Excellent words close to the ears | Ayodhya-Kanda-Sarga-079 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: இராஜ்ஜியத்தை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்கப்பட்ட பரதன்; அரியணையை மறுத்து, காட்டுக்குச் செல்லும் சாலைகளை அமைக்க உத்தரவிட்டு, ராமனை திரும்பி அழைத்துவர ஆயத்தமானது...
பிறகு சதுர்தசி திவசத்தின் {பதினான்காம் நாள்} விடியுங்காலத்தில், ராஜகர்த்தர்கள் {King makers} கூடி, பரதனிடம் {பின்வரும்} வாக்கியங்களைப் பேசினார்கள்:(1) "உயர்ந்த மதிப்பிற்குரிய எங்கள் குரு {தசரதர்}, ஜேஷ்டனான {மூத்த புதல்வனான} ராமனையும், மஹாபலசாலியான லக்ஷ்மணனையும் நாடுகடத்திவிட்டு, ஸ்வர்க்கத்திற்குச் சென்றுவிட்டார்.(2) பெரும் புகழ்மிக்க ராஜபுத்திரரே {பரதரே}, இனி நீரே எங்கள் ராஜாவாக இருப்பீராக. நாயகனில்லாமல் இருந்தாலும் இந்த ராஜ்ஜியம் குற்றமற்றதாகவே இருக்கிறது.(3) நிருபாத்மஜரே, ராகவரே, உமது ஜனங்களும், குடிமக்களும் அபிஷேகத்திற்குரிய அனைத்தையும் கொண்டு வந்து உமக்காகக் காத்திருக்கின்றனர்.(4) பரதரே, நர ரிஷபரே {மனிதர்களில் காளையே}, உமது பித்ரு பிதாமஹர்களிடம் இருந்து வரும் நிலையான ராஜ்ஜியத்தை ஏற்று, அபிஷேகம் செய்து கொண்டு எங்களை நீரே ஆள்வீராக" {என்றனர் ராஜகர்த்தர்கள்}.(5)
திட விரதனான பரதன், அபிஷேகத்திற்குரிய அந்தப் பொருள்கள் அனைத்தையும் பிரதக்ஷிணம் செய்து (வலம் வந்து), ஜனங்கள் அனைவரிடமும் {பின்வருமாறு} பதிலுரைத்தான்:(6) "ஜேஷ்டரின் ராஜதானியே எங்கள் குலத்திற்கு நித்தியம் உசிதமானது {மூத்தவரின் அரசாட்சியே எங்கள் குலத்திற்கு எப்போதும் பொருந்தும்}. நன்மையை அறிந்த ஜனங்களான நீங்கள் இவ்வாறு என்னிடம் சொல்லக்கூடாது.(7) உடன்பிறந்த எங்களில் மூத்தவரான ராமரே மஹீபதியாக வேண்டும். நான் நவபஞ்ச {பதினான்கு} வருஷங்கள் அரண்யத்தில் வசிப்பேன்.(8) மஹத்தான சதுரங்க மஹாபலம் {நால் வகை துருப்புகளுடன் கூடிய பெரும்படை} ஆயத்தமாகட்டும். உடன்பிறந்தவர்களில் ஜேஷ்டரான ராகவரை வனத்தில் இருந்து நான் அழைத்து வருவேன்.(9)
அபிஷேகத்திற்கென திரட்டப்பட்டிருக்கும் இவை அனைத்தையும் முன்னிட்டுக் கொண்டு, ராமரின் பொருட்டு நான் வனத்திற்குச் செல்வேன்.(10) நரவியாகரரான அவருக்கு அங்கேயே அபிஷேகம் செய்துவைத்து, வேள்விச்சாலையிலிருந்து புனித நெருப்பை {திரேதாக்னியைக்} கொண்டு வருவதைப் போல[1], நிச்சயம் ராமரை எனக்கு முன்னிட்டு அழைத்துக் கொண்டு வருவேன்.(11) என் மாதாவாக அழைக்கப்படுகிறவளின் {கைகேயியின்} ஆசையை நான் நிறைவேற்ற மாட்டேன். கடப்பதற்கு அரிதான வனத்தில் நான் வசித்திருப்பேன். இராமரே ராஜா ஆவார்.(12) சிற்பிகள், சமமற்றவற்றை சமமாக்கி பாதைகளைச் சீரமைக்கட்டும். கடப்பதற்கரிய காடுகளைக் கடக்கக்கூடிய காவலர்கள், அந்தப் பாதையில் எங்களைப் பின்தொடரட்டும்" {என்றான் பரதன்}.(13)
[1] நரசிம்மாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், "தக்ஷிணாக்னி கார்ஹபத்யாக்னி ஆஹவனீயாக்னி என்று யாகத்தில் வழங்கி வரும் இம்மூன்றக்னிகளே த்ரேதாக்னியென்று சொல்லப்படுகின்றன. யாகசாலையில் தென்புறத்திலிருக்கும் அக்னி தக்ஷிணாக்னி. க்ருஹபதியோடு {வீட்டின் தலைவனோடு} சேர்ந்திருக்கும் அக்னி கார்ஹபத்யாக்னி. ஆஹவனஞ் செய்யும் அக்னி ஆஹவனீயாக்னி" என்றிருக்கிறது.
இராமனின் பொருட்டு இவ்வாறு பேசிக் கொண்டிருந்த அந்த நிருபாத்மஜனிடம் {இளவரசன் பரதனிடம்}, சர்வஜனங்களும் இந்தச் சிறந்த உத்தம வாக்கியத்தைச் சொன்னார்கள்:(14) "மன்னனின் மகன்களில் மூத்தவனுக்குப் பிருத்வியை தத்தம் செய்ய விரும்பி இவ்வாறு பேசுபவரான உம்மிடம் எப்போதும் பத்மஸ்ரீ {தாமரையில் வீற்றிருக்கும் லட்சுமி தேவி} வசித்திருப்பாளாக" {என்றனர்}.(15)
தங்கள் காதுகளுக்கு நெருக்கமாக[2] அந்த நிருபாத்மஜன் சொன்ன உத்தமச் சொற்களைக் கேட்ட அந்த ஆரியர்களின் {நன்மக்களின்} முகக் கண்களில் இருந்து ஆனந்தக் கண்ணீர் வழிந்தது.(16) அமாத்யர்களுடன் கூடிய பரிசதர்களும் {அமைச்சர்களுடன் கூடிய சபை மக்களும்} அந்தச் சொற்களைக் கேட்டு, சோகத்திலிருந்து விடுபட்டு மகிழ்ச்சியடைந்து, "பக்திமான்களும், சிற்பி வர்க்க ஜனங்களும் உமது சொற்களின்படியே பாதையை அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்" என்ற இந்தச் சொற்களைச் சொன்னார்கள்.(17)
[2] அவித்த ஐம்புலத்தவர் ஆதியாய் உளபுவித்தலை உயிர் எலாம், இராமன் பொன்முடிகவிக்கும் என்று உரைக்கவே, களித்ததால் அதுசெவிப்புலம் நுகர்வது ஓர் தெய்வத் தேன்கொலாம்- கம்பராமாயணம் 2266ம் பாடல்பொருள்: ஐம்புலன்களையும் அடக்கியவர்கள் முதலாக, புவியில் உள்ள உயிர்களெல்லாம், "ராமன் பொன்முடி தரிப்பான்" என்று உரைக்கவே, பெருமகிழ்ச்சியடைந்தன. அவர்களின் காதுகளெனும் புலன்கள் தெய்வத்தன்மை வாய்ந்த தேனைப் போல் அந்தச் சொற்களை நுகர்ந்தன.
அயோத்தியா காண்டம் சர்க்கம் – 079ல் உள்ள சுலோகங்கள்: 17
Previous | | Sanskrit | | English | | Next |