Monday 26 July 2021

தசரதனின் அமைச்சர்கள் | பால காண்டம் சர்க்கம் - 07 (24)

Ministers of Dasharatha | Bala-Kanda-Sarga-07 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம் : தசரதனின் அமைச்சர்களுடைய குணங்கள்; அரசியல் சார்ந்த அமைச்சர்களுடன் அற அமைச்சகமும் நிறுவப்படுவது...

Dasharatha Vasishta and Vamadeva

இக்ஷ்வாகுக்களில் மஹாத்மாவான அவனது {தசரதனின்} அமாத்யர்கள் {அமைச்சர்கள்}, மந்திர ஞானமும் {ராஜகாரியங்களை ஆலோசிக்கும் அறிவும்}, இங்கித ஞானமும் {முகமலர்ச்சியுடன் பிறரின் கருத்தை நன்றாக ஆயும் அறிவும்} கொண்டவர்களாகவும், எப்போதும் நன்மை செய்வதில் ஈடுபடும் குணத்தைக் கொண்டவர்களாகவும் இருந்தனர்.(1) வீரம் நிறைந்தவனும், மகிமைமிக்கவனுமான அவனது {தசரதனின்} எட்டு அமைச்சர்களும், தூய்மையான இதயம் கொண்டவர்களாகவும், எப்போதும் ராஜாவின் காரியங்களில் ஈடுபடுகிறவர்களாகவும் இருந்தனர்.(2) {அவர்கள்} திருஷ்டி, ஜயந்தன், விஜயன், ஸுராஷ்டிரன், ராஷ்டிரவர்தனன், அகோபன், தர்மபாலன், எட்டாவதாகச் சுமந்திரன் {ஆகியோராவர்}[1].(3) அதே போலவே, இசையும் இயல்புடையவர்களான வசிஷ்டர், வாமதேவர் என்ற உன்னத ரிஷிகள் இருவரும் {அறச்சடங்குகளைச் செய்யும்} ரித்விஜர்களாக இருந்தனர். இவர்களைத் தவிர இன்னும் சில மந்திரிகளும் இருந்தனர்.(4)

[1] நரசிம்மாசாரியரின் பதிப்பில் இந்த மந்திரிகளின் பெயர், "த்ருஷ்டியென்றும், ஜயந்தனென்றும், ஜயனென்றும், ஸித்தார்த்தனென்றும், அர்த்தஸாதகனென்றும், அசோகனென்றும், மந்த்ரபாலனென்றும் அவர்கள் வழங்கப்பட்டு வருவார்கள். எட்டாவது மந்த்ரி ஸுமந்த்ரனென்பவன்" என்றிருக்கிறது. தாதாசாரியரின் பதிப்பிலும், பிபேக்திப்ராயின் பதிப்பிலும், நரசிம்மாசாரியரின் பதிப்பில் உள்ளதைப் போன்றே இருக்கின்றன. மன்மதநாததத்தரின் பதிப்பிலும், தேசிராஜுஹனுமந்தராவின் பதிப்பிலும், ஸ்ரீநிவாஸய்யங்கார் பதிப்பிலும் மேலே 3ம் ஸ்லோகத்தில் உள்ளதைப் போல இருக்கின்றன.

ஸுயஜ்ஞர், ஜாபாலி, காசியபர், கௌதமர், மார்க்கண்டேயர், தீர்க்காயு, காத்யாயனர் ஆகிய துவிஜர்களும், அவர்களுடன் சேர்ந்து எப்போதும் ரித்விக்குகளாகச் செயல்படும் பிரம்மரிஷிகளும்,(5,6அ) கல்வியிற்சிறந்தவர்களும், தீச்செயல்கள் செய்யாதவர்களும், திறன்மிக்கவர்களும், புலன்களை வென்றவர்களும், ஸ்ரீமான்களும் {செல்வம் நிறைந்தவர்களும்}, மஹாத்மாக்களும், சாத்திரங்களை அறிந்தவர்களும், திடமும், துணிவும் கொண்டவர்களும், கீர்த்திமான்களும், அமைதியான ஆன்மாவைக் கொண்டவர்களும், சொன்னது போல நடந்து கொள்பவர்களும், ஒளியும், பொறுமையும், புகழும் கொண்டவர்களும், உரையாடும் முன் புன்னகைப்பவர்களுமான அவர்கள்,(6ஆ-8அ) கோபம், பேராசை ஆகியவற்றால் ஒருபோதும் பொய் பேசாதவர்களாக இருந்தனர். அவர்கள் அறியாத சிறு தகவலும் இல்லை என்ற நிலை இருந்தது. தங்கள் நாட்டிலும், அந்நிய நாடுகளிலும் நடப்பவை, நடந்தவை, நடக்க இருப்பவை ஆகிய அனைத்தையும் அவர்கள் சாரர்கள் {ஒற்றர்கள்} மூலம் அறிந்து வந்தனர்.(8ஆ,9) விவகாரங்களில் {நிர்வாகத்தில்} அவர்கள் வல்லமையுள்ளவர்கள், நட்பில் {மன்னனால்} நன்றாகச் சோதிக்கப்பட்டவர்கள், காலம் விதித்தால் தங்கள் மகன்களையும் தண்டிக்கத் தயங்காதவர்கள்.(10) கருவூலத்திற்குச் செல்வத்தையும், படைகளுக்கு ஆயுதங்களையும் திரட்டுவதில் கடமையுணர்வு நிறைந்தவர்களான அவர்கள், தங்களுக்குப் பிடிக்காதவன் எனினும் குற்றமற்றவனை இம்சிக்காதவர்கள்.(11) உற்சாகத்துடன் கூடிய வீரர்களும், ராஜசாஸ்திரத்தின் படி நிர்வாகம் செய்பவர்களுமான அவர்கள், எப்போதும் தூய்மையானவர்களாகவும், அங்கே வசிப்பவர்களைப் பாதுகாப்பவர்களுமாக இருந்தனர்.(12)

அவர்கள் கருவூலத்தை நிரப்புவதற்காகப் பிராமணர்களையும், க்ஷத்திரியர்களையும் {அபராதங்கள் மூலமோ, மேலதிக வரிகள் மூலமோ} இம்சிப்பதில்லை, புருஷர்களின் பலத்தையும், பலவீனத்தையும் ஆய்வு செய்த பிறகே அவர்கள் கடுந்தண்டனைகளைக் கொடுத்தனர்.(13) அவர்கள் அனைவரும் ஒரே புத்தியுள்ளவர்களாக, நகரத்திலோ, நாட்டிலோ எங்கும் பொய்பேசும் ஒருவனும் இல்லாதவாறு தூய்மையாக நிர்வாகம் செய்தனர்.(14) தீய மனம் கொண்ட எவனும், அடுத்தவன் மனைவியை விரும்பும் எவனும் அங்கே இருப்பதில்லை. இவ்வாறே அந்த நாடும், நகரமும் எந்தத் தொல்லையுமின்றி இருந்தது.(15) நன்கு உடுத்தி, நன்கு அலங்காரம் செய்து கொள்ளும் அவர்கள், தங்கள் நரேந்திரனுக்கு {மனிதர்களின் மன்னனான தசரதனுக்கு} நன்மையைச் செய்யும் விரதத்துடனும், தளராமல் எப்போதும் நீதி எனும் கண் கொண்டு விழித்திருந்தனர்.(16)

அவர்கள் தங்கள் குருவிடம் இருந்து பெற்ற நல்ல குணங்களைக் கொண்டவர்களாகவும், பராக்கிரமத்தினால் நல்ல புகழ் பெற்றவர்களாகவும், புத்தி சார்ந்த அனைத்துக் காரியங்களில் அந்நிய நாடுகளிலும்கூடப் புகழ் வாய்ந்தவர்களாகவும் இருந்தனர்.(17) அவர்கள், பல துறைகளின் அறிவைக் கொண்டவர்களாகவும், எவராலும் பழிக்க இயலாத குணங்களைக் கொண்ட குணவான்களாகவும், போரையும், அதன் நிறுத்தத்தையும் தீர்மானிப்பவர்களாகவும், இயற்கையாகவே செல்வம் நிறைந்தவர்களாகவும் இருந்தனர்.(18) அவர்கள் இரகசிய உத்திகளை வெளியிடாதவர்களாகவும், மிகச்சிறிய காரியங்களிலும் புத்தியைச் செலுத்தவல்லவர்களாகவும், நீதிசாத்திரங்களை நன்கறிந்தவர்களாகவும், இனிமையாக வாதம் செய்பவர்களாகவும் இருந்தனர்.(19)

மேன்மையான தசரதன், இத்தகைய நல்ல குணம் கொண்ட அமைச்சர்கள் சூழ பூமியை ஆட்சி செய்தான்.(20) புருஷர்களில் புலியான தசரதன், ஒற்றர்கள் மூலம் கண்காணிப்பதற்காகவும், மக்களை தர்மப்படி காப்பதற்காகவும், அவர்களுக்கு நல்லாட்சியைத் தருவதற்காகவும், அதர்மத்தை முழுமையாக நீக்கி, தாராள மனங்கொண்டவனாகி, சத்தியத்திற்குக் கட்டுப்பட்டவனாக, மூவுலகங்களிலும் புகழ்பெற்றவனாக அங்கிருந்து ஆட்சி செய்தான்.(21,22) அவன் பல நண்பர்களைக் கொண்டவன் என்பதால் தனக்கு மேலாகவோ, ஒப்பாகவோ ஒருவனும் இல்லாதவனாகவும், தன் வீரத்தால் முட்களை {பகைவர்களை} நீக்கி அண்டைநாட்டு மன்னர்கள் அனைவரையும் அடக்கி, இணையான பகைவன் எவனும் இல்லாதவனாகச் சொர்க்கத்தின் தேவபதியைப் போல ஜகத்தை ஆண்டு வந்தான்.(23) தொடர்புடைய உத்திகளைச் செயல்படுத்த ஏற்றவர்களும், திறன்மிக்கவர்களும், சாமர்த்தியர்களுமான இந்த மந்திரிகளால் சூழப்பட்ட அந்தப் பார்த்திபன் {தசரதன்}, ஒளிமிக்கக் கதிர்களுடன் உதிக்கும் அர்க்கனை {சூரியனைப்} போலப் பிரகாசித்துக் கொண்டிருந்தான்.(24)
 

பாலகாண்டம் சர்க்கம் – 07ல் உள்ள சுலோகங்கள்: 24

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சம்பாதி சரபங்கர் சாகரன் சாந்தை சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்முகி தூஷணன் நளன் நாரதர் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் மண்டோதரி மதங்கர் மந்தரை மயன் மருத்துக்கள் மஹோதயர் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மைனாகன் மோஹினி யுதாஜித் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாயு வாலி வால்மீகி விகடை விபாண்டகர் விபீஷணன் விராதன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை