, பவனாத்மஜனிடம் {வாயு மைந்தன் ஹனுமானிடம்} சுபமான இந்த வாக்கியத்தைச் சொன்னாள்:(25ஆ,26அ) "அதிலக்ஷணங்கள் நிறைந்தவையும், மாதுர்ய {இனிய} குணங்களால் அலங்கரிக்கப்பட்டவையும், அஷ்டாங்கங்களுடன்[3] கூடிய புத்திக்குப் பொருத்தமானவையுமான இவற்றைச் சொல்ல நீயே தகுந்தவன்.(26ஆ,27அ) நீ சிலாகிக்கத்தகுந்தவன், பரதார்மிகன், அநிலனின் சுதன் {வாயுவின் மகன்}.{27ஆ} பலம், சௌரியம் {துணிவு}, ஷ்ருதம் {கேள்விஞானம் / சாத்திர அறிவு}, சத்வம் {வலிமை / ஆற்றல்}, விக்ரமம் {திறன்}, உத்தம தாக்ஷியம் {தர்மநெறி வழுவாதிருத்தல்}, தேஜஸ், பொறுமை, விடாமுயற்சி, ஸ்திரத்தன்மை, பணிவு {ஆகியவை உன்னிடம் இருக்கின்றன} இதில் சந்தேகமில்லை.{28} இவையும் இன்னும் பிறவு எண்ணற்ற சோபன குணங்களும் உன்னிடமே இருக்கின்றன" {என்றாள் சீதை}. (27ஆ,29அ)

[3] தர்மாலயப் பதிப்பின் அடிக்குறிப்பில், "கிரகணம், தரணம், ஸ்மரணம், பிரதிபாதனம், ஊஹம், அபோஹம், அர்த்தவிஞ்ஞானம், தத்வக்ஞானம் என" என்றிருக்கிறது. தேசிராஜு ஹனுமந்தராவ்-கேஎம்கே மூர்த்தி பதிப்பின் அடிக்குறிப்பில், "1)பொருளைக் குறித்துச் சொல்வதைக் கேட்கும் ஆர்வம், 2) அவ்வாறு சொல்வதைக் கேட்க தயாராக இருத்தல், 3) ஏற்றுக்கொள்ளும் தன்மை, 4) {மனத்தில்} தக்கவைக்கும் சக்தி 5) ஒரு கருத்துக்கு ஆதரவாகவும், 6) எதிராகவும் பகுத்து உணர்ந்தல், 7) புரிந்து கொள்ளும் திறன், உண்மையை அறிதல். நீதி சார கமண்டகத்தின் கூற்றுப்படி, சம்ஸ்கிருத உரையாசிரியர்களால் அடிக்கடி மேற்கோள் காட்டப்படும் நற்புத்தியின் எட்டு குணங்கள் இவை ஆகும். "{1}ஷு²ஷ்²ருஷா  {2}ஷ்²ரவணம் சைவ {3}க்⁴ருஹணம் {4}தா⁴ரணம் ததா² {5}ஊஹோ {6}அபேஹோ {7}அர்த²விஜ்ஃஜ்னானம் {8}தத்த்வஜ்ஞானம் ச தீ⁴கு³ணா꞉ " {என்பது இதன் மூலம்}" என்றிருக்கிறது. மஹாபாரதம் வனபர்வம் பகுதி 2ன் 1ம் அடிக்குறிப்பில், "கேட்டுக் கொள்ள விருப்பம், கேட்டல், புரிந்து கொள்ளுதல், உபயோகித்தல், ஊகித்தல், தீயவை விலக்குதல், பொருளை நன்கு உணர்தல், உண்மையை அறிதல் ஆகிய எட்டுக் குணங்கள்" என்றிருக்கிறது. 

அப்போது, சீதையின் முன் கூப்பிய கைகளுடன் மகிழ்ச்சியாக நின்றவன், குழப்பமேதும் இல்லாமல் பணிவுடன் மீண்டும் சீதையிடம் {பின்வருமாறு} சொன்னான்:(29ஆ,30அ) "நீ அனுமதித்தால், உண்மையில் எந்த ராக்ஷசிகள் பூர்வத்தில் உன்னை அச்சுறுத்தினார்களோ, அவர்கள் அனைவரையும் இப்போதே நான் கொல்ல விரும்புகிறேன்.(30ஆ,31அ)

பதியையே தேவனாகக் கொண்ட நீ, அசோக வனத்தில் துன்புற்றுக் கொண்டிருந்தபோது,{31} கோர ரூபங்களையும், சமாசாரங்களையும், குரூரக் கண்களையும் கொண்டவர்களும், குரூரர்களும்,  விகார முகங்களையும் கொண்டவர்களுமான ராக்ஷசிகள் சொல்வதை, தேவி, இங்கே நான் கேட்டிருக்கிறேன்.{32} இராவணனின் ஆணையின் பேரில் அருவருப்பான நடத்தையுடன் கடும் வாக்கியங்களைப் பேனார்கள்.(31ஆ-33அ) குரூரக் கண்களையும், தலைமுடிகளையும், சிதைந்த வடிவங்களையும், விகார நடத்தையையும் கொண்டவர்களான{33ஆ} இந்தக் குரூர்களை விதவிதமான அறைகளால் கொல்ல விரும்புகிறேன். பயங்கரமாகப் பேசிய ராக்ஷசிகளுக்கான இந்த வரத்தை எனக்குக் கொடுக்குமாறு வேண்டுகிறேன்.(33ஆ,34அ,ஆ) முஷ்டிகள், கைகள் ஆகியவற்றையும், சோபனமான சரணங்களையும் {அழகான கால்களையும்} கொண்டு, கைகளால் குத்தி, முழங்கால்களால் உதைத்து, பற்களை உடைத்து,{35} காதுகளையும், நாசிகளையும் கடித்து, அதே போல கேசங்களைப் பிடுங்கி, கடின முனையைக் கொண்ட நகங்களால் கீறி, மேல் விழுந்து தாக்கி,{36} சங்கு {தொண்டை}, கிரீவம் {கழுத்து}, பார்ஷ்வம் {பக்கவாட்டுகள்}, தோள்கள், விலா எலும்புகள் ஆகியவற்றைச் சிதைத்து, விப்ரியகாரிணிகளை {உனக்குப் பிடிக்காத செயலைச் செய்தவர்களைக்} கீழே வீழ்த்தி நான் கொல்ல விரும்புகிறேன்.(35-37) புகழ்பெற்றவளே, பூர்வத்தில் எந்தத் தீவிர ரூபர்களால் அச்சுறுத்தப்பட்டாயோ, அவர்களை இவ்வாறு ஏராளமான அறைகளால் தாக்கிக் கொல்லப் போகிறேன்" {என்றான் ஹனுமான்}.(38)


Man bear and tiger
ஹனுமதன் இவ்வாறு சொன்னபோது, நினைவு கூர்ந்து சிந்திப்பவளைப் போல, தீனவத்சலையான {தீனமானவர்களிடம் அன்புகாட்டும்} அந்தக் கிருபையுடையவள், ஹனுமதனிடம் இதைச் சொன்னாள்:(39) "வானரோத்தமா, ராஜனின் ஆணைக்கு வசப்பட்டவர்களும், பிறருக்கு அடங்கி, விதிக்கப்பட்ட பணியைச் செய்பவர்களுமான தாசிகளிடம் {பணிப்பெண்களிடம்} யார் கோபமடைவார்கள்?(40) பாக்கியவச தோஷத்தினாலோ, பூர்வத்தில் நான் செய்த தீங்கினாலோ இவை யாவையும் என்னால் அடையப்பட்டது. நம் வினையின் பலனே அனுபவிக்கப்படுகிறது.(41) மஹாபாஹோ, இவ்வாறு பேசக்கூடாது. இது தைவம் தரும் பர கதியாகும் {விதியின் மிக உயர்ந்த உத்தியாகும் / தெய்வீகத்தின் உச்ச இலக்காகும்}. தசாயோகத்தால் என்னால் இஃது அடையப்பட்ட வேண்டும் என்பது நிச்சயிக்கப்பட்டிருந்தது. பலமழிந்தவளான நான் இங்கே ராவணனின் தாசிகளை {பணிப் பெண்களை} மன்னிக்கிறேன்.(42,43அ) மாருதாத்மஜா {மாருதனின் மைந்தனான ஹனுமானே}, இங்கே ராக்ஷசனின் ஆணைப்படி ராக்ஷசிகள் என்னை அச்சுறுத்தினர். அவன் கொல்லப்பட்டதால் இனி அச்சுறுத்தமாட்டார்கள்.(43ஆ,44அ) பிலவங்கமா, வியாகரத்தின் சமீபத்தில் ரிக்ஷத்தால் கீதம் செய்யப்பட்ட, தர்ம சம்ஹிதமான  புராண சுலோகத்தை {புலியின் முன்னிலையில் கரடியால் பாடப்பட்டதும்[4], தர்மத்திற்கு இணக்கமானதுமான பழைய பாடலை} இப்போது உனக்குச் சொலங்கிறேன்.(44ஆ,45அ) 

[4] முற்காலத்தில் ஒரு புலி, ஒரு வேட்டைக்காரனை விரட்டிச் சென்றது. அவன் ஒரு மரத்தில் ஏறினான். ஏற்கனவே அந்த மரத்தில் ஒரு கரடியும் இருந்தது. அப்போது அந்தப் புலி, அந்த மரத்தின் அடிவாரத்திற்குச் சென்று, "இதோ பார். நாம் இருவரும் காட்டுவாசிகள். இந்த வேட்டைக்காரன் நமக்குப் பொது எதிரியாவான். எனவே, அவனை மரத்திலிருந்து கீழே தள்ளிவிடுவாயாக" என்றது. எனினும் அந்தக் கரடி, "என் வசிப்பிடத்தை அடைந்து ஒருவகையில் இந்த வேட்டைக்காரன் என் அடைக்கலத்தை நாடியிருக்கிறான். எனவே, நான் இவனைக் கீழே தள்ளிவிட மாட்டேன். அவ்வாறு செய்தால் நான் கடமையில் இருந்து விலகியவனாவேன்" என்றது. இவ்வாறு சொல்லி விட்டு அந்தக் கரடி தூங்கச் சென்றது. அப்போது அந்தப் புலி வேட்டைக்காரனிடம், "கரடியைக் கீழே தள்ளிவிடு. நான் உனக்குப் பாதுகாப்பு அளிப்பேன்" என்றது. பிறகு அந்த வேட்டைக்காரன், தூங்கிக் கொண்டிருந்த கரடியைக் கீழே தள்ளிவிட்டான். இருப்பினும், கரடி மற்றொரு கிளையைப் பற்றிக் கொண்டு, கீழே விழாமல் தப்பித்து. புலி இப்போது கரடியிடம் வேண்டும் வகையில், "வேட்டைக்காரன் உன்னைக் கீழே தள்ள முயன்று உனக்குத் தீங்கு செய்திருக்கிறான். எனவே அவனைக் கீழே தள்ளிவிடு" என்றது. புலி இவ்வாறு மீண்டும் மீண்டும் தூண்டினாலும், கரடி அவனைக் கீழே தள்ளிவிட மறுத்தது. இங்கே மேற்கோள் காட்டப்படும் பின்வரும் சுலோகத்தைச் சொல்லி அவனது மனப்பான்மையை ஆதரித்தது" என்றிருக்கிறது. இந்தக் கதை ராமாயண காலத்திற்கு வெகு பின்னர் வந்த ஹிதோபதேசம், மற்றும் பஞ்சதந்திரக் கதைகளிலும் காணக்கிடைக்கிறது. "கரடியா கத்துறேன்" என்று எரிச்சலான தொனியில் அழைக்கும் எவரையும் நாம் கண்டிருப்போம். எவ்வளவு நல்லது செய்தாலும், இவர்கள் செய்வதைத் தானே செய்து கொண்டிருக்கிறார்கள் என்ற விரக்தியான மனநிலையைக் குறிப்பதற்கு இப்படிச் சொல்லப்படுகிறது. இதற்கும் ராமாயணத்தின் இந்தக் கரடியின் கீதத்திற்கும் ஏதேனும் தொடர்பிருக்கக்கூடும். 

"உயர்ந்தவர்கள், பிறரின் {பகைவரின்} பாபத்தை கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. சமயங்கள் ரக்ஷிக்கப்பட வேண்டும் {நன்னெறிகளே பாதுகாக்கப்பட வேண்டும்}. சந்தர்கள் சாரித்ரத்தையே பூஷணமாகக் கொள்வார்கள் {நல்லவர்கள் நன்னடத்தையையே அலங்காரமாகக் கொள்வார்கள்" என்றது கரடி}.(45ஆ,46அ) 

பாபிகளோ, சுபவான்களோ, பிலவங்கமா {தாவிச் செல்பவனே}, வதத்திற்கே தகுந்தவர்களாக இருந்தாலும் ஆரியர்களுக்கு காருண்யமே காரியம் {ஆரியர்களால் கருணையே காட்டப்பட வேண்டும்}. குற்றமிழைக்காதவர்கள் எவரும் இல்லை.(46ஆ,47அ) உலகத்தாரை ஹிம்சிப்பதில் மகிழ்ந்து, பாபங்களைச் செய்யும் காமரூபிகளான ராக்ஷசர்களுக்கும் கூட அசோபன காரியம் {விரும்பத்தகாத தீங்கு} செய்யப்படக்கூடாது" {என்றாள் சீதை}.(47ஆ,48அ)

சீதையால் இவ்வாறு சொல்லப்பட்டபோது, வாக்கிய கோவிதனான ஹனுமான், ராமபத்தினியும், புகழ்பெற்றவளுமான சீதையின் {பின்வரும்} மறுமொழியைக் கூறினான்:(48ஆ,49அ) "தேவி, புகழ்பெற்றவளான நீயே ராமருக்கு ஏற்ற தர்மபத்தினியாவாய். எனக்கு மறுமொழியளித்து விடைதருவாயாக. நான் ராகவர் எங்கிருக்கிறாரோ, அங்கே செல்லப்போகிறேன்" என்றான்.(49ஆ,50அ)

ஹனுமதனால் இவ்வாறு சொல்லப்பட்டதும், ஜனகாத்மஜையான அந்த வைதேஹி,  "வானரோத்தமா, என் பர்த்தாவை {கணவரைக்} காண நான் விரும்புகிறேன்" என்று கூறினாள்.(50ஆ,51அ) 

மஹாமதி படைத்த மாருதாத்மஜன், அவளது அந்த வசனத்தைக் கேட்டு, மைதிலிக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் இந்த வாக்கியத்தைச் சொன்னான்:(51ஆ,52அ) "சசி {கண்ட} திரிதசேஷ்வரனை{இந்திரனைப்} போல, மித்ரர்கள் நிலைத்தவரும், அமித்ரர்கள் அழிந்தவரும், லக்ஷ்மணனுடன் கூடியவரும், பூர்ணச் சந்திரனின் முகத்தைக் கொண்டவருமான ராமரை இன்று பார்ப்பாய்" {என்றனான் ஹனுமான்}.(52ஆ,53அ)

மஹாவேகம் கொண்ட ஹனூமான், சாக்ஷாத் ஸ்ரீயைப் போன்று ஒளிர்பவளான அவளிடம் இடைச் சொல்லிவிட்டு ராகவன் எங்கே இருந்தானோ, அங்கே சென்றடைந்தான்.(53ஆ,54அ) பிறகு, ஹரிவரனான {குரங்குகளில் சிறந்தவனான} ஹனூமான், ஜனகேஷ்வராத்மஜை சொன்ன ஒவ்வொரு வசனத்தையும், கிரமத்தின்படியே அடுத்தடுத்து திரிதசவரனுக்கு {தேவர்களில் சிறந்த இந்திரனுக்கு} ஒப்பான ராகவனிடம் மறுபடியும் சொன்னான்.(54ஆ,இ)

யுத்த காண்டம் சர்க்கம் – 113ல் உள்ள சுலோகங்கள்: 54

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஜாமுகீ அஞ்சனை அதிகாயன் அத்ரி அனசூயை அனலை அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவித்தர் அவிந்தியன் அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரஜித் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் கருடன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் கும்பன் குஹன் கேசரி கேசினி கைகசி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சரமை சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுனசேபன் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி சோணிதாக்ஷன் ஜடாயு ஜனகன் ஜம்புமாலி ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் தசரதன் ததிமுகன் தனு தர்ம்பிருதர் தாடகை தான்யமாலினி தாரன் தாரை திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூம்ராக்ஷன் தூஷணன் தேவாந்தகன் நந்தி நராந்தகன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பனஸன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரஜங்கன் பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மகராக்ஷன் மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மஹோதரன் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மால்யவான் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷபன் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை வித்யுஜ்ஜிஹ்வன் வினதன் வினதை விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹனுமான் ஹரிஜடை ஹிமவான் ஹேமை