Assurance to protect | Aranya-Kanda-Sarga-06 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: இராக்ஷசர்களிடமிருந்து பாதுகாக்க ராமனை நாடிய முனிவர்கள்; முனிவர்களுக்கு அபயமளித்த ராமன்...
சரபங்கர் ஸ்வர்க்கத்தை அடைந்ததும், முனி சங்கத்தினர் {முனிவர்களின் கூட்டம்} ஒன்றாகக் கூடி தேஜஸ்ஸில் ஜொலிக்கும் காகுத்ஸ்தனான ராமனை அணுகினர்.(1) வைகானஸர்கள் (பிரஜாபதியின் நகங்களில் பிறந்தவர்கள்), வாலகில்யர்கள் (பிரஜாபதியின் ரோமங்களில் பிறந்தவர்கள்), ஸம்பிரக்ஷாளர்கள் (பிரஜாபதியின் கால் கழுவிய நீரில் பிறந்தவர்கள்), மரீசிபர்கள் (சூரிய சந்திர கதிர்களைப் பருகுபவர்கள்), அஸ்மகுட்டர்கள் (கல்லால் தானியங்களை இடித்து உண்பவர்கள்}, பத்ராஹாரர்கள் {இலைகளைப் புசிக்கும் பல தபஸ்விகள்} போன்ற தபஸ்விகளும்,(2) தந்தோலூகலர்கள் (பற்களால் தானியங்களை அரைத்து உண்பவர்கள்), உன்மஜ்ஜகர்கள் (கழுத்தளவு நீரில் நின்று தபம் செய்பவர்கள்), காத்திரசய்யர்கள் (தங்கள் தோள்களிலேயே உறங்குபவர்கள்), அஸய்யர்கள் (படுக்கை இல்லாமல் உறங்குபவர்கள்), அவகாசகர்கள் (வெட்டவெளியில் தபம் செய்பவர்கள்),(3) ஸலிலாஹாரர்கள் (நீரை உணவாகக் கொண்டவர்கள்), வாயுபக்ஷர்கள் (காற்றை உணவாகக் கொண்டவர்கள்}, ஆகாஸ நிலையர்கள் (ஆகாயத்திலேயே நிற்பவர்கள்), ஸத்தண்டிலசாயிகள் (தரையிலே படுத்து உறங்குபவர்கள்) போன்ற முனிவர்களும்,(4) விரதோபவாஸிகள் (விரதமும் உபவாசமும் இருப்பவர்கள்), தாந்தர்கள் (புலன்களை வென்றவர்கள்), ஆர்த்ரபடர்கள் (ஈரத்துணி உடுப்பவர்கள்), ஸஜபர்கள் (சதா ஜபம் செய்பவர்கள்), தபோநித்யர்கள் (சதா தபம் செய்யும் பரமாத்மயோகிகள்), பஞ்சதபர்கள் {பஞ்சாக்கினிதவம் செய்பவர்கள்} ஆகியோரும்,(5) பிராமிய {பிரம்ம} ஒளியுடன் செழித்தவர்களும், திடமான யோகக் கட்டுப்பாடு கொண்டவர்களுமான தாபஸ்விகள் அனைவரும் சரபங்கரின் ஆசிரமத்தில் இருந்த ராமனை அணுகினர்.(6)
தர்மஜ்ஞர்களான ரிஷி சங்கத்தினர் ஒன்றாகக் கூடி தர்மத்தை ஆதரிப்பவர்களில் சிறந்தவனும், பரம தர்மஜ்ஞனுமான {தர்மங்களை அறிந்தவர்களில் உயர்ந்தவனுமான} ராமனை அணுகி, {பின்வருமாறு} சொன்னார்கள்:(7) "மஹாரதனே {பெரும் போர்வீரனே}[1], தேவர்களின் தலைவனான மகவானை {இந்திரனைப்} போல நீ இக்ஷ்வாகு குலத்திற்கும், இந்தப் பிருத்விக்கும் {பூமிக்கும்} நாதனாவாய்.(8) உன் துணிவும், புகழும், சத்தியம், தர்மம் ஆகியவற்றிலும், பிதாவிடத்திலும், நீ கொண்ட பக்தியும், மூவுலகங்களாலும் நன்கறியப்பட்டவை.(9) நாதா, எங்களைப் பொறுத்துக் கொள்வாயாக. மஹாத்மாவும், தர்மஜ்ஞனும் {தர்மத்தை அறிந்தவனும்}, தர்மவத்சலனுமான {தர்மத்தில் விருப்பமுள்ளவனுமான} உன்னை வேண்டிக் கேட்டுக் கொள்வதற்காகவே உன்னிடம் வந்திருக்கிறோம்.(10)
[1] பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "இது {மஹாரதன் என்பது} பெரும் போர்வீரனைக் குறிக்கும். அதிலும் குறிப்பாக ஒரு மஹாரதன் என்பவன் பத்தாயிரம் போர்வீரர்களை எதிர்த்துத் தனியாகப் போரிடக்கூடியவன்" என்றிருக்கிறது.
நாதா, ஆறில் ஒரு பாகத்தை பலியாக {வரியாக} அடையும் எந்த மஹீபதி {பூமியின் அதிபதி}, புத்திரர்களைப் போல {குடிமக்களை} ரக்ஷிக்கவில்லையோ, அவன் மஹத்தான அதர்மம் செய்தவனாவான்.(11) குடிமக்கள் அனைவரையும் பிராணனைவிட விருப்பத்திற்குரியவர்களான தன் மகன்களைப் போலவும், நித்தியம் நீதியுடன் கவனித்து, பிராணனைக் கொடுத்து சதா ரக்ஷிப்பவன் எவனோ, அவன் நீண்ட வருடங்கள் நிலைத்து நீடிக்கும் சாஸ்வத கீர்த்தியையும் {அழியாத புகழையும்}, பிரஹ்மண ஸ்தானத்தையும் {பிரம்மலோகத்தில் ஓரிடத்தையும்} அடைந்த பிறகும் எப்போதும் செழித்திருப்பான்.(12,13) பிரஜைகளை தர்மப்படி ரக்ஷிக்கும் ஒரு ராஜன், கிழங்கும், பழமும் உண்ணும் ஒரு முனிவனின் பரம தர்மத்தில் {யாகங்கள், தபங்கள் போன்ற உயர்ந்த கடமைகளின் புண்ணியத்தில்} நான்கில் ஒரு பாகத்தை அடைவான்.(14)
இராமா, நீ நாதனாக இருக்கையில், பெரும்பாலும் பிராமணர்களாக இருக்கும் இந்த மஹான்களும், எங்களைப் போன்ற வானப்ரஸ்த கணங்களும்[2] அநாதைகளை {நாதனற்றவர்களைப்} போல ராக்ஷசர்கள் பலரால் கொல்லப்படுகிறோம்.(15) வனத்திற்கு வந்து பார். கோரமான ராக்ஷசர்களால் கொல்லப்பட்டவர்களும், ஆத்மாவை உணர்ந்தவர்களுமான முனிவர்கள் பலரின் சரீரங்களைக் காண்பாய்.(16) பம்பா நதிக்கரையில் குடியிருப்பவர்கள் முதல், மந்தாகினியின் அருகில் உள்ள சித்திரகூடத்தில் குடியிருப்பவர்கள் வரை பெருமளவில் படுகொலை செய்யப்படுகின்றனர்[3].(17) இந்நிலையில், வனத்தில் பயங்கரச் செயல்களைச் செய்யும் ராக்ஷசர்களின் கோரத் தாக்குதல்களை தபஸ்விகளான எங்களால் பொறுத்துக் கொள்ள இயலவில்லை.(18) இராமா, சரணடையத் தகுந்தவனான உன்னிடம் அடைக்கலம் நாடி வந்திருக்கிறோம். நிசாசரர்களால் {இரவுலாவிகளால்} கொல்லப்படும் எங்களை நீ பரிபாலிப்பாயாக {காப்பாயாக}[4].(19) வீரா, பிருத்வியில் உன்னைத் தாண்டிய பரகதி {உயர்ந்த வழி} வேறேதும் இல்லை. நிருபாத்மஜா {ராஜகுமாரா}, ராக்ஷசர்களிடம் இருந்து எங்கள் அனைவரையும் காப்பாயாக" {என்றனர்}.(20)
[2] பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "வாழ்வின் நான்கு நிலைகளில் (ஆசிரமங்களில்) முதலில் வருவது பிரம்மசரியம், அடுத்தடுத்து தொடர்வது கிருஹஸ்தம் {இல்லறம்}, வானப்ரஸ்தன் {காட்டில் ஓய்ந்த வாழ்நிலை}, சந்நியாசம் {துறவறம்} ஆகியவை. ஒருவன் காட்டில் ஓயச் செல்வது வானப்ரஸ்த நிலையாகும்" என்றிருக்கிறது.
[3] அதாவது, "மந்தாகினியின் {யமுனையின் கிளை நதியாகவும் இருக்கலாம், அல்லது யமுனை மெதுவாகப் பாயும் இடமாகவும் இருக்கலாம். அந்த நதியின்} அருகில் இருக்கும் சித்திரகூடத்திலிருந்து, பம்பை நதிக்கரைவரையுள்ள மக்கள் ராட்சசர்களால் படுகொலை செய்யப்படுகின்றனர்" என்பது இங்கே பொருள்.
[4] உருளுடை நேமியால் உலகை ஓம்பியபொருளுடை மன்னவன் புதல்வ போக்கிலாஇருளை வைகலெம் இரவி தோன்றினாய்அருளுடை வீர நின் அபயம் யாம் என்றார்- கம்பராமாயணம் பாடல் 2646ம் பாடல்பொருள்: எங்கும் செல்லும் ஆணையெனும் சக்கரத்தால் {உலகம் முழுவதையும்} காத்தவனும், செல்வங்களைக் கொண்டவனுமான மன்னவன் புதல்வா, அருளுடைய வீரா, நீங்காத இருள் சூழ்ந்த நாட்களைக் கொண்டவர்களான எங்களுக்கு ரவியாக {சூரியனாகத்} தோன்றினாய். உன் அபயம் நாங்கள் {உனது அடைக்கலம் நாங்கள்} என்றனர்.
தபஸ்விகள் இவ்வாறு சொன்னதைக் கேட்ட தர்மாத்மாவான அந்தக் காகுத்ஸ்தன் {ராமன்}, தபங்களில் ஈடுபடுபவர்களான அந்த தபஸ்விகள் அனைவரிடமும் இதைச் சொன்னான்:(21) "என்னிடம் இவ்வாறு பேசுவது தகாது. தபஸ்விகளே, எனக்கு ஆணையிடுங்கள். கேவலம் ஆத்மகாரியத்திற்காகவே {என் காரியத்திற்காக மட்டுமே} நான் வனத்தில் பிரவேசித்தேன்.(22) உங்களுக்கு எதிராக இவ்வாறு ராக்ஷசர்கள் தொடுக்கும் தாக்குதல்களைத் தடுக்கவே என் பிதாவின் ஆணைக்குக் கீழ்ப்படிந்து இந்த வனத்திற்குள் பிரவேசித்திருக்கிறேன் {என்பது இப்போது தெரிகிறது}.(23) எதேச்சையாக {தற்செயலாக} உங்கள் நோக்கத்தை நிறைவேற்ற நான் வந்துள்ளேன். இவ்வாறு வந்த எனக்கு, இந்த வனவாசம் மஹாபலனை விளைவிக்கப் போகிறது[5].(24) நான், தபஸ்விகளின் சத்ருக்களான ராக்ஷசர்களைப் போரில் கொல்ல விரும்புகிறேன். தபோதனர்களான ரிஷிகளே, உடன் பிறந்தானுடன் கூடிய என் வீரியத்தை நீங்கள் {விரைவில்} காண்பீர்" {என்றான் ராமன்}.(25)
[5] புகல் புகுந்திலரேல் புறத்து அண்டத்தின்அகல்வரேனும் என் அம்பொடு வீழ்வரால்தகவு இல் துன்பம் தவிருதிர் நீர் எனாபகலவன் குல மைந்தன் பணிக்கின்றான்.வேந்தன் வீயவும் யாய் துயர் மேவவும்ஏந்தல் ஏம்பி வருந்தவும் என் நகர்மாந்தர் வன்துயர் கூரவும் யான் வனம்போந்தது என்னுடைப் புண்ணியத்தால் என்றான்- கம்பராமாயணம் 2647, 2648ம் பாடல்கள், அகத்தியப் படலம்பொருள்: "இந்தப் பகலவன் {சூரிய} குல மைந்தன், 'அரக்கர்கள் அடைக்கலம் புகாமல், அப்புறத்தில் உள்ள அண்டங்களுக்கு அகன்று சென்றாலும் என் அம்போடே வீழ்வார்கள் என்பதால், உங்களுக்குத் தகாத இத்துன்பத்தை தவிர்ப்பீர்' என்று பணிக்கிறான்.(2647) வேந்தன் {தசரதர்} இறக்கவும், தாய் {கௌசல்யை} துயரடையவும், தம்பி {பரதன்} வருந்தவும், என் நகர் மாந்தர் {அயோத்தி மக்கள்} வன்துயரடையவும் நான் வனம் வந்தது என் புண்ணியமாகும்" என்றான் {ராமன்}.(2648)
தர்மத்தில் திடாத்மாவான அந்த வீரன் {ராமன்}, அந்த தபோதனர்களுக்கு அபயம் அளித்து, லக்ஷ்மணனுடனும், தபோதனர்களுடனும், ஆரியனால் தத்தம் செய்யப்பட்டவளுடனும் {ஜனகனால் கொடுக்கப்பட்ட சீதையுடனும்} சேர்ந்து சுதீக்ஷ்ணரை {சுதீக்ஷ்ணர் இருக்கும் இடத்தை} நோக்கிச் சென்றான்.(26)
ஆரண்ய காண்டம் சர்க்கம் – 06ல் உள்ள சுலோகங்கள்: 26
Previous | | Sanskrit | | English | | Next |