Terrific battle | Yuddha-Kanda-Sarga-075 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: சுக்ரீவனின் அறிவுறுத்தலுக்கு இணங்க வானரர்களால் இலங்கை தீக்கிரையாக்கப்பட்டது. இராட்சசர்களுக்கும், வானரர்களுக்கும் இடையில் நடந்த பயங்கரமான போர்...
அப்போது, மஹாதேஜஸ்வியும், வானரேஷ்வரனுமான சுக்ரீவன், வேண்டிக் கொள்ளும் வகையில் ஹனூமந்தனிடம் அர்த்தம் பொதிந்த இந்த சொற்களைக் கூறினான்:(1) "கும்பகர்ணன் கொல்லப்பட்டான். குமாரர்களும் கிட்டத்தட்ட அழிவடைந்தனர்[1]. இப்போது ராவணன் பதில் தாக்குதல் ஏதும் தொடுக்கமாட்டான்.(2) மஹாபலவான்களும், வேகம் நிறைந்தவர்களுமான பிலவங்கமர்கள் {தாவிச் செல்பவர்களான வானரர்கள்}, எவரெவர் இருக்கின்றனரோ, அந்தந்தப் பிலவகரிஷபர்கள் {தாவிச் செல்பவர்களில் காளைகள்}, உல்கங்களை {எரிகொள்ளிகளை} எடுத்துக் கொண்டு, லங்கைக்கு விரைந்து செல்லட்டும்.{3} ஹரிக்கு ஒப்பான ஹரயர்கள் {சிங்கத்திற்கு ஒப்பான குரங்குகள்} ராவணாலயத்தை விரைவாக எரிக்கட்டும்" {என்றான் சுக்ரீவன்}.(3,4அ)
[1] மன்மதநாததத்தர் பதிப்பின் அடிக்குறிப்பில், "அழிவடைந்தாலும், மகிழ்ச்சிக்காக விடப்பட்டனர், அதாவது Slain, left out for euphony என்பது "நிஷூதிதா" என்ற மூலச் சொல்லின் பொருளாகும்" என்றிருக்கிறது. இது கும்பகர்ணனின் மகன்களைக் குறிக்கும் சொல்லாகத் தெரிகிறது. கும்பகர்ணனின் மகன்களான கும்ப, நிகும்பர்கள் அழிவடைந்ததாக இதுவரை குறிப்பேதுமில்லை. இதே சர்க்கத்தின் 47ம் சுலோகத்தில், அவர்கள் ராவணனின் கட்டளையின் பேரில், போருக்குப் புறப்படுவதாகக் குறிப்பிருக்கிறது. எனவேதான், அவர்கள் அழிவடையவில்லை என்ற பொருள் இங்கே தொனிக்கிறது. இருப்பினும், இந்த வாக்கியத்தை உடைத்துப் பொருள் கொண்டால், 'கும்பகர்ணன் கொல்லப்பட்டான், {ராவணனின்} மகன்களும் கொல்லப்பட்டனர்" என்றும் பொருள் கொள்ளலாம். அப்போது இந்த சுலோகத்தின் பொருள், "ராவணனின் மகன்களில், இந்திரஜித் உள்ளிட்ட பிறரும், கொல்லப்படும் அளவுக்குத் தாக்கப்பட்டாலும், அவர்களது போர்க்கலையில் ஏற்பட்ட மகிழ்ச்சியால் மாய்க்கப்படாமல் விடப்பட்டனர்" என்ற பொருளும் தொனிப்பதுபோல் தெரிகிறது. அல்லது ராவணனின் குமாரர்கள் பலர் அழிந்தாலும் இன்னும் இந்திரஜித் அழியாததால், அவனது குமாரர்கள் கிட்டத்தட்ட அழிக்கப்பட்டனர் என்ற பொருளும் கூடும்.
ஆதித்யன் அஸ்தமகதியை அடைந்தபிறகான அந்த ரௌத்திர நிசியின் தொடக்கத்தில், அந்தப் பிலவகரிஷபர்கள், உல்கங்களுடன் {எரிகொள்ளிகளுடன்} லங்கையை நோக்கிச் சென்றனர்[2].(4ஆ,5அ) உல்கஹஸ்தர்களான ஹரிகணங்கள் {கையில் எரிகொள்ளிகளைக் கொண்டக் குரங்குக் கூட்டத்தினர்} எங்கும் தாக்கியபோது, விகாரக் கண்களைக் கொண்ட ஆரக்ஷஸ்தர்கள் {காவலர்கள்}[3] அவசரமாகத் தப்பி ஓடினர்.(5ஆ,6அ) {இதனால்} மகிழ்ச்சியடைந்தவர்கள் {வானரர்கள்}, கோபுரங்கள், மாடங்கள், வீதிகள், விதவிதமான குறுக்கு வீதிகள், பிராசாதங்கள் {மாளிகைகள்} ஆகியவற்றின் மீதும் ஹுதாசனத்தை வீசினர் {நெருப்பை வீசினார்கள்}.(6ஆ,7அ) அந்த ஹுதபுக் {நெருப்பு} ஆயிரக்கணக்கான கிருஹங்களை தஹித்த {வீடுகளை எரித்த} போது, பர்வதங்களைப் போன்ற அவர்களின் பிராசாதங்கள் தரணீதலத்தில் விழுந்தன {ராக்ஷசர்களின் மாளிகைகள் தரையில் விழுந்தன}.(7ஆ,8அ)
[2] நரசிம்மாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், "இங்கு, 'ததோ அஸ்தம் கத ஆதித்யே ரௌத்ரே தஸ்மிந்நிஷாமுகே லங்காமபிமுகா ஸோல்கா ஜக்முஸ்தே ப்லவகர்ஷபா' என்பது மூலம். முன்பு விபீஷணனும் ஹனுமானும், ராத்ரியில் குறைக் கொள்ளியை எடுத்துக் கொண்டு திரிந்ததாகச் சொல்லப்பட்டது. இங்கு, 'அஸ்தம் கத ஆதித்யே' என்று அஸ்தமத்தையே சொல்லுகிறது. இவ்விரண்டுக்கும் பொருத்தமெப்படியென்னில் - ஸூர்யன் அஸ்தமித்தானென்ற இடத்தில் ஸூர்ய ப்ரகாசமில்லாமையைக் கண்டு கொள்வது. நிசா முகமென்று இங்குப்பின் மாலையைச் சொல்லுகிறது. (ரௌத்ரே) என்னும் விசேஷணத்தினால் அந்த வேளையில் பயங்கரமான காடாந்தகாரம் சூழ்ந்திருக்கை சொல்லப்பட்டது. ஹனுமான் மிகுதியும் வேகமுடையவனாகையால் ஒரு முஹுர்த்தத்திற்குள் போய் ஔஷதிபர்வதத்தைக் கொண்டு வந்து, அதை மீளவும் கொண்டு போய் ஹிமவத் பர்வதத்தில் வைத்து வந்தானென்று அவனுடைய வேகத்தின் மிகுதியைச் சொல்லுகிறது" என்றிருக்கிறது.
[3] மன்மதநாததத்தர் பதிப்பின் அடிக்குறிப்பில், "ஆரக்ஷஸ்தர்கள் என்பதைச் சிலர் வாயில்கள் என்கின்றனர். வேறு சிலரோ, அஃது ஒரு படைப்பிரிவு என்கின்றனர்" என்றிருக்கிறது.
அங்கே, அகுரு {அகில்}, உயர்ந்த செஞ்சந்தனம், முத்துக்கள், பளபளக்கும் மணிகள், வஜ்ரம் {வைரம்}, பவழம் ஆகியவை எரிந்தன.(8ஆ,9அ) நூலாடை, சோபனமான பட்டாடை, ஆவிகம் {ஆட்டுக்கம்பளம்}, விதவிதமான ஔர்ணங்கள் {கம்பளங்கள்}, காஞ்சனப் பாண்டங்கள் {பொற் பாத்திரங்கள்} ஆகியனவும் அங்கே எரிந்தன.(9ஆ,10அ) வாஜி பாண்டங்கள் {குதிரை அணிகலன்கள்}, நானாவித வடிவங்களிலான அவற்றின் {குதிரைகளின்} ஆபரணங்கள், பளபளக்கும் கஜங்களின் {யானைகளின்} கழுத்தணிகள், அம்பாரிகள், அழகிய ரத பாண்டங்கள் {தேருக்கான அலங்காரப்பொருள்கள்},(10ஆ,11அ) போர்வீரர்களின் கவசங்கள், ஹஸ்த, அஷ்வங்களின் சர்மங்கள் {யானைகளுக்கும், குதிரைகளுக்கும் உரிய கவசங்கள்}, கட்கங்கள் {வாள்கள்}, தனுசுகள், நாண்கள், பாணங்கள், தோமரங்கள், அங்குசங்கள், சக்திகள் {வேல்கள்},(11ஆ,12அ) ரோமஜங்கள் {விலங்குகளின் மயிர்களாலான கம்பளங்கள்}, வாலஜங்கள் {விலங்குகளின் மயிர்களாலான சாமரங்கள்}, புலித் தோல்களான கேடயங்கள், ஏராளமான அண்டஜங்கள் {புனுகு, கஸ்தூரி ஆகிய பலவும்},{12ஆ} முத்துக்களாலும், மணிகளாலும் இழைக்கப்பட்ட பிராசாதங்கள் {அரண்மனைகள்}, விதவிதமான அஸ்திரத் திரள்கள் ஆகியவற்றையும் எங்கும் அக்னி எரித்துக் கொண்டிருந்தது.(12ஆ,13)
தங்கள்தங்கள் விருப்பத்திற்கேற்ப உண்டாக்கப்பட்டவையும், சர்வ ராக்ஷசர்களுக்குரியவையும், நானாவிதமானவையும், சித்திரமானவையுமான கிருஹங்களையும் ஹுதபுக் தஹித்தது {வீடுகளையும் நெருப்பு எரித்தது}.{14} ஹேமச்சித்திர {பொன்னாலான அழகிய} கவசம் பூண்டவர்கள், புஷ்ப மாலைகளையும், ஆடைகளையும் தரித்தவர்கள், சீதுபாணம் பருகி {கள் குடித்துச்} சுழலும் கண்களைக் கொண்டவர்கள், ஆசை, வெறியுடன் தளர்ந்து நடப்பவர்கள்,{15} காந்தைகளால் {அழகிய பெண்களால்} இழுக்கப்படும் வஸ்திரங்களைக் கொண்டவர்கள், சத்ருக்களிடம் கோபம் கொண்டு, கதை, சூலம், கத்தி ஆகியவற்றைக் கைகளில் ஏந்தியவர்கள், மென்று தின்பவர்கள், குடிப்பவர்கள்,{16} மிக உயர்ந்த சயனத்தில் {படுக்கைகளில்} பிரியைகளுடன் {காதலிகளுடன்} உறங்குபவர்கள், பயந்து புத்திரர்களை எடுத்துக் கொண்டு எங்கும் விரைவாய் ஓடுபவர்கள்,{17} என நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான அந்த லங்காவாசிகளை எரித்து விட்டு, பாவகன் {அக்னி} அங்கே மீண்டும் மீண்டும் ஜுவலித்துக் கொண்டிருந்தான்.(14-18)
உறுதியும், பெரும் மதிப்பும் மிக்கவையும், கம்பீரமான குணங்களைக் கொண்டவையும், ஹேமத்தாலான {பொன்னாலான} சந்திர, அர்த்தச்சந்திர பிம்பங்களைக் கொண்டவையும், சந்திரனின் வடிவிலான மேன்மாடங்களுடன் கூடியவயும்,{19} அழகிய சாளரங்களையும், உயர்ந்த அறைகளையும் கொண்டவையும், திவாகரனைத் தீண்டுவது {சூரியனைத் தொடுவது} போன்றும், எங்கும் மணிகளால் இழைக்கப்பெற்றும் இருந்த பலகணிகளுடனும், மேடைகளுடன் அழகாகத் தெரிந்தவையும்,{20} கிரௌஞ்சம் {அன்றில்}, மயில், வீணை ஆகியவற்றைக் கொண்டவையும், ஆபரணங்களுடன் கூடியவையும், நாதங்களால் ஒலிக்கப்பெற்றவையும், அசலங்களுக்கு {மலைக்கு} ஒப்பானவையுமான வேஷ்மங்களையும் {மாளிகைகளையும்} அக்னி எரித்தான்.(19-21)
அனலனின் {நெருப்பின்} தழல்களால் சூழப்பெற்ற தோரணங்கள், கோடைக் கால முடிவில் மின்னல்களால் சூழப்படும் மேகஜாலங்களைப் போல விளங்கின.(22) அப்போது காட்டுத் தீயால் மஹாகிரியின் சிகரங்கள் எரிவது எப்படியோ, அப்படியே அனலனின் {நெருப்பின்} தழல்களால் பற்றப்பட்ட கிருஹங்கள் {வீடுகள்} பிரகாசித்தன[4].(23) விமானங்களில் உறங்கும் வராங்கனைகள் {அழகிய பெண்கள்} பொசுக்கப்பட்டதனால், சர்வ அங்கங்களிலும் உள்ள ஆபரணங்கள் எரிந்தவர்களாக, "ஹா, ஹா" என்று உரக்கக் கதறினர்.(24) அங்கே அக்னியால் சூழப்பட்ட பவனங்களும், வஜ்ரியின் {இந்திரனின்} வஜ்ரத்தால் தாக்கப்பட்ட மஹாகிரியின் சிகரங்களைப் போல விழுந்தன.(25) தூரத்தில் எரிக்கப்படும் அவை {அந்த பவனங்கள்}, நெருப்பால் எரிக்கப்படும் ஹிமயத்தின் சிகரங்களைப் போலப் பிரகாசித்தன.(26)
[4] வி.வி.சுப்பாராவ்-பி.கீர்வானி பதிப்பில், "அனலனின் ஜுவாலைகளால் பற்றப்பட்ட பவனங்கள், வஜ்ரியின் வஜ்ரத்தால் நொறுக்கப்பட்ட மஹாகிரியின் சிகரங்களைப் போல விழுந்தன" என்றிருக்கிறது. இதே போன்ற பொருளில் பல்வேறு ஆங்கில, தமிழ்ப் பதிப்புகளிலும் இந்த சுலோகம் காணக்கிடைக்கிறது. ஆனால் இதற்குப் பின்வரும் 25ம் சுலோகம் இதே பொருள் கொண்ட சுலோகத்தையே கொண்டிருக்கிறது.
இராத்திரியில் ஜுவாலைகளால் பற்றப்பட்டு எரிக்கப்படும் லங்கையின் வீடுகளில் உள்ள மாடிகள், புஷ்பித்த கிம்சுகங்களை {பூத்த பலாச மரங்களைப்} போலத் தெரிந்தன.(27) ஹஸ்தியதியக்ஷர்களால் {யானைப் பாகர்களால்} அவிழ்த்து விடப்பட்ட கஜங்களாலும் {யானைகளாலும்}, அப்படியே விடப்பட்ட துரங்கங்களாலும் {குதிரைகளாலும்} லங்கையானது, லோகாந்தத்தில் {உலகமுடிவுக்காலத்தில்} அலையும் முதலைகளைக் கொண்ட ஆர்ணவத்தை {கடலைப்} போல இருந்தது.(28) அவிழ்த்து விடப்பட்ட அஷ்வத்தை {குதிரையைக்} கண்டு பீதியடைந்த கஜம் {யானை} எங்கோ ஓடியது. பீதியடைந்த கஜத்தை {யானையைக்} கண்டு பீதியடைந்த அஷ்வமும் {குதிரையும்} எங்கோ திரும்பி ஓடியது.(29) இலங்கை எரிக்கப்படும்போது, அந்த ஒளியைப் பிரதிபலிக்கும் நீரைக் கொண்ட மஹோததி {பெருங்கடல்}, லோஹிதோதக மஹார்ணவம் போல {சிவப்பு நீரைக் கொண்ட பெருங்கடல் போல்} விளங்கியது.(30)
ஒரு முஹூர்த்தத்தில் ஹரிக்களால் {குரங்குகளால்} எரிக்கப்பட்ட அந்தப் புரீ {லங்கை}, இந்த உலகத்தின் கோரமான அழிவுக்காலத்தில் எரிக்கப்படும் வசுந்தரையை {பூமியைப்} போல் இருந்தது.(31) அனலனின் தழல்களால் எரிக்கப்பட்டு, தூமத்தால் {புகையால்} மறைக்கப்பட்டு, உரக்கக் கூச்சலிடும் நாரீஜனங்களின் {பெண்மக்களின்} உச்ச ஸ்வனம் நூறு ஜோஜனைகளுக்குக் கேட்டது.(32) யுத்தத்தில் ஆவல் கொண்ட ஹரயர்கள், அப்போது உடல் பொசுக்கப்பட்டு வெளியில் வந்த பிற ராக்ஷசர்கள் மேல் திடீரென விழுந்து வலுவாகத் தாக்கினர்.(33) வானரர்களின் உரத்த ஒலியும், ராக்ஷசர்களின் கூச்சலும் பத்து திசைகளையும், சமுத்திரத்தையும், பிருத்வியையும் {கடலையும், பூமியையும்} எதிரொலிக்கச் செய்தது.(34)
மஹாத்மாக்களான ராமலக்ஷ்மணர்கள் இருவரும், விசல்யர்களானார்கள் {வேதனையில் இருந்து விடுபட்டனர்}. அவர்கள் இருவரும் தங்கள் சிறந்த தனுசுகளை எடுத்துக் கொண்டனர்.(35) அப்போது ராமனும், தன் உத்தம தனுவை வளைத்து, ராக்ஷசர்களுக்கு பயத்தை ஏற்படுத்தும் வகையில் பயங்கர சப்தத்தை {நாணொலியை} எழுப்பினான்.(36) இராமன், தன் மஹத்தான தனுவை வளைத்தபோது, வேதமயமான தனுவுடனும், பெருங்குரோதத்துடனும் கூடிய பகவான் பவனை {சிவனைப்} போல சோபித்துக் கொண்டிருந்தான்.(37) வானரர்களின் கூச்சல், ராக்ஷசசர்களின் கதறல் என்ற அவ்விரு சப்தங்களையும் விஞ்சி ராமனின் ஜியாசப்தம் {நாணொலி} கேட்டது.(38) வானரர்களின் கூச்சல், ராக்ஷசர்களின் கதறல், ராமனின் ஜியாசப்தம் {நாணொலி} என்ற இம்மூன்றும் பத்துத் திசைகளிலும் பரவியது.(39) அவனது கார்முகத்திலிருந்து {ராமனின் வில்லிலிருந்து} விடுபட்ட சரங்கள், கைலாச சிருங்கத்திற்கு {கயிலாய மலைச் சிகரத்திற்கு} ஒப்பான அந்தப் புரத்தின் {நகரின்} கோபுரத்தை நொறுக்கிப் புவியில் சிதறடித்தது.(40) அப்போது, விமானங்களிலும், கிருஹங்களிலும் ஆயத்தமாகிக் கொண்டிருந்த ராக்ஷசேந்திரர்கள் ராமனின் சரங்களைக் கண்டு அச்சமடைந்தனர்.(41) ஆயத்தமாகிக் கொண்டே முழக்கமிட்டுக் கொண்டிருந்த அந்த ராக்ஷசேந்திரர்களுக்கு அவ்விரவு ரௌத்திர இரவானது.(42)
மஹாத்மாவான சுக்ரீவன் அந்த வானரேந்திரர்களுக்கு ஆணையிடும் வகையில், "பிலவங்கமர்களே {தாவிச் செல்பவர்களே}, அருகில் இருக்கும் துவாரத்தை {வாயிலை} அடைந்து யுத்தம் செய்வீராக.{43} ஆங்காங்கே இருந்தும் எவன் {பயனில்லாமல் நேரத்தை} வீண் செய்வானோ, அந்த ராஜசாசனதூஷகனை {அரச ஆணையை மீறியவனைப்} பாய்ந்து சென்று கொல்வீராக" {என்றான் சுக்ரீவன்}.(43,44)
அந்த வானரமுக்கியர்கள், தழலுடன் ஒளிரும் உல்கங்களை {எரிகொள்ளிகளைக்} கைகளில் கொண்டு, துவாரங்களை ஆசரித்து {எரிகொள்ளிகளுடன் வாயில்களை அடைந்து} நின்றபோது ராவணன் குரோதமடைந்தான்.(45) அவனது கொட்டாவியால் பத்துத் திசைகளும் கலக்கமடைந்தன. ருத்திரனின் காத்திரங்களின் {உடல் அங்கங்களில்} வெளிப்படும் ரூபவானான கோபத்தை {உடல்கொண்டு நேரில் வந்த கோபத்தைப்} போலத் தெரிந்தான்.(46) பெருங்குரோதமடைந்த அவன், கும்பகர்ணாத்மஜர்களான {கும்பகர்ணனின் மகன்களான} கும்பன், நிகும்பன் இருவரையும், ஏராளமான ராக்ஷசர்கள் சஹிதர்களாக அனுப்பி வைத்தான்.(47) இராவண சாசனத்தின் {ராவணனுடைய ஆணையின்} பேரில் யூபாக்ஷன், சோணிதாக்ஷன், பிரஜங்கன், அதேபோல கம்பனன் ஆகியோர் கும்பகர்ணிகள் {கும்பகர்ணனின் மகன்களான கும்பன், நிகும்பன்} சஹிதர்களாகப் புறப்பட்டுச் சென்றனர்.(48) அவன் {ராவணன்}, மஹாபலவான்களான அந்த ராக்ஷசர்கள் அனைவரிடமும், "இராக்ஷசர்களே, சிம்ஹநாதம் செய்தபடியே இப்போதே புறப்படுவீராக" {என்றான் ராவணன்}.(49)
அப்போது, அவனால் தூண்டப்பட்ட வீர ராக்ஷசர்கள், ஜொலிக்கும் ஆயுதங்களுடன் மீண்டும் மீண்டும் நாதம் செய்தபடியே லங்கையிலிருந்து புறப்பட்டுச் சென்றனர்.(50) இராக்ஷசர்களின் பூஷணங்களில் {ஆபரணங்களில்} ஒளிரும் ஒளியும், அந்த ஹரயர்களின் {குரங்குகளின்} சொந்த ஒளியும், அக்னியின் ஒளியுடன் சேர்ந்து வியோமம் {வானம்} எங்கும் பிரபையுடன் கூடியதாக்கின.(51) தாராதிபனின் {சந்திரனின்} ஒளியும், அதே போல தாரைகளின் ஒளியும், இரண்டு தரப்பிலும் உள்ள ஆபரணங்களின் ஒளியும் வானத்தை ஜொலிப்புடன் பிரகாசிக்கச் செய்தன.(52) சந்திரனின் ஒளியும், பூஷணங்களின் ஒளியும், ஜொலிக்கும் கிரஹங்களும் {கோள்களும்} ஹரி, ராக்ஷச சைனியங்களை {குரங்குகளின் படையையும், ராக்ஷசப்படையையும்} ஒளிரச் செய்தன.(53) கலங்கும் நீருடனும், அசையும் அலைகளுடனும் கூடிய சாகரமும், பாதி எரியும் கிருஹங்களின் {வீடுகளின்} பிரதிபலிப்புடன் அதிகமாக ஜொலித்துக் கொண்டிருந்தது.(54)
பதாகைகள், துவஜங்கள், வாள் வடிவிலான உத்தம பரசுகள், பயங்கரமான அஷ்வங்கள், ரதங்கள், மாதங்கங்கள் {யானைகள்} ஆகியவற்றுடனும், நானாவிதக் காலாட்படை வீரர்களுடனும்,{55} ஒளிரும் சூலங்கள், கதைகள் {கதாயுதங்கள்}, கட்கங்கள் {வாள்கள்}, பராசங்கள், தோமரங்கள், கார்முகங்கள் {விற்கள்} ஆகியவற்றுடனும் கூடிய அந்த ராக்ஷச பலம் {ராக்ஷசப் படை} கோரமான விக்ரமத்துடனும், பௌருஷத்துடனும் பயங்கரமாகத் தெரிந்தது.{56} {யானைகள், குதிரைகள், ரதங்களில் கட்டப்பட்ட} கிங்கிணி மணிகள் நாதம் செய்தன. ஜொலிக்கும் பராசங்களையும், பரசுகளையும் ஏந்தியிருந்த புஜங்கள் {ராக்ஷசர்களின் கைகள்} ஹேமஜாலங்களால் அலங்கரிக்கப்பட்டு ஒளிர்ந்து கொண்டிருந்தன.{57} பாணங்களுடன் கூடிய கார்முகங்களால் ஏவப்பட்டுச் சுழன்ற மஹா அஸ்திரங்கள், கந்தம் {நறுமணப்பொருள்கள்}, மாலைகள், மது ஆகியவற்றின் நறுமணத்தைக் காற்றில் பரப்பிக் கொண்டிருந்தன[5].(55-58)
[5] நரசிம்மாசாரியர் பதிப்பில், "அதிலுள்ள ஸேனாஜனங்கள் பொன்பூஷணங்களின் வரிசைகளை புஜங்களில் அணிந்து மதத்தினால் கண்டக்கோடாலிகளைச் சுழற்றிக் கொண்டு கையிலுள்ள தனுஸ்ஸு முறிந்துபோனால் வேண்டுமென்று வேறு தனுஸ்ஸையும் பாணத்துடன் பின்புறத்தில் கட்டிக் கொண்டிருந்தனர். அவர்கள் பூசிக் கொண்டிருக்கும் சந்தனாதிகளின் கந்தங்களாலும் தரித்த பூமாலைகளாலும் வீரபாணமாகக் குடித்த மத்யங்களாலும் மணங்கமழப் பெற்று காற்று மிகுதியும் ஸுகமாய் வீசிக் கொண்டிருந்தது" என்றிருக்கிறது.
வெல்வதற்கரியதும், பெரும் மேகங்களைப் போன்று முழங்கியதும், கோரமானதும், சூர ஜனங்கள் நிறைந்ததுமான அந்த ராக்ஷசர்களின் பலத்தை {படையைக்} கண்டு,{59} பிலவங்கமர்களின் பலம் {படை} உச்ச நாதம் செய்தபடியே அசைந்து சென்றது.(59,60அ) இராக்ஷசர்களின் அந்த மஹத்தான பலம் {படை}, பாவகனை {நோக்கிச் செல்லும்} பதங்கங்களை {நெருப்பை நோக்கிச் செல்லும் விட்டிற்பூச்சிகளைப்} போல பகைவரின் பலத்தை {படையை} நோக்கி வேகமாகப் புறப்பட்டுச் சென்றது.(60ஆ,61அ) அந்த ராக்ஷசர்களின் சிறந்த பலம் {படை}, புஜங்களின் செயல்பாட்டால் இயங்கும் பரிகங்கள், அசனிகள் ஆகியவற்றுடன் நன்றாக ஒளிர்ந்து கொண்டிருந்தது.(61ஆ,62அ)
அப்போது யுத்தத்தில் ஆவல் கொண்ட ஹரயர்கள் {குரங்குகள்}, மரங்கள், பாறைகள், முஷ்டிகள் ஆகியவற்றால் நிசாசரர்களை {இரவுலாவிகளை} தாக்கிவிட்டு உன்மத்தர்களை {பைத்தியம் பிடித்தவர்களைப்} போல அங்கே துள்ளிக் குதித்தனர்.(62ஆ,63அ) அதே போல, பீம விக்ரமர்களான ராக்ஷசர்கள், குதித்துக் கொண்டிருக்கும் அந்த ஹரீக்களின் சிரங்களை {குரங்குகளின் தலைகளைக்} கூரிய சரங்களால் உடனே கொய்தனர்.(63ஆ,64அ) அங்கே, பற்களால் கடிக்கப்பட்ட காதுகளுடனும், முஷ்டிகளால் தகர்க்கப்பட்ட மஸ்தகங்களுடனும் {மண்டைகளுடனும்}, பாறைகளால் பங்கமடைந்த அங்கங்களுடனும் கூடிய ராக்ஷசர்கள் திரிந்து கொண்டிருந்தனர்.(64ஆ,65அ) அதே போல, கோர ரூபங்கொண்ட சில நிசாசரர்கள் {இரவுலாவிகள்}, கூரிய வாள்களைக் கொண்டு அந்த மிகச் சிறந்த கபிக்களை {குரங்குகளை} எங்கும் தாக்கிக் கொண்டிருந்தனர்.(65ஆ,66அ) தாக்கிக் கொண்டிருக்கும் ஒருவனை மற்றொருவன் தாக்கினான்[6]. தள்ளிக் கொண்டிருக்கும் ஒருவனை மற்றொருவன் தள்ளினான். வசைபுரியும் ஒருவனை மற்றொருவன் ஏசினான். கடிக்கும் ஒருவனை மற்றொருவன் கடித்தான்.(66ஆ,67அ) ஒருவன், "கொடு" என்று சொல்ல, மற்றொருவன் கொடுத்தான். இன்னொருவன், "கொடுக்கிறேன்" என்றும், மற்றுமொருவன், "ஏன் கிலேசமடைகிறாய்? இரு" என்றும் அன்யோன்யம் மொழிந்தனர்.(67ஆ,68அ)
[6] விவேக் தேவ்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "போர்விதிகள் மீறப்பட்டு ஏற்படும் குழப்பத்தை இது குறிப்பிடுகிறது" என்றிருக்கிறது.
சஸ்திரங்கள் {ஆயுதங்கள்} அவிழ்ந்து தொங்கவும், கவசங்களும், ஆயுதங்களும் தளரவும்,{68ஆ} மஹாபராசங்கள் {பெருங்கத்திகள்} உயர்த்தப்பட்டும், யஷ்டிகள் {தடிகள்}, சூலங்கள், கட்கங்கள் {கத்திகள்} ஆகியவற்றாலான மஹாரௌத்திரமான யுத்தம் வானரர்களுக்கும், ராக்ஷசர்களுக்கும் இடையில் நடந்தது.(68ஆ,69) போரில் ராக்ஷசர்கள், பத்தாகவும், ஏழாகவும் வானரர்களைக் கொன்றனர். வானரர்களும், பத்தாகவும், ஏழாகவும் ராக்ஷசர்களைக் கொன்று வீசினர்.(70) கேசம் அவிழ்ந்து, ஆடைகள் தளர்ந்து, கவசங்களும், துவஜங்களும் இல்லாத ராக்ஷச பலத்தை வானரர்கள் நெருங்கிச் சூழ்ந்துகொண்டனர்.(71)
யுத்த காண்டம் சர்க்கம் – 075ல் உள்ள சுலோகங்கள்: 71
Previous | | Sanskrit | | English | | Next |