Sunday 30 October 2022

பரத்வாஜரை அடைந்த பரதன் | அயோத்தியா காண்டம் சர்க்கம் - 090 (24)

Bharata met Bharadwaja | Ayodhya-Kanda-Sarga-090 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: பரத்வாஜரைக் காணப் புறப்பட்ட பரதன்; பரதனையும், வசிஷ்டரையும் வரவேற்ற பரத்வாஜர்; இராமனைத் திருப்பி அழைத்து வரும் தன் எண்ணத்தை வெளிப்படுத்திய பரதன்...

Bharadwaja, Vasishta and Bharata

தர்மத்தை அறிந்தவனான அந்த நரரிஷபன் {மனிதர்களில் காளையான பரதன்}, குரோச தூரத்தில்[1] இருந்து பரத்வாஜரின் ஆசிரமத்தைக் கண்டு, தன் சர்வ பலத்தையும் {படைகள் அனைத்தையும் அங்கேயே} நிறுத்தி விட்டு, சஸ்திரங்களையும் {ஆயுதங்களையும்}, ஆபரணங்களையும் விலக்கி விட்டு,  வெண்பட்டு வஸ்திரத்தை மட்டுமே உடுத்திக் கொண்டு[2], தன் புரோஹிதரை {வசிஷ்டரை} முன்னிட்டுக் கொண்டு, மந்திரிமார்களுடன் பாத நடையாக நடந்து சென்றான்.(1,2) அதன் பிறகு அந்த ராகவன் {பரதன்}, பரத்வாஜரைக் கண்டதும், {பரத்வாஜரின் பார்வை படும் தொலைவில்} மந்திரிகளை நிறுத்திவிட்டுத் தன் புரோஹிதரை {வசிஷ்டரைப்} பின்தொடர்ந்து சென்றான்.(3)

[1] ஒரு குரோசம் என்பது ஏறக்குறைய 2 மைல்களாகும். மேலதிக தகவலுக்கு அயோத்தியா காண்டம் - 54ம் சர்க்கத்தின் 3ம் அடிக்குறிப்பைக் காண்க 

[2] நரசிம்மாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், "முன்பு மரவுரி உடுத்துவதாகச் சொல்லியிருக்க இங்குப் பட்டு வஸ்த்ரந் தரித்தானென்பது எப்படி யென்னில் முன் மரவுரி உடுத்துவதாக ப்ரதிஜ்ஞை மாத்ரஞ் செய்தானாகையால் பரத்வாஜாச்ரமத்திற்கு வந்த பின்பே அதை அனுஷ்டித்தானென்று தெரிகின்றது" என்றிருக்கிறது.

மஹாதபஸ்வியான பரத்வாஜர், வசிஷ்டரைக் கண்டதும், "அர்க்கியம் {விருந்தினர் கைக் கழுவுவதற்கான நீரைக் கொண்டு வாருங்கள்}" என்று தன் சிஷ்யர்களிடம் சொல்லிவிட்டுத் தன் ஆசனத்தில் இருந்து துரிதமாக எழுந்தார்.(4) வசிஷ்டரைச் சந்தித்ததும், பரதனால் வணங்கப்பட்ட அந்த மஹாதேஜஸ்வி {பரத்வாஜர்}, அவன் தசரதனின் மகன் என்பதை உணர்ந்தார்.(5) தர்மத்தை அறிந்தவரான அவர், அவ்விருவருக்கும் முறைப்படி அர்க்கியத்தையும் {கைக்கழுவுவதற்கான நீரையும்}, பாத்தியத்தையும் {கால்களைக் கழுவுவதற்கான நீரையும்} கொடுத்த பிறகு, பழங்களையும் கொடுத்துவிட்டு, குல குசலத்தை {குடும்ப நலத்தை} விசாரித்தார்.(6) அயோத்தி, பலம் {படை}, கருவூலம் ஆகியவற்றின் நலத்தையும், மித்ரர்கள் {நண்பர்கள்}, மந்திரிகள் ஆகியோரின் நலத்தையும் அவர் விசாரித்தார். தசரதர் இறந்ததை அறிந்ததால் அந்த ராஜனைக் குறித்து அவர் ஏதும் பேசாதிருந்தார்.(7) வசிஷ்டரும், பரதனும் சரீரம், அக்னி {வேள்வி நெருப்பு}, விருக்ஷங்கள் {மரங்கள்}, சீடர்கள், மிருகங்கள், பக்ஷிகளின் நலங்குறித்து அவரிடம் விசாரித்தனர்.(8)

மஹாதபஸ்வியான பரத்வாஜர், "அனைத்தும் நலமே" என்று மறுமொழி கூறிவிட்டு, ராகவனிடம் {ராமனிடம்} கொண்ட சினேக பந்தத்தினால் பரதனிடம் இதைச் சொன்னார்:(9) "இராஜ்ஜியத்தை ஆள்பவனான நீ, இங்கே என்ன காரியத்திற்காக வந்திருக்கிறாய்? அனைத்தையும் எனக்குச் சொல்வாயாக. என் மனம் தெளிவடையவில்லை.(10) பகைவரை அழிப்பவனும், ஆனந்தத்தை அதிகரிக்கக் கௌசல்யையிடம் பிறந்தவனும் {தன்னைப் பெற்ற கௌசல்யையின் ஆனந்தத்தை அதிகரிப்பவனும்} எவனோ, அவன் {அந்த ராமன்} தன்னுடன் பிறந்தானோடும் {லக்ஷ்மணனோடும்}, தன் பாரியாளோடும் {சீதையோடும்} நெடுங்கால வனத்திற்கு நாடுகடத்தப்பட்டான். அந்த மகிமை பொருந்தியவன் {ராமன்}, சதுர்தச வருடங்கள் {பதினான்கு ஆண்டுகள்} வனவாசம் செய்யும்படி ஒரு ஸ்திரீயுடைய தூண்டுதலின் பேரில் தன் பிதாவால் கண்டிக்கப்பட்டான். நீ இடையூறின்றி ராஜ்ஜியத்தை அனுபவிப்பதற்காக, தம்பியுடன் சென்ற அந்த அப்பாவிக்கு {பாவமற்ற ராமனுக்கு} நீ இப்போது பாபம் இழைக்க விரும்புகிறாயா?" {என்று கேட்டார் பரத்வாஜர்}.(11-13) 

அவர் இவ்வாறு சொன்னதும், பரதன் துக்கத்தால் கண்ணீர் நிறைந்த கண்களுடன், மன வருத்தத்தால்  தழுதழுத்த சொற்களில் பரத்வாஜருக்கு {பின்வருமாறு} பதிலளித்தான்:(14) "பகவானே, நீரே என்னை இவ்வாறு நினைத்தால் உண்மையில் நான் அழிந்தேன். என்னிடம்  தோஷமேதும் {குற்றமேதும்} இல்லை. இவ்வாறு என்னைக் குற்றஞ்சாட்டாதீர்.(15) நான் இல்லாதபோது, என் மாதா சொன்னவை எனக்கு உவப்பானவையல்ல. அவை எனக்கு திருப்தியளிப்பவையல்ல. அவளது சொற்களை நான் ஏற்கவில்லை.(16) அந்த நரவியாகரரின் {மனிதர்களில் புலியான அந்த ராமரின்} பாதங்களில் விழுந்து வணங்கி, அவரை சமாதானப்படுத்தி, அயோத்திக்கு அழைத்துச் செல்லவே நான் இங்கே வந்திருக்கிறேன்.(17) பகவானே, நான் வந்திருக்கும் நோக்கத்தை எண்ணி, மஹீபதியான ராமர் இப்போது எங்கே இருக்கிறார் என்பதை எனக்குச் சொல்லி அருள்புரிவதே உமக்குத் தகும்" {என்றான் பரதன்}.(18)

வசிஷ்டாதிகளாலும் {வசிஷ்டர் முதலியோராலும்}, ரித்விக்குகளாலும் இவ்வாறே வேண்டிக் கொள்ளப்பட்ட பரத்வாஜ பகவான், {பின்வரும்} இந்தச் சொற்களை பரதனிடம் அருளினார்:(19) "புருஷவியாகரா {மனிதர்களில் புலியே}, குருவிடம் நல்ல முறையில் நடந்தலும், தற்கட்டுப்பாட்டுடன் கூடிய சாதுக்களை {நல்லவர்களைப்} பின்பற்றி நடத்தலும் ராகவ வம்சத்தவனான உனக்குத் தகுந்ததே.(20) உன் மனத்தில் இருப்பதை நான் அறிவேன். அளவற்ற உன் புகழ் அதிகரிப்பதை உறுதி செய்யவே இவ்வாறு நான் உன்னிடம் கேட்டேன்.(21) சீதையுடனும், லக்ஷ்மணனுடனும் இருப்பவனும், தர்மத்தை அறிந்தவனுமான ராமனை {அவன் இருக்கும் இடத்தை} நான் அறிவேன். உன்னுடன் பிறந்தவன் {ராமன்}, சித்திரகூட மஹாகிரியில் வசிக்கிறான்.(22) நாளை நீ அந்த தேசத்திற்கு {இடத்திற்குச்} செல்லலாம். இன்று உன் மந்திரிமார்களுடன் இங்கே வசித்திருப்பாயாக. காம, அர்த்தங்களின் {இன்பம், பொருள் ஆகியவற்றின்} நுட்பங்களை அறிந்த விவேகியே, என்னுடைய இந்த விருப்பத்தை நிறைவேற்றுவாயாக" {என்று கேட்டார் பரத்வாஜர்}.(23)

எவனுடைய பரந்த கண்ணோட்டமும், {ராமனின் அபிமானியெனும்} உண்மையும் இப்போது தெரிய வந்ததோ அந்த பரதன், "அவ்வாறே ஆகட்டும்" என்ற சொற்களில் பதிலளித்தான். பிறகு அந்த நராதிபாத்மஜன் {இளவரசன்}, இரவில் அந்த ஆசிரமத்திலேயே வசிப்பதென மனத்தில் தீர்மானித்தான்.(24)

அயோத்தியா காண்டம் சர்க்கம் – 090ல் உள்ள சுலோகங்கள்: 24

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சம்பாதி சரபங்கர் சாகரன் சாந்தை சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்முகி தூஷணன் நளன் நாரதர் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் மண்டோதரி மதங்கர் மந்தரை மயன் மருத்துக்கள் மஹோதயர் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மைனாகன் மோஹினி யுதாஜித் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாயு வாலி வால்மீகி விகடை விபாண்டகர் விபீஷணன் விராதன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை