The fear of Sita | Yuddha-Kanda-Sarga-092 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: இந்திரஜித்தின் மரணத்தால் துக்கமடைந்து, சீதையைக் கொல்லப் புறப்பட்ட ராவணன்; அந்தக் கொடுஞ்செயலைச் செய்வதிலிருந்து ராவணனை தடுத்த சுபார்ஷ்வன்...
பௌலஸ்தியனின் {புலஸ்தியர் வழிவந்த ராவணனின்} அமைச்சர்கள், இந்திரஜித்தின் வதத்தைக் கேட்டபோது, அதை உறுதி செய்து கொண்டு தசக்ரீவனிடம் {பத்துக் கழுத்துகளைக் கொண்ட ராவணனிடம் பின்வருமாறு} தெரிவித்தனர்:(1) "மஹாராஜாவே, பெரும் மகிமை பொருந்திய உமது மகன் {இந்திரஜித்}, யுத்தத்தை நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே விபீஷணரின் சகாயத்துடன் கூடிய லக்ஷ்மணனால் கொல்லப்பட்டார்.(2) சூரரும், போர்களில் அபராஜிதரும், விபுதேந்த்ரஜித்துமான உமது புத்திரர் {போர்களில் வெல்லப்பட முடியாதவரும், தேவர்களின் தலைவனை வென்றவருமான உமது மகன் இந்திரஜித்}, சூரனான லக்ஷ்மணனுடன் போரிட்டதில் கொல்லப்பட்டார்.{3} தன் சரங்களால் லக்ஷ்மணனைத் துன்புறுத்திய அவர், பரமலோகத்தை அடைந்துவிட்டார்" {என்றனர்}.(3,4அ)
அவன், தன் புத்திரன் இந்திரஜித்தைக் குறித்ததும், பயத்தை விளைவிக்கவல்லதும், பயங்கரமானதும், கோரமானதுமான அந்த வதத்தைக் கேட்டு மஹத்தான கஸ்மலத்தை அடைந்தான் {பெரும் மூர்ச்சை அடைந்தான்}.(4ஆ,5அ) இராக்ஷசபுங்கவனான ராஜா {ராவணன்}, நீண்ட நேரத்திற்குப் பிறகு சுயநினைவை அடைந்து, இந்திரியங்கலங்கி, தீனனாகி, புத்திர சோகத்தில் மூழ்கி, {பின்வருமாறு} புலம்பினான்:(5ஆ,6அ) "ஹா, ராக்ஷசசம்முமுக்கியனே, என் வத்ஸா {குழந்தாய்}, மஹாபலவானே, இந்திரனையே வென்றவனான நீ எப்படி இப்போது லக்ஷ்மணனின் வசத்தை அடைந்தாய்?(6ஆ,7அ) குரோதமடைந்தால் யுத்தத்தில் காலாந்தகர்களையும், மந்தரத்தின் சிருங்கங்களையும் {மந்தர மலைச் சிகரங்களையும்} உன் கணைகளால் பிளந்துவிடுவாயே. இலக்ஷ்மணனைக் குறித்து என்ன சொல்ல?(7ஆ,8அ) மஹாபாஹோ, இப்போது எவனால் நீ காலதர்மத்திற்குக் கட்டுப்பட்டாயோ, அந்த வைவஸ்வத ராஜன் {யமன்} எனக்கு பெரும் மதிப்புக்குரியவன் ஆனான்.(8ஆ,9அ)
சர்வ அமர கணங்களிலும் இதுவே போர்வீரர்களுக்கான பாதையாகும். எவன் தலைவனுக்காகக் கொல்லப்படுகிறானோ, அந்த புமான் {ஆடவன்} ஸ்வர்க்கத்தை அடைகிறான்.(9ஆ,10அ) இந்திரஜித் கொல்லப்பட்டதைக் கண்ட சர்வ தேவகணங்களும், லோகபாலர்களும், மஹரிஷிகளும் இனி நிர்பயமாக {பயமின்றி}, சுகமாக உறங்குவார்கள்.(10ஆ,11அ) ஏகனான {தனியொருவனான} இந்திரஜித் இல்லாமல், கானகங்கள் உள்ளிட்ட மொத்த பிருத்வியும், ஏன் திரிலோகங்களும் கூட எனக்கு சூனியமாக {வெறுமையாகத்} தெரிகின்றன.(11ஆ,12அ) கிரிகளின் குகைகளில் கரேணு சங்கத்தின் {மலைக்குகைகளில் பெண் யானைக் கூட்டத்தின்} நாதம் எப்படியோ, அப்படியே இனி அந்தப்புரத்தில் நைர்ருத கன்னிகையரின் கதறல் கேட்கப் போகிறது.(12ஆ,13அ)
பரந்தபா {பகைவரை அழிப்பவனே, இந்திரஜித்}, யௌவராஜ்ஜியத்தையும் {இளவரசுப் பட்டத்தையும்}, லங்கையையும், ராக்ஷசர்களையும், மாதாவையும், என்னையும், உன் பாரியையையும் {மனைவியையும்}, எங்களையும் விட்டு எங்கே சென்றுவிட்டாய்?(13ஆ,14அ) வீரா, நான் யமசாதனமடைந்தால் {யமபுரியை அடைந்தால்} என் பிரேத காரியங்கள் உன்னால் செய்யப்பட வேண்டும். அதை விபரீதமாகச் செய்துவிட்டாய் {நேற்மாறாக நான் உனக்குப் பிரேத காரியங்களைச் செய்யும் நிலைக்குத் தள்ளிவிட்டாய்}.(14ஆ,15அ) சுக்ரீவன், லக்ஷ்மணன், ராகவன் ஆகியோர் ஜீவித்திருக்கையில் என் சல்லியத்தை {முள் போன்ற என் வேதனையை} அகற்றாமல் எங்களை விட்டு எங்கே சென்றுவிட்டாய்?" {என்று ராவணன் அழுது புலம்பினான்}.(15ஆ,16அ)
இவ்வாறு பெரும்புலம்பலில் அவதிப்பட்ட ராக்ஷசாதிபன் ராவணனுக்குள் புத்திர விசனத்தில் பிறந்த பெருங்கோபம் நுழைந்தது.(16ஆ,17அ) கோடையில் ஒளிரும் அர்க்கனை கதிர்கள் {சூரியனை அதன் கதிர்கள் எரிப்பது} எப்படியோ, அப்படியே இயல்பிலேயே கோபம் கொண்டவனான அவனை புத்திரனால் உண்டான வருத்தங்கள் மேலும் எரித்தன.(17ஆ,18அ) நெற்றியில் ஒன்று சேர்ந்த புருவ நெரிப்புகளுடன்[1] யுகாந்தத்தில் முதலைகளுடனும், பேரலைகளுடனும் கூடிய உததியை {பெருங்கடலைப்} போல அவன் ஒளிர்ந்து கொண்டிருந்தான்.(18ஆ,19அ) கோபத்தில் கொட்டாவி விட்டபோது, விருத்ரனின் வாயில் வெளிப்பட்டது போல, அவனது வாயில் இருந்து தூமத்துடன் கூடிய அக்னி {புகையுடன் கூடிய நெருப்பு} உதித்து எரிவது தெளிவாகத் தெரிந்தது.(19ஆ,20அ) சூரனான அந்த ராவணன், புத்திர வத சந்தாபத்தால் குரோதவசமடைந்து, புத்தியில் ஆலோசித்து, வைதேஹியை வதம் செய்வதெனத் தீர்மானித்தான்.(20ஆ,21அ)
[1] நரசிம்மாசாரியர் பதிப்பில், "அப்போது ராவணன் பத்து முகங்களிலும் நெற்றியில் புருவநெரிப்புகள் ஒன்றின்மேலொன்று வரிசையாக உண்டாகப் பெற்று ப்ரளயகாலத்தில் முதலைகள் மேலெழப்பெற்ற பேரலைகள் நிறைந்த ஸமுத்ரம் போல் பிரகாசித்தனன்" என்றிருக்கிறது.
இயல்பிலேயே சிவந்த மஹாகோரமான நேத்திரங்கள் {கண்கள்}, அந்த ராவணனின் குரோதாக்னியில் மேலும் சிவந்து ஒளிர்வதாகத் தெரிந்தன.(21ஆ,22அ) இயல்பிலேயே கோரமான அவனது அந்த ரூபம், குரோதாக்னியால் மூர்ச்சிக்கையில், குரோதத்துடன் கூடிய ருத்திரனைப் போல அணுகுதற்கரியதானது.(22ஆ,23அ) தழல்களுடன் எரியும் விளக்குகளில் இருந்து எண்ணெய்த் துளிகளைப் போல, குரோதமடைந்த அவனது நேத்திரங்களில் இருந்து கண்ணீர்த் துளிகள் விழுந்தன.(23ஆ,24அ) பற்களைக் கடிக்கும் அவனது பற்களின் ஒலி, தானவர்களால் சுழற்றப்படும் யந்திரத்தின் ஒலியைப் போலக் கேட்டது.(24ஆ,25அ) காலாக்னியைப் போல குரோதத்துடன் அவன் எந்தெந்த திசையைப் பார்க்கிறானோ, ஆங்காங்கே இருந்த ராக்ஷசர்கள் பயத்தால் நடுங்கியவாறு தங்களை மறைத்துக் கொண்டனர்.(25ஆ,26அ) குரோதமுடைய அந்தகனைப் போல், சராசரங்களை {அசைவனவற்றையும், அசையாதனவற்றையும்} மென்று தின்றுவிடுபவனைப் போல, சர்வ திசைகளையும் பார்த்துக் கொண்டிருந்த அவனை ராக்ஷசர்களும் அணுகவில்லை.(26ஆ,27அ)
அப்போது, பரமக் குரோதமடைந்த ராக்ஷசாதிபன் ராவணன், ராக்ஷசர்களைப் போரிடத் தூண்டும் வகையில் அவர்களின் மத்தியில் {பின்வருமாறு} கூறினான்:(27ஆ,28அ) "ஆயிரம் வருடங்கள் பரம தபம் செய்திருந்த அந்தந்த அவகாசங்களில் {இடைவெளிகளில்} நான் ஸ்வயம்பூவை {பிரம்மனை} நிறைவடையச் செய்தேன்.(28ஆ,29அ) அந்த தபத்தின் விளைவாலும், ஸ்வயம்பூவின் அருளாலும் எனக்கு ஒருபோதும் அசுரர்களிடமோ, தேவர்களிடமோ பயம் {ஆபத்து} கிடையாது.(29ஆ,30அ) பிரம்மனால் தத்தம் செய்யப்பட்டதும், ஆதித்யனுக்கு {சூரியனுக்குச்} சமமான பிரபையுடன் கூடியதுமான கவசம் எதுவோ, அது தேவாசுரப் போர்களில் அவர்களின் வஜ்ரம்போன்ற முஷ்டிகளாலும் பிளக்கப்படவில்லை.(30ஆ,31அ) சாக்ஷாத் இந்திரனேயானாலும், இதைப் பூண்டு ரதத்தில் வீற்றிருக்கும் என்னை, இப்போது இந்தப் போர்க்களத்தில், எவன் தாக்குவான்?(31ஆ,32அ) பேரருளால் விளைந்ததும், சரத்துடன் கூடியதும், மஹத்தானதுமான எந்தக் கார்முகம் {வில்},{32ஆ} ஸ்வயம்பூவால் {பிரம்மனால்} தேவாஸுரப் போரில், எனக்கு தத்தம் செய்யப்பட்டதோ, அந்தப் பயங்கர தனுவைத் தூரிய வாத்தியங்களுடன் இப்போதே கொண்டு வருவீராக.{33} {அதைக் கொண்டே} கடும்போரில் ராமலக்ஷ்மணர்களை வதைக்கப் போகிறேன்" {என்றான் ராவணன்}.(32ஆ-34அ)
குரூரனான அந்த ராவணன், புத்திர வத சந்தாபத்தால் குரோத வசமடைந்து, புத்தியால் ஆலோசித்து சீதையைக் கொல்லத் தீர்மானித்தான்[2].(34ஆ,35அ) தீன ஸ்வரமெழுப்பிய {தழுதழுத்த குரலில் பேசிய} அந்த சர்வ நிசாசரர்களையும் {இரவுலாவிகளையும்} சிவந்த கண்களுடன் நிலையாகப் பார்த்தவனும், கோரமாகத் தெரிபவனுமான அந்த கோரன் {ராவணன்}, தீனனாக {பின்வருமாறு} சொன்னான்:(35ஆ,36அ) "வனௌகசர்களை வஞ்சிப்பதற்காக, மாயையைப் பயன்படுத்தி அங்கே ஏதோவொன்றை வதைத்து, "இவளே சீதை" என்று என் வத்சன் {என் குழந்தை இந்திரஜித்} காட்டினான்.(36ஆ,37அ) அத்தகையதை நான் உண்மையாகவே ஆக்கிவிடுகிறேன். அதுவே எனக்குப் பிரியமானது.{37ஆ} க்ஷத்ரபந்துவின் அனுவிரதையான வைதேஹியை நாசம் செய்யப் போகிறேன் {க்ஷத்திரியப் பதரான ராமனிடம் பக்தியுடைய சீதையை நான் கொல்லப் போகிறேன்}" என்றிவ்வாறு அமைச்சர்களிடம் சொல்லிவிட்டு, வேகமாகத் தன் கட்கத்தை {வாளைக்} கையில் எடுத்தான்.(37ஆ,38அ,ஆ) குணம்பொருந்தியதும், தெளிவான வானம் போல் ஒளிர்வதுமான அதை {வாளை} எடுத்துக் கொண்டு துள்ளிக் குதித்து, சபையிலிருந்த அமைச்சர்கள் சூழ வேகமாகப் புறப்பட்டுச் சென்றான்.{39} புத்திர சோகத்தால் பெரிதும் உள்ளங்கலங்கிய ராவணன், பெருங்குரோதம் கொண்டவனாக மைதிலி எங்கிருந்தாளோ, அங்கே கட்கத்துடன் விரைந்து சென்றான்.(39,40)
[2] சுலோகம் 21ல் விட்டதிலிருந்து இங்கே தொடர்வதாகத் தெரிகிறது. சுலோகம் 21ல் சீதையைக் கொல்லத் தீர்மானித்த ராவணன், அந்த சுலோகத்தில் இருந்து 34ம் சுலோகம் வரை ராமலக்ஷ்மணர்களைக் கொல்வதற்கு வில்லை எடுத்து வாருங்கள் என ஆணையிட்டுவிட்டு, இங்கே 35ம் சுலோகத்தில் மீண்டும் சீதையைக் கொல்லத் தீர்மானிக்கிறான்.
இராவணன் செல்வதைக் கண்டு அவர்கள் சிம்மநாதம் செய்தனர். இராவணன் குரோதமடைந்ததைக் கண்டு அன்யோன்யம் ஆலிங்கணம் செய்து {ஒருவரையொருவர் தழுவிக் கொண்டு, பின்வருமாறு} பேசினர்:(41) "அந்தப் பிராதாக்கள் {சகோதரர்களான ராமலக்ஷ்மணர்கள்} இருவரும், இப்போது குரோதத்துடன் கூடிய இவரைக் கண்டு கலக்கமடையப் போகிறார்கள். லோகபாலர்கள் நால்வரும் இவரால் {ஏற்கனவே} அச்சமடைந்திருக்கின்றனர். போர்களில் பிற சத்ருக்கள் பலரும் வீழ்த்தப்பட்டிருக்கிறார்கள்.(42,43அ) இராவணர் திரிலோகங்களிலும் உள்ள ரத்தினங்களை {சிறந்த பொருள்களைக்} கொண்டு வந்து அனுபவிக்கிறார். விக்ரமத்திலும், பலத்திலும் புவியில் இவருக்கு நிகரானவர் எவருமில்லை" {என்றனர்}.(43ஆ,44அ)
அவர்கள் இவ்வாறு பேசிக் கொண்டிருந்தபோதே, குரோதத்தில் மூர்ச்சித்த ராவணன், அசோகவனிகையில் இருந்த வைதேஹியை நோக்கி விரைந்து சென்றான்.(44ஆ,45அ) ஹிதபுத்தி கொண்ட {நலம் விரும்பும்} நண்பர்கள் தடுத்தபோதும், வானத்தில் ரோஹிணியை {நோக்கி விரையும்} குரோதங்கொண்ட கிரஹத்தை {செவ்வாய்க் கோளைப்} போல, அவன் பெருங்கோபத்துடன் விரைந்து சென்றான்.(45ஆ,46அ)
இராக்ஷசிகளால் ரக்ஷிக்கப்பட்டவளும், அநிந்தையுமான {நிந்திக்கப்படத் தகாதவளுமான} மைதிலி, குரோதத்துடன் சிறந்த வாளைத் தரித்து வரும் ராக்ஷசனைக் கண்டாள்.(46ஆ,47அ) நண்பர்களால் பலவாறு தடுக்கப்பட்டும் திரும்பிச் செல்லாமல் கத்தியுடன் வரும் அவனைக் கண்டு, ஜனகாத்மஜை {ஜனகனின் மகளான சீதை} கலக்கமடைந்தாள்.(47ஆ,48அ) துக்கத்தில் நிறைந்த சீதை, புலம்பியவாறே {தனக்குள்ளேயே} இவ்வாறு கூறிக்கொண்டாள்,{48ஆ} "துர்மதி கொண்ட இவன் பெருங்குரோதத்துடன் தானே என்னை நோக்கி எப்படி விரைந்து வருகிறானோ, அப்படியே நாதன் உள்ளவளான என்னை அநாதையை {நாதனற்றவளைப்} போல கொல்லப் போகிறான்.(48ஆ,49அ,ஆ) பர்த்தாவின் அனுவிரதையான {கணவனிடம் பக்தி கொண்டவளான} என்னை, "நீ என் பாரியை ஆவாயாக" என்று பலவாறு தூண்டினான். என்னால் திடமாகப் புறக்கணிக்கப்பட்டான்.{50} அத்தகையவன், என்னை அடைய முடியாத நிராசையிலும், குரோதம், மோஹம் {மடமை} ஆகியவற்றால் நிறைந்தும் என்னைக் கொல்வதையே நோக்கமாகக் கொண்டிருக்கிறான் என்பது தெளிவாகத் தெரிகிறது.(50,51)
அல்லது, பிராதாக்களும், நரவியாகரர்களுமான {உடன் பிறந்தவர்களும், மனிதர்களில் புலிகளுமான} அந்த ராமலக்ஷ்மணர்கள் இருவரும், இன்று என் நிமித்தம் சமரில் இந்த அநாரியனால் வீழ்த்தப்பட்டிருக்கலாம்.(52) பிரியத்திற்குரிய நிகழ்வில் மகிழ்ச்சியடைந்து பெரும் முழக்கம் செய்த ஏராளமான ராக்ஷசர்களின் மஹாநாதம் இங்கே கேட்கப்பட்டது.(53) அஹோ, என் நிமித்தம் ராஜபுத்திரர்கள் இருவரும் இவ்வாறான அழிவைச் சந்தித்திருந்தால் எனக்கு ஐயோ. அல்லது, ரௌத்திரனும், பாபநிச்சயம் கொண்டவனுமான ராக்ஷசன், ராமலக்ஷ்மணர்கள் இருவரையும் கொல்ல முடியாததாலும், புத்திர சோகத்தினாலும் என்னைக் கொல்லக்கூடும்.(54,55அ) க்ஷூத்ரையான {இழிந்தவளான} நான், ஹனூமதனின் அந்த வாக்கியத்தின்படி செயல்படவில்லை.{55ஆ} வென்று மீட்கப்படாதவளாயினும், அப்போதே அவன் பிருஷ்டத்தில் {பின்னால் ஏறி} நான் சென்றிருந்தால், இப்போது என் பர்த்தாவின் அங்கத்தில் {மடியில்} அமர்ந்திருப்பேனேயன்றி இவ்வாறு துன்புற்றிருக்கமாட்டேன்.(55ஆ,56அ,ஆ)
ஏகபுத்திரரான இந்த புத்திரர் {ஒரே மகனான இந்த ராமர்} யுத்தத்தில் அழிந்தாரெனக் கேட்டால், கௌசல்யையின் ஹிருதயம் வெடித்துவிடும் என்றே நினைக்கிறேன்.(57) அவள் அழுதுகொண்டே அந்த மஹாத்மாவின் {ராமரின்} ஜன்மத்தையும் {பிறப்பையும்}, பால்யத்தையும் {குழந்தைப் பருவத்தையும்}, யௌவனத்தையும் {இளமைப் பருவத்தையும்}, தர்ம காரியங்களையும், ரூபத்தையும் நிச்சயம் நினைவில் கொள்வாள்.(58) புத்திரன் கொல்லப்பட்டதில் நனவிழந்து நிராசையுடன் சிராத்தம் அளித்ததும், நிச்சயம் அக்னியில் எரிந்துபோவாள், அல்லது நீரில் பிரவேசிப்பாள்.(59) எவள் நிமித்தமாக கௌசல்யை இந்த சோகத்தை அடையப் போகிறாளோ, அத்தகைய பாப நிச்சயத்துடன் கூடியவளும், குப்ஜையும் {கூன் முதுகைக் கொண்டவளும்}, அசதீயுமான {தூய்மையற்றவளுமான} மந்தரைக்கு ஐயோ" {என்றாள் சீதை}.(60)
இவ்வாறு {அழுது} புலம்பிக் கொண்டிருந்தவளும், தபஸ்வினியும், சந்திரனில்லாதபோது கிரஹவசமடைந்த ரோஹிணியைப் போன்றவளுமான அந்த மைதிலியைக் கண்டு,{61} சீலவானும், தூய்மையானவனும், மேதாவியும், சுபார்ஷ்வன் என்ற நாமத்தை {பெயரைக்} கொண்டவனுமான ராவணனின் மந்திரி, பிற அமைச்சர்களால் தடுக்கப்பட்டும், ராக்ஷசர்களில் சிறந்த அவனிடம் {பின்வரும்} இந்த வசனத்தைக் கூறினான்.(61-63அ) "சாக்ஷாத் வைஷ்ரவணானுஜரான தசக்ரீவரே {குபேரனின் தம்பியும், பத்துக் கழுத்துகளைக் கொண்டவருமான ராவணரே}, குரோதத்தில் தர்மத்தைக் கைவிட்டு வைதேஹியை கொல்ல விரும்புகிறீரே, எப்படி?(63ஆ,64அ) வீர ராக்ஷசேஷ்வரரே, வேத, வித்யை, விரத ஸ்னாதரும் {வேதக் கலைகளை முற்றும் கற்று, விரத நீராடல் முடித்தவரும்}[3], அதே போல, ஸ்வகர்மநிரதருமான {கடமையில் அர்ப்பணிப்புள்ளவருமான} நீர், ஸ்திரீயின் வதத்தை ஏன் நினைக்கிறீர்?(64ஆ,65அ) பார்த்திபரே, ரூபசம்பன்னத்துடன் {பேரழகுடன்} கூடிய மைதிலியைப் பார்த்துக் காத்திருப்பீராக. எங்களுடன் சேர்ந்து, ராமனிடம் மட்டுமே போரில் உமது குரோதத்தை வெளிப்படுத்துவீராக.(65ஆ,66அ) கிருஷ்ணபக்ஷ {தேய்பிறைச்} சதுர்தசியான இன்றே நீர் ஆயத்தம் செய்வீராக. விஜயத்திற்காக {நாளை} அமாவாசையில் பலம் {படை} சூழ நீர் புறப்படுவீராக[4].(66ஆ,67அ) சூரரும், மதிமிக்கவரும், ரதீயும் {தேர் வீரரும்}, கட்கீயுமான {வாள்வீரருமான} நீர், சிறந்த ரதத்தில் ஏறிச் சென்று, தாசரதியான ராமனைக் கொன்று மைதிலியை அடைவீராக" {என்றான் சுஷேணன்}.(67ஆ,68அ)
[3] விவேக் தேவ்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "கல்வி நிறைவில் செய்யப்படும் தூய்மைச் செயல் இந்த நீராடல்" என்றிருக்கிறது.
[4] நரசிம்மாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், "அப்யுத்தானம் த்வமத்யைவ க்ருஷ்ணபக்ஷசதுர்தஷீம் || க்ருத்வா நிர்யாஹ்யமாவாஸ்யாம் விஜயாய பலைர்வ்ருத꞉ |" என்பது மூலம். சதுர்தசியினன்று ப்ரயாண ஸந்நாஹஞ் செய்யென்கையால் கீழ் பதின் மூன்று தினங்கள் யுத்தம் நடந்ததென்று தெரிகின்றது. எப்படியென்னில் - ததோ அஸ்தம் அகமத் ஸூர்யஹ் ஸந்த்யயா ப்ரதிரன்ஜிதஹ் || பூர்ண சந்த்ர ப்ரதீபா ச க்ஷபா ஸமபிவர்ததே" என்கையால் {யுத்தகாண்டம், 38ம் சர்கம் மூலம், சுலோகம் 18ஆ,19அ: https://ramayanam.arasan.info/2024/10/Ramayanam-Yuddhakandam-Sargam-038.html} ஸுவேல பர்வதத்திலேறின ராத்ரி பூர்ணிமையென்று ஏற்படுகிறது. பின்பு கிருஷ்ணபக்ஷ ப்ரதமனையினன்று யுத்தாரம்பம். அன்றைத்தினம் ராத்ரியே நாகபாசபந்தமும், அதினின்று விடுபடுதலும். த்வீதியையினன்று ராவண மகுட பங்கம். ஸப்தமியினன்று கும்பகர்ணவதம். அஷ்டமியினன்று அதிகாயாதிவதம். நவமியினன்று மீளவும் இந்த்ரஜித்யுத்தம். அன்று ராத்ரியே கும்ப நிகும்பாதிவதம். தசமியினன்று மகராக்ஷஸவதம். ஏகாதசி, த்வாதசி, த்ரயோதசிகளில் இந்த்ரஜித் வதமென்று தெரிகிறது. இங்ஙனம் சிலர் வாஸ்தவத்தில் நவமியன்று யுத்தாரம்பமாகையால் நவமிதசமி இரண்டு தினங்களில் ராவணனும் இந்த்ரஜித்தும் மூலபலமும் {தொல்படையும்} தவிர மற்ற ராக்ஷஸர்களனைவரும் வதமடைந்தனர். ஏகாதசி த்வாதசி த்ரயோதசி இந்த நாட்களில் இந்த்ரஜித்வதம். ஆகையால் சதுர்த்தசியினன்று யுத்தத்தின் பொருட்டு ஸந்நாஹஞ் செய்வாயென்பது பொருந்துகிறது" என்றிருக்கிறது.
துராத்மாவான ராவணன், நண்பனால் உரைக்கப்பட்ட, தர்மத்திற்கு இணக்கமான சொற்களை ஏற்று, தன் கிருஹத்திற்குச் சென்றான். பிறகு அந்த வீரியவான், தன் நண்பர்களுடன் அங்கிருந்து தன் சபைக்கே மீண்டும் சென்றான்.(68ஆ,இ)
யுத்த காண்டம் சர்க்கம் – 092ல் உள்ள சுலோகங்கள்: 68
Previous | | Sanskrit | | English | | Next |