Portents observed by Rama | Yuddha-Kanda-Sarga-022 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: போரினால் உண்டாகப் போகும் அழிவைக் குறிக்கும் தீய சகுனங்களைக் கண்டு லக்ஷ்மணனிடம் தெரிவித்த ராமன்...
நிமித்தஜ்ஞனான லக்ஷ்மணபூர்வஜன், நிமித்தங்களைக் கண்டு, சௌமித்ரியைத் தழுவியபடியே {சகுனங்களைக் குறித்து நன்கறிந்தவனும், லக்ஷ்மணனின் அண்ணனுமான ராமன், சில சகுனங்களைக் கண்டு, சுமித்ரையின் மகனான லக்ஷ்மணனைத் தழுவியபடியே} இந்த வசனத்தைக் கூறினான்[1]:(1) "இலக்ஷ்மணா, குளிர்ந்த நீரும், பழங்களும் நிறைந்த வனங்களில் இந்தப் படையை வியூகமாக வகுத்து {நாம்} விழிப்புடன் இருப்போம்.(2) பயங்கரமானதும், உலகத்தை அழிக்கக்கூடியதும், போர்வீரர்களான ரிக்ஷர்கள், வானரர்கள் {கரடிகள், குரங்குகள்}, ராக்ஷசர்கள் ஆகியோர் கொல்லப்படுவதற்கு ஏதுவானதுமான பயம் {ஆபத்து} நெருங்குவதைப் பார்க்கிறேன்.(3) வாதம் {காற்று} புழுதி கலந்து வீசுகிறது; வசுந்தரையும் நடுங்குகிறாள். பர்வத உச்சிகள் {மலைச்சிகரங்கள்} குலுங்குகின்றன; மரங்கள் {முறிந்து} விழுகின்றன.(4)
[1] செம்பதிப்பான விவேக் தேவ்ராய் பதிப்பில் இந்த சர்க்கம் இடம்பெறவில்லை. யுத்தகாண்டத்தில் 10 முதல் 15ம் சர்க்கம் வரையும், 20ம் சர்க்கமும், 21ம் சர்க்கத்தின் முதல் ஒன்பது சுலோகங்களும், இப்போது வரும் இந்த 23ம் சர்க்கமும் தவிர்க்கப்பட்டிருக்கிறது. ஆக யுத்தகாண்டத்தில் இதுவரை எட்டு சர்க்கங்கள் தவிர்க்கப்பட்டிருக்கின்றன.
கொடூர விலங்குகளுக்கு ஒப்பானவையும், புழுதியின் நிறத்திலானவையுமான {பச்சை இறைச்சியின் வண்ணம் கொண்டவையுமான} குரூர மேகங்கள், மிகக் கடுமையான ஸ்வனத்துடன், சோணித பிந்துக்கள் {ரத்தத் துளிகள்} கலந்த குரூர மழையைப் பொழிகின்றன[2].(5) சந்தியானது {மாலைப் பொழுது}, செஞ்சந்தனத்திற்கு ஒப்பாகச் சிவந்து படுபயங்கரமாகத் தெரிகிறது. ஜுவலிக்கும் ஆதித்யனிலிருந்து அக்னி மண்டலங்கள் {நெருப்புத் துண்டங்கள்} விழுகின்றன.(6) எங்கும் குரூர மிருகங்களும், பக்ஷிகளும், மஹத்தான பயத்துடன் ஆதித்யனை நோக்கி தீன சுவரத்தில் தீனமாக அலறுகின்றன.(7) உலக அழிவின் போது {சூரியன்} உதிப்பதைப் போல, கரிய, சிவந்த வளையங்களுடன் ரஜனியில் {இரவில்} பிரகாசமற்றிருக்கும் சந்திரன் சந்தாபத்தை {வேதனையை} விளைவிக்கிறான்.(8)
[2] தர்மாலயப் பதிப்பில், "மேகங்கள் பேய்பிசாசுகளை நிகர்த்தவைகளாய் கண்ணெடுத்துப் பார்க்கவொண்ணாதவைகளாய் கர்ணகடூரமாக கர்ஜிக்கின்றவைகளாய் பயங்கரமானவைகளுமாய் ரத்தபிந்துக்களோடு கலந்ததாய் அஸஹ்யமாய் வர்ஷிக்கின்றன" என்றிருக்கிறது. நரசிம்மாசாரியர் பதிப்பில், "மேகங்கள் செந்நாய் வர்ணமுடையவைகளும், பருந்து முதலியவை போன்ற உருவம் அமைந்தவைகளும், கண்ணெடுத்தப் பார்க்க முடியாதவைகளுமாகிப் பருஷத்வனியுடன் கூடி பயத்தை விளைவித்துக் கொண்டு ரத்தத் துளிகளோடு கூடின ஜலத்தை க்ரூரமாகப் பெய்கின்றன" என்றிருக்கிறது. கோரக்பூர் கீதா பிரஸ் பதிப்பில், "புலால் உண்ணும் அரக்கர்களைப் போல் தோற்றமளிக்கும் மேகங்கள், கண்ணால் பார்க்க முடியாதவைகளாகக் கொடூரமாகக் கர்ஜித்துக் கொண்டு, சகிக்க முடியாத ரத்தத் துளிகள் கலந்ததான மழையைப் பயங்கரமாகப் பொழிகின்றன" என்றிருக்கிறது.
இலக்ஷ்மணா, விமலமான ஆதித்யன் {களங்கமற்ற சூரியன்}, முன் எப்போதும் காணாத வகையில் சிறுத்து, பரிவேஷம் {சுற்றுப்புறம்} சிவந்து, மையத்தில் நீலமாகி {கறுத்து} பயங்கரமாகத் தெரிகிறான்.(9) இலக்ஷ்மணா, பார். பெரும் புழுதியால் மூடப்பட்ட நக்ஷத்திரங்கள், உலகங்களின் யுகாந்தத்தை {உலகங்களின் காலம் முடிவடைவதைக்} குறிப்பிடுவதாகத் தெரிகிறது.(10) காகங்களும், சியேனங்களும் {பருந்துகளும்}, கிருத்ரங்களும் {கழுகுகளும்} தாழ்வாகப் பறக்கின்றன. நரிகள், மிகப் பயங்கர, சுபமற்ற நாதங்களை வெளியிட்டு ஊளையிடுகின்றன.(11)
பூமி, கபிக்களாலும் {குரங்குகளாலும்}, ராக்ஷசர்களாலும் வீசப்பட்ட பாறைகள், சூலங்கள், கட்கங்கள் {வாள்கள்} ஆகியவற்றால் நிறைந்து, மாமிசமும், ரத்தமும் கலந்த சேற்றால் மறையப்போகிறது.(12) இராவணன் பாலிப்பதும், வெல்வதற்கரியதுமான புரீயை {லங்காபுரியை} நோக்கி, சீக்கிரமாகவும், வேகமாகவும் இப்போதே சர்வ ஹரிக்கள் சூழ விரைந்து செல்வோம்" {என்றான் ராமன்}.(13) போரில் பகைவரை அடக்கும் விபுவும் {தலைவனும்}, ராமனுமான {மக்களை மகிழ்ச்சி கொள்ளச் செய்பவனுமான}[3] ராமன், இவ்வாறு சொல்லிவிட்டு, தனுவை எடுத்துக் கொண்டு {அனைவருக்கும்} முன்னே லங்கையை நோக்கிப் புறப்பட்டான்.(14)
[3] மன்மதநாததத்தர் பதிப்பின் அடிக்குறிப்பில், "இராமன் என்ற சொல் இரு முறை சொல்லப்படுகிறது. ஒன்று சூரிய குல வீரனைக் குறிப்பதாகும். மற்றொன்று, "மக்களைக் கவர்ந்திழுப்பவன்" என்ற பொருளைக் கொண்டதாகும்" என்றிருக்கிறது.
விபீஷணன், சுக்ரீவன் ஆகியோருடன் கூடிய அந்த வானர ரிஷபர்கள் அனைவரும், பகைவரை வதைக்கும் நிச்சயத்துடன் நாதம் செய்தபடியே புறப்பட்டுச் சென்றனர்.(15) இராகவனின் பிரிய அர்த்தத்திற்காக கர்மசேஷ்டைகளைச் செய்தவர்களும் {ராமனை மகிழ்ச்சியடையச் செய்வதற்காகக் குரங்குச் சேட்டைகளைச் செய்தவர்களும்}, பெரும் வீரியசாலிகளுமான ஹரீக்களிடம் {குரங்குகளிடம்} ரகுநந்தனன் மகிழ்ச்சி கொண்டான்.(16)
யுத்த காண்டம் சர்க்கம் – 023ல் உள்ள சுலோகங்கள்: 16
Previous | | Sanskrit | | English | | Next |