Subahu vadha | Bala-Kanda-Sarga-30 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: மாரீசனை கடலில் தள்ளி, ஸுபாஹுவைக் கொன்ற ராமன்; யஜ்ஞத்தை வெற்றிகரமாக நிறைவடையச் செய்தது...
தேசகாலம் அறிந்தவர்களும், அரிந்தமர்களுமான {பகைவரை அடக்குபவர்களுமான} அந்த ராஜபுத்திரர்கள் இருவரும் {ராமனும், லக்ஷ்மணனும்}, தேச காலத்திற்கு ஏற்ற வகையில் கௌசிகரிடம் {விஷ்வாமித்ரரிடம்} பேசத் தொடங்கினர்:(1) "பகவானே, எந்தக் காலத்தில் அவ்விரு இரவுலாவிகளிடம் {மாரீசன், ஸுபாஹுவிடம்} இருந்து {யஜ்ஞத்தைக்} காக்க வேண்டும் என்பதை நாங்கள் கேட்க விரும்புகிறோம். அந்த க்ஷணத்தைத் தவறவிடக்கூடாது. எங்களுக்குச் சொல்வீராக" {என்றனர்}.(2)
இவ்வாறு பேசுபவர்களும், போரிடும் ஆவல் கொண்டவர்களும், நிருபாத்மஜர்களுமான {மன்னனின் மகன்களுமான} அந்தக் காகுத்ஸ்தர்களிடம் முனிவர்கள் அனைவரும் நிறைவடைந்து அவர்களைப் புகழ்ந்தனர்:(3) "இராகவர்களே, நீங்கள் இருவரும் இன்று முதல் ஆறு இரவுகள் {யஜ்ஞத்தைக்} காக்க வேண்டும். இந்த முனி {விஷ்வாமித்ரர்}, தீக்ஷையில் இருக்கிறார். அவர் மௌனநிலையில் ஆழ்ந்திருப்பார் {எனவேதான் இதை நாங்களே சொல்கிறோம்}" என்றனர்[1].(4)
[1] வார்த்தை மாறு உரைத்திலன் முனிவன் மவுனியாய்போர்த் தொழில் குமரனும் தொழுது போந்தபின்பார்த்தனன் விசும்பினை பருவ மேகம்போல்ஆர்த்தனர் இடித்தனர் அசனி அஞ்சவே- கம்பராமாயணம் 435
மகிமைமிக்கவர்களான அவ்விரு ராஜபுத்திரர்களும் அந்த வசனத்தைக் கேட்டு ஆறு பகல்களும், இரவுகளும் நித்திரையில்லாமல் அந்த தபோவனத்தைக் காத்தனர்.(5) அரிந்தமர்களும் {பகைவரை அடக்குபவர்களும்}, பரமதன்விகளுமான {பெரும் வில்லை ஏந்துபவர்களுமான} அந்த வீரர்கள் விழிப்புடன் {அக்னி குண்டத்தின்} அருகில் திரிந்தபடியே முனிவரரான {முனிவர்களில் சிறந்த} விஷ்வாமித்ரரைக் காத்தனர்.(6) அந்தக் காலம் கடந்ததும், ஆறாம் நாள் வந்ததும், ராமன் சௌமித்ரியிடம் {லக்ஷ்மணனிடம்}, "விழிப்புடன் ஆயத்தமாக இருப்பாயாக" என்றான்.(7)
போரிடும் ஆவலில் இருந்த ராமன் இவ்வாறு சொன்னபோது, உபாத்யாயரும் {ஆசிரியரான விசுவாமித்ரரும்}, புரோஹிதர்களும் அமர்ந்திருந்த வேதி {அக்னி குண்டம்} திடீரெனச் சுடர்விட்டெரிந்தது.(8) விஷ்வாமித்ரரும், ரித்விக்குளும் சூழ்ந்திருந்த அந்த வேதி தர்ப்பை, சமஸம், ஸ்ருக்கு, ஸமித்து, குஸுமம் ஆகியவற்றுடன் சுடர்விட்டு எரிந்தது[2].(9) அந்த யஜ்ஞம், விதிப்படி மந்திரங்கள் ஓதி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, ஆகாயத்தில் அச்சத்தை உண்டாக்கும் மஹாசப்தம் உண்டானது.(10) மழைக்காலத்தில் மேகம் தோன்றுவதைப் போல வானத்தை மறைத்தபடி ராக்ஷசர்கள் இருவர் மாயைகளை வெளிப்படுத்திய வண்ணம் விரைந்து வந்தனர்.(11) பெரும் வடிவம் கொண்ட மாரீசனும், ஸுபாஹுவும், அவர்களைத் தொடர்ந்து வந்தவர்களும் அங்கே உதிர வெள்ளத்தைப் பொழியத் தொடங்கினர்.(12)
[2] நரசிம்மாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், "யாகவேதி பற்றிக் கொண்டு எரிவது உத்பாதமாகையால் ராக்ஷசகர்கள் வருவதைத் தெரிவிக்கிறது" என்றிருக்கிறது. தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "மேலே குறிப்பிப்படுவனவற்றில் தர்ப்ப என்பது குசப்புல், அல்லது வெட்டிவேராகும். சமஸம் என்பது சோமச்சாறு பருகும் பான பாத்திரமாகும். ஸ்ருக்கு என்பது முழம் நீளக் கைப்பிடியுடனும், உள்ளங்கை அளவு கொள்ளிடத்துடனும் கூடிய வேள்விக் கரண்டியாகும். ஸமித்து என்பது விறகாகும். குஸுமம் என்பது மலர்களாகும்" என்றிருக்கிறது.
உதிர வெள்ளத்தில் மூழ்கும் வேதியை {அக்னிகுண்டத்தைக்} கவனித்த ராமன், விரைந்து வந்து வானத்தில் இருக்கும் அவர்களைக் கண்டான்.(13) தாமரைக் கண்களைக் கொண்டவனான ராமன், விரைவாகப் பாய இருக்கும் அவ்விருவரையும் கண்டதும், லக்ஷ்மணனை நோக்கி இந்த வசனத்தைச் சொன்னான்:(14) "லக்ஷ்மணா, தீய நடை கொண்டவர்களும், பச்சை ஊனுண்பவர்களுமான இவ்வகை ராக்ஷசர்களைக் கொல்லும் உற்சாகம் எனக்கில்லை. அடர்மேகங்களைச் சிதறடிக்கும் பெருங்காற்றைப் போல மானவாஸ்திரத்தால் நிச்சயம் இவர்களைச் சிதறடிப்பேன். பார்ப்பாயாக" {என்றான்}.(15,16அ)
வேகவானான ராமன், இந்த வசனத்தைச் சொல்லிவிட்டு, பெரும்பிரகாசம் கொண்ட பெருங்கணையான மானவாஸ்திரத்தை எடுத்து {வில்லில்} பொருத்தினான். பிறகு அந்த ராகவன், பரமக்ரோதத்துடன் அதை மாரீசனின் மார்பில் எய்தான்.(16ஆ,17) மானவமெனும் பரமாஸ்திரத்தால் நன்றாகத் தாக்கப்பட்ட அவன் {மாரீசன்}, முழுமையாக நூறு யோஜனைகள் கடந்து அலைகள் மோதும் சாகரத்தில் {பெருங்கடலில்} வீசப்பட்டான்[3].(18) அந்தச் சீதேஷுவின்[4] பலத்தால் தாக்கப்பட்டு உணர்வற்றவனாகச் சுழன்று வீசப்படும் மாரீசனைக் கண்ட ராமன், லக்ஷ்மணனிடம் சொன்னான்:(19) "லக்ஷ்மணா, மனுவால் விளக்கப்பட்ட சீதேஷு {குளிர்ந்த கணையான} மானவம், அவனைக் கொல்லாமல், பிராணனுடன் மோஹிக்கச் செய்ததை {உயிருடன் கலங்கடித்ததைப்} பார்.(20) கருணையற்றவர்களும், துஷ்டசாரிகளும் {தீய நடை கொண்டவர்களும்}, பாவ கர்மங்களைச் செய்பவர்களும், யஜ்ஞங்களுக்கு இடையூறு விளைவிப்பவர்களும், உதிரம் பருகுபவர்களுமான இந்த ராக்ஷசர்களை நான் கொல்லவே விரும்புகிறேன்" {என்றான்}.(21)
[3] சித்தாசிரமம், பெருங்கடலில் இருந்து 100 யோஜனைகள், அஃதாவது ஏறக்குறைய 800 கி.மீ. தொலைவில் இருந்தது என்று இங்கே கூறப்படுகிறது. காவியங்கள் மிகைப்படக் கூறுந்தன்மை கொண்டவை என்ற கருத்தைக் கொண்டோர், "ராமன், மாரீசனை அடித்துக் கடலில் தள்ளியது வரலாறாக இருந்தால், இந்த சித்தாசிரமம் கடலின் அருகிலேயே இருந்திருக்க வேண்டும்" என்று சொல்வார்கள்.
[4] சீதேஷு என்பது மானவாஸ்திரத்தின் மற்றொரு பெயராக இருக்கலாம். ஆங்கில மொழிபெயர்ப்புகள் சிலவற்றில் இதற்குக் குளிர்ந்த கணைகள் என்று பொருள் கொள்ளப்படுகிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், மானவாஸ்திரமும், சிதேஷு அஸ்திரமும் தனித்தனியாக ஏவப்பட்டிருக்கலாம் என்ற அடிக்குறிப்பு இருக்கிறது.
லக்ஷ்மணனிடம் இவ்வாறு சொன்ன ரகுநந்தனன் {ரகுவின் குலத்திற்கு மகிழ்ச்சியை அளிக்கும் ராமன்}, தன் லாகவத்தைக் காட்டும் வகையில் மகத்தான ஆக்நேயாஸ்திரத்தை எடுத்து ஸுபாஹுவின் மார்பில் ஏவினான். இதனால் தாக்குண்ட அவன் {ஸுபாஹு} புவியில் {தரையோடு தரையாக} விழுந்தான்[5].(22) பெரும்புகழ்பெற்றவனும், பரமோதாரனுமான {பரமதயாளனுமான} ராகவன் {ராமன்}, முனிவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் வாயவ்யத்தை {வாயவ்யாஸ்திரத்தை} எடுத்து எஞ்சியோரை {எஞ்சிய ராக்ஷசர்களை} வீழ்த்தினான்.(23) அந்த ரகுநந்தனன், யஜ்ஞத்திற்கு இடையூறு செய்யும் ராக்ஷசர்கள் அனைவரையும் அழித்த போது அங்கே இருந்த ரிஷிகள் பூர்வத்தில் {அசுரர்களை வீழ்த்தி} வெற்றியடைந்த இந்திரனைப் போல அவனைப் பூஜித்தனர்.(24)
[5] திருமகள் நாயகன் தெய்வ வாளிதான்வெருவரு தாடகை பயந்த வீரர்கள்இருவரில் ஒருவனைக் கடலில் இட்டது அங்குஒருவனை அந்தகபுரத்தின் உய்த்ததே- கம்பராமாயணம் 444
அந்த யஜ்ஞம் நிறைவடைந்ததும், அழிவற்ற திசைகளைக் கண்ட விஷ்வாமித்ர மஹாமுனி அந்தக் காகுத்ஸ்தனிடம் {ராமனிடம்} இதைச் சொன்னார்:(25) "மஹாபாஹுவே {பெருந்தோள்களைக் கொண்டவனே}, என் நோக்கம் நிறைவேறியது. குரு வசனம் உன்னால் மெய்ப்பிக்கப்பட்டது. பெருஞ்சிறப்புமிக்க வீரா, இந்த சித்தாசிரமத்தை சத்தியமாக்கினாய் {இந்த ஆசிரமத்தின் பெயரை உண்மையாக்கினாய்}" என்று அவர் {விசுவாமித்ரர்} ராமனைப் புகழ்ந்தபோது அவ்விருவரும் செவ்வந்தியை {சந்தியாகாலத்தை} நெருங்கினர்.(26)
பாலகாண்டம் சர்க்கம் – 30ல் உள்ள சுலோகங்கள் : 26
Previous | | Sanskrit | | English | | Next |