Friday, 13 August 2021

தசரதன் மறுப்பு | பால காண்டம் சர்க்கம் - 20 (28)

Dasharatha's denial | Bala-Kanda-Sarga-20 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: ராமனை விஷ்வாமித்ரருடன் அனுப்ப மறுத்த தசரதன்; விஷ்வாமித்ரரின் கோபம்...

Dasharatha and Vishwamitra

இராஜசார்தூலன் {மன்னர்களில் புலியான தசரதன்}, விஷ்வாமித்ரர் சொன்னதைக் கேட்டு ஒரு முஹூர்த்த காலம் உணர்வற்றவனாக இருந்து மீண்டும் உணர்வு மீண்டவனாக இதைச் சொன்னான்:(1) "தாமரைக் கண்களைக் கொண்ட என் ராமனுக்கு இன்னும் பதினாறு ஆண்டுகளாகவில்லை {பதினாறு வயதாகவில்லை}. அவனிடம் ராக்ஷசர்களுடன் போரிடும் திறனை நான் காணவில்லை[1].(2) பூரணமாக ஓர் அக்ஷௌஹிணிக்குப் பதியாகவும் {தலைவனாகவும்}, ஈஷ்வரனாகவும் நான் இருக்கிறேன். இதனால் {ஓர் அக்ஷௌஹிணி படையால்} சூழப்பட்டவனாகச் சென்று நானே அந்த நிஷாசரர்களுடன் {இரவுலாவிகளான ராக்ஷசர்களுடன்} யுத்தம் புரிவேன்[2].(3) என்னுடைய படைவீரர்களான இந்தச் சூரர்கள், துணிவுமிக்கவர்களாகவும், அஸ்திரங்களில் திறன் மிகுந்தவர்களாகவும், ராக்ஷசகணங்களுடனான யுத்தத்திற்குத் தகுந்தவர்களாகவும் இருக்கிறார்கள். ராமனை அழைத்துச் செல்லாதீர்.(4) நானே தனுஷ்பாணியாக {வில்லேந்தியவனாக உமது வேள்வியைப்} பாதுகாப்பேன். நான் பிராணனைத் தரித்திருக்கும் வரை போரின் முன்னணியில் நிஷாசரர்களுடன் {இரவுலாவிகளுடன்} போரிடுவேன்.(5) அந்த விரதச் சடங்குகளைத் தடையில்லாமல் பாதுகாக்க நானே வர விரும்புகிறேன். ராமனை அழைத்துச் செல்லாதீர்.(6)

[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "ஊனஷோடஷவர்ஷோ என்ற கூற்றைக் கொண்டு, ராமன் விஷ்வாமித்ர முனிவருடன் சென்ற வயதைத் தீர்மானிப்பதைக் குறித்த ஏராளமான உரைகள் இருக்கின்றன. ராமன் சீதையைத் திருமணம் செய்யும் காலம், அவன் நாடு கடத்தப்பட்டுக் காட்டுக்குச் செல்லும் காலம் முதலிய இடங்களில் இந்நேரத்தில் அவனது வயது பனிரெண்டு என்று குறிப்பிடப் படுகிறது. ஆரண்யகாண்டம் 38:6ல் "இந்த ராகவன் பனிரெண்டு வயதுக்கும் குறைவான பாலனாக அஸ்திரப் பயிற்சி இல்லாத போதே" என்று மாரீசன் சொல்வதாக அமைகிறது. ஒரு க்ஷத்திரியன் பதினாறு வயதாகும் வரை பாலனே என்பதால் அவன் போரிடத் தகுந்தவனல்ல. ஆனால் இங்கே ராமன் 16 வயதுக்கும் குறைந்தவனாகச் சொல்லப்படுகிறான். இருந்தும் போருக்காக அழைத்துச் செல்லப்பட இருக்கிறான்" என்றிருக்கிறது. அதையே தசரதன் இங்கே குறிப்பிடுகிறான். ஆரண்ய காண்டத்தில் மாரீசன் வேண்டுமென்றே ராவணனிடம் ராமனின் வயதைக் குறைத்துச் சொன்னான் என்ற வாதமும் இங்கே ஏற்புடையதாகவே தெரிகிறது. தமிழ் மொழிபெயர்ப்புகள் பலவற்றிலும் ராமன் விஷ்வாமித்ரருடன் சென்ற போது அவனுக்குப் பதினாறுக்கும் நான்கு குறைவான பனிரெண்டு வயது என்றிருக்கிறது.

[2] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "பழங்காலப் படைகளின் முதல் சிறு பிரிவு ஒரு பங்தி {பட்டி} ஆகும். அதில் ஒரு தேர், ஒரு யானை, மூன்று குதிரைகள், ஏழு காலாட்கள் இருப்பார்கள். அந்தப் பட்டிகளைப் பெருக்கினால் 21,870 தேர்களும், அதே எண்ணிக்கையிலான யானைகளும், 65,610 குதிரைகளும், 1,09,350 காலாட்களும் கொண்டது ஓர் அக்ஷௌஹிணியாகும்" என்றிருக்கிறது. மஹாபாரதம் ஆதிபர்வம் 2:19-26ல் அக்ஷௌஹிணிக்கான விரிவான விளக்கம் இருக்கிறது. 

அவன் பாலகன், வித்தை கற்று முடியாதவன், பலாபலம் {பலத்தையும், பலவீனத்தையும்} அறியாதவன், முக்கியமாக அஸ்திரபலம் இல்லாதவன், யுத்தத்தில் திறன் பெறாதவன். அவன் ராக்ஷசர்களுக்கு இணையாகமாட்டான், அதிலும் குறிப்பாக அவன் வஞ்சகப் போரை அறியமாட்டான்.(7,8அ) ராமனை விட்டுப் பிரிந்தால் ஒரு முஹூர்த்த காலம் கூட நான் ஜீவித்திருக்க மாட்டேன். முனிஷார்தூலரே {முனிவர்களில் புலியே}, ராமனை அழைத்துச் செல்லாதீர்.(8ஆ,9அ) நல்விரதங்களைக் கொண்ட பிராமணரே, ராகவனை நீர் அழைத்துச் செல்ல இச்சித்தால், நால்வகைத் துருப்புகளுடன் கூடிய என்னையும் அவனுடன் அழைத்துச் செல்வீராக[3].(9ஆ,10அ) கௌசிகரே, நான் பிறந்து அறுபதாயிரம் ஆண்டுகள் கழிந்த பிறகு, பெருந்துயருக்கிடையில் பிறந்த இந்த ராமனை நீர் அழைத்துச் செல்லாதீர்.(10ஆ,11அ) ஆத்மாவில் பிறந்த நான்கு மகன்களிடமும் கொண்ட என் அன்பு மூத்தவனிடம் அதிகமாக இருக்கிறது. நீர் தர்மத்தைப் பிரதானமாகக் கொண்டு, ராமனை அழைத்துச் செல்லாதீர்.(11ஆ,12அ)

[3] தேசிராஜு ஹனுமந்த ராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "இங்கு சொல்லப்படும் சதுரங்க சேனையென்பது, தேர்ப்படை, யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்" என்றிருக்கிறது.

முனிபுங்கவரே, அந்த ராக்ஷசர்களின் வீரியமென்ன? அவர்கள் யாருடைய புத்திரர்கள்? அவர்களின் அளவும், வடிவமும் என்ன? அவர்களை யார் பாதுகாக்கிறார்கள்?(12ஆ,13அ) பிராமணரே, வஞ்சகப் போர் புரியும் ராக்ஷசர்களை ராமனாலோ, என் படைகளாலோ, என்னாலோ எவ்வாறு எதிர்க்க இயலும்?(13ஆ,14அ) பகவானே, வீரத்துடன் துஷ்ட இயல்பையும் கொண்ட ராக்ஷசர்களுடன் போரிடும்போது அவர்களை நான் எவ்வாறு எதிர்க்க வேண்டும் என்பது குறித்த அனைத்தையும் எனக்குச் சொல்வீராக" என்ற {தசரதனின்} வசனத்தைக் கேட்டவர் {கேட்ட விஷ்வாமித்ரர்},(14ஆ,15) "பௌலஸ்திய குலத்தில் பிறந்தவனும், ராவணன் என்ற பெயரைக் கொண்டவனுமான ராக்ஷசன், மஹாபலவானாகவும், மஹாவீரியவானாகவும் இருக்கிறான். பல ராக்ஷசர்களால் சூழப்பட்ட அவன், பிரம்மன் கொடுத்த வரத்தால் மூவுலகங்களையும் பாடாய் படுத்திவருகிறான்.(16,17அ) மஹாராஜா, அந்த ராக்ஷசாதிபதி {ராவணன்}, சாக்ஷாத் வைஷ்ரவணனின் {குபேரனின்} தம்பி என்றும், விஷ்ரவஸ் முனியின் மகனென்றும் கேள்விப்படுகிறோம்.(17ஆ,18அ) அந்த மஹாபலவான் தானே வந்து யஜ்ஞங்களுக்குத் தடையேற்படுத்துவதில்லை. அவனால் தூண்டப்பட்டவர்களும், மஹாபலசாலிகளுமான மாரீசன், ஸுபாஹு என்ற ராக்ஷசர்கள் இருவர் யஜ்ஞத்திற்குத் தடையேற்படுத்துகிறார்கள்" {என்றார் விஷ்வாமித்ரர்}.(18ஆ,19)

அந்த முனி {விஷ்வாமித்ரர்} இவ்வாறு சொன்னதும், ராஜா {தசரதன்} அந்த முனியிடம், "போரில் அந்த துராத்மாவை {ராவணனை} எதிர்க்க உண்மையில் நான் சக்தனல்லன்.(20) தர்மத்தை அறிந்தவரும், எங்கள் குருவும், தேவனுமான நீர் என் புத்திரனுக்கும், அற்ப பாக்கியம் கொண்ட எனக்கும் நன்மையைச் செய்வீராக.(21) தேவர்கள், தானவர்கள், கந்தர்வர்கள், யக்ஷர்கள், படகர்கள் {பறவைகள்}, பன்னகர்கள் {நாகர்கள்} ஆகியோரும் கூட, போரில் ராவணனை எதிர்க்கும் சக்தி கொண்டவர்களல்ல எனும்போது மானிடர்களைக் குறித்துச் சொல்வதற்கென்ன இருக்கிறது?(22) அந்த ராவணன் போரில் வீரியவான்களின் வீரத்தை அழித்துவிடுவான். முனி சிரேஷ்டரே, என் மொத்த படையுடனோ, என் மகன்கள் அனைவருடனோ, அவனது படைகளையோ, அவனையோ நான் எதிர்க்கவல்லவனல்லன்.(23,24அ) 

பிராமணரே, அமரனைப் போன்றவனும், போர்களில் அனுபவமில்லாதவனும், பாலனும், புத்ரகனுமான {புத் எனும் நரகில் இருந்து தந்தையைக் காக்கும் மகனுமான} என் தனயனை நான் அனுப்ப மாட்டேன்.(24ஆ,25அ) மேலும், உமது யஜ்ஞத்திற்குத் தடையேற்படுத்தும் இருவரும் {மாரீசனும், ஸுபாஹுவும்}, சுந்த உபசுந்தர்களின் {சுந்தன், உபசுந்தன் என்ற அசுரர்களின்} சுதன்களாவர். அவர்கள், யுத்தத்தில் காலனைப் போன்றவர்களாவர். நான் என் புத்திரனை அனுப்ப மாட்டேன்.(25ஆ,26அ) வீரியவான்களான மாரீசனும், ஸுபாஹுவும் நல்ல பயிற்சியை உடையவர்கள். நான் என் நட்புப் படைகளுடன் சேர்ந்தாலும் அவ்விருவரில் ஒருவரை மட்டும் எதிர்த்து செல்வேன். அல்லது {என் இயலாமையின் காரணமாக} என் பந்துக்களுடன் {உறவினர்களுடன்} உம்மை வேண்டி நிற்பேன்" {என்றான்.}(26ஆ,27)

இவ்வாறு அந்த நரபதி {தசரதன்} பொருத்தமில்லாமல் பேசியதும், துவிஜேந்திரரான அந்தக் குசிக சுதன் {குசிகனின் மகனான விஷ்வாமித்ரர்}, பெருங்கோபத்தில் மூழ்கினார். அந்த மஹரிஷி, நெய்யில் நனைத்த ஹோமத்தின் அக்னியைப் போலக் கொழுந்து விட்டெரிந்தார்.(28)

பாலகாண்டம் சர்க்கம் –20ல் உள்ள சுலோகங்கள்: 28

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவித்தர் அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இந்திரஜித் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகசி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சரமை சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் ததிமுகன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூஷணன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பனஸன் பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மஹோதரன் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மால்யவான் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை வித்யுஜ்ஜிஹ்வன் விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை