The glory of Vishvamitra | Bala-Kanda-Sarga-21 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம் : விஷ்வாமித்ரரின் கோபத்தைத் தணிக்க தசரதனை சமாதானப்படுத்திய வசிஷ்டர்; விஷ்வாமித்ரரின் மகிமை; ராமனை அனுப்ப சம்மதித்த தசரதன்...
ஸ்னேஹத்தால் அக்ஷரங்கள் {எழுத்துகள்} தெரியாமல் குழறிச் சொன்ன அவனது {தசரதனின்} வசனத்தைக் கேட்ட விஷ்வாமித்ரர் கோபத்துடன் அந்த மஹீபதிக்குப் பதில் சொல்லும் வகையில்:(1) "பூர்வத்தில் ஒரு பொருளை வாக்களித்துவிட்டு அந்தப் பிரதிஜ்ஞையை மறுதலிக்க விரும்புகிறாய். இந்த விலக்கம் ராகவ குலத்திற்குத் தகாது.(2) ராஜாவே {தசரதா}, இஃது உனக்குத் தகுமென்றால் நான் வந்த வழியே திரும்பிச் செல்ல விரும்புகிறேன். காகுத்ஸ்தா {காகுத்ஸனின் வழித்தோன்றலே}, பிரதிஜ்ஞை செய்வது போல் பாசாங்கு செய்துவிட்டு உன் உற்றாருடன் மகிழ்ச்சியாக இருப்பாயாக" {என்றார்}.(3)
மதி நுட்பம் வாய்ந்தவரான விஷ்வாமித்ரர் இவ்வாறு கோபமடைந்த போது, பூமி முழுவதும் நடுங்கியது, தேவர்கள் அச்சமடைந்தனர்.(4) நல்ல விரதங்களைக் கொண்டவரும், தீரரும், மஹானுமான ரிஷி {வசிஷ்டர்}, ஜகம் முழுவதும் திகைப்பதை அறிந்து அந்த நிருபதியிடம் {மன்னன் தசரதனிடம்} இந்த வாக்கியத்தைச் சொன்னார்:(5) "இக்ஷ்வாகு குலத்தில் பிறந்தவனும், சாக்ஷாத் தர்ம வடிவம் கொண்டவனும், தைரியமிக்கவனும், நல்ல விரதங்களைக் கொண்டவனும், ஸ்ரீமானுமான நீ தர்மம் தவறுவது தகாது.(6) ராகவா {தசரதா}, தர்மாத்மாவாக மூவுலகங்களிலும் புகழ் பெற்றிருக்கும் நீ, ஸ்வதர்மத்தை {சுயதர்மத்தை / தன்னறத்தைப்} பின்பற்றுவாயாக. அதர்மத்திற்கு இடங்கொடுப்பது உனக்குத் தகாது.(7) ஒரு காரியத்தை உறுதிகூறிவிட்டு, சொல் தவறுவது இஷ்டாபூர்தங்களை {விரும்பி நிறைவேற்றிய நற்காரியங்களை}[1] அழிக்கும். எனவே ராமனை அனுப்புவாயாக.(8)
[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "வேத சடங்குகள் சிலவற்றில் சமூகத் தொண்டுகள் சிலவும் செய்யப்படும். அவை இஷ்டாபூர்தச் சடங்குகள் என்று அறியப்படும். இவை கிணறு, தடாகம் போன்றவற்றைத் தோண்டுவதைக் குறிக்கும்" என்றிருக்கிறது.
அஸ்திரப் பயிற்சி பெற்றிருந்தாலும், இல்லாவிட்டாலும் அமுதத்தைக் காக்கும் ஜுவாலையை {நெருப்பைப்}[2] போலிந்தக் குசிக புத்திரரால் {விஷ்வாமித்ரரால்} பாதுகாக்கப்படும் அவனை {ராமனை} ராக்ஷசர்களால் வெல்ல முடியாது.(9) இவர் தர்மமே வடிவானவர், வீரியவான்களில் ஒப்பற்றவர், மேலானபுத்தியில் உலகில் நிகரற்றவர், தவத்தில் குற்றங்குறையற்றவர்.(10) சராசரங்களுடன் {அசைவன, அசையாதனவற்றுடன்} கூடிய மூவுலகங்களிலும் உள்ளவையும், பிறரால் அறியப்படாதவையும், இனியும் அறியப்பட முடியாதவையுமான பலவகைப்பட்ட அஸ்திரங்களை இவர் அறிந்தவர்.(11) அவற்றைத் தேவர்களும் அறியார், ரிஷிகளில் எவரும் அறியார், அமரர்கள் அறியார், ராக்ஷசர்கள் அறியார், கின்னரர்கள், மஹா உரகர்கள், கந்தர்வர்கள், யக்ஷர்களும் அறியார்.(12)
[2] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "சொர்க்கத்தில் அமுத கலசமானது, அசுரர்கள் கொள்ளையிடாவண்ணம் அணுகப்பட முடியாத நெருப்பு அரணால் பாதுகாக்கப்படுகிறது" என்றிருக்கிறது.
அந்த அஸ்திரங்கள் அனைத்தும் கிருஷாஷ்வரின் {பிருசாச்வரின்} பரம தார்மீக புத்திரர்களாவர். முன்னர், கௌசிகர் ராஜ்யத்தை ஆண்டுக் கொண்டிருந்தபோது அவை அனைத்தும் இவருக்குக் கொடுக்கப்பட்டன.(13) {தக்ஷ} பிரஜாபதியுடைய மகளின் சுதன்களும், கிருஷாஷ்வரின் புத்திரர்களுமான அவை வடிவத்தில் ஒப்பற்றவையாகவும், மஹாவீரியமிக்கவையாகவும், பளபளப்பானவையாகவும், ஜய வாகனங்களாகவும் {வெற்றிக்கு அழைத்துச் செல்லும் வாகனங்களாகவும்} இருக்கின்றன.(14)
அழகான இடையைக் கொண்ட ஜயை, ஸுப்ரபை என்ற தக்ஷகன்னிகள் {தக்ஷனின் மகள்கள்}, பிரகாசமிக்க அஸ்திர சஸ்திரங்கள் நூற்றுக் கணக்கானவற்றைப் பெற்றனர்.(15) ஜயை என்ற பெயரைக் கொண்டவள், அசுர சைன்ய வதத்திற்கான வரத்தைப் பெற்று, அளவிடமுடியாத மனோவலிமை கொண்டவர்களும், அரூபர்களும் {வடிவமற்றவர்களும்}, சிறந்தவர்களுமான ஐம்பது மகன்களை {அஸ்திர சஸ்திரங்களைப்} பெற்றாள்.(16) ஸுப்ரபை, தாக்கப்பட இயலாதவர்களும், வெல்லப்பட முடியாதவர்களும், பலசாலிகளும், ஸம்ஹாரம் என்ற பெயர் படைத்தவர்களுமான ஐம்பது புத்திரர்களைப் பெற்றாள்.(17) குசிகனின் மகன் {விஷ்வாமித்ரர்} இந்த அஸ்திரங்கள் அனைத்தையும் அறிவார். மேலும் இந்தத் தர்மவித் {தர்மத்தை அறிந்தவர்}, பூர்வத்தில் இல்லாதவற்றையும் {புதிய அஸ்திரங்களையும்} படைக்கவல்லவராவார்.(18)
ராகவா {தசரதா}, தர்மத்தை அறிந்தவரும், மஹாத்மாவும், முனிவர்களில் முக்கியருமான இவர், கடந்த காலத்திலும், எதிர்காலத்திலும் அறியாதது ஏதுமில்லை. இவர் அறியாதது ஒன்றுமில்லை.(19) பெரும்புகழ் படைத்த இந்த மஹாதேஜஸ்வி {விஷ்வாமித்ரர்}, இவ்வகை வீரியத்தைப் பெற்றவராவார். ராஜாவே, ராமனை உடனனுப்புவதில் ஐயமேதும் கொள்வது உனக்குத் தகாது.(20) குசிகரின் மகனே {விஷ்வாமித்ரரே} அவர்களை {ராட்சசர்களை} அழித்து விடலாம் என்றாலும், உன் புத்திரனின் நன்மையை நோக்கில் கொண்டே உன்னை அணுகி வேண்டிக் கொண்டிருக்கிறார்" {என்றார் வசிஷ்டர்}.(21)
அந்த ரகுரிஷபன் {ரகு குலத்தின் காளையான தசரதன்}, இந்த முனிவசனத்தால் மன அமைதியை அடைந்தான். புகழ் பெற்றவனும், பார்த்திபர்கள் பிறரில் உயர்ந்தவனுமான அவன் {தசரதன்}, குசிகனின் மகனுடன் {விஷ்வாமித்ரருடன்} ராகவன் {ராமன்} செல்ல மகிழ்ச்சியுடனும், முழு இதயத்துடனும் சம்மதித்தான்.(22)
பாலகாண்டம் சர்க்கம் –21ல் உள்ள சுலோகங்கள்: 22
Previous | | Sanskrit | | English | | Next |