The wrath of Rama | Yuddha-Kanda-Sarga-021 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: சமுத்திரன் வெளிப்படாததால் கோபமடைந்த ராமன், பெருங்கடலின் மீது கணைகளை ஏவியது...
பிறகு, அரிசூதனனான ராகவன் {பகைவரை அழிப்பவனும், ரகு குலத்தவனுமான ராமன்}, சாகரக் கரையில் தர்ப்பையைப் பரப்பி, கிழக்கு நோக்கிய முகத்துடன் மஹோததியை {பெருங்கடலைக்} கைகளைக் கூப்பி வணங்கிவிட்டு[1], புஜங்கத்தின் {பாம்பின்} உடலுக்கு ஒப்பாகச் சுருண்டு, தோள்களில் சாய்ந்து {தோள்களையே தலையணையாக வைத்துக் கொண்டு} கிடந்தான்.(1,2அ)
[1] இராமாயண லங்கையானது, ராமேஸ்வரத்திற்குத் தெற்கே இன்றுள்ள லங்கைதான் என்று கொண்டால், கிழக்கை நோக்கிய முகத்துடன் பெருங்கடலை இப்படி வணங்கலாம். சில ஆய்வாளர்கள் சொல்வது போல, ராமாயண லங்கை குஜராத்திற்கு தெற்கே, அல்லது அரபிக் கடலில் வேறேதும் இடத்தில் இருந்தது என்று கொண்டால், கிழக்கை நோக்கிய முகத்துடன் பெருங்கடலை வணங்க முடியாது. ஆனால் இந்த சர்க்கத்தின் முதல் ஒன்பது சுலோகங்கள் செம்பதிப்பில் தவிர்க்கப்பட்டிருப்பதால், ஆய்வாளர்களுக்கு இந்தக் குறிப்பு கிடைக்காது.
{அந்தத் தோள்கள் முன்னர்} மணி, காஞ்சன {ரத்தினங்களாலும், பொன்னாலுமான} கேயூரங்களாலும், சிறந்த முத்துக்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தவையும்,{2ஆ} பரம நாரீகளால் அனேக முறை {சிறந்த பெண்களால் பலமுறை} தீண்டப்பட்டவையும்[2],(2ஆ,3) பூர்வத்தில், சந்தனம், அகுரு {அகில்} ஆகியவற்றால் சேவிக்கப்பட்டவையும், சந்தனம் பூசப்பெற்று பாலசூரியன் போல சோபித்தவையும்,(4,5அ) கங்கா ஜலத்தால் சேவிக்கப்படும் தக்ஷகனின் உடலைப் போன்றவையும், சயனத்திற்கு ஒப்பாக சீதையின் உத்தம அங்கத்தால் {சீதை தலைவைத்துப் படுப்பதால்} சோபித்தவையும்,(5ஆ,6அ) நுகத்தடியைப் போல தீர்க்கமானவையும் {நீளமானவையும்}, போரில் சத்ருக்களின் சோகத்தையும், நண்பர்களின் ஆனந்தத்தையும் வளர்த்தவையும், சாகரத்தை எல்லையாகக் கொண்ட பூமியை பாதுகாப்பவை போலிருந்தவையுமான அவற்றில் {தோள்களில்},(6ஆ) வில்லின் நாண் அடிகளின் தழும்பைப் பெற்ற இடது புஜத்தையும்,{7அ} மஹாபரிகத்திற்கு ஒப்பானதும் {பெரும் இரும்புத்தடிக்கு ஒப்பானதும்},{7ஆ} ஆயிரக்கணக்கான பசுக்களை தானம் செய்ததும், மஹத்தானதுமான வலது புஜத்தையும் {மாற்றி மாற்றி} தலையணையாக வைத்துக் கொண்டான். "இன்று நான் சாகரத்தைக் கடக்கவேண்டும், அல்லது மரணமடைய வேண்டும்",{8} என்ற தீர்மானத்தைச் செய்து கொண்டவனும், திறன்மிக்கவனும், வலிமைநிறைந்த கரங்களைக் கொண்டவனுமான ராமன், விதிப்படி பொறுமையாகவும், அமைதியாகவும் அங்கே மஹோததியின் {பெருங்கடலின்} அருகில் கிடந்தான்[3].(7அ-9)
[2] மன்மதநாததத்தர் பதிப்பின் அடிக்குறிப்பில், "இராமன், ஒரே மனைவியை மணந்தவன் என்பதால், அவனது செவிலிப்பெண்கள் என்றே இந்தப் பெண்களை பொருள் கொள்ள வேண்டும் என இங்கே பொருத்தமான முறையில் உரையாசிரியர் குறிப்பிடுகிறார்" என்றிருக்கிறது.
[3] இந்த சர்க்கத்தின் முதல் சுலோகம் முதல் இதுவரையுள்ள பகுதி செம்பதிப்பான விவேக் தேவ்ராய் பதிப்பில் இடம்பெறவில்லை. இனி மேல் வரும் பகுதி செம்பதிப்பில் இந்த சர்க்கம் 14வது அத்தியாயமாக இடம்பெறுகிறது.
நியமத்துடனும் {கட்டுப்பாட்டுடனும்}, விழிப்புடனும் கூடிய அந்த ராமன், குசப்புற்களைப் பரப்பி மஹீதலத்தில் உறங்கிக் கிடக்கையில் மூன்று நிசிகள் {இரவுகள்} கடந்தன.(10) நயஜ்ஞனும், தர்மவத்சலனுமான {நயத்தை அறிந்தவனும், தர்மத்தை விரும்புகிறவனுமான} ராமன், மூன்று ராத்திரிகள் அங்கேயே சரிதாம்பதியான சாகரத்திற்காக {நதிகளின் தலைவனான கடலுக்காகக்} காத்திருந்தான்.(11) முறைப்படியான பிரயத்னத்துடன் ராமனால் பூஜிக்கப்பட்டாலும், மந்தனான சாகரன் ராமனிடம் தன் ரூபத்தைக் காட்டினானில்லை[4].(12)
[4] பூழி சென்று தன் திரு உருப் பெருந்தவும் பொறை தீர்வாழி வெங்கதிர் மணி முகம் வருடவும் வளர்ந்தான்ஊழி சென்றன ஒப்பன ஒரு பகல் அவை ஓர்ஏழு சென்றன வந்திலன் எறி கடற்கு இறைவன்- கம்பராமாயணம், 6594ம் பாடல், யுத்த காண்டம், வருணனை வழி வேண்டும் படலம்பொருள்: கடற்கரைப் புழுதி {ராமனின்} திரு உருவில் பொருந்தவும், குற்றம் நீங்கிய வெப்பம் கொண்ட சூரியனின் கதிர்கள் அழகிய முகத்தை வருடவும், {ராமன்} கண்களை மூடி படுத்திருந்தான். ஒரு நாள் கழிவது பல ஊழிக்காலங்கள் செல்வன போலிருந்தது. அத்தகைய ஏழு நாட்கள் கடந்தன. அலையெறியும் கடலரசன் {வருணன்} வந்தானல்லன். வால்மீகியில் ராமன் கடற்கரையில் 3 நாட்கள் காத்திருந்ததாகவும், கம்பனில் 7 நாட்கள் காத்திருந்ததாகவும் இருக்கிறது.
பிறகு சமுத்திரத்திடம் குரோதமடைந்து, கண்கள் சிவந்த ராமன், சுப லக்ஷணங்களைக் கொண்ட லக்ஷ்மணனின் சமீபத்தில் சென்று, இவ்வாறு சொன்னான்:(13) "தன்னைக் காட்டிக் கொள்ளாத அந்த சமுத்திரனுக்கு என்ன ஆணவம்? {கோபமில்லாத} அமைதி, பொறுமை, நேர்மை, பிரியவாதம் {இனிமையாகப் பேசுதல்} என்ற இந்த நற்குணங்கள்,{14} குணமற்றவரிடம் காட்டப்படும்போது, சாமர்த்தியமற்றவனுக்குரிய பலன்களையே கொடுக்கின்றன.(14,15அ) தற்புகழ்ச்சி செய்பவன், துஷ்டன் {தீமை செய்பவன்}, திருஷ்டன் {மதிப்பற்றவன்}, தூய்மைகெட்டவன், எங்கும் தண்டத்துடன் {தண்டிப்பதற்காகவே} திரிபவன் ஆகியோரையே உலகம் நன்றாக நடத்துகிறது.(15ஆ,16அ)
இலக்ஷ்மணா, இந்த உலகத்தில், போரின் முன்னணியில் சாமத்தால் {நல்வார்த்தையால்} கீர்த்தியடைவது சாத்தியமல்ல; மகிமையடைவதும் {சாத்தியம்} அல்ல, ஜயமடைவதும் {சாத்தியம்} அல்ல.(16ஆ,17அ) சௌமித்ரி {சுமித்திரையின் மகனே}, என் பாணங்களால் சிதறுண்ட மகராலயத்தின் {பெருங்கடலின்} நீர் எங்கும் சிதறும்போது, தாண்டிக் குதிக்கப் போகும் மகரங்களை {முதலைகளை} இதோ பார்ப்பாயாக.(17ஆ,18அ) இலக்ஷ்மணா, என்னால் சின்னாபின்னமாகப் போகும் போகிகளையும் {பாம்புகளையும்}, நாகங்களையும், மத்ஸ்யங்களையும் {மீன்களையும்}, மஹாபோகங்களையும் {பெரும்பாம்புகளையும்}, கரிணங்களையும் {கடல் யானைகளையும்} இதோ பார்ப்பாயாக.(18ஆ,19அ) இந்த மஹத்தான யுத்தத்தில், சங்குகள், நத்தைகள் {முத்துச்சிப்பிகள்} கூட்டத்துடனும், அதே போல மீன மகரங்களுடனும் {மீன்கள், முதலைகளுடனும்} கூடிய சமுத்திரத்தை இதோ வற்றச் செய்யப் போகிறேன்.(19ஆ,20அ) பொறுமையுடன் கூடிய என்னை இந்த மகராலயம் சாமர்த்தியமற்றவனாக நடத்துகிறது {கருதுகிறது}. இத்தகைய ஜனங்கள் பொறுமையைக் குறித்து அறிவதில்லை.(20ஆ,21அ)
எனது சாமத்தால் {நான் நற்சொற்கள் பேசிக் கொண்டிருப்பதால்} சாகரன் தன் ரூபத்தைக் காட்டவில்லை.{21ஆ} சௌமித்ரியே {சுமித்திரையின் மகனே}, வில்லையும், விஷமிக்க பாம்புகளுக்கொப்பான சரங்களையும் எடுப்பாயாக. பிலவங்கமர்கள் {தாவிச் செல்பவர்களான வானரர்கள்} பாதநடையாகச் செல்லும் வகையில் சமுத்திரத்தை நான் வற்றச் செய்யப் போகிறேன்.(21ஆ,22) குரோதமடைந்திருக்கும் நான், கலங்கடிக்க முடியாத சாகரத்தை இதோ கலங்கடிக்கப்போகிறேன். கரையை எல்லையாகக் கொண்டதும், ஆயிரக்கணக்கான அலைகளுடன் கலங்கிக் கொண்டிருப்பதுமான,{23} வருணாலயத்தை என் சாயகங்களால் {கணைகளால்} எல்லையற்றதாகச் செய்யப் போகிறேன். மஹா தானவர்களுடன் கூடிய இந்த மஹார்ணவத்தை {பெருங்கடலைக்} கலங்கடிக்கப் போகிறேன்" {என்றான் ராமன்}.(23,24)
இவ்வாறு சொல்லிவிட்டு, குரோதத்தால் எரியும் கண்களுடன் கூடிய ராமன், கையில் தனுசை {வில்லை} ஏந்திக் கொண்டு, வெல்வதற்கரிய யுகாந்த அக்னியைப் போல எரிபவனாகத் தெரிந்தான்.(25) கோரமான தனுவை வளைத்து, தன் பலத்தால் ஜகத்தை நடுங்கச்செய்து, சதக்ரதுவின் உக்கிர வஜ்ரங்களை {இந்திரனின் கடும் இடிகளைப்} போன்ற சரங்களை ஏவினான்.(26) மஹாவேகம் கொண்ட அந்த உத்தம சாயகங்கள் {கணைகள்}, தேஜஸ்ஸால் ஜுவலித்தபடியே, அச்சுறுத்தும் பன்னகங்களை {பாம்புகளைப்} போல, சமுத்திரத்தின் ஜலத்தைத் துளைத்தன.(27) மீன மகரங்களுடன் {மீன்களுடனும், முதலைகளுடனும்} கூடிய சமுத்திரம், மாருதன் வீச்சில் உண்டான மஹத்தான அந்த நீர் வேகத்தால் மஹா கோரமாகக் காட்சியளித்தது.(28)
பேரலை ஜாலங்களுடன் {வரிசைகளால்} விரிவதும், சங்கு, சிப்பிகளால் நிறைந்ததுமான மஹோததி {பெருங்கடல்}, திடீரென புகையால் சூழப்பட்ட அலைகளுடன் கூடியதாக மாறியது.(29) ஒளிரும் முகங்களையும், ஒளிரும் கண்களையும் கொண்ட பன்னகங்களும் {பாம்புகளும்}, பாதாளவாசிகளும், மஹா வீரியர்களுமான தானவர்களும் துன்புற்றனர்.(30) அப்போது, விந்தியத்தையும், மந்தரத்தையும் நிகர்த்தவையான ஆயிரக்கணக்கான அலைகள், முதலைகளோடும், மீன்களோடும் கூடியவையாக சிந்துராஜனில் {சமுத்திரத்தில்} பொங்கின.(31) சுழலும் அலை வரிசைகளுடன் கூடிய வருணாலயம் {பெருங்கடல்}, கலக்கமடைந்த உரகங்களுடனும் {பாம்புகளுடனும்}, ராக்ஷசர்களுடனும், பெரும் முதலைகளுடனும் பொங்கியது.(32)
அப்போது, சௌமித்ரி {சுபத்திரையின் மகனான லக்ஷ்மணன்}, உக்கிர வேகத்துடன் ஒப்பற்ற தனுவை வளைத்துக் கொண்டிருந்த ராகவனிடம் {ராமனிடம்} விரைந்து சென்று, பெருமூச்சு விட்டபடியே, "வேண்டாம். வேண்டாம்" என்று சொல்லிவிட்டு, தனுசையும் பற்றிக் கொண்டான்.(33)
"ஆரியரே, உததியை {கடலை} அழிக்காமலே, வீராத்மாவான உம்முடைய காரியம் இப்போதே நிறைவேறும். உம்விதமானவர்கள் குரோதவசப்படக்கூடாது. சாதுக்களின் விருத்தத்தையே {நல்லோரின் நடைமுறையையே} பின்பற்றுவீராக" {என்றான் லக்ஷ்மணன்}.(34)
அந்தரிக்ஷத்தில் அந்தர்ஹிதமாக இருந்த {ஆகாயத்தில் மறைந்திருந்த} பிரம்மரிஷிகளும், ஸுரரிஷிகளும் {தெய்வீக முனிவர்களும்}, "இது கஷ்டம்; வேண்டாம், வேண்டாம்" என்று மஹத்தான ஸ்வரத்தில் சப்தமிட்டு சொன்னார்கள்.(35)
யுத்த காண்டம் சர்க்கம் – 021ல் உள்ள சுலோகங்கள்: 35
Previous | | Sanskrit | | English | | Next |