Sacred Sanctuary | Sundara-Kanda-Sarga-43 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: வேள்வி மண்டபத்தை அழிக்க நினைத்து, அதை எரித்த ஹனுமான்; ராக்ஷசர்களை எச்சரித்தது...
கிங்கரர்கள் கொல்லப்பட்ட பிறகு, அந்த ஹனுமான் {பின்வருமாறு} தியானத்தில் ஆழ்ந்தான், "வனம் என்னால் பங்கமடைந்தது. சைத்திய பிராசாதம் {வேள்வி மண்டபம்} நாசமடையவில்லை.{1} எனவே, இப்போதே நான் இந்த பிராசாதத்தை அழிக்கப்போகிறேன்[1]" என்று இவ்வாறு மனத்திற்குள் சிந்தித்த ஹனுமான், தன் பலத்தைக் காட்டினான்.{2} ஹரிசிரேஷ்டனும், மாருதாத்மஜனுமான ஹனுமான், குதித்தெழுந்து, மேரு சிருங்கத்தைப் போல் உன்னதமான {உயரமான} சைத்திய பிராசாதத்தின் மீது ஏறினான்.(1-3) மஹாதேஜஸ்வியான அந்த ஹரியூதபன் {குரங்குக்குழுத் தலைவனான ஹனுமான்}, கிரிக்கு ஒப்பான பிராசாதத்தில் ஏறி உதிக்கும் மற்றொரு சூரியனைப் போல ஒளிர்ந்தான்.(4)
[1] கம்பன் டிரஸ்ட் வெளியிட்ட கம்பராமாயணம் - இராமாவதாரம் புத்தகத்தில், சுந்தரகாண்டம், பொழில் இறுத்த படலம், 5478ம் பாடலின் அடிக்குறிப்பில், "சயித்தம் -சைத்தியம் என்னும் வடமொழியின் தமிழ்வடிவம் ஓமம் வேள்வி முதலியன புரியும் மண்டபம். வானோங்கு சிமயத்து வாலொளி சயித்தம் - மணிமேகலை 28:131" என்றிருக்கிறது. மன்மதநாததத்தர் பதிப்பின் அடிக்குறிப்பில், "தேவர்களுக்கென வடிவமைக்கப்பட்ட கட்டடம்" என்றிருக்கிறது.
வெல்வதற்கரிய உத்தம சைத்திய பிராசாதத்தைத் தாக்கிய ஹனுமான், லக்ஷ்மியால் {வெற்றியால்} ஜொலித்து, பாரியாத்ரத்திற்கு {பாரியாத்ர மலைக்கு} ஒப்பானவன் ஆனான்.(5) மாருதாத்மஜன் {வாயுமைந்தன் ஹனுமான்}, தன் பிரபாவத்தால் மஹாகாயம் {பேருடல்} படைத்தவனாகி, பலமாகத் தோள்களைத் தட்டி, அந்த சப்தத்தால் லங்கையை நிறைத்தான்.(6) தோள்களைத் தட்டுவதால் உண்டானதும், செவிகளைப் பிளக்கவல்லதுமான அந்த மஹத்தான சத்தத்தால், அங்கே விஹங்கமங்கள் {பறவைகள்} விழுந்தன. சைத்திய பாலர்களும் {வேள்வி மண்டபத்தைக் காத்த காவலர்களும்} திகைத்தனர்.(7)
{அப்போது ஹனுமான்}, "அஸ்திரவித்தான ராமருக்கும், மஹாபலவானான லக்ஷ்மணருக்கும் ஜயம் உண்டாகட்டும். இராகவரால் ஆளப்படும் சுக்ரீவ ராஜாவுக்கும் ஜயம் உண்டாகட்டும்.{8} களைப்பின்றி கர்மங்களைச் செய்பவரும், கோசலேந்திரருமான ராமரின் தாசனான {கோசல நாட்டின் தலைவருமான ராமரின் அடியவனான} நான், சத்ரு சைனியங்களை அழிக்கவல்லவனும், மாருதாத்மஜனுமான {பகைவரின் படைகளை அழிக்கவல்லவனும், வாயுமைந்தனுமான} ஹனுமான் ஆவேன்.{9} ஆயிரக்கணக்கான கற்களையும், மரங்களையும் கொண்டு தாக்கவல்லவனான எனக்கு, யுத்தத்தில் ஆயிரம் ராவணர்களும் பிரதிபலம் {என்னை எதிர்க்குமளவிற்கான பலம்} கொண்டவராக மாட்டார்கள்.{10} சர்வராக்ஷசர்களின் கண்ணெதிரிலேயே, லங்காம்புரியை அழித்து, மைதிலியை வணங்கி, அர்த்தம் {நோக்கம்} நிறைவேறியவனாகவே திரும்பிச் செல்லப் போகிறேன்" {என்றான்}[2].(8-11) சைத்தியஸ்தர்களிடம் {வேள்விமண்டபத்தில் இருந்தவர்களிடம்} இவ்வாறு சொல்லிவிட்டு, விமானத்தில் நின்றபடியே பயங்கர முழக்கம் செய்த ஹரியூதபன் {குரங்குக் குழுத்தலைவன் ஹனுமான்}, ராக்ஷசர்களுக்கு பயத்தை உண்டாக்கும்படி நாதம் செய்தான்.(12)
[2] கிட்டத்தட்ட சென்ற சர்க்கத்தில், 33 முதல் 36 வரை இருக்கும் சுலோகங்களே இங்கேயும் வருகின்றன.
அந்த மஹத்தான சப்தத்தால் நாற்றுக்கணக்கான சைத்திய பாலர்களும், விதவிதமான அஸ்திரங்களையும், பிராசங்கள் {ஈட்டிகள்}, கட்கங்கள் {வாள்கள்}, பரஷ்வதங்கள் {கோடரிகள்} ஆகியவற்றையும் எடுத்துச் சென்று,{13} அவற்றை ஏவியபடியே மஹாகாயனான மாருதியை {பேருடல் படைத்தவனான வாயு மைந்தன் ஹனுமானைச்} சூழ்ந்து கொண்டனர்.(13,14அ) விசித்திரமான கதைகளையும் {கதாயுதங்களையும்}, பரிகங்களையும், காஞ்சனத்தால் அலங்கரிக்கப்பட்டவையும்,{14} ஆதித்யனுக்கு ஒப்பானவையுமான சரங்களையும் கொண்டு அவர்கள் அந்த வானரசிரேஷ்டனை {வானரர்களில் சிறந்தவனான ஹனுமானைத்} தாக்கினர். கங்கையின் நீரில் பெரிதும் விரிந்திருக்கும் நீர்ச்சுழலைப் போல,{15} அந்த ராக்ஷசகணங்களால் சூழப்பட்ட ஹரிசிரேஷ்டன் {குரங்குகளில் சிறந்த ஹனுமன்} ஒளிர்ந்து கொண்டிருந்தான்.(14ஆ-16அ)
அப்போது குரோதமடைந்த வாதாத்மஜன் {வாயு மைந்தன் ஹனுமான்}, பயங்கர ரூபத்தை ஏற்றான்.{16} பிறகு, மாருதாத்மஜனான ஹனூமான், அந்த பிராசாதத்தில் ஹேமத்தால் {அந்த மண்டபத்தில் தங்கத்தால்} அலங்கரிக்கப்பட்டிருந்த மஹாஸ்தம்பத்தை {பெருந்தூணை} வேகமாகப் பெயர்த்தெடுத்தான்.{17} பிறகு, அந்த மஹாபலவான் நூறு முனைகளைக் கொண்ட அதை {அந்த ஸ்தம்பத்தைச்} சுழற்றினான்.(16ஆ-18அ) அங்கே உண்டான அக்னியில் பிராசாதம் எரிந்து அழிந்தது.{18} பிராசாதம் எரிவதைக் கண்ட அந்த ஹரியூதபன் {குரங்குக் குழுத் தலைவன் ஹனுமான்}, வஜ்ரத்தால் அசுரர்களை {கொல்லும்} இந்திரனைப் போல, சதராக்ஷசர்களையும் {அந்த நூறு ராட்சசர்களையும்} கொன்றான்.{19}
அந்தரிக்ஷத்தில் இருந்த ஸ்ரீமான் {வானத்தில் இருந்த ஹனுமான்} இந்த வசனத்தைச் சொன்னான்:(18ஆ-20அ) "என்னைப் போன்றவர்களான ஆயிரக்கணக்கான மஹாத்மாக்கள் அனுப்பப்பட்டிருக்கின்றனர்.{20} பலவானான வானரேந்திரர் சுக்ரீவரின் வசம் {கட்டுப்பாட்டில்} இருந்த வானரர்களான நாங்கள், வசுதை {பூமி} முழுவதும் சுற்றித் திரிகிறோம்.(20ஆ-21) சிலர் தசநாக {பத்து யானைகளின்} பலம் கொண்டவர்கள்; சிலர் அதிலும் பத்து மடங்கானவர்கள் {நூறு யானைகளின் பலம் கொண்டவர்கள்}; மேலும் சிலர் ஆயிரம் யானைகளுக்குத் துல்லியமான விக்கிரமத்தைக் கொண்டவர்கள்.(22) சிலர் ஓக பலம் {காட்டு வெள்ளத்தின் பலம்} கொண்டவர்கள்; சிலர் வாயுவுக்கு ஒப்பான பலம் கொண்டவர்கள்; இன்னும் சில ஹரியூதபர்கள் அளவிட முடியாத பலம் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.(23) தந்தங்களையும் {பற்களையும்}, நகங்களையும் ஆயுதங்களாகக் கொண்டவர்களும், சத, ஆயுத, சதசஹஸ்ர, {நூறு, பத்தாயிர, நூறாயிர} கோடிக்கணக்கானவர்களும் அத்தகைய ஹரிக்கள் சூழ, உங்கள் அனைவரையும் அழிக்கவல்ல சுக்ரீவர் வரப்போகிறார்.(24,25அ) மஹாத்மாவான இக்ஷ்வாகுநாதரிடம் வைரம் {ராமரிடம் பகை} கொண்டதால் இந்த லங்காபுரி இல்லாமல் போகும். நீங்களும், ராவணனும் இல்லாமல் போவீர்கள்" {என்றான் ஹனுமான்}.(25ஆ,26)
சுந்தர காண்டம் சர்க்கம் – 43ல் உள்ள சுலோகங்கள்: 26
Previous | | Sanskrit | | English | | Next |