Tataka Vana | Bala-Kanda-Sarga-24 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: கங்கையின் மறுகரையில் உள்ள கொடுங்காட்டுக்கு ராமனையும், லக்ஷ்மணனையும் அழைத்துச் சென்ற விஷ்வாமித்ரர்; தாடகையின் இயல்பைச் சொல்லி அவளைக் கொல்ல ராமனை ஆயத்தம் செய்தது...
பகைவரைக் கொல்பவர்களான அவர்கள் {ராமனும், லக்ஷ்மணனும்} விடியலில் காலைச் சடங்குகளைச் செய்துவிட்டு, விஷ்வாமித்ரரை முன்னிட்டுக் கொண்டு நதி தீரத்தை {ஆற்றங்கரையை} அடைந்தனர்.(1) மஹாத்மாக்களும், விரதங்களில் விழிப்போடுள்ளவர்களுமான {ஆசிரம} முனிவர்கள் அனைவரும் அழகிய நாவம் {ஓடம்} ஒன்றை அருகில் கொண்டு வந்தனர். பிறகு அவர்கள் விஷ்வாமித்ரரிடம்,(2) "ராஜபுத்திரர்களை முன்னிட்டுக் கொண்டு இந்த ஓடத்தில் ஏறுவீராக. செழித்த வழியில் கடந்து செல்வீராக. கால விரயம் செய்ய வேண்டாம்" என்றனர்.(3)
விஷ்வாமித்ரர், "அப்படியே ஆகட்டும்" என்று சொல்லிவிட்டு அந்த ரிஷிகளுக்குப் பிரதிபூஜை செய்தபிறகு, சாகரம் செல்லும் சரிதத்தில் {கடலை அடையும் ஆற்றில்} அவ்விருவருடன் {ராமலக்ஷ்மணர்களுடன்} கடந்து சென்றார்.(4) ராமன், நீரோடையின் மத்தியை அடைந்ததும், நீரோட்டத்தால் பெருகும் சத்ததைக் கேட்டான். தம்பியுடன் கூடியவனான அந்த மஹாதேஜஸ்வி {ராமன்}, அந்தச் சத்தத்தை நிச்சயித்துக் கொண்டு அதை அறிய விரும்பினான்.(5,6அ) ஆற்றின் மத்தியில் இருந்த ராமன், அந்த முனிபுங்கவரிடம் {விஷ்வாமித்ரரிடம்}, "நீரானது ஒன்றோடொன்று மோதுவதைப் போல எழும் இந்தப் பேரொலி என்ன?" {என்று கேட்டான்}.(6ஆ,7அ)
குதூகலத்துடன் கூடிய ராகவனின் {ராமனின்} சொற்களைக் கேட்ட அந்த தர்மாத்மா {விஷ்வாமித்ரர்}, அந்தச் சத்தத்தின் காரணத்தை நிச்சயித்துச் சொல்லத் தொடங்கினார்.(7ஆ,8அ) {அவர்}, "நரஷார்தூலா {மனிதர்களில் புலியே}, கைலாச பர்வதத்தில் பிரம்மன் தன் மனத்தால் ஒரு பரம ஸரஸ்ஸை {பெருந்தடாகத்தை} அமைத்தான். எனவே, அது மானஸ ஸரஸ்ஸானது {என்றழைக்கப்பட்டது}.(8ஆ,9அ) அதிலிருந்து {அந்த மானஸ தடாகத்தில் இருந்து} தங்குதடையின்றிப் பாயும் சரசம் {சரயு ஆறு} அயோத்தியைச் சூழ்கிறது[1].{9ஆ} சரஸ்ஸில் தோன்றியதால் அது சரயு ஆனது. பிரம்ம சரஸ்ஸில் {பிரம்மனால் உண்டாக்கப்பட்ட அந்த மானஸத் தடாகத்தில்} இருந்து பாய்ந்து, புண்ணியமான ஜாஹ்னவியை {கங்கையை} அடையும்போது, நீர் மோதலால் இந்தக் குறிப்பிட்ட சத்தம் உண்டாகிறது. எனவே ராமா, மன ஊக்கத்துடன் நீ {இந்த ஆறுகளை} வணங்குவாயாக" {என்றார் விஷ்வாமித்ரர்}.(10,11அ)
[1] நரசிம்மாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், "இந்த ஸரயூநதி ப்ரஹ்மாவினாற் படைக்கப்பட்ட மாநஸஸரஸ்ஸினின்றும் பெருகி அயோத்யா நகரத்திற்கு மேற்குத் திசையில் ஆரம்பித்து அப்பட்டணத்திற்கு வடக்குத் திசையின் வழியாக அந்நகரத்திற்குக் கிழக்கே வந்து அங்க தேசத்தில் பெருகிப் போகின்ற கங்கா நதியோடு கலக்கின்றது. அவ்விரண்டு நதிகளுங் கலக்குமிடத்தில் ஸ்தாணுவின் {உருத்திரனின்} ஆச்ரமம் இருக்கின்றது. ஆகையால் ஸரயூ நதியுடன் கலந்த கங்கா நதியைத் தாண்டும் பொழுது, ஸரயூ நதி மேட்டிலிருந்து பள்ளத்தில் விழுந்து வருகையால் அந்தப்ரவாஹத்தில் த்வநி உண்டாகின்றதென்றுணர்க. இவ்வொலியேதென்று ராமன் வினவ, இது மேட்டிலிருந்து பள்ளத்தில் விழுந்து பாயும் ஸரயூ நதியின் ப்ரவாஹத்தில் உண்டானதென்று சொல்ல வேண்டியிருக்க, அந்நதியின் பிறப்பைச் சொன்னது அங்கு நமஸ்காரஞ் செய்கைக்காகவென்று கண்டு கொள்வது" என்றிருக்கிறது.
அதிதார்மீகர்களான அவ்விருவரும் {ராமனும், லக்ஷ்மணனும்}, அவற்றை {அந்த ஆறுகளை} வணங்கி தக்ஷிண தீரத்தை {தென் கரையை} அடைந்து லகுவாக மேலும் தொடர்ந்து சென்றனர்.(11ஆ,12அ) ஐக்ஷவாகனும் {இக்ஷ்வாகு குலத்தவனும்}, நரவரனின் {மனிதர்களில் சிறந்த தசரதனின்} மகனுமான அவன் {ராமன்}, கோரமாகத் தெரிவதும், எவராலும் அடையப்படாததுமான ஒரு வனத்தைக் கண்டு, அந்த முனிபுங்கவரிடம் {விஷ்வாமித்ரரிடம்} கேட்டான்:(12ஆ,13அ) "அஹோ, இந்த வனம் நுழைய முடியாததாக இருக்கிறது. சில்வண்டுக்கூட்டங்கள், ஊனுண்ணும் கொடிய விலங்குகள், சகுனைகள் {கள்ளிக் காக்கைகள்} ஆகியவற்றின் கொடும் அரவம் இங்கே நிறைந்திருக்கிறது.(13ஆ,14அ) கடுங்குரலுடன் கீச்சொலியை வெளியிடும் பல வகை சகுனைகள், சிம்மங்கள், புலிகள், காட்டுப் பன்றிகள், யானைகள் ஆகியவற்றால் இஃது ஒளிர்கிறது.(14ஆ,15அ) தவம் {வெள்வேல்}, அஷ்வகர்ணம் {ஆச்சா}, அர்ஜுனம் {மருதம்}, வில்வம், துந்துகம், பாதளம் {இலந்தை}, பதரி {பாதிரி} மரங்கள் அடர்ந்திருக்கும் இந்தப் பயங்கரக் காடு யாது {இந்தக் காட்டின் பெயர் என்ன}" {என்று கேட்டான் ராமன்}.(15ஆ,16அ)
மஹாதேஜஸ்வியான மஹாமுனி விஷ்வமித்ரர், அவனிடம் {ராமனிடம்} சொன்னார்: "காகுத்ஸ்தா {காகுத்ஸனின் வழித்தோன்றலே} இந்தக் கொடிய வனத்தைக் குறித்து {நான் உனக்குச் சொல்கிறேன்} நீ கேட்பாயாக.(16ஆ,17அ) நரோத்தமா {மனிதர்களில் உத்தமனே}, "பூர்வத்தில் தேவர்களால் நிர்மாணிக்கப்பட்ட மலதம், கரூசம்[2] என்ற பெரும் ஜனபதங்கள் இருந்தன.(17ஆ,18அ) ராமா, ஒரு காலத்தில் விருத்திர வதத்தின் போது, ஆயிரம் கண்களைக் கொண்டவன் {இந்திரன்}, பிரம்மஹத்தியால் பீடிக்கப்பட்டதால் மலமும், பசியும் அவனை முழுமையாக மூழ்கடித்தது.(18ஆ,19அ) தவத்தையே தனமாகக் கொண்ட ரிஷிகள், இந்திரனிடம் இருந்த அந்த மலத்தைக் கழித்துத் தூய்மைப்படுத்த {நீர் நிறைந்த} கலசங்களைக் கொண்டு அவனை நீராடச் செய்தனர்.(19ஆ,20அ) இந்தப் பூமியில், மஹேந்திரனின் சரீரத்தில் இருந்து மலமும், பசியும் வெளியேறியதும் தேவர்கள் மகிழ்ச்சியை அடைந்தனர்.(20ஆ,21அ)
[2] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "மலதம் என்றால் மலத்தை {கழிவை} அழிப்பது என்று பொருள். மலம் என்று நேரடி பொருள் கொள்வது இங்கே தகாது. கரூசம் என்றால் பசியை நீக்குவது என்று பொருள். பசி இருக்கும் வரை மலமும் இருக்கும். இந்திரன் இறக்கும் ஆபத்தும் நேரும். பசி நீக்கப்பட்டால் மலம் இருக்காது. ஒரு காலத்தில் இந்த மாகாணங்கள் சொர்க்கத்திற்கு இணையாகப் பசியை நீக்குபவையாக இருந்தன. பின்பு தாடகையால் பூமியில் சொர்க்கம் எனும் அந்நிலை சிதைந்தது" என்றிருக்கிறது.
இந்திரன், மலத்தில் இருந்தும், பசியில் இருந்தும் விடுபட்டுத் தூய்மையடைந்ததும், மகிழ்ச்சியடைந்த அவன் இந்த இடங்களுக்கு உத்தம வரத்தை அளித்தான்:(21ஆ,22அ) "என் உடலின் மலத்தைத் தாங்கியதால் இந்த ஜனபதம் செழிப்படைந்து மலதம், கரூசம் என்று {என்ற பெயர்களில்} இந்த உலகில் புகழ் பெற்றிருக்கும்" {என்றான் இந்திரன்}.(22ஆ,23அ) பெரும் மதியுடைய சக்ரன் {இந்திரன்} அந்த தேசங்களைப் பூஜித்ததைக் கண்ட தேவர்கள், "நன்று, நன்று" என்று சொல்லி, பாகசாசனனை {பாகன் என்ற அசுரனைக் கொன்ற இந்திரனைப்} புகழ்ந்தனர்.(23ஆ,24அ)
அரிந்தமா {பகைவரை ஒடுக்குபவனே}, ராமா, மலதமும், கரூசமும் தன தானியங்களுடன் கூடிய ஜனபதங்களாக நெடுங்காலம் இருந்தன.(24ஆ,25அ) பின்னர் ஒரு காலத்தில் காமரூபிணியும் {விரும்பிய வடிவை ஏற்கவல்லவளும்}, ஆயிரம் யானைகளின் பலத்தைக் கொண்டவளும், பெரும் மதியுடைய சுந்தனின் பாரியையும் {மனைவியும்}, தாடகை என்ற பெயரைக் கொண்டவளுமான ஒரு யக்ஷி {யக்ஷகன்னிகை} அங்கே தோன்றினாள். {ராமா} நீ பத்ரமாக {மங்கலமாக} இருப்பாயாக. சக்ர பராக்கிரமம் {இந்திரனைப் போன்ற ஆற்றலைக்} கொண்ட ராக்ஷசன் மாரீசன் அவளது மகனாவான்.(25ஆ-27அ) பருத்த தோள்களையும், பெரும் தலையையும், குகை போன்ற வாயையும், பெரும் வடிவத்துடன் கூடிய பேருடலையும் கொண்ட அந்த ராக்ஷசன் {மாரீசன்}, பிரஜைகளை {மக்களை} நித்தம் அச்சுறுத்துபவனாக இருந்தான்.(27ஆ,28அ)
இராகவா {ராமா}, தீய நடை கொண்ட அந்தத் தாடகை, மலதம், கரூசம் என்ற இந்த ஜனபதங்களை நித்தம் அழித்து வருகிறாள்.(28ஆ,29அ) இந்த வழியைத் தடுத்துக் கொண்டிருக்கும் அவள், {இங்கிருந்து} ஒன்றரை யோஜனையில் {தொலைவில்} வசித்து வருகிறாள். எந்தக் காரணத்தால் இது தாடகையின் வனமானதோ, அதே காரணத்திற்காகவே இஃது அடையப்பட வேண்டும்[3].(29ஆ,30அ) தீய நடை கொண்ட அவளை உன் தோள்பலத்தினால் நீ கொல்ல வேண்டும். என் சொல் படி நீ இந்த தேசத்தை முட்களற்றதாக்க வேண்டும்.(30ஆ,31அ) இராமா, கோரமானவளும், பொறுத்துக் கொள்ள முடியாதவளுமான அந்த யக்ஷி {தாடகை}, யாரும் வர இயலாதபடி இந்தத் தேசத்தை அழித்துவிட்டாள்.(31ஆ,32அ) அந்த யக்ஷியால் இந்த மொத்த வனமும் எவ்வாறு அழிக்கப்பட்டுதோ அவ்வாறே அனைத்தையும் நான் உனக்குச் சொன்னேன்" {என்றார் விஷ்வாமித்ரர்}[4].(32ஆ,இ)
[3] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "இந்த சுலோகத்திற்கு 'அந்தத் தாடகை வனம் எங்கிருக்கிறதோ அங்கே நாம் செல்ல வேண்டும்' என்றும் பொருள் கொள்ளலாம். மேலே சொல்லப்பட்டிருப்பது இந்த சுலோகத்திற்கான மற்றொரு பொருளாகும்" என்றிருக்கிறது.
[4] இந்தக் காவியத்தில் பயன்படுத்தப்படும் அடைமொழிகள் இப்போதிலிருந்து அதிகரிக்கும். அவற்றை அவசியமற்ற இட நிரப்பல்களாகக் கருதக்கூடாது. அவை அனைத்தும் மறைமுக அர்த்தங்களைக் கொண்டவை. அவற்றை உரைகளின் உதவியுடனேயே புரிந்து கொள்ள முடியும். இப்பணியில் மிகப் பெரிய உரைகளை உள்ளடக்க முடியாது என்பதால், உரையாசிரியர்களால் விளக்கப்பட்ட அடைமொழிகள் பலவற்றின் பொருள்களை இங்கே சேர்க்கவில்லை. இந்தப் புறக்கணிப்பு சாதாரண உரைநடையை எந்த வகையிலும் பாதிக்காது. உதாரணத்திற்கு முனிபுங்கர், நரஷார்தூலன் என்ற சொற்கள், முனிவர்களில் உயர்ந்தவர், மனிதர்களில் புலி என்ற பொருள்களைக் கொண்டவையாகும். சில உரைகளை நாடாமல், இவற்றின் அர்த்ததை வலிந்து பிழிந்து எடுக்க முனைவது பயனற்றது. அதே போல, இந்திரன், சந்திரன், சிம்மம், சார்தூலன், நாகன், ரிஷபன், புங்கவன் ஆகியவை வேற்றுமைச் சொற்களின் பின்னொட்டுகளாகச் சேர்க்கப்படும்போது அவை, சிறந்த, மிகச் சிறந்த, உன்னத என்ற பொருளைக் கொள்ளும். ஆனால் உரையாசிரியர்கள் அந்தந்தக் குறிப்பிட்ட இடங்களில் அந்தச் சொற்கள் ஏன் பயன்படுத்தப்பட்டன என்பதை விளக்கிச் சொல்லியிருக்கின்றனர். உதாரணத்திற்கு தர்மாத்மா என்று ராமயாணத்தில் வழக்கமாகப் பயன்படுத்தப்படும் அடைமொழிக்கு பல பொருள்கள் உள்ளன. அவை பின்வருமாறு: 1) வாழ்வையே தர்மமாகக் கொண்டவன், 2) தர்மனின் அவதாரமாக அவதரித்தவன், 3) தர்மத்தால் நிறைந்த ஆன்மாவைக் கொண்டவன், 4) தர்மமே வடிவானவன் என்று நிகண்டுகள் பகரும். ஆரண்ய காண்டத்தின் பல இடங்களில் வைதேஹி என்றும், மைதிலி என்றும் அழைக்கப்படுகிறாள். சில தகவல்கள் அந்த உரைகளில் கிடைக்கின்றன. உரைகள் கிடைக்கும்போதெல்லாம் வேண்டிய இடங்களில் அவற்றைக் குறிப்பிடவே செய்கிறோம். எனவே அர்த்தமில்லாத அர்த்தங்களை வலிந்து பிழிந்து எடுக்காமல் அவற்றைப் பண்டிதர்களின் ஆய்வுக்கே விட்டுவிடுகிறோம். இப்பணியில் அந்தச் சிக்கல்களை உள்ளடக்க முடியாது என்பதால் இனிவரும் அடைமொழிகளை எளிமையாகவே சொல்லப் போகிறோம். சில இடங்களில் அவை புறக்கணிக்கவும் படலாம். படிக்கும் போது இவற்றைக் கருத்தில் கொண்டு படிப்பீராக" என்றிருக்கிறது. இந்த அடிக்குறிப்பு நமது ராமாயாண ஆக்கத்திற்கும் பொருந்தும் என்பதால் இங்கே சேர்க்கப்படுகிறது. வலிந்து பொருள் கொண்டு நீட்டி முழக்குவதால் அசல் பதிப்பின் கச்சிதம் கெடும்.
பாலகாண்டம் சர்க்கம் –24ல் உள்ள சுலோகங்கள்: 32
Previous | | Sanskrit | | English | | Next |