Adornment of Manthara | Ayodhya-Kanda-Sarga-078 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: கடுஞ்சீற்றத்துடன் மந்தரையை இழுத்து வந்த சத்ருக்னன்; கைகேயி கெஞ்சியது; மந்தரையைத் தேற்றியது...
இலக்ஷ்மணானுஜனான {லக்ஷ்மணனின் தம்பியான} சத்ருக்னன், சோக சந்தாபத்திலிருந்தவனும், {ராமனிடம் செல்ல} யாத்திரை செய்ய விரும்பியவனுமான பரதனிடம் இந்தச் சொற்களைச் சொன்னான்:(1) "சத்வ சம்பன்னரான {நல்லெண்ணம் கொண்டவரான} ராமர், சர்வபூதங்களின் கதியாகத் திகழ்வதால் நமது துக்கத்தையுந் தணிப்பார் என்று இன்னும் எவ்வளவுதான் சொல்லிக் கொண்டிருப்போம்? அவர் ஒரு ஸ்திரீயால் வனத்திற்கு விரட்டப்பட்டார்.(2) பலவான் என்றும், வீரிய சம்பன்னன் என்றும் அழைக்கப்படும் லக்ஷ்மணன், பிதாவை அடக்கி ஏன் ராமரைக் காக்கவில்லை?(3) நாரியையின் வசத்தில் விழுந்து தவறான வழியில் செல்லும் ராஜரின் நயத்தையும் {முன்மதியையும்}, நயமின்மையையும் {கவனமின்மையையும்} முன்பே உணர்ந்து {லக்ஷ்மணன் தசரதரை} அடக்கியிருக்க வேண்டும்" {என்றான் சத்ருக்னன்}.(4)
இலக்ஷ்மணானுஜனான சத்ருக்னன் இவ்வாறு பேசிக் கொண்டிருந்த போது, சர்வாபரணபூஷிதையான குப்ஜை {அனைத்து வகை ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்ட கூனி [மந்தரை]} கிழக்கு வாயிலில் தோன்றினாள்.(5) சந்தனக் குழம்பைப் பூசிக் கொண்டும், ராஜ வஸ்திரங்களை உடுத்திக் கொண்டும், பல்வேறு வகைகளில் அமைந்த விதவிதமான ஆபரணங்களால் அவள் அலங்கரிக்கப்பட்டிருந்தாள்.(6) பிரகாசமான மேகலையைப் பூட்டிக் கொண்டும், நல்ல பல ஆபரணங்களை அணிந்து கொண்டும் இருந்தவள், கயிறுகளால் கட்டப்பட்ட வானரியைப் போலத் தோன்றினாள்.(7)
பாபக்காரிணியும், கருணையற்றவளுமான அந்த குப்ஜையை {கூனியை / மந்தரையைக்} கண்ட வாயிற்காவலர்கள், அவளைப் பிடித்துக் கொண்டு வந்து சத்ருக்னனிடம் {பின்வருமாறு} சொன்னார்கள்:(8) "எவள் செயலால் ராமர் வனத்தில் இருக்கிறாரோ, உங்கள் பிதா தேகத்தை விட்டொழித்தாரோ அந்தக் கொடூரப் பாவி இதோ இருக்கிறாள். இவளுக்குத் தகுந்ததைச் செய்வீராக" {என்றனர்}.(9)
பெருந்துக்கத்தால் பீடிக்கப்பட்டவனும், திட விரதனுமான சத்ருக்னன், இந்தச் சொற்களைக் கேட்டு அந்தப்புரத்தில் இருந்த அனைவரிடமும் இதைச் சொன்னான்:(10) "என்னுடன் பிறந்தவர்களுக்கும், என் பிதாவுக்கும் தீவிர துக்கத்தை உண்டாக்கியவளான இவள் தன் கொடூர கர்மத்திற்கான பலனை இப்போது அடையப் போகிறாள்" {என்றான்}.(11)
இவ்வாறு பேசியவன், சகீ ஜனங்களுடன் {தோழிகளுடன்} இருந்த அந்த குப்ஜையை பலவந்தமாகப் பிடித்த உடனேயே அந்த கிருஹம் {அவளது அலறலை} எதிரொலித்தது.(12) அப்போது, சத்ருக்னனின் குரோதத்தையும், பெருங்கவலையையும் அறிந்து கொண்ட அவளது சகீ ஜனங்கள் அனைவரும் திசையெங்கும் ஓடிச் சென்றனர்.(13) அவளுடைய சகீ ஜனங்கள் அனைவரும், "இவன் செய்வதைக் கண்டால் நம்மை அழித்துவிடுவான் போலிருக்கிறது.(14) தர்மத்தை அறிந்தவளும், புகழ்மிக்கவளும், மகிமை பொருந்தியவளும், கருணையுள்ளவளுமான கௌசலையைத் தஞ்சமடைவோம். இனி அவளே நமது கதியாவாள்" {என்றனர்}.(15)
சத்ரு தபனனும் {பகைவரை எரிப்பவனும்}, சிவந்த கண்களுடன் கூடியவனுமான சத்ருக்னன், கூச்சலிட்டு அழுது கொண்டிருந்த குப்ஜையை தரணீதலத்தில் பலவந்தமாக இழுத்துச் சென்றான்.(16) அந்த மந்தரை இவ்வாறு பலவந்தமாக இழுத்துச் செல்லப்பட்ட போது, வண்ணமயமான, பலவிதமான ஆபரணங்கள் ஆங்காங்கே பிருத்வியில் சிதறின.(17) இவ்வாறு சிதறிய ஆபரணங்களுடன் கூடியதும், செல்வமிக்கதுமான ராஜநிவேசனம் {அரசமாளிகை}, சரத் கால ககனத்தை {இலையுதிர் காலத்தில் நட்சத்திரங்களுடன் கூடிய வானத்தைப்} போலத் தோன்றியது.(18)
பலவானான அந்த புருஷரிஷபன், இவ்வாறு குரோதத்துடன் பலவந்தமாக இழுத்துச் சென்ற போது, கைகேயியைக் கண்டித்து அவளிடம் கடுஞ்சொற்களில் பேசினான்.(19) அந்தக் கடுஞ்சொற்களால் பெருந்துக்கமடைந்து வருத்தமுற்ற கைகேயி, சத்ருக்னன் மீது கொண்ட பயத்தால் பீடிக்கப்பட்டவளாகத் தன் புத்திரனைச் சரணடைந்தாள் {பரதனிடம் தஞ்சமடைந்தாள்}.(20)
அவளைக் கண்ட பரதன், குரோதத்தில் இருக்கும் சத்ருக்னனிடம் இந்தச் சொற்களைச் சொன்னான், "சர்வபூதங்களிலும் பிரமதைகளை {உயிரினங்கள் அனைத்திலும் பெண்களை} வதம் செய்வது தகாது. பொறுமை காக்க வேண்டும்.(21) தார்மீகரான ராமர் மாத்ரு காதகத்திற்காக {மாதாவைக் கொல்வதற்காக} என்னிடம் அசூயை அடையாதிருப்பாரானால், பாபியும், துஷ்டசாரிணியுமான இந்தக் கைகேயியை நானே கொன்றிருப்பேன்.(22) தர்மாத்மாவான ராமர், இந்த குப்ஜை {கூனியான மந்தரை} கொல்லப்பட்டாள் என்று அறிந்தால், நிச்சயம் என்னிடமோ, உன்னிடமோ {முகங்கொடுத்துப்} பேசவும் மாட்டார்[1]" {என்றான் பரதன்}.(23)
[1] முன்னையர் முறைகெட முடித்த பாவியைச்சின்னபின்னம் செய்து, என் சினத்தைத் தீர்வெனேல்என்னை இன்று என் ஐயன் துறக்கும் என்று அல்லால்அன்னை என்று உணர்ந்திலென் ஐய நான் என்றான்.ஆதலால் முனியும் என்று ஐயன், அந்தம் இல்வேதனைக் கூனியை வெகுண்டும் என்னினும்கோதிலா அருமறை குலவும் நூல் வலாய்போதும் நாம் என்று கொண்டு அரிதின் போயினான்.- கம்பராமாயணம் 2298, 2299 பாடல்கள்பொருள்: "ஐயா சத்ருக்னா, முன்னோர்களின் முறைமை கெடச் செய்த பாவியைச் சின்னபின்னம் செய்து என் சினத்தைத் தீர்த்துக் கொண்டால், என் ஐயன் ராமன் இன்றே என்னைத் துறந்துவிடுவான் என்பதால் அல்லாமல் இவள் என் அன்னை என்று கருதி நான் அமைதியடையவில்லை" என்றான்.(2298) "முடிவற்ற வேதனையை உண்டாக்கிய கூனியைப் பெரிதும் கோபித்தாலும் ஐயன் ராமன் வெறுப்பான். ஆதலால், குற்றமில்லா அருமறைகளைக் கற்றுத் தேர்ந்தவனே, நாம் அவளை விட்டுப் போவோம்" என்று சொல்லி அவனை அழைத்துப் போனான்.(2299)
இலக்ஷ்மணானுஜனான சத்ருக்னன், பரதனின் சொற்களைக் கேட்டுத் தன் கோபத்தைக் கைவிட்டு அந்த மந்தரையை விடுவித்தான்.(24) துக்கத்தில் பீடிக்கப்பட்டவளான அந்த மந்தரை, பெருமூச்சுவிட்டுப் பரிதாபமாகக் கதறி அழுதவாறே கைகேயியின் பாதங்களில் விழுந்தாள்.(25) சத்ருக்னனின் பலவந்தத்தால் வருத்தமடைந்து, வலையில் அகப்பட்ட கிரௌஞ்சத்தைப் போலத் தெரியும் அந்த குப்ஜையை {மந்தரையைக்} கண்ட பரதனின் மாதா {கைகேயி} மெதுவாக அவளுக்கு ஆறுதல் கூறினாள்.(26)
அயோத்தியா காண்டம் சர்க்கம் – 078ல் உள்ள சுலோகங்கள்: 26
Previous | | Sanskrit | | English | | Next |