Why this terrible grief? | Ayodhya-Kanda-Sarga-026 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: இராமனின் துயரத்திற்கான காரணத்தை விசாரித்த சீதை; தன் தந்தையின் ஆணையை அவளிடம் சொன்ன ராமன்; சீதை அயோத்தியிலேயே இருக்க வேண்டுமெனக் கேட்டுக் கொண்டது...
இராஜசுதனான ராமன், தர்மத்தின் பாதையில் நிலைத்திருக்கும் தன் மாதாவான கௌசல்யையின் ஆசிகளைப் பெற்று அவளை வணங்கிவிட்டு வனத்திற்குப் புறப்பட்டான். ஜனங்கள் நிறைந்த ராஜமார்க்கத்தில் சென்று, தன் குணங்களால் ஜனங்களின் ஹிருதயங்களைக் கொள்ளை கொண்டு அந்த மார்க்கத்தைப் பிரகாசிக்கச் செய்தான்.(1,2) தபஸ்வினியான வைதேஹி {விதேஹ இளவரசி சீதை}, இவை யாவற்றையும் கேட்காதவளாக {அறியாதவளாக} யௌவராஜ்ஜியபிஷேகத்தை மட்டுமே தன் ஹிருதயத்தில் கொண்டிருந்தாள்.(3) இராஜதர்மத்தின்படி என்ன செய்யப்பட வேண்டும் என்பதை அறிந்தவள், ஹிருதய மகிழ்ச்சியுடன் தேவ காரியங்களைச் செய்து ராஜபுத்திரனுக்காக {ராமனுக்காகக்} காத்திருந்தாள்[1].(4)
[1] பி.எஸ்.கிருஷ்ணசுவாமி ஐயர் {தர்மாலயப்} பதிப்பில், "தருமநெறி வழுவாதவளும், ராஜதர்மானுஷ்டானங்களுக்கு யோக்கிதாபாத்திரமாய் விளங்கியவளுமான அவள் மனமகிழ்ச்சியுடையவளாய் தெய்வ பூஜையை செய்தருளிவிட்டு, சக்கிரவர்த்தியாரின் திருக்குமாரனை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனள்" என்றிருக்கிறது. நரசிம்மாசாரியர் பதிப்பில், "ஸீதை, பட்டாபிஷேகஞ் செய்யப் பெற்ற பர்த்தாவுக்குச் செய்ய வேண்டிய பாதார்ச்சனம் முதலிய ஆசாரங்கள் தெரிந்தவள்; அபிஷேகம் பெற்ற அரசர்களுக்குள்ள வெண்குடை சாமரம் முதலிய விசேஷ லக்ஷணங்களையும் அறிந்திருப்பவள். ஆகையால் அவள் தானே ராமனது அபிவிருத்தியின் பொருட்டுச் செய்ய வேண்டிய தேவதாபூஜனம் முதலியவற்றை நடத்தி அபிஷேகஞ் செய்யப் பெற்று வரும் பர்த்தாவுக்குச் செய்ய வேண்டிய பூஜா விதானங்களை நடத்தப் போகிறவளாகி மிகுந்த மனக்களிப்புற்று, அப்படிப்பட்ட ஸ்வேதச்சதரம் முதலிய லக்ஷணங்களோடு அந்த ராஜகுமாரன் வருவதை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனள்" என்றிருக்கிறது.
அப்போது ராமன், பரிபூரண மகிழ்ச்சியில் நிறைந்திருந்த ஜனங்களைக் கொண்டதும், நன்றாக அலங்கரிக்கப்பட்டதுமான தன் வீட்டிற்குள் சற்றே முகம் தாழ்ந்தவனாகப் பிரவேசித்தான்.(5) சோகத்தில் எரிந்தவனும், கவலையினால் மனம் கலங்கியிருந்தவனுமான தன் பதியைக் கண்ட சீதை, நடுங்கியவாறே {ஆசனத்தில் இருந்து} எழுந்தாள்.(6) அவளைக் கண்டதும் தர்மாத்மாவான ராகவனால் தன் மனத்தில் உள்ளதை மறைக்க முடியாத காரணத்தால் திரை விலகி சோகம் வெளிப்பட்டது.(7)
நிறமிழந்த வதனத்துடனும், வியர்வையுடனும், பொறுமையிழந்திருந்த அவனைக் கண்டு துக்கத்தால் பீடிக்கப்பட்டவள் {சீதை} இவ்வாறு, "பிரபுவே, இப்போது இதுவென்ன?[2](8) இராகவரே, 'செல்வத்தை அருள்வதும், பிருஹஸ்பதியின் தலைமையைக் கொண்டதும், உமக்குத் தகுந்ததுமான புஷ்யம் {பூச நட்சத்திரம்} இன்று' எனக் கல்விமான்களான பிராமணர்கள் சொன்னார்கள். ஏன் மனவருத்தத்துடன் இருக்கிறீர்?(9) ஜலத்தின் நுரை போன்று வெண்மையானதும், நூறு கம்பிகளைக் கொண்டதுமான குடை இல்லாமல் உமது அழகிய வதனம் ஒளிரவில்லையே?(10) தாமரையைப் போன்ற கண்களைக் கொண்ட உமது முகம், சந்திரனையும், ஹம்சத்தையும் {அன்னப்பறவையையும்} போலப் பிரகாசிப்பவையும், மேன்மையானவையுமான சாமரங்களால் வீசப்படவும் இல்லையே.(11)
[2] பொன்னை உற்ற பொலங்கழலோய் புகழ்மன்னை உற்றது உண்டோ மற்று இவ்வன்துயர்என்னை உற்றது இயம்பு என்று இயம்பினாள்மின்னை உற்ற நடுக்கத்து மேனியாள்.- கம்பராமாயாணம் 1821ம் பாடல்பொருள்: பொன்னால் செய்யப்பட்டதும், பொலிவானதும், வீரர்களுக்குரியதுமான கழலை {காலணியை} அணிந்தவரே, புகழுடைய மன்னருக்கு {தசரதருக்கு} ஏதும் துயர் நேர்ந்ததோ? இல்லாவிட்டால் இந்தக் கொடிய துன்பம் வந்தது எதனால்? இயம்புவீராக என்று மின்னலைப் போல நடுங்கும் மேனியைக் கொண்டவள் இயம்பினாள்.
நரரிஷபரே {மனிதர்களில் காளையே}, நாநயமிக்க வந்திகளும், சூதர்களும், மாகதர்களும் பெரும் மகிழ்ச்சியுடன் மங்கலச் சொற்களால் உம்மைத் துதிப்பதும் இங்கே காணப்படவில்லையே.(12) வேதபாரகர்களான பிராமணர்களும், நீர் தலைநீராடிய பின்னர் விதிப்படி உம்மீது தேனையும், தயிரையும் வைக்கவில்லையே.(13) அமைச்சர்கள், சபை முக்கியஸ்தர்கள், நகரவாசிகள், ஜானபதவாசிகள் {கிராமவாசிகள்} முதலிய அனைவரும் தங்களை அலங்கரித்துக் கொண்டு உம்மைப் பின்தொடர்ந்து வரவுமில்லையே.(14) நான்கு ஹயங்கள் {குதிரைகள்} பூட்டப்பட்டதும், பெரும் வேகம் கொண்டதும், காஞ்சனத்தால் {பொன்னால்} அலங்கரிக்கப்பட்டதுமான முக்கிய புஷ்ய ரதம் {இன்ப உலாவுக்கான தேர்} உமக்கு முன்பு வரவில்லையே.(15)
வீரரே, லக்ஷணத்திற்காகப் பூஜிக்கப்படுவதும், கரிய மேகத்தால் மகுடஞ் சூட்டப்பட்ட கிரிக்கு {மலைக்கு} ஒப்பானதும், மகிமைமிக்கதுமான ஹஸ்தி {பட்டத்து யானை} உமது பிரயாணத்தின் முன்னணியில் காணப்படவில்லையே.(16) வீரரே, காண்பதற்கு இனியதும், நீர் வருதற்கு முன்பே கொண்டு வரப்படுவதும், காஞ்சனத்தால் {பொன்னால்} அலங்கரிக்கப்பட்டதுமான பத்ராசனத்தை {அரியணையை} நான் காணவில்லையே.(17) அபிஷேகம் ஆயத்தமாகும்போது உமது முகத்தில் நிறத்தைக் காணவில்லையே. இப்போது இதுவென்ன?" {என்று கேட்டாள் சீதை}.(18)
இவ்வாறு புலம்பியவளிடம் ராமன் இதைச் சொன்னான், "சீதா {சீதையே}, மதிப்புமிக்கவரான தாதை {தந்தை}, என்னை வனத்திற்கு நாடு கடத்தியிருக்கிறார்.(19) ஜானகி {ஜனகனின் மகளே}, மஹாகுலத்தில் பிறந்தவளும், தர்மத்தை அறிந்தவளும், தர்மத்தைப் பின்பற்றுபவளுமான நீ, எந்தக் கிரமத்தில் {வரிசையில்} இந்நிலை எனக்கு நேர்ந்தது என்பதைக் கேட்பாயாக.(20) சத்தியப்ரதிஜ்ஞரான {உறுதிமொழிக்கு உண்மையாக இருப்பவரான} என் பிதா தசரதரால், பூர்வத்தில் என் மாதா கைகேயிக்கு இரண்டு மஹாவரங்கள் தத்தம் செய்யப்பட்டன.(21) இப்போது, எனக்கான இந்த அபிஷேகத்தை நிருபதி {தசரதர்} ஏற்பாடு செய்யும்போது, அவளது தூண்டுதலின் பேரில் சமயத்திற்குத் தகுந்தவாறும், தர்மப்படியும் அது {என் அபிஷேகம்} ரத்து செய்யப்பட்டது.(22) சதுர்தச வருஷங்கள் {பதினான்கு வருடங்கள்} நான் தண்டகத்தில் {தண்டகாரண்யத்தில்} வசிக்க வேண்டும். பரதன் என் பிதாவால் யௌவராஜ்யத்தில் நியமிக்கப்படுவான்.(23)
ஜனங்களற்ற வனத்திற்குப் புறப்படப்போகும் நான் {அதற்கு முன்பே} உன்னைக் காண வந்தேன். பரதனின் சமீபத்தில் ஒருபோதும் என்னைக் குறித்து நீ பேசாதிருப்பாயாக. சக்தியும், யுக்தியும் கொண்ட புருஷர்கள் பிறர் புகழை சகித்துக் கொள்வதில்லை. அந்தக் காரணத்தினால் பரதனின் முன்னிலையில் என் குணங்களை நீ பேசாதிருப்பாயாக.(24,25) எக்காலத்திலும் அவன் உன்னை விசேஷமாகக் கவனித்துக் கொள்ள வேண்டியவனல்ல. அனுகூலமாக நடந்து கொண்டு அவனது சமீபத்தில் வசிப்பாயாக.(26) நிருபதியால் {தசரத மன்னரால்} அவனுக்கு யௌவராஜ்ஜியம் சநாதனமாக {நிரந்தரமாக} தத்தம் செய்யப்பட்டது. சீதா {சீதையே}, நிருபதியை {தசரத மன்னரை} மதிப்பதைவிட அதிகமாக நீ அவனை {பரதனை} மதிக்க வேண்டும்.(27) குருவின் {தந்தையின்} பிரதிஜ்ஞையை நிறைவேற்றுவதற்காக நான் இன்றே வனத்திற்குச் செல்லப் போகிறேன். மனஸ்வினியே {மகத்தான மனம் கொண்டவளே}, நீ ஸ்திரமாக {உறுதியாக} இருப்பாயாக.(28)
குற்றமற்றவளே, கல்யாணி {மங்கலமான பெண்ணே}, முனிவர்கள் வசிக்கும் வனத்திற்கு நான் சென்றதும், நீ விரத உபவாசங்களில் விருப்பத்தை ஏற்படுத்திக் கொள்வாயாக.(29) காலையில் எழுந்து விதிப்படி தேவர்களைப் பூஜித்து, என் பிதாவான தசரதரை வணங்குவாயாக.(30) தர்மத்தையே முதன்மையாகக் கொள்ளும் நீ, கவலையில் மெலிந்தவளும், முதிர்ந்தவளுமான என் மாதாவிடம் மதிப்புடன் நடந்து கொள்வாயாக.(31) என் மாதாக்கள் அனைவரும் சமமான சினேகத்துடனும், நல்ல மனத்துடனும் எனக்கு இதமானவற்றைச் செய்தவர்கள். எனவே என் மாதாக்கள் பிறரையும் {கைகேயியையும், சுமித்திரையையும்} நீ நித்தியம் வணங்குவாயாக.(32)
விசேஷமாக {குறிப்பாக}, என் பிராணனை விடப் பிரியத்திற்குரிய பரதனையும், சத்ருக்னனையும் நீ சகோதரனையும், புத்திரனையும் போலப் பார்ப்பாயாக.(33) ஒருபோதும் பரதனுக்கு விருப்பமில்லாத எதையும் நீ செய்யாதிருப்பாயாக. அவனே தேசத்திற்கு ராஜாவும், நம் குலத்திற்குப் பிரபுவுமாவான்.(34) ராஜர்கள், சீலர்களிடமும், பிரயத்னத்துடன் சேவிப்பவர்களிடமும் {நன்னடத்தை கொண்டவர்களிடமும், முயற்சியுடன் தொண்டாற்றுபவர்களிடமும்} நிறைவடைவார்கள்; முரண்படுபவர்களிடம் கோபமடைவார்கள்.(35) நராதிபர்கள் {மனிதர்களின் தலைவர்கள்}, இதமற்ற காரியங்களைச் செய்தால் தங்கள் சொந்த புத்திரர்களையே கூடக் கைவிடுவார்கள்; ஜனங்களில் சமர்த்தர்களை ஏற்பார்கள்.(36) கல்யாணி, பரதனுக்குக் கீழ்ப்படிந்து நடப்பாயாக. தர்மத்தில் ஈர்க்கப்பட்டவளாக, சத்யவிரதங்களைப் பின்பற்றி இங்கே வசித்து வருவாயாக.(37) பிரியமானவளே, பாமினி {மதிப்புக்குரியவளே}, நான் மஹாவனத்திற்குச் செல்லப் போகிறேன். உள்ளது உள்ளபடியே எவருக்கும் எந்தத் தீங்கையும் செய்யாமல் நீ இங்கேயே வசித்திருப்பாயாக" {என்றான் ராமன்}.(38)
அயோத்தியா காண்டம் சர்க்கம் – 026ல் உள்ள சுலோகங்கள் : 38
Previous | | Sanskrit | | English | | Next |