Sunday, 15 August 2021

பலை அதிபலை | பால காண்டம் சர்க்கம் - 22 (23)

Bala and Atibala | Bala-Kanda-Sarga-22 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராமனையும், லக்ஷ்மணனையும் விஷ்வாமித்ரருடன் அனுப்பிய தசரதன்; பலை அதிபலை என்றழைக்கப்படும் வித்தைகளை ராமலக்ஷ்மணர்களுக்குக் கற்பித்த விஷ்வாமித்ரர்...

Rama and Lakshmana performing Guru seva to Viswamitra

வசிஷ்டர் இவ்வாறு சொன்னபோது, ராஜா தசரதன் நிறைவடைந்த முகத்துடன் தானாகவே ராமனையும், லக்ஷ்மணனையும் அழைத்தான்.(1) மாதாவும் {கௌசல்யையும்}, பிதா தசரதனும் ஆசிகள் வழங்கினர், புரோஹிதரான வசிஷ்டரும் மங்கல மந்திரங்களால் மந்திரித்தார். தசரத ராஜன் புத்திரர்களின் உச்சிமுகர்ந்து அந்தராத்மாவில் நிறைவடைந்தவனாகக் குசிகபுத்திரரிடம் {விஷ்வாமித்ரரிடம் அவர்களை} ஒப்படைத்தான்[1].(2,3)

[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பில், "அன்னையே மகன்களுக்கு ஆசி கூறுவதில் முதலாமவர். துரியோதனனும் மஹாபாரதத்தில் காந்தாரியின் ஆசிகளைக் கோருகிறான். அவள், "தர்மம் இருக்குமிடத்தில் வெற்றியிருக்கும் {எங்கே அறமிருக்கிறதோ அங்கே வெற்றியுமிருக்கும்}" எனச் சொல்கிறாள்" என்றிருக்கிறது. இந்த இடம் மஹாபாரதத்தின் ஸ்திரீ பர்வம் 17ம் அத்தியாயம் 6ம் ஸ்லோகத்தில் வருகிறது. 

விஷ்வாமித்ரரைப் பின்தொடந்து செல்லும் தாமரைக் கண் ராமனைக் கண்டு புழுதியற்றதும், தீண்டுவதற்கு இனிமையானதுமான தென்றல் வீசியது.(4) அந்த மஹாத்மாவின் {ராமனின் / விஷ்வாமித்ரரின்} தலைமீது பூமாரி பொழிந்தது, தேவதுந்துபிகள் இசைத்தன, சங்குகளும், துந்துபிகளும் முழங்கின.(5) விஷ்வாமித்ரர் முன்னே சென்றார். காகபக்ஷதரனும் {காகத்தின் சிறுகுகளைப் போன்ற கரிய தலை முடியைக் கொண்டவனும்}, தனு தரனுமான {வில் தரித்தவனுமான} ராமன், வில்லுடனும், சௌமித்ரியுடனும் {சுமித்ரையின் மகனான லக்ஷ்மணனுடனும்} பின்தொடர்ந்தான்.(6) அம்பறாத்தூணிகளுடனும், தனுஷ்பாணிகளாகவும் {கைகளில் வில்லுடனும்}, பத்துத்திசைகளும் சுடர்விடும் வகையில், வெறுமனே உடல்சார்ந்த முக்கியத் தாக்கம் இல்லாமல் உடலமைப்பிலும், உற்சாகத்திலும் அதிக ஆற்றலுடன் மூன்று தலைகளைக் கொண்ட பன்னகத்தை {பாம்பைப்} போன்றவர்கள் {அம்பறாத்தூணிகளுடன் சேர்த்து மூன்று தலைகளாகத் தெரியும் ராமனும் லக்ஷ்மணனும்}[2], பிதாமஹனுடன் {பிரம்மனுடன்} கூடிய அஷ்வினிகளைப் போல மஹாத்மாவான விஷ்வாமித்ரரைப் பின்தொடர்ந்து சென்றனர்.(7) அழகிய உடல் படைத்தவர்களும், ரத்தினங்களைப் போன்றவர்களும், தனுஷ்பாணிகளும், தோலாலான விரலுறைகளை அணிந்தவர்களும், வாள்களைக் கொண்டவர்களும், பேரொளி படைத்தவர்களும், பிரகாசிப்பவர்களும், நிந்திக்கத் தகாதவர்களும், உடன்பிறந்தவர்களுமான ராமனும், லக்ஷ்மணனும், பாவகனின் குமாரர்களால் {அக்னியின் மகன்களான ஸ்கந்தனாலும், விசாகனாலும்} பின்தொடரப்பட்டவனும், சிந்தனைக்கு எட்டாத தேவனுமான ஸ்தாணுவை {சிவனைப்} போல அந்தக் குசிக புத்திரரை {விஷ்வாமித்ரரை} ஒளிரச் செய்தனர்[3].(8-10அ)

[2] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "ஒவ்வொருவரும் தங்கள் தோள்களில் அம்பறாத்தூணிகளைக் கொண்டிருந்தனர். எனவே இருவரின் அம்பறாத்தூணிகளும் சேர்த்து ஒரு தலையாகக் கொண்டால், ராம லக்ஷ்மணர்களின் தலைகளையும் சேர்த்து மூன்று தலைகளைக் கொண்ட பாம்பைப் போல அவர்கள் தெரிந்தனர். அஃதாவது அவர்களின் தலை அம்பறாத் தூணிகளின் அளவுடன் ஒப்பிடத் தகுந்த அளவுக்கு அவர்கள் சிறுவர்களாக இருந்தனர்" என்றிருக்கிறது.

[3] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "பரமாத்மா அணுவைப் போன்றவன். ஸ்தா {இருப்பில் உள்ளவன்} அணு ஆகியவற்றின் சேர்க்கையே ஸ்தாணு என்பது. அஃதாவது அவன் அசைவனவற்றிலும் அசையாதனவற்றிலும் இருக்கிறான். இது சிவனைக் குறிக்கிறது. கணேசனும், குமரனும் சிவனின் இரு மகன்களாவர். அவர்களில் குமரன் தேவர்களின் படைத்தலைவனாவான். மஹாபாரதத்தின் படி இந்தக் குமரன், 1) ஸ்கந்தன், 2) விசாகன், 3) சாகன், 4) நைகமேசன் என்ற நால்வராக இருக்கிறான். இங்கே சொல்வது குமரனின் இரு வடிவங்களான ஸ்கந்தனையும், விசாகனையும் ஆகும். அவ்விருவரும் இங்கே ராமனுக்கும், லக்ஷ்மணனுக்கும் ஒப்புமையாகக் கொள்ளப் படுகிறார்கள்" என்றிருக்கிறது. மஹாபாரதம் சல்லிய பர்வம் 46:36ல் ஸ்கந்தன், சாகன், விசாகன், நைகமேயன் குறித்துச் சொல்லப்படுகிறது. 

ஒன்றரை யோஜனை தொலைவு சென்ற பிறகு, சரயுவின் தென் கரையில் விஷ்வாமித்ரர், மதுரமான குரலில் "ராமா" என்றழைத்துப் பேசினார்:(10ஆ,11அ) "குழந்தாய், நீரை எடுப்பாயாக. பலை, அதிபலை {பலம், அதிபலம்} என்ற மந்திரக்ராமத்தைப் பெற்றுக் கொள்வாயாக. காலத்தைக் கடத்த வேண்டாம்[4].(11ஆ,12அ) {இதைப் பெறுவதன் மூலம்} உனக்குச் சிரமம் இருக்காது, ஜுவரம் {பிணி} இருக்காது, ரூபம் {வடிவம்} மாறாதிருக்கும், உறக்கத்திலும், மறதியிலுங்கூட இரவுலாவிகளால் {ராக்ஷசர்களால் உன்னைத்} தாக்க முடியாது.(12ஆ,13அ) ராமா, கை வீரியத்தில் யாரும் {உனக்கு} நிகராக முடியாது, பிருத்வியிலும் {பூமியிலும்}, மூவுலகங்களிலும் {உனக்கு} ஒப்பானவர்கள் எவரும் இருக்க மாட்டார்கள்.(13ஆ,14அ) குறைவற்றவனே, அன்புக்குரிய ராகவா {ராமா}, பலையும், அதிபலையும் பயிலப்பட்டால், சௌபாக்கியம் {உன்னை} அடையும். திறமை, ஞானம், தீர்மானிக்கும் புத்தி {பகுத்தறிவு}, மறுமொழி சொல்லுந்திறமை ஆகியவற்றில் இந்த உலகில் யாரும் {உனக்கு} இணையாகமாட்டார்கள்.(14ஆ,15) இவ்விரு வித்தைகளையும் பெறுவதால் எவரும் உனக்கு ஒப்பாக மாட்டார்கள். பலையும், அதிபலையும் சர்வ ஞான மாதாக்களாவர் {ஞானங்கள் அனைத்தின் அன்னையராவர்}.(16) நரோத்தமா {மனிதர்களில் உத்தமனே}, ராகவா, அன்புக்குரிய ராமா, பலையும் அதிபலையும் ஓதப்பட்டால் பசியும், தாகமும் ஒருபோதும் அண்டாது.(17) இவ்விரு வித்தைகளும் பயிலப்பட்டால் பூமியில் அளவிடற்கரிய புகழ் தோன்றும். ரகுனந்தனா {ரகுவின் வழித்தோன்றலான ராமா}, தேஜஸ் பொருந்திய இவ்விருவரும் {பலையும், அதிபலையும்}, பிதாமஹனின் {பிரம்மனின்} மகள்களாவர். காகுத்ஸா {காகுத்ஸனின் வழித்தோன்றலான ராமா}, இவற்றைத் தார்மீகனான உனக்குக் கொடுப்பதே தகும். எனவே, சர்வலோகத்தில் {உலகங்கள் அனைத்தில்} இருந்தும் பாதுகாக்கப்பட்ட இந்த வித்தைகளைப் பெற்றுக் கொள்வாயாக.(18,19அ) {மேற்சொன்ன} இந்த எண்ணற்ற குணங்கள் அனைத்தும் உன்னிடம் ஏராளமுள்ளவையே என்பதில் ஐயமில்லை. {இருந்தாலும்}, தவத்தில் ஊட்டம்பெற்ற இவை, பல வடிவங்களிலான நல்ல விளைவுகளை உண்டாக்கும்[5]" {என்றார் விஷ்வாமித்ரர்}.(19ஆ,20அ)

[4] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "சூரியன் மறைந்த பிறகு வேத மந்திரங்களைக் கற்பிக்கக்கூடாது. எனவே, மாலை வேளையில் ஆகுதிகள் அளிக்கப்படும் சூரியாஸ்தமன நேரம் நெருங்குவதால் காலத்தைக் கடத்தக்கூடாது எனகிறார் விஷ்வாமித்ரர்" என்றிருக்கிறது.

[5] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் 22ம் சுலோகத்து அடிக்குறிப்பில், "இந்தச் சர்க்கம் முழுவதும் விஷ்வாமித்ரர் ராமனிடம் மட்டும் மந்திரங்களைக் கற்கும்படி கேட்கிறார். லக்ஷ்மணன் தவிர்க்கப்பட்டான் என்று இதன் மூலம் சிலர் புரிந்து கொள்ளக்கூடும். அவன் ராமனுடன் சேர்ந்து இந்த வித்தைகளைப் பயின்றான் என்பதே இந்த இடத்தில் பொருந்தும்" என்றிருக்கிறது.

அப்போது ஜலத்தை {நீரைத்} தீண்டித் தூய்மைடைந்த ராமன், ஆழ்ந்த சிந்தனையுடன் கூடிய அந்த மஹரிஷியிடம் {விஷ்வாமித்ரரிடம்} இருந்து {பலை, அதிபலை என்ற} அந்த வித்தைகளை மகிழ்ச்சியான முகத்துடன் பெற்றுக் கொண்டான்.(20ஆ,21அ) அதிசய ஆற்றலைக் கொண்டவன் {ராமன்}, அந்த வித்தைகளைப் பெற்றுக் கொண்டதும், குருவுக்குச் செய்ய வேண்டிய அனைத்து காரியங்களையும் அந்தக் குசிகமைந்தருக்கு {விஷ்வாமித்ரருக்குச்} செய்து, கூதிர் காலத்து ஆயிரங்கதிர் பகவானான திவாகரனை {சூரியனைப்} போன்று பிரகாசித்தான்[6]. அந்த மூவரும் அவ்விரவில் பெரும் மகிழ்ச்சியுடன் சரயுவின் கரையில் தங்கினர்.(21ஆ,22) தசரதனின் உத்தம மைந்தர்கள், தங்களுக்குத் தகாத புற்படுக்கையில் ஒன்றாக உறங்கினாலும், குசிக சுதரின் {விஷ்வாமித்ரரின்} சொற்களை ஏற்றதால் அவ்விரவு அவர்களுக்கு இனிமையானது[7].(23)

[6] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "குருவுக்குச் செய்யப்பட வேண்டிய காரியங்களைக் குறித்து இங்கே சொல்லப்படுகிறது. மந்திராச்சாரியருக்கு உண்மையான சீடர்கள் சில கடமைகளைச் செய்ய வேண்டும். அந்தக் கடமைகளை நிறைவேற்றாமல் சீடத்துவம் நிறைவடைவதில்லை. ஆசானுக்கு உணவு தருவிப்பது, அவரது படுக்கையைச் சரி செய்து வைப்பது, அவரது கால்களைப் பிடித்து விடுவது ஆகியன அக்கடமைகளில் சிலவாகும். பாலகாண்டத்தின் 18ம் சர்க்கம் 28ம் சுலோகத்தில் ராமன் தன் தந்தைக்குச் செய்த தொண்டுகளைப் போலத் தன் ஆசானுக்கும் இங்கே செய்தான்" என்றிருக்கிறது.

[7] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "காயத்ரி மந்திரத்தின் தீர்க்கதாரியும் இந்த விஷ்வாமித்ரரே ஆவார். அதே முனிவரே இங்குப் பலை, அதிபலை என்ற வித்தைகளைக் கற்பிக்கிறார். பலம், அதிபலம் என்ற அந்த உபநிஷத்தை அறிந்து பயில விரும்பும் வாசகர்களுக்காக அது கீழே தரப்படுகிறது. காயத்ரி மந்திரத்திற்கு மேலான மந்திரம் வேறேதும் இல்லை. இந்த மந்திரம் காயத்ரி மந்திரத்தின் மற்றொரு வடிவமாகும்" என்றிருக்கிறது.

பலை அதிபலை உபநிஷத்

ப³லாதிப³லயோ꞉ விராட்புருஷ꞉ ருஷி꞉ | கா³யத்ரீ தே³வதா | கா³யத்ரீ சந்த³꞉ | அகாரோகாரமகாரா பீ³ஜாத்³யா꞉ | க்ஷுதா⁴தி³ நிரஸனே விநியோக³꞉ |க்லாமித்யாதி³ ஷட³ங்க³ந்யாஸ꞉ | க்லாம் அங்கு³ஷ்டாப்⁴யாம் நம꞉ | க்லீம் தர்ஜனீப்⁴யாம் நம꞉ | க்லூம் மத்⁴யமாப்⁴யாம் நம꞉ | க்லைம் அநாமிகாப்⁴யாம் நம꞉ | க்லோம் கநிஷ்டிகாப்⁴யாம் நம꞉ | க்ல꞉ கரதலகரப்ருஷ்டாப்⁴யாம் நம꞉ ||க்லாம் ஹ்ருத³யாய நம꞉ | க்லீம் ஷி²ரஸே ஸ்வாஹா | க்லூம் ஷி²கா²யை வஷட் | க்லைம் கவசாய ஹும் | க்லோம் நேத்ரத்ரயாய வௌஷட் | க்ல꞉ அஸ்த்ராயப் ப²ட் | பூ⁴ர்பூ⁴வஸ்ஸுவரோமிதி தி³க்³ப³ந்த⁴꞉ |

தியானம்

அம்ருதகரதலாதௌ³ ஸர்வஸஞ்ஜீவனாட்⁴யா அவக⁴ஹரண ஸுத்³க்ஷௌ வேத³ஸாரே மயூகே²| ப்ரணவமயவிகாரௌ பா⁴ஸ்கராகாரதே³ஹௌ ஸததமனுப⁴வே'ஹம் தௌ ப³லாதிப³லேஷு ||

ஓம் ஹ்ரீம் ப³லே மஹாதே³வி ஹ்ரீம் மஹாப³லே க்லீம் சதுர்வித⁴புருஷார்த²ஸித்³தி⁴ப்ரதே³ தத்ஸவிதுர்வரதா³த்மிகே ஹ்ரீம் வரேண்யம் ப⁴ர்கோ³ தே³வஸ்ய வரதா³த்மிகே | அதிப³லே ஸர்வத³யாமூர்தே ப³லே ஸர்வக்ஷுத்³ப்⁴ரமோபநாஷி²னி தீ⁴மஹி தி⁴யோயோனர்ஜாதே ப்ரசர்யா ப்ரசோத³யாத்மிகே ப்ரணவஷி²ரஸ்காத்மிகே | ஹும் ப²ட் ஸ்வாஹா || ஏவம் வித்³வான் க்ருதக்ருத்யோ ப⁴வதி | ஸாவித்ர்யா ஏவ ஸலோகதாம் ஜயதி || இத்யுபநிஷத் ||

சாந்தி பாதம்

ஓம் ஆப்யாயந்து மமாங்கா³னி வாக்ப்ராணஷ்²சக்ஷு꞉ ஷ்²ரோத்ரமதோ² ப³லமிந்த்³ரியாணி ச ஸர்வாணி | ஸர்வம் ப்³ரஹ்மோபநிஷத³ம் | மாஹம் ப்³ரஹ்ம நிராகுர்யாம் மா மா ப்³ரஹ்ம நிராகரோத் | அநிராகரணமஸ்து அநிராகரணம் மே'ஸ்து꞉ ததா³த்மனி நிரதே யே உபநிஷத்ஸு த⁴ர்மாஸ்தே மயி ஸந்து தே மயி ஸந்து || ஓம் ஷா²ந்திஷ்²ஷா²ந்திஷ்²ஷா²ந்தி꞉ |

பாலகாண்டம் சர்க்கம் –22ல் உள்ள சுலோகங்கள்: 23

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவித்தர் அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இந்திரஜித் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகசி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சரமை சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் ததிமுகன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூஷணன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பனஸன் பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மஹோதரன் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மால்யவான் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை வித்யுஜ்ஜிஹ்வன் விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை