Wednesday, 4 May 2022

நின் பிரிவினும் சுடுமோ பெருங்காடு? | அயோத்தியா காண்டம் சர்க்கம் - 027 (23)

Would forest burn me greater than your separation? | Ayodhya-Kanda-Sarga-027 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: காட்டுக்குத் தன்னையும் அழைத்துச் செல்லுமாறு ராமனிடம் வேண்டிய சீதை...

Rama and Sita

இவ்வாறு சொல்லப்பட்டதும், பிரிவாதினியும் {அன்புடன் பேசுபவளும்}, பிரியத்திற்குத் தகுந்தவளுமான வைதேஹி {விதேஹ இளவரசி சீதை}, அன்பின் மிகுதியால் கோபமடைந்து தன் பர்த்தாவிடம் {கணவனிடம்} இதைச் சொன்னாள்:(1) "இராமரே, நரவராத்மஜரே {மனிதர்களில் சிறந்தவரின் புதல்வரே}, கேட்கும் உமக்கும், எனக்கும் நகைப்பைத் தரும் இந்த இலகுவான வாக்கியங்களை ஏன் பேசுகிறீர்?(2) ஆரியபுத்திரரே {உன்னதரின் மகனே}, பிதா, மாதா, உடன் பிறந்தவன், புத்திரன், மருமகள் ஆகியோர் தங்கள் தங்கள் புண்ணியங்களுக்குத் தகுந்த பாக்கியங்களையே அடைவார்கள்.(3) 

புருஷரிஷபரே {மனிதர்களில் காளையே}, பாரியை {மனைவி} ஒருத்தியே தன் பர்த்தாவிற்கு {கணவனுக்கு} பாக்கியத்தைப் பெற்றுத் தருபவள் என்ற காரணத்தால் நானும் வனவாசம் செல்ல ஆணையிடப்பட்டவளே.(4) இங்கும், மரணத்திற்குப் பிறகும்  நாரீகளுக்குப் பதியே கதியாவான் {இம்மையிலும், மறுமையிலும் பெண்களுக்குக் கணவன் மட்டுமே கதியாவான்}; பிதாவோ, ஆத்மஜனோ {மகனோ}, ஆத்மாவோ {சுயமோ}, மாதாவோ, சஹிஜனங்களோ {தோழிகளோ} கதியாகமாட்டார்கள்.(5) இராகவரே, அடைதற்கரிய வனத்திற்கு நீர் இப்போதே புறப்பட்டால், கூரான தர்ப்பை முட்களை மிதித்தபடி நான் உமக்கு முன்பு செல்வேன்.(6) 

வீரரே, பருகி எஞ்சிய நீரை {கைவிடுவது} போல பொறுமையின்மையையும், ரோஷத்தையும் கைவிட்டு நம்பிக்கையுடன் என்னை அழைத்துச் செல்வீராக. என்னில் பாபமேதும் இல்லை.(7) உயர்ந்த மாடத்தின் உச்சியிலும், விமானத்திலும் இருப்பதைவிடவும், வானத்தில் திரிவதை விடவும், இருப்பு நிலைகள் அனைத்தையும் அடைவதைக் காட்டிலும் பர்த்தாவின் பாத {கணவரின் காலடி} உறைவிடமே சிறந்தது.(8) மாதாவாலும், பிதாவாலும் பல்வேறு காரியங்கள் எனக்குக் கற்பிக்கப்பட்டன. எவரிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை இப்போது எனக்குக் கற்பிக்க வேண்டாம்.(9) அடைதற்கரியதும், மனிதர்களற்றதும், நானாவித மிருகங்களால் நிறைந்ததும், புலிகளும், செந்நாய்களும் திரிவதுமான வனத்திற்கு நானும் வருவேன்.(10) 

மூவுலகைக் குறித்துச் சிந்திக்காமல் பதிவிரதத்தை {கணவனுக்குப் பணிவிடை செய்யும் விரதம் குறித்துச்} சிந்தித்து, பிதாவின் பவனத்தில் {தந்தையின் வீட்டில்} இருப்பதைப் போல வனத்தில் நான் சுகமாக வசிப்பேன்.(11) வீரரே, பிரம்மசாரினியாக நியமத்துடன் நித்தியம் உமக்குத் தொண்டாற்றியவாறே, மதுகந்தம் {தேனின் மணம்} கமழும் வனங்களில் உம்முடன் வசிக்க விரும்புகிறேன்.(12) இராமரே, இங்கே வனத்தில் அந்நிய ஜனங்களுக்கும் பாதுகாப்பைத் தரும் சக்தியுடையவர் நீரெனும்போது என்னைக் குறித்துச் சொல்வதற்கென்ன?(13) 

இன்றே நானும் உம்முடன் வனத்திற்கு வருவேன். இதில் ஐயமேதுமில்லை. சிறப்புமிக்கவரே, ஆயத்தமாக இருக்கும் என்னை {யாராலும்} தடுக்க இயலாது.(14) நித்யம் கனி, கிழங்குகளை உண்பேன். இதில் ஐயமேதுமில்லை. உடன் வசிப்பதால் உமக்கு துக்கத்தை உண்டாக்கமாட்டேன்.(15) மதிமிக்கவரும், நாதருமான உம்முடன் இருக்கும்போது எங்கும் எனக்குப் பீதி ஏற்படாது. சரிதங்களையும் {ஆறுகளையும்}, சைலங்களையும் {மலைகளையும்}, குளங்களையும், வனங்களையும் நான் பார்க்க விரும்புகிறேன்.(16) வீரரான உம்முடன் வருவதால் நான் சுகமாக இருப்பேன். ஹம்சங்களும், நீர்க்காக்கைகளும் நிறைந்து நன்றாகப் புஷ்பித்திருக்கும் தாமரைத் தடாகங்களை நான் காண விரும்புகிறேன்.(17) 

விசாலாக்ஷரே {நீண்ட விழிகளைக் கொண்டவரே}, அந்தத் தடாகங்களில் நித்ய விரதத்துடன் நீராடி பரமானந்தினியாக {பெரும் மகிழ்ச்சியுடையவளாக} நான் உம்முடன் விளையாடிக் கொண்டிருப்பேன்.(18) உம்முடன் வரும் நான், இவ்வாறே சத சஹஸ்ர வருஷங்களை {நூறு ஆயிரம் வருடங்களைக்} கழித்தாலும், என்னில் எந்த வேறுபாட்டையும் காணமுடியாது. {இதைத் தவிர} சுவர்க்கத்தையும் நான் விரும்ப மாட்டேன்.(19) நரவியாகரரே {மனிதர்களில் புலியே}, ராகவரே, நீரில்லாத சுவர்க்க வாசமே எனக்குக் கிடைத்தாலும் அதை நான் விரும்பமாட்டேன்[1].(20) 

[1] பரிவு இகந்த மனத்து ஒரு பற்று இலாது
ஒருவுகின்றனை ஊழி அருக்கனும்
எரியும் என்பது யாண்டையது ஈண்டு நின்
பிரிவினும் சுடுமோ பெருங்காடு என்றாள்

- கம்பராமாயணம் 1827ம் பாடல்

பொருள்: பரிவில்லா மனத்தில் பற்றேதும் இல்லாமல் விலகிச் செல்கிறீர். ஊழி காலச் சூரியன் எரியும் என்பது எங்கே உள்ளது? இங்கே உமது பிரிவினும் சுடுமோ பெருங்காடு என்றாள் சீதை.

அடைதற்கரியதும், மிருகங்கள் நிறைந்ததும், வானர, வாரணங்கள் {குரங்குகள், யானைகள்} வசிப்பதுமான வனத்திற்கு நான் வருவேன். உமது பாதங்களைப் பற்றிக் கொண்டு, பிதாவின் கிருஹத்தில் வசிப்பது போல வனத்திலும் தற்கட்டுப்பாட்டுடன் நான் வசிப்பேன்.(21) என் மனத்தில் நீரே இருக்கிறீர். வேறெந்த எண்ணமுமில்லை. உம்மைவிட்டுப் பிரிந்தால் மரணத்தையே நிச்சயித்திருக்கிறேன். என்னால் உமக்கு சுமையேதும் உண்டாகாது. நான் யாசிப்பதைத் தருவதாக எனக்குச் சொல்வீராக" {என்றாள் சீதை}.(22)

தர்மவத்சலனான அந்த நரவரன் {தர்மத்தை விரும்பும் சிறந்த மனிதனான ராமன்}, சீதை இவ்வாறு பேசினாலும் அவ்வாறு இஷ்டப்படவில்லை. அவளைத் தடுப்பதற்காக, வனவாசத்தால் உண்டாகும் துக்கங்களைக் குறித்து அவளிடம் அதிகம் பேசினான்.(23)

அயோத்தியா காண்டம் சர்க்கம் – 027ல் உள்ள சுலோகங்கள் : 23

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவித்தர் அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இந்திரஜித் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகசி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சரமை சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் ததிமுகன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூஷணன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பனஸன் பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மஹோதரன் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மால்யவான் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை வித்யுஜ்ஜிஹ்வன் விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை