Siddhashrama | Bala-Kanda-Sarga-29 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: வாமன அவதாரத்தையும், சித்தாசிரமத்தையும் குறித்துச் சொன்ன விஷ்வாமித்ரர்...
அந்த ஒப்பற்றவனின் வசனத்தைக் கேட்டதும் மஹாதேஜஸ்வியான விஷ்வாமித்ரர் அவனிடம் அதை விவரிக்கத் தொடங்கி,(1) "மஹாபாஹுவே ராமா, தேவர்களாலும் நமஸ்கரிக்கப்படுபவனும், மஹாதபஸ்வியுமான விஷ்ணு நூறு யுகங்களைப் போன்ற நல்ல பல வருடங்கள் தவத்திலும், யோகத்திலும் ஈடுபட்டவாறே இந்த வனத்தில் வசித்து வந்தான்.(2,3அ) இராமா, மஹாத்மாவான வாமனனின் பூர்வாசிரமமான இது, மஹாதபஸ்வியின் {கசியபரின்} சித்தம் நிறைவேறியதால் சித்தாசிரமம் என்று புகழ்பெற்றிருந்தது[1].(3ஆ,4அ)
[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "வாமன அவதாரத்திற்கு முன்பே இந்த ஆசிரமம் விஷ்ணுவுடையதாக இருந்தது. பின்னர் வாமனனும் இங்கே தவம் பயின்றான். எனவே, இந்த ஆசிரமம் விஷ்ணுவுக்கும், வாமனனுக்கும் உரியதாகும். இத்தகைய ஒப்புமையில் இது தற்போது ராமனுக்கும் சொந்தமானது என விஷ்வாமித்ரர் இந்தச் சர்க்கத்தின் 24ம் சுலோகத்தில் சொல்கிறார்" என்றிருக்கிறது.
அதே காலத்தில், வைரோசனியான {விரோசனனின் மகனான} ராஜா பலி[2], இந்திரனுடன் கூடிய, மருத்கணங்களையும், தைவதகணங்களையும் {தேவ கணங்களையும்} முற்றிலும் வென்றவனாக மூவுலகங்களிலும் புகழ்பெற்று அந்த ராஜ்ஜியத்தை ஆண்டு வந்தான்.(4ஆ,5) மஹாபலவானான அசுரேந்திரன் பலி, யஜமானனாக {வேள்வியைச் செய்பவனாக} ஒரு மகத்தான யஜ்ஞத்தைச் செய்தபோது[3], தேவர்கள் அக்னியை முன்னிட்டுக் கொண்டு இந்த ஆசிரமத்தில் விஷ்ணுவை நேரடியாக அணுகிப் பேசினர்.(6) {தேவர்கள்}, "விஷ்ணுவே, வைரோசனியான பலி, உத்தம யஜ்ஞத்தைச் செய்து வருகிறான். அது நிறைவடையும் முன் நம் காரியத்தை முழுமையாக நிறைவேற்றிக் கொள்ள வேண்டும்.(7) இங்கே அங்கே என எங்கிருந்து வந்து யாசிப்பவர் எவராக இருந்தாலும், அவனை அணுகி எதற்காகவும், எவ்வளவு கேட்டாலும் அவரவர்களுக்கு அவ்வளவையும் கொடுக்கிறான்.(8) விஷ்ணுவே, இந்நிலையில் நீ தேவர்களின் நன்மைக்காக மாயாயோகத்தில் மூழ்கி, வாமனத்துவத்தை ஏற்று உத்தம காரியத்தைச் செய்வாயாக" {என்றனர்}.(9)
[2] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "இங்கே குறிப்பிடப்படும் ராஜா பலி, பொதுவாக பலி சக்கரவர்த்தி என்று அழைக்கப்படுகிறான். இவன் ஹிரண்யகசிபுவின் மகனான பிரகலாதனின் பேரனாவான். ஹிரண்யகசிபு விஷ்ணுவின் நரசிம்மாவதாரத்தால் கொல்லப்பட்டவன்" என்றிருக்கிறது.
[3] நரசிம்மாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், "அஸுரர்களுக்கதிபதியாகிய பலி யாகஞ்செய்வதெப்படி கூடும்? யாகமென்பது தேவதையைக் குறித்து அக்நியில் ஹவிஸ்ஸைக் கொடுத்தல். எந்தத் தேவதைக்கு ஹவிஸ்ஸைக் கொடுக்க வேண்டுமோ, அந்தத் தேவதையை மனத்தில் நன்கு த்யாநிக்க வேண்டும். இவனோ தேவர்களுக்கு விரோதி. ஆகையால் இவன் யாகஞ்செய்தானென்பது எப்படிச் சேருமெனில், இப்பலி செய்யும் யாகம் இந்த்ராதி தேவதைகளைக் குறித்துச் செய்யும் யாகம் அன்று. இது பகவானைக் குறித்துச் செய்யும் யாகம். ஆனது பற்றியே கடவுளின் ஆராதநமாகிய என்று சொல்லப்பட்டதென்று கண்டு கொள்வது" என்றிருக்கிறது.
இராமா, அதே வேளையில், அக்னிக்கு இணையான பிரகாசங் கொண்டவரும், அதிதியுடனும் கூடியவரும் தன்னொளியால் ஒளிர்பவருமான பகவான் காசியபர், தன் தேவியுடன் {அதிதியுடன்} திவ்யமான ஆயிரம் வருடங்கள் விரதமிருந்து, வரம் அருள்பவனான மதுசூதனனைத் துதித்தார்.(10,11) {காசியபர்}, "தபோமயமானவனே, தவக்குவியலே, தபோமூர்த்தியே, தபாத்மகனே {தவத்தை ஆன்மாவாகக் கொண்டவனே}, புருஷோத்தமா, என் தவச் சக்தியால் நான் உன்னைக் காண இயன்றவனாக இருக்கிறேன்[4].(12) பிரபுவே, உன் சரீரத்தில் நான் மொத்த ஜகத்தையும் காண்கிறேன். நீ ஆதியற்றவனாகவும், விவரிக்கப்பட முடியதவனாகவும் இருக்கிறாய். உன்னை நான் சரணடைகிறேன்" {என்று விஷ்ணுவைத் துதித்தார்}.(13)
[4] நரசிம்மாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், "விஷ்ணு ஜகத்ரக்ஷண சிந்தையிலாழ்ந்து, இத்தேசத்தில் வெகுகாலம் கண்ணுக்குப் புலப்படாமல் வசித்திருந்தனன். காச்யபமஹர்ஷி இதையறிந்து இத்தேவனையே புத்திரனாகப் பெற விரும்பி, தேவமாநத்தால் ஆயிரம் வருஷங்களிற் செய்து முடிக்கத்தக்கதும் அவ்விஷ்ணுவின் ஆராதநரூபமுமாகிய ஓர் விரதத்தைத் தனது பத்நியுடன் கூடி அனுஷ்டித்து அதை முடிக்கும்பொழுது தனக்கு வரங்கொடுக்கும் பொருட்டு ப்ரத்யக்ஷமாகிய விஷ்ணு தேவனைத் துதி செய்தனர். அச்சமயத்திற்றானே தேவதைகள் அவ்விடம் வந்து அவ்விஷ்ணுவை வேண்டிக் கொண்டனரென்று கண்டு கொள்வது" என்றிருக்கிறது.
மகிழ்ச்சியடைந்த ஹரி, கல்மஷம் {குற்றம், மாசு, கறை} தூய்மையடைந்த கசியபரிடம், "வரங் கேட்பீராக. பத்ரமாக {மங்கலமாக} இருப்பீராக. வரத்திற்குத் தகுந்தவரென நான் உம்மை நினைக்கிறேன்" என்றான்.(14)
அவனது வசனத்தைக் கேட்டு மாரீசரான {மரீசியின் மகனான} கசியபர் சொன்னார்: "வரதா {வரமருள்பவனே}, ஸுவிரதா {பாதுகாப்பு அளிக்கும் நல்விரதம் கொண்டவனே}, மகிழ்ச்சியுடன் இருக்கும் உன்னிடம் அதிதியையும், தேவர்களையும் தொடர்ந்து நானும் வேண்டும் வரத்தை அருள்வாயாக.(15,16அ) பகவானே, அனகா {பாவமற்றவனே}, அதிதிக்கும் எனக்கும் நீ புத்ரனாவாயாக. அஸுரஸூதனா, நீ சக்ரனுக்கு {இந்திரனுக்குத்} தம்பியாவாயாக. சோகமடைந்திருக்கும் தேவர்களுக்கு உன் உதவியை அளிப்பாயாக.(16ஆ,17) தேவேசா, கர்மங்கள் சித்தியடையும்[5] {செயல்கள் [என் தவம்] நிறைவேறும்} இவ்விடமானது, உன் அருளால் சித்தாசிரமம் என்ற பெயரை அடையட்டும். பகவானே, இங்கிருந்தே நீ எழுவாயாக {அவதரிப்பாயாக}" என்றார் {கசியபர்}.(18)
[5] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், " ஸித்தே கர்மணி என்ற சொல் இரு வழிகளில் பொருள் கொள்ளப்படுகிறது. விஷ்ணு தேவர்களின் கோரிக்கையையும், கசியபரின் வேண்டுதலையும் ஒட்டி தன் தவத்தை முடித்துக் கொள்வதால் இந்தப் பெயர் ஏற்பட்டுது என்று சொல்வது முதல் வழி. வரம் வேண்டும் காசியபரின் வேண்டுதல் நிறைவடைவதால் இந்தப் பெயர் ஏற்பட்டது என்று சொல்வது இரண்டாம் வழி. பரமாத்மாவின் செயல்கள் தவத்தால் நிறைவடைய வேண்டியதில்லை என்பதால் இரண்டாம் வழியே சரியெனப்படுகிறது. எவ்வழியில் பார்த்தாலும் தேவர்களுக்கும், மனிதர்களுக்கும் நிறைவைத் தரும் இடம் இந்தச் சித்தாசிரமம்" என்றிருக்கிறது.
அப்போது, மஹாதேஜஸ்வியான விஷ்ணு, அதிதியிடமிருந்து வெளிப்பட்டு, வாமன ரூபத்தை அடைந்து, வைரோசனியிடம் {விரோசனன் மகனான பலியிடம்} சென்றான்.(19) உலகங்கள் அனைத்தின் நன்மையில் விருப்பம் கொண்டவனும், மஹாதேஜஸ்வியுமான அவன் {வாமனன்}, லோகார்த்தத்திற்காக {உலகங்களின் நன்மைக்காக}, மூன்று அடிகளை பிக்ஷையாகக் கேட்டுப் பெற்று, {மூன்று காலடிகளால்} உலகங்களைக் கடந்து {அளந்து}, வலிமைமிக்க பலியை ஒடுக்கி, மேதினியை மஹேந்திரனிடம் கொடுத்து, மீண்டும் மூவுலகங்களின் கட்டுப்பாட்டைச் சக்ரன் வசமே {இந்திரனிடம்} ஒப்படைத்தான்[6].(20,21)
[6] வாமன அவதாரம் குறித்தும், அசுரேந்திரன் பலி குறித்தும் மேலதிகம் அறிந்து கொள்ள ஹரிவம்சத்தில் பவிஷ்யபர்வத்தின் 40ம் அத்தியாயம் முதல் 47ம் அத்தியாயம் வரை படிக்கவும்.
சிரமங்களைப் போக்கும் இந்த ஆசிரமம், பூர்வத்தில் அவனிடமே {வாமனனிடமே} இருந்தது. அந்த வாமனனிடம் கொண்ட பக்தியின் காரணமாக நானும் இந்த ஆசிரமத்தால் பயனடைந்தேன்.(22) புருஷவியாகரா {மனிதர்களில் புலியே}, தடையேற்படுத்தும் ராக்ஷசர்கள் இந்த ஆசிரமத்திற்கு வருவார்கள். அந்தத் துஷ்டசாரிகளை {தீய நடை கொண்ட அவர்களை} அங்கேயே அழிப்பாயாக.(23) இராமா, இனி நாம் அந்த ஒப்பற்ற சித்தாசிரமத்திற்குச் செல்வோம். அந்த ஆசிரமம் எனக்கு எப்படியோ அப்படியே உனக்கும் உரியதாகும்[7]" {என்றார் விஷ்வாமித்ரர்}.(24)
[7] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "நான் இந்த ஆசிரமத்தில் தவம் பயில்வதால் இஃது எனக்குப் பயனளிக்கிறது. ஆனால் உண்மையில் நீ விஷ்ணுவாகவும், வாமனனாகவும் இருந்த போது இங்கே தவம் பயின்றதால் இஃது உனக்கும் உரிமையானதாகும் என்று விஷ்வாமித்ரர் ராமனிடம் சொல்வதாக ராமதிலகர் சொல்கிறார்" என்றிருக்கிறது.
இதைச் சொன்ன அந்த மஹாமுனி {விஷ்வாமித்ரர்}, பரம மகிழ்ச்சியடைந்து ராமனையும், லக்ஷ்மணனையும் அழைத்துக் கொண்டு அந்த ஆசிரமத்திற்குள் பிரவேசித்தபோது, பனிவிலகி புனர்வஸுவின் நட்சத்திரங்களோடு {இரண்டு நட்சத்திரங்களுடன்} ஒளிரும் சந்திரனைப் போல அவர் பிரகாசித்தார்.(25) சித்தாசிரமவாசிகளான முனிவர்கள் அனைவரும் விஷ்வாமித்ரரைக் கண்டு குதித்தெழுந்து, விரைவாக அவரைப் பூஜித்தனர்.(26) நுண்ணறிவுமிக்க விஷ்வாமித்ரருக்குத் தகுந்த, மதிப்புமிக்கப் பூஜை செய்ததைப் போலவே, அந்த ராஜபுத்திரர்களுக்கும் அவர்கள் அதிதிகிரியத்தை {விருந்தோம்பலைச்} செய்தனர்.(27)
அரிந்தமர்களும் {பகைவரை அடக்குபவர்களும்}, ராஜபுத்திரர்களுமான அந்த ரகுநந்தனர்கள், ஒரு முஹூர்த்த காலம் இளைப்பாறினர். பிறகு, கைகளைக் கூப்பியபடியே அந்த முனிஷார்தூலரிடம் {விஷ்வாமித்ரரிடம்} பேசினர்.(28) {இராமனும், லக்ஷ்மணனும்}, "முனிபுங்கரே, இன்றே தீக்ஷையை {தொடக்கச் சடங்கை} மேற்கொள்வீராக. பத்ரமாக {மங்கலமாக} இருப்பீராக. உமது வசனம் சத்யமாகட்டும். {உமது யஜ்ஞம் சித்தி அடைந்து} இந்த சித்தாசிரமம் சித்தியடையட்டும்" என்றனர்.(29)
இவ்வாறு சொல்லப்பட்டதும், மஹாதேஜஸ்வியான அந்த விஷ்வாமித்ர மஹாரிஷி, தமது புலன்களைக் கட்டுப்படுத்தி அந்த தீக்ஷையைக் கவனமாக மேற்கொண்டார்[8].(30) அந்தக் குமாரர்களும் அந்த இரவை விழிப்புணர்வுடன் கழித்து, விடியற்காலையில் எழுந்து, தூய்மையடைந்து, வெள்ளந்தியை {முன்னந்தியான சந்தியாகாலத்தை} தியானித்து, நியமத்துடன் பரமஜபம் செய்து {காயத்ரி மந்திரம் சொல்லி முடித்து}, அக்னி ஹோத்ரம் செய்ய அமர்ந்திருந்த விஷ்வாமித்ரரை வணங்கினர்[9].(31,32)
[8] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "விஷ்வாமித்ரர், புறவுலகில் இருந்து விடுபட்டு கோபமடையாதவராக, அமைதியுடையவராக அந்தச் சடங்கில் மூழ்கினார் என்பதே இங்கே புலன்களைக் கட்டுப்படுத்தினார் என்று சொல்லப்படுகிறது. பாலகாண்டம் 19ம் சர்க்கம் 7ம் சுலோகத்தில் ராஜா தசரதன் செய்ததைப் போலவே விஷ்வாமித்ரர் இங்கே தொடங்குகிறார்" என்றிருக்கிறது.
[9] இங்கே குறிப்பிடப்படும் சித்தாசிரமம் எங்கே இருக்கிறது என்பதில் பல அனுமானங்கள் இருக்கின்றன. சிலர் திபெத்தில் உள்ள சம்பாலாதான் சித்தாஸ்ரமம் என்று சொல்கின்றனர். வேறு சிலர் தாடகை வனத்தின் அருகிலேயே இருந்ததுதான் சித்தாசிரமம் என்கின்றனர். இரண்டாம் அனுமானமே சரியாகத் தோன்றுகிறது. பின்வரப்போகும் சர்க்கங்களில் உள்ள வர்ணனைகளின் மூலமே இதை அனுமானிக்க வேண்டும்.
பாலகாண்டம் சர்க்கம் – 29ல் உள்ள சுலோகங்கள் : 32
Previous | | Sanskrit | | English | | Next |