Tataka | Bala-Kanda-Sarga-25 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: தாடகையின் பிறப்பு, திருமணம், சாபம் ஆகியவற்றைச் சொன்ன விஷ்வாமித்ரர்; தாடகையைக் கொல்ல ராமனை ஏவியது...
நினைத்தற்கரிய சக்தியைக் கொண்ட அம்முனிவரின் {விஷ்வாமித்ரரின்} வசனத்தைக் கேட்ட அந்தப் புருஷஷார்தூலன் {மனிதர்களில் புலியான ராமன்} நற்சொற்களால் பதில் கூறும் வகையில்,(1) "முனிபுங்கவரே, யக்ஷிகள் அற்ப வீரியம் கொண்டவர்கள் என்று கேள்விப்படுகிறோம். ஓர் அபலையான அவள் {தாடகை} ஆயிரம் யானைகளின் பலத்தை எவ்வாறு வெளிப்படுத்துகிறாள்?" {என்று கேட்டான்}.(2)
அளவற்ற ஆற்றலைக் கொண்ட ராகவனால் இவ்வாறு சொல்லப்பட்ட வசனத்தைக் கேட்டும், அந்த அரிந்தமனையும் {பகைவரை அடக்குபவனான ராமனையும்}, லக்ஷ்மணனையும் உற்சாகப்படுத்தும் வகையிலும் அவர் {விஷ்வாமித்ரர்} இனிய வசனங்கள் கொண்ட இந்த வாக்கியத்தைச் சொன்னார்: "ஓர் அபலை அளவற்ற பலத்தைப் பெற்றது எவ்வாறு என்பதைக் கேட்பாயாக. தான் பெற்ற வரத்தின் வீரியத்தால் அவள் பலம் பெற்றாள்.(3,4) பூர்வத்தில் சுகேது என்ற பெயரில் ஒரு வீரியவான் இருந்தான். நன்னடத்தையுடைய அந்த மஹாயக்ஷன், பிள்ளையற்றவனாக இருந்ததால் மஹாதவத்தைச் செய்து வந்தான்.(5) ராமா, பிறகு மகிழ்ச்சியடைந்த பிதாமஹன் {பிரம்மா} அந்த யக்ஷபதிக்கு {யக்ஷர்களின் தலைவனான சுகேதுவுக்கு} தாடகை என்ற பெயரில் புகழ்பெற்ற கன்னியாரத்னத்தை {ரத்தினம் போன்ற கன்னிகையை மகளாகக்} கொடுத்தான்.(6) பிதாமஹன் {பிரம்மன்} அவளுக்கு ஆயிரம் யானைகளின் பலத்தையும் கொடுத்தான். எனினும், உயர்ந்த சிறப்புகளைக் கொண்ட பிரம்மன், அந்த யக்ஷனுக்குப் புத்திரனைக் கொடுத்தானில்லை.(7) பால பருவத்தில் இருந்து வளர்ந்து ரூபத்தையும் {அழகையும்}, யௌவனத்தையும் {இளமையையும்}, பிரகாசத்தையும் அடைந்த அவள் {அந்தத் தாடகை, தன் தந்தையான சுகேதுவால்} ஜம்பனின் {ஜர்ஜனின்} புத்திரனான சுந்தனுக்குப்[1] பாரியையாக {மனைவியாகக்} கொடுக்கப்பட்டாள்.(8) சிறிது காலம் கழிந்ததும் அந்த யக்ஷி {தாடகை}, கட்டுப்படுத்த முடியாதவனும், மாரீசன் என்ற பெயரைக் கொண்டவனுமான புத்திரனைப் பெற்றாள். அவன் சாபத்தால் ராக்ஷசனானான்.(9)
[1] பாலகாண்டம் 20:25,26ல் மாரீசனும், ஸுபாஹுவும் சுந்த உபசுந்தர்களின் மகன்கள் என்று விஷ்வாமித்ரரே குறிப்பிடுவதாக வருகிறது. இந்த சர்க்கத்தில் சுந்தன், ஜம்பன் (அ) ஜர்ஜனின் மகனாகச் சொல்லப்படுகிறான். மஹாபாரதத்தில் சொல்லப்படும் சுந்தன் நிகும்பனின் மகனாவான். மஹாபாரதம் ஆதிபர்வம் 214:25ல் சுந்தனும், உபசுந்தனும் திலோத்தமைக்காக ஒருவரையொருவர் அழித்துக் கொண்டனர் என்றிருக்கிறது. இந்த சர்க்கத்தின் 10ம் சுலோகத்தில், சுந்தன் அகஸ்தியரால் கொல்லப்பட்டான் என்று வருகிறது. இந்தப் புள்ளிகளை இணைத்துப் பார்த்தால், நிகும்பனுக்கு ஜம்பன் (அ) ஜர்ஜன் என்ற பெயர் இருந்திருக்கலாம் என்றும், அகஸ்தியரின் சாபத்தால் திலோத்தமையின் மூலம் சுந்தனும், உபசுந்தனும் ஒருவரை ஒருவர் கொன்று ஒழிந்திருக்கலாம் என்று பொருள் கொள்ளலாம். மேற்கண்ட கூற்று பொருந்தவில்லையெனில், இந்த சுந்தனும், மஹாபாரத சுந்தனும் வெவ்வேறானவர்களாகவே இருக்க வேண்டும்.
ராமா, {அகஸ்தியரால் தன் கணவன்} சுந்தன் கொல்லப்பட்ட போது, தாடகையும், அவளது புத்திரனும் {மாரீசனும்} ரிஷிஸத்தமரான {ரிஷிகளில் உயர்ந்த} அகஸ்தியரைத் தாக்கி அழிக்க இச்சித்தனர்.(10) அவள் பெரும்பரபரப்புடன் கர்ஜித்தபடியே அவரை பக்ஷிப்பதற்காக {உண்பதற்காக} விரைந்து சென்றபோது, பகவானும், ரிஷியுமான அகஸ்தியர் தம் மீது அவர்கள் பாய இருப்பதைக் கண்டு, "நீ ராக்ஷசனாவாயாக" என்று மாரீசனிடம் சொன்னார்[2].(11,12அ) பெருங்கோபமடைந்த அகஸ்தியர், தாடகையையும் சபிக்கும் வகையில், "மஹா யக்ஷியே, நீ இந்த வடிவை இழந்து, உருகுலைந்த வடிவத்தையும், சிதைந்த முகத்தையும், பயங்கரத் தோற்றத்தையும் கொண்ட புருஷாதீயாவாயாக {மனிதரை உண்பவளாவாயாக}" என்றார்.(12ஆ,13)
[2] 9ம் சுலோகத்தில் சொல்லப்படும் சாபம் இதுவே.
சாபத்தால் உண்டான வெறியுடன் கூடிய அவள் {தாடகை}, கோபத்தில் மூழ்கியவளாக அகஸ்தியர் நடமாடிய இந்த மங்கல தேசத்தைப் பாழடையச் செய்கிறாள்.(14) ராகவா {ராமா}, அவள் துர்நடத்தை கொண்டவளாகவும், பரம பயங்கரியாகவும், துஷ்ட பராக்கிரமம் கொண்டவளாகவும் இருக்கிறாள். கோக்களின் {பசுக்களின்} நன்மைக்காகவும், பிராமணர்களின் நன்மைக்காகவும் இந்த யக்ஷியை {தாடகையை} நீ அழிப்பாயாக.(15) ரகுனந்தனா {ராமா}, சாபத்தில் உறைந்திருக்கும் அவளை முழுமையாக அழிப்பாயாக. மூவுலகங்களிலும் உன்னைத் தவிர வேறொருவனால் அவளை அழிக்க இயலாது.(16) நரோத்தமா {மனிதர்களில் சிறந்த ராமா}, ஸ்திரீ வதம் குறித்த கருணை காரியத்திற்கு ஆகாது. ராஜசுதனான {அரசனின் மகனான} நீ சதுர்வர்ணங்களுக்கும் நன்மையை விளைவிக்கும் காரியத்தைச் செய்ய வேண்டும்.(17) ரக்ஷதன் {பாதுகாவலனான மன்னன்}, அது கொடிதாகவோ, கொடுமையற்றதாகவோ, பாவத்தை விளைவிப்பதாகவோ, களங்கத்தைத் தருவதாகவோ இருந்தாலும் பிரஜைகளை ரக்ஷிக்கும் {மக்களைக் காக்கும்} காரணத்துக்காக எப்போதும் அதைச் செய்ய வேண்டும்.(18)
காகுத்ஸா {காகுத்ஸனின் வழித்தோன்றலே ராமா}, ராஜ்ய பாரத்தில் நியமிக்கப்பட்டவர்கள், ஸநாதன தர்மத்திற்காக {தொன்றுதொட்டுத் தொடர்ந்து வரும் கடமைக்காக} தர்மம் காணப்படாத அதர்மியை அழிக்க வேண்டும்.(19) நிருபா {மக்களைப் பாதுகாப்பவனே ராமா}, பூர்வத்தில் பிருத்வியை {பூமியை} அழிக்க விரும்பியவளும், விரோசனன் மகளுமான மந்தரையைச் சக்ரன் {இந்திரன்} அழித்தான் என்று கேள்விப்படுகிறோம்.(20) இராமா, பூர்வத்தில் இந்திரனற்ற உலகத்தை விரும்பியதற்காக பதிவிரதையும், பிருகுபத்தினியுமான காவியமாதாவை {சுக்கிரரின் அன்னையை} விஷ்ணு அழித்தான்[3].(21) இந்த மஹாத்மாக்களும், புருஷஸத்தமர்களும் {மனிதர்களில் உயர்ந்தவர்களும்}, இராஜபுத்திரர்கள் பிறரும் அதர்மிகளாக இருந்த நாரியைகள் {பெண்கள்} பலரைக் கொன்றிருக்கின்றனர்" {என்றார் விஷ்வாமித்ரர்}[4].(22)
[3] இந்தக் கதை தேவிபாகவதத்தில் உள்ளது. அது பின்வருமாறு: "ஒரு காலத்தில் நேர்ந்த தேவாசுரப் போரில் அசுரகுருவான சுக்ரர் சிவனின் உதவிய நாடினார். அவர் கைலாச மலையில் தவம் செய்து கொண்டிருந்ததால் அசுரர்கள் பாதுகாப்பற்றவர்களானார்கள். அசுரர்கள் சுக்ரரின் ஆசிரமத்திற்குச் சென்றனர். அப்போது அந்த ஆசிரமத்தில் ஆடவர் எவரும் இல்லை. அதிதி தர்மத்தின்படி {விருந்தோம்பலின்படி} காவியமாதாவும் அவர்களுக்குப் பல மாதங்கள் பாதுகாப்பை அளித்தாள். அந்த ஆசிரமம் இந்திரனாலும் ஊடுருவப்பட முடியாததாக இருந்தது. தேவர்கள் பரிந்து கேட்டும் காவியமாதா அந்த அசுரர்களை ஒப்படைக்க மறுத்து, தேவர்கள் அனைவரையும் தன் சக்தியால் உறங்கச் செய்தாள். விஷ்ணு தன் சுதர்சனச் சக்கரத்தை ஏவினான். அஃது ஆசிரமத்தின் பாதுகாப்பையும் மீறி உள்ளே நுழைந்து காவியமாதாவின் தலையை அறுத்தது. ஆசிரமத்திற்குத் திரும்பிவந்த பிருகு, விஷ்ணுவைச் சபித்தார். அந்த ஸ்திரீஹத்தியின் காரணமாகவே விஷ்ணு பல அவதாரங்களை எடுத்தான். சுக்ராசாரியர் இதை அறிந்ததும் அசுரலோகத்தில் முற்றிலும் விஷ்ணு வழிபாட்டைத் தடை செய்தார். பிருகு தமது தவச் சக்தியால் கமண்டலத்தில் இருந்து நீரைத் தெளித்து காவியமாதாவை மீண்டும் உயிர்ப்பித்தார்".
[4] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "இஃது இராமாயணத்தில் அதிகம் விவாதிக்கப்படும் தலைப்பாகும். பெண்களைக் கொல்வது பாவம் என்று சாத்திரங்கள் கூறுகின்றன. இந்தப் பெண்ணைக் கொன்றது தர்மமா இல்லையா என்பதே அவ்விவாதம். பெண்வடிவத்தில் இருந்தாலும் அதர்மியைக் கொல்வதால் தர்மத்திற்கு எந்தத் தீங்கும் நேராது என்பது இதற்கு பதிலாகச் சொல்லப்படுகிறது. பல அப்பாவிகளைக் காப்பதற்காக ஒரு தீயவரை அழிப்பது மன்னர்களுக்குப் பாவத்தை அளிக்காது என்று விஷ்ணுபுராணம் 1:13:73,74ல் சொல்லப்பட்டுள்ளது. தற்காப்பின்றி இருக்கும் பல மக்களுக்காக்க அதர்மியான ஓர் ஆணையோ, பெண்ணையோ கொல்வது சாத்திரப்படியும் மன்னனின் கடமையே ஆகும்" என்றிருக்கிறது. இந்த சர்க்கத்தின் 20, 21 ஸ்லோகங்களும் அதையே வலியுறுத்துகின்றன.
பாலகாண்டம் சர்க்கம் –25ல் உள்ள சுலோகங்கள்: 22
Previous | | Sanskrit | | English | | Next |