Lanka report | Sundara-Kanda-Sarga-58 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: இலங்கைக்குச் சென்றது முதல், மஹேந்திர கிரிக்குத் திரும்பி வந்ததுவரை நடந்த நிகழ்வுகளை உரைத்த ஹனுமான்...
பிறகு, மஹாபலமிக்க ஹனுமான் முதலான ஹரயர்கள் {குரங்குகள்}, அந்த மஹேந்திரகிரியில் உத்தம பிரீதியை அடைந்தனர்.(1) அப்போது, பிரீதியால் உண்டான மயிர்க்கூச்சத்துடன் கூடிய ஜாம்பவான், பிரீதியில் திளைத்த மஹாகபியிடம் {பெருங்குரங்கான ஹனுமானிடம்}, காரியத்தின் விருத்தாந்தம் குறித்து {பின்வருமாறு} விசாரித்தான்:(2) "தேவியை {சீதையை} எப்படி நீ சந்தித்தாய்? அங்கே அவள் எப்படி இருக்கிறாள்? குரூர கர்மங்களைச் செய்பவனான அந்த தசானனன் அவளிடம் {பத்து முகங்களைக் கொண்ட ராவணன் சீதையிடம்} எப்படி நடந்து கொள்கிறான்?(3) மஹாகபியே {பெருங்குரங்கே, ஹனுமானே}, இது குறித்து உள்ளபடியே முழுமையாக எங்களுக்கு நீ சொல்வாயாக. அவற்றைக் கேட்டுவிட்டு, {நடக்க வேண்டிய} காரியங்களை நிச்சயித்துக் கொள்வது குறித்து மீண்டும் நாம் சிந்திப்போம்.(4) நாம் அங்கே {ராமரிடம்} செல்லப் போகிறோம். ஆத்மவானான நீ, எந்த அர்த்தத்தை வெளிப்படுத்த வேண்டும், எதை ரக்ஷிக்க வேண்டும் {எதைச் சொல்ல வேண்டும், எதைச் சொல்லாமல் மறைக்க வேண்டும்} என்பதை எங்களுக்குத் தெளிவாகச் சொல்வாயாக" {என்று கேட்டான் ஜாம்பவான்}.(5)
அப்போது இவ்வாறு கேட்கப்பட்டவன் {ஹனுமான்}, முழுமையான மயிர்க்கூச்சத்தை அடைந்து, சீதா தேவியை {நினைத்து} சிரசால் வணங்கி, {பின்வரும்} பதிலை உரைத்தான்:(6) "உததியின் {பெருங்கடலின்} தென் பகுதிக்குச் செல்லும் விருப்பத்துடன் உமது முன்னிலையிலேயே மஹேந்திரத்தின் உச்சியில் இருந்து வானத்தில் தாவினேன்.(7) அவ்வாறு சென்று கொண்டிருந்த எனக்கு கோரமான விக்னம் {இடையூறு} உண்டானது. திவ்யமானதும், மனோஹரமானதுமான காஞ்சன சிகரம் ஒன்றை நான் கண்டேன்.(8) அந்த மலையானது, வழியை மறைத்து விக்னமாக {தடையாக} நிற்கிறது என்று நினைத்து, திவ்யமான அந்தச் சிறந்த காஞ்சன மலையை {பொன்மலையை} அணுகி, "இஃது என்னால் பிளக்கப்பட வேண்டியது" என்று என் மனத்தில் புத்தியை அமைத்துக் கொண்டேன்.(9,10அ) சூரியனுக்கு ஒப்பான மஹாகிரியின் சிகரம், என் லாங்கூலத்தால் {வாலால்} தாக்கப்பட்டு, ஆயிரந்துண்டுகளாக நொறுங்கியது.(10ஆ,11அ)
என் வியவசாயத்தை {முயற்சியைப்} புரிந்து கொண்ட அந்த மஹாகிரியானவன் {மைநாகன்}, என் மனம் புத்துணர்ச்சி அடையும் வகையில், "புத்திரா" என்ற இந்த மதுரவாணியை {இன்சொல்லைச்} சொல்லிவிட்டு,(11ஆ,12அ) "மைநாகனென அழைக்கப்படுபவனான நான், மஹா உததியில் {பெருங்கடலில்} வசிப்பவன் என்றும், மாதரிஷ்வனனுக்கு சஹாயன் {வாயுதேவனுக்கு தோழன்} என்றும், உனக்குச் சிற்றப்பன் {முறை} என்றுங்கூட அறிவாயாக.(12ஆ,13அ) புத்திரா, பூர்வத்தில் சிறகுகளுடன் இருந்த உத்தம பர்வதங்கள், பிருத்வியில் எங்கும் எவரையும் துன்புறுத்தியபடி திரிந்து கொண்டிருந்தன.(13ஆ,14அ) பாகசாசனனான பகவான் மஹேந்திரன் {பகன் என்ற அசுரனை அழித்தவனும், தேவர்களின் தலைவனுமான இந்திரன்}, அந்த நகங்களின் {மலைகளின்} நடத்தையைக் குறித்து கேள்விப்பட்டதும், வஜ்ரத்தால் அவற்றின் சிறகுகளை ஆயிரந்துண்டுகளாக வெட்டி வீழ்த்தினான்.(14ஆ,15அ) அப்போது, வத்ஸா {அன்புக்குரிய குழந்தாய்}, உன் பிதாவும், மஹாத்மாவுமான மாருதரால் {வாயுதேவனால்}, அதிலிருந்து விடுவிக்கப்பட்ட நானோ, மஹார்ணவத்தில் {பெருங்கடலில்} தள்ளப்பட்டேன்[1].(15ஆ,16அ) அரிந்தமா {பகைவரை அழிப்பவனே}, இராமனுக்கு சகாயம் செய்யும் வகையில் நான் செயல்பட வேண்டும். மஹேந்திரனுக்கு சமமான விக்கிரமங் கொண்ட ராமன், தர்மத்தை ஆதரிப்பவர்களில் சிறந்தவனாவான்" {என்றான் மைநாகன்}.(16ஆ,17அ)
[1] நரசிம்மாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், "முதல் ஸர்க்கத்தில் இந்த்ரனுடைய வரத்தினால் மைனாகன் ஜலத்தில் மூழ்காமல் ஸமுத்திரத்தின் மேல் அப்படியே இருந்ததாகச் சொல்லப்பட்டது. ஹனுமான் திரும்பி ஸமுத்ரத்தைத் தாண்டி வரும்போது, மைனாக பர்வதத்தைத் தடவிக் கொடுத்ததாகச் சொல்லப்பட்டது. ராமன் சீதையோடு அயோத்யைக்குப் போகும்பொழுது, ஸமுத்ரத்தின் மேலிருக்கும் மைனாகத்தை சீதைக்குக் காண்பித்தனன். இவைகளைப் பற்றி மைனாக பர்வதம் ஸமுத்ரத்தின் மேலேயே இருந்ததென்பது சித்தம்" என்றிருக்கிறது.
மஹாத்மாவான அந்த மைநாகனிடம் இதைக் கேட்ட நான்,{17ஆ} {வந்த} காரியத்தை {அவனிடம்} அறிவித்தேன். என் மனம் புறப்படுவதற்கு ஆயத்தமானது. மஹாத்மாவான அந்த மைநாகனாலும் {புறப்படுவதற்கு} அனுமதிக்கப்பட்டேன்.(17ஆ,18) மானுஷ உடலெடுத்து வந்த அந்த சைலம் மறைந்தது. சைல சரீரங்கொண்ட அந்த மஹாசைலம் {மலையின் உடலெடுத்த பெரும் மலையான மைநாகம்}, மஹா உததியில் {பெருங்கடலில்} மறைந்தது.(19) பிறகு உத்தம வேகத்தை அடைந்து, எஞ்சியிருக்கும் பாதையில் புறப்பட்டேன். அந்தப் பாதையிலேயே நீண்ட நேரம் வேகமாக சென்று கொண்டிருந்தேன்.(20)
பிறகு, சமுத்திரத்தின் மத்தியில் நாகங்களின் மாதாவான ஸுரஸையை நான் கண்டேன். அந்த தேவி, என்னிடம் {பின்வரும்} வசனத்தைப் பேசினாள்:(21) "ஹரிசத்தமா {குரங்குகளில் சிறந்தவனே}, அமரர்களால் நீ எனக்கு இரையாகக் காட்டப்பட்டாய். எனவே, நீண்ட காலத்திற்குப் பிறகு எனக்கு {உணவாக} வாய்த்திருக்கும் உன்னை பக்ஷிக்கப்போகிறேன்" {என்றாள் ஸுரஸை}.(22)
ஸுரஸை இவ்வாறு சொன்னதும், கைகளைக் கூப்பியபடி வணங்கி நின்ற நான், வர்ணமிழந்த வதனத்துடன் கூடியவனாக இந்த வாக்கியத்தைச் சொன்னேன்:(23) "தாசரதியும், பரந்தபருமான {தசரதரின் மகனும், பகைவரை அழிப்பவருமான} ஸ்ரீமான் ராமர், தம்முடன் பிறந்த லக்ஷ்மணருடனும், {மனைவியான} சீதையுடனும் தண்டகவனத்திற்குள் பிரவேசித்தார்.(24) துராத்மாவான ராவணன், அவரது பாரியையான சீதையை அபகரித்துச் சென்றான். இராமசாசனத்தின் பேரில் தூதனாக நான் அவளிடம் {சீதையிடம்} சென்று கொண்டிருக்கிறேன்.(25) விஷயவாசினியே {[ராமனின்] குடிமகளே}, ராமருக்கு சஹாயம் செய்வதே உனக்குத் தகும். அல்லது, மைதிலியையும், களைப்பின்றி காரியங்களை ஆற்றுபவரான ராமரையும் கண்ட பிறகு, உன் வாயை அடைவேன் என்று உனக்கு சத்தியமாகப் பிரதிஜ்ஞை செய்கிறேன்" {என்றேன்}.(26,27அ)
இவ்வாறு நான் சொன்னதும், காமரூபிணியான அந்த ஸுரஸை, "எவராலும் என்னைக் கடந்து செல்ல முடியாது. இஃது என்னுடைய வரமாகும்" என்று சொன்னாள்.(27ஆ,28அ) ஸுரஸை இவ்வாறு சொன்னதும், க்ஷணத்தில் நான் பத்து யோஜனைகள் நெடியவனாகவும், அதில் பாதி அளவு விஸ்தாரம் கொண்டவனாகவும் ஆனேன்.(28ஆ,29அ) அவள், என் ரூபத்தின் பிரமாணத்திற்குத் தக்கத் தன் வாயை அகலமாக விரித்தாள். அந்த விரிந்த வாயைக் கண்டதும், நான் என் உடலை சுருக்கிக் கொண்டு, ஒரு முஹூர்த்தத்தில் {இன்னும் சுருங்கி} கட்டைவிரல் மாத்திரமே அளவுள்ளவன் ஆனேன்.(29ஆ,30)
அவளது வாய்க்குள் விரைவாக நுழைந்து, ஒரு க்ஷணத்தில் வெளிப்பட்டேன். சொந்த ரூபத்தில் வந்த ஸுரஸா தேவி, மீண்டும் என்னிடம் {பின்வருமாறு} சொன்னாள்:(31) "சௌம்யா {மென்மையானவனே}, ஹரிசிரேஷ்டா {குரங்குகளில் சிறந்தவனே}, சுகமாகச் சென்று அர்த்த சித்தியடைவாயாக. மஹாத்மாவான ராகவனுடன் வைதேஹியைச் சேர்த்து வைப்பாயாக. மஹாபாஹுவே, வானரா, நான் பிரீதியடைந்தேன். சுகமாக இருப்பாயாக” {என்றாள்}.(32,33அ)
அப்போது, சர்வ பூதங்களும் {உயிரினங்கள் அனைத்தும்}, “சாது, சாது {நன்று, நல்லது}” என்று சொல்லி என்னைப் புகழ்ந்தன. அதன்பிறகு, கருடனுக்கு ஒப்பானவனாக விபுலமான அந்தரிக்ஷத்திற்கு {பரந்த வானத்திற்குத்} தாவினேன்.(33ஆ,34அ)
என் நிழல் இழுக்கப்பட்டது. என்னால் எதையும் பார்க்க முடியவில்லை.{34ஆ} நான் என் வேகத்தை இழந்தேன். அத்தகைய {நிலையில் இருந்த} நான், பத்துத் திசைகளையும் நோக்கினேன். என் கதியைத் தடுக்கும் எதையும் எங்கும் நான் பார்க்கவில்லை.(34ஆ,35) அப்போது, "என் பயணத்தில் எந்த ரூபமும் காணப்படவில்லை. இஃது என்ன? இத்தகைய விக்னம் {தடை} உண்டாகிறது" என்ற ஓர் எண்ணம் எனக்கு உண்டானது.(36) இவ்வாறு சிந்தித்தபடியே கீழ்நோக்கி என் பார்வையைச் செலுத்தியபோது, பயங்கரமான ராக்ஷசி ஒருத்தி, நீரில் கிடப்பதை நான் கண்டேன்.(37)
அந்தப் பயங்கரமானவள், மஹாநாதத்துடன் சிரித்தபடியே, உறுதியுடனும், குழப்பமில்லாமலும், சோபனமற்ற இந்த வாக்கியத்தை என்னிடம் சொன்னாள்:(38) "பேருடல்படைத்தவனே, நீ எங்கே செல்கிறாய்? பசித்திருக்கும் எனக்கு உணவாக வாய்த்திருக்கிறாய். நீண்டகாலம் உணவின்றி கிடக்கும் என் தேகத்திற்குத் திருப்தி அளிப்பாயாக" {என்றாள்}.(39)
"அப்படியே ஆகட்டும்" என்று அச்சொற்களை நான் ஏற்றுக் கொண்டேன். பிறகு, என் தேகத்தை அவளது வாய் கொள்ளும் அளவைவிடப் பெருக்கினேன்.(40) மஹத்தானதும், பயங்கரமானதுமான அவளுடைய வாயும் என்னை பக்ஷிப்பதற்காக வளரத் தொடங்கியது. என்னையோ, நான் செய்யும் கபடத்தையோ அவள் நன்றாகப் புரிந்து கொண்டாளில்லை.(41) அப்போது, நிமிஷாந்தரத்தில் பெரும் ரூபத்தைச் சுருக்கிக் கொண்ட நான், அவளது ஹிருதயத்தைப் பறித்துக் கொண்டு நபஸ்தலத்தில் {வானத்தில்} தாவினேன்.(42) அவளது ஹிருதயத்தை நான் வெட்டி வந்த பிறகு, பர்வதத்திற்கு ஒப்பானவளும், பயங்கரமானவளுமான அவள், கைகளை உயர்த்தியபடியே லவணாம்பசத்தில் {உப்புநீர்க் கொள்ளிடத்தில் / பெருங்கடலில்} விழுந்தாள்.(43) ககனத்தில் திரிபவர்களான சித்தர்களும், சாரணர்களும், "பயங்கர ராக்ஷசியான சிம்ஹிகையை ஹனுமதன் சீக்கிரமே ஹதம் செய்துவிட்டான் {கொன்றுவிட்டான்}" என்று சொல்வதைக் கேட்டேன்.(44)
அவளைக் கொன்ற பிறகு, விரைந்து செய்ய வேண்டிய காரியத்தைக் குறித்து நினைத்த நான், நெடுந்தொலைவைக் கடந்து, மரங்களால் அலங்கரிக்கப்பட்ட அந்த லங்காபுரீ அமைந்திருக்கும் அந்த உததியின் தக்ஷிண தீரத்தை {பெருங்கடலின் தென்கரையை} நான் பார்த்தேன்.(45,46அ) தினகரன் அஸ்தமிக்கும்போது, பயங்கரமானவர்களும், ஆற்றல்மிக்கவர்களுமான ராக்ஷசர்கள் அறியாதபடி, ராக்ஷசநிலயபுரீக்குள் {ராக்ஷசர்கள் வசிக்கும் நகருக்குள்} நான் பிரவேசித்தேன்.(46ஆ,47அ)
அங்கே பிரவேசித்தபோது, கற்பாந்தமேகம் {பிரளயகால மேகம்} போலப் புலப்படும் நாரீ {பெண்} ஒருத்தி, அட்டஹாசம் செய்தபடியே என் எதிரே உதித்தாள்.(47ஆ,48அ) அப்போது, ஜுவலிக்கும் அக்னி போன்ற தலைமயிரைக் கொண்டவளும், பயங்கரமானவளும், என்னைக் கொல்ல விரும்பியவளுமான அவளை {லங்கினியை}, என் இடது முஷ்டியால் குத்தி வீழ்த்திவிட்டு, பிரதோஷ காலத்தில் {இரவின் முற்பகுதியில் நகருக்குள்} பிரவேசித்தபோது, பீதியடைந்த அவள் என்னிடம் {பின்வருமாறு} சொன்னாள்:(48ஆ,49) "வீரா, நானே லங்காபுரீ. எனவே, விக்கிரமத்தால் என்னை வெற்றி கொண்ட நீ, சர்வ ராக்ஷசர்களையும் முழுமையாக வீழ்த்தியவன் ஆகிறாய்" {என்றாள்}.(50)
சர்வ ராத்திரியும் ஜனகாத்மஜையை {ஜனகனின் மகளான சீதையை} அங்கே தேடிவிட்டு, ராவணனின் அந்தப்புரத்திற்குச் சென்றேன். அங்கேயும், அந்த மெல்லிடையாளை {சீதையை} என்னால் காண முடியவில்லை.(51) இராவணனின் நிவேசனத்தில் சீதையைக் காணாமல், சோக சாகரத்தை அடைந்த நான், அதன் கரையைக் கடக்க முடியாதவனாக இருந்தேன்.(52) சோகத்தில் மூழ்கியிருந்த நான், அந்த கிருஹத்தின் அருகில், காஞ்சன அலங்காரத்துடன் கூடியதும், சிறந்த பிராகாரங்களால் {மதில்களால்} மறைக்கப்பட்டிருந்ததுமான உத்தம உபவனத்தைக் கண்டேன்.(53) அத்தகையவனான நான், பிராகாரத்தைக் கடந்ததும், ஏராளமான மரங்களைக் கண்டேன். அசோகவனிகையின் மத்தியில் பெரிய சிம்சுபா மரம்[2] ஒன்று இருந்தது. அதிலும் ஏறி, காஞ்சனக் கதலிவனத்தை {பொன்னிறமான வாழைத்தோப்பைக்} கண்டேன்.(54,55அ)
[2] கே.எம்.கே. மூர்த்தி பதிப்பின் அடிக்குறிப்பில், "Botanical name: Delbergia sissoo" என்றிருக்கிறது. அதன் தமிழ்ப்பெயர், "நூக்கம்" என்பதாகும். பிபேக்திப்ராய் பதிப்பில், சுந்தர காண்டம் 14ம் சர்க்கத்தின் 37ம் சுலோகத்திற்கான அடிக்குறிப்பில், "சிம்சபம் என்பது Indian Rosewood {இந்திய கருங்காலி} வகையாகும். உண்மையில் இது {சிம்சுபம் என்றில்லாமல்} சிம்சபம் என்ற எழுத்துக்கோர்வையிலேயே அமைய வேண்டும். அசோக மரத்தைக் குறிக்கவும் இது பயன்படுத்தப்படுகிறது. ஒருவேளை அதுவே இங்கே பொருளாக இருக்கவுங்கூடும்" என்றிருக்கிறது.
சிம்சுப விருக்ஷத்திலிருந்து கொஞ்ச தூரத்தில் அந்த வரவர்ணினியை {அழகிய நிறம் படைத்த சீதையைக்} கண்டேன்.{55ஆ} இளமை நிறைந்தவளும், தாமரை இதழ்களைப் போன்ற கண்களையும், உபவாசத்தால் உலர்ந்த முகத்தையும் கொண்டவளும், {கடத்தப்பட்டபோது} உடுத்திய ஆடையையே அணிந்திருப்பவளும், புழுதி படிந்த கூந்தலைக் கொண்டவளும்,{56} சோகசந்தாபத்தால் தீனமடைந்த அங்கங்களை உடையவளும், பர்த்தாவின் ஹிதத்தில் திடமான அர்ப்பணிப்புடன் {கணவரின் நலனில் அர்ப்பணிப்புடன்} கூடியவளுமான சீதை, விரூபர்களும் {வடிவங்குலைந்தவர்களும்}, குரூரர்களுமான ராக்ஷசிகளால் அனைத்துப் பக்கங்களிலும் சூழப்பட்டவளாக,{57} மாமிசமும், சோணிதமும் பக்ஷிக்கும் {இறைச்சியும், குருதியும் உண்ணும்} பெண்புலிகளால் சூழப்பட்டப் பெண்மானைப் போலிருந்தாள்.(55ஆ-58அ)
இராக்ஷசிகள் மத்தியில், மீண்டும் மீண்டும் அச்சுறுத்தப்பட்டவளாக அவளை நான் கண்டேன்.{58ஆ} ஒற்றைப் பின்னல் தரித்தவளும், தீனமாகத் தெரிந்தவளும், பர்த்தாவைக் குறித்த சிந்தனையிலேயே மூழ்கி இருந்தவளும், பூமியையே சயனமாகக் கொண்டவளும், பனிக்காலப் பத்மினியை {தாமரையைப்} போல வர்ணமிழந்த அங்கங்களைக் கொண்டவளும்,{59} ராவணனிடம் இருந்து விலகிச் செல்லும் விருப்பத்தில், இறப்பதில் உறுதியாக இருந்தவளுமான அந்த மான்விழியாளை {மான் போன்ற கண்களைக் கொண்ட சீதையை} எப்படியோ துரிதமாக நான் கண்டு கொண்டேன்.(58ஆ-60) இராமபத்தினியான அந்தப் புகழ்பெற்ற நாரீயை {சீதையை} அந்நிலையில் கண்டு, அந்த சிம்சுபா விருக்ஷத்திலேயே இருந்தபடி, நான் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.(61) பிறகு, ராவணனின் நிவேசனத்தில் {வீட்டில்}, காஞ்சனீ, நூபுரங்களின் {அரைநூல், பாதச் சிலம்புகளின்} ஒலியுடன் கலந்து, அதிக கம்பீரத்துடன் கூடிய ஹலஹலவென்ற சப்தம் கேட்டது.(62) அப்போது, பெரிதும் கிளர்ச்சியடைந்த நான், என் ரூபத்தைச் சுருக்கிக் கொண்டேன். சிம்சுபா விருக்ஷத்தில் ஒரு பக்ஷியை {பறவையைப்} போல நான் அசையாமல் இருந்தேன்.(63)
பிறகு, மஹாபலவானான ராவணனும், ராவணனின் தாரங்களும், எங்கே சீதை இருந்தாளோ, அந்த தேசத்தை {இடத்தை} அடைந்தனர்.(64) அப்போது, சிறந்த இடையுடன் கூடிய சீதை, அந்த ரக்ஷோகணேஷ்வரனை {ராக்ஷசக்கூட்டத்தின் தலைவனான ராவணனைக்} கண்டு, தன் தொடைகளை மடக்கி, பருத்த ஸ்தனங்களைக் கைகளால் அணைத்து மறைத்துக் கொண்டாள்.(65) திகிலடைந்தவளும், பெரும் பரபரப்பை அடைந்தவளும், அங்குமிங்கும் பார்த்து, தன்னைக் காக்கும் கதி ஒன்றையும் காணாமல் நடுக்கமுற்றவளும், தபஸ்வினியும்,{66} பரமதுக்கம் அடைந்தவளுமான அந்த சீதையிடம், சிரம்தாழ்ந்த தசக்ரீவன் {தலைவணங்கிய ராவணன், பின்வருமாறு} சொன்னான், "என்னை பஹுமானிப்பாயாக {மதிப்புடன் என்னை நடத்துவாயாக}.(66,67) கர்வம் கொண்டவளே, சீதே, செருக்கினால் நீ என்னை மதிக்கவில்லையெனில், இரண்டு மாசங்களின் முடிவில் நான் உன் உதிரத்தைப் பருகுவேன்" {என்றான் ராவணன்}.(68)
துராத்மாவான அந்த ராவணனின் இந்த சொற்களைக் கேட்ட சீதை, பரம குரோதமடைந்து, {பின்வரும்} உத்தம வசனத்தைச் சொன்னாள்:(69) "இராக்ஷசாதமா {ராக்ஷசர்களில் இழிந்தவனே}, அமித தேஜஸ்வியான {அளவில்லா ஆற்றல் படைத்த} ராமரின் பாரியையிடம் {மனைவியிடம்}, இக்ஷ்வாகு குலநாதரான தசரதரின் மருமகளிடம்{70} சொல்லத்தகாதனவற்றைச் சொல்லியும், உன் நாக்கு {அறுந்து} வீழாமல் இருப்பது எப்படி?(70,71அ) அநாரியனே, பாபியே, பர்த்தா {கணவர்} இல்லாதபோது, அந்த மஹாத்மாவுக்கு {ராமருக்குப்} புலப்படாதவனாக வந்து, என்னை அபகரித்து வந்த உன் வீரியம் எத்தகையது?(71ஆ,72அ) நீ ராமருக்கு ஒப்பானவனல்லன். அவரது தாசனாக இருப்பதற்கும் நீ தகுதியானவனல்லன். இராகவர் யஜ்ஞங்களை {வேள்விகளைச்} செய்பவர்; சத்தியவாதி; போரில் புகழத்தகுந்தவர்" {என்றாள் சீதை}.(72ஆ,73அ)
ஜானகி இவ்வாறு கடுமையாகப் பேசிய உடனேயே, சிதையில் எரியும் பாவகனை {அக்னியைப்} போல, தசானனன் {பத்து முகம் கொண்ட ராவணன்} கோபத்தால் சுடர்விட்டெரிந்தான்.(73ஆ,74அ) குரூர நயனங்களை உருட்டி, வலது முஷ்டியை உயர்த்தி அவன் மைதிலியை {ராவணன் சீதையைக்} கொல்ல முனைந்தபோது, ஸ்திரீகள், "ஹா, ஹா" என்று அலறினர்.(74ஆ,75அ)
மந்தோதரி என்ற நாமத்தைக் கொண்ட அந்த துராத்மாவின் பாரியைகளில் சிறந்தவள், ஸ்திரீகளின் மத்தியில் இருந்து எழுந்தாள். அவள் அவனைத் தடுத்தாள்[3].(75ஆ,76அ) மதனனால் பீடிக்கப்பட்டவனிடம் அவள் {ராவணனிடம் மந்தோதரி பின்வரும்} மதுரமான வசனத்தைச் சொன்னாள், "மஹேந்திரனுக்குச் சமமான விக்கிரமம் கொண்டவரே, சீதையால் உமக்கு {ஆக வேண்டிய} காரியம் என்ன?(76ஆ,77அ) பிரபோ, தேவ, கந்தர்வ கன்னிகைகளுடனும், யக்ஷ கன்னிகைகளுடனும் சேர்ந்து இங்கேயே இன்புற்றிருப்பீராக. சீதையால் ஆகப் போவது என்ன?" {என்று கேட்டாள் மண்டோதரி}.(77ஆ,78அ)
[3] சுந்தரகாண்டம் 22ம் சர்க்கம், 40 முதல் 46ம் சுலோகம் வரை தான்யமாலினி என்ற ராக்ஷசி, ராவணனை சாந்தப்படுத்தியதாக வருகிறது; மந்தோதரி சொல்லப்படவில்லை.
அப்போது, மஹாபலவானான அந்த நிசாசரனை {பெரும்பலம் மிக்கவனும், இரவுலாவியுமான ராவணனை}, அந்த நாரீகள் அனைவரும் சேர்ந்து, விரைவாக அவனது பவனத்திற்கு அழைத்துச் சென்றனர்.(78ஆ,79அ) அந்த தசக்ரீவன் சென்றதும், விகார முகம் படைத்த ராக்ஷசிகள், அச்சுறுத்தும் வகையிலான தங்கள் குரூர வாக்கியங்களால் சீதையை அச்சுறுத்தினர்.(79ஆ,80அ) ஜானகி அவர்கள் சொல்வதை புல்லென {துரும்பென} மதித்தாள். மேலும் அவர்களின் கர்ஜனைகள் சீதையிடம் பயனற்றவையாகின.(80ஆ,81அ) ஆதரவின்றி வீண் கர்ஜனை செய்து கொண்டிருந்த அந்த பிசிதாசனர்கள் {பச்சை இறைச்சி உண்ணும் ராக்ஷசிகள்}, சீதையின் அந்த மஹத்தான தீர்மானத்தை ராவணனிடம் அறிவித்தனர்.(81ஆ,82அ) பிறகு அவர்கள் அனைவரும் சேர்ந்து, நம்பிக்கையிழந்து, தங்கள் முயற்சிகளைக் கைவிட்டு, அவளைச் சூழ்ந்திருந்து நித்திரையின் வசத்தை அடைந்தனர்.(82ஆ,83ஆ) அவர்கள் உறங்கிக் கொண்டிருந்தபோது, பர்த்தாவின் ஹிதத்தையே நோக்கமாகக் கொண்ட சீதை, பெரிதான வருத்தத்துடன் கூடியவளாக, தீனமடைந்தவளாக, துக்கத்துடன் கூடியவளாக, கருணைக்குரிய வகையில் அழுது கொண்டிருந்தாள்.(83ஆ,84அ)
அவர்களின் {அந்த ராக்ஷசிகளின்} மத்தியில் இருந்த திரிஜடை எழுந்து {பின்வரும்} வாக்கியத்தைக் கூறினாள்,{84ஆ} "உங்களையே சீக்கிரம் தின்னுங்கள். ஜனகனின் மகளும், சாத்வியும் {கற்புடையவளும்}, தசரதனின் மருமகளுமான சீதை நாசமடைய மாட்டாள்.(84ஆ,85) இராக்ஷசர்களுக்கு நாசத்தையும், இவளது பர்த்தாவுக்கு ஜயத்தையும் தரும் வகையில் ரோமஹர்ஷணத்தை {மயிர்க்கூச்சத்தை} உண்டாக்கும் பயங்கர ஸ்வப்னம் ஒன்றை இப்போது நான் கண்டேன்.(86) அந்த ராகவனிடம் இருந்து, ராக்ஷசீகணத்தைப் பாதுகாக்க வல்லவளான வைதேஹியிடம் வேண்டுவோம். இதுவே எனக்கு ஏற்புடையதாகத் தெரிகிறது.(87) இவ்விதமான ஸ்வப்னத்தைக் கண்ட பிறகு, எவர்கள் துக்கப்படுவார்களோ, அவர்கள் விதவிதமான துக்கங்களில் இருந்து விடுபட்டு, உத்தம சுகத்தை அடைவார்கள். ஜனகாத்மஜையான மைதிலி, பணிந்த மாத்திரத்தில் நிச்சயம் அருள்புரிவாள்" {என்றாள் திரிஜடை}[4].(88)
[4] சுந்தர காண்டம் 27ம் சர்க்கத்தில், திரிஜடையின் கனவு குறித்தும், அவள் ராக்ஷசிகளிடம் பேசியது குறித்தும் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
பர்த்தாவின் விஜயத்தில் மகிழ்ந்த அந்த பாலை {இளம்பெண்ணான அந்த சீதை}, பிறகு, கூச்சத்துடன் {பின்வருமாறு} பேசினாள், "இஃது உண்மையானால், உங்களுக்கு நான் அடைக்கலந்தருவேன்" {என்றாள் சீதை}.(89)
ஓய்ந்திருந்த நான், சீதைக்கு நேர்ந்திருக்கும் அந்தப் பயங்கர தசையைக் கண்டேன். {எவ்வளவு} சிந்தித்தாலும், மனத்தளவில் எனக்கு சமாதானம் உண்டாகவில்லை.(90) ஜானகியுடன் பேசுவதற்கான வழிமுறைகள் குறித்துச் சிந்தித்த பிறகு, இக்ஷ்வாகு வம்சத்தை நான் {சீதையிடம்} முன்வைத்தேன்.(91,92அ) தேவி {சீதை}, ராஜரிஷிகணங்களைப் பூஜித்துச் சொல்லப்பட்ட வசனத்தைக் கேட்டு, கண்ணீர் நிறைந்த கண்களுடன் என்னிடம் {பின்வருமாறு} பதிலளித்தாள்:(92ஆ,93அ) "வானரபுங்கவா, நீ யார்? இங்கே வந்தது எப்படி? {இங்கே வந்தது} ஏன்? ராமரிடம் உனக்குப் பிரீதியுண்டானது எப்படி? இவற்றை நீ எனக்குச் சொல்வதே தகும்" {என்று கேட்டாள் சீதை}.(93ஆ,94அ)
அவளது அந்த வசனத்தைக் கேட்டு, நான் {பின்வரும்} சொற்களைச் சொன்னேன், "தேவி, பயங்கர விக்ரமரான உன் பர்த்தாவுக்கு {கணவர் ராமருக்கு}, விக்கிராந்தரும், மஹாபலவானும், சுக்ரீவர் என்ற பெயரைக் கொண்டவருமான வானரேந்திரர் சஹாயராக இருக்கிறார்.(94ஆ,95) இங்கே வந்திருக்கும் என்னை, அவரது பணியாளான ஹனூமந்தன் என்று அறிவாயாக. களைப்பில்லாமல் கர்மங்களைச் செய்யக்கூடிய உன் பர்த்தா ராமர், உனக்காக {உன்னிடம் தூதனாக} என்னை அனுப்பினார்.(96) புகழ்மிக்கவளே, புருஷவியாகரரான ஸ்ரீமான் தாசரதி {மனிதர்களில் புலியும், மகிமைமிக்கவரும், தசரதரின் மகனுமான ராமர்}, உனக்கு ஓர் அடையாளமாக தாமே இந்த அங்குலியை {கணையாழியை / மோதிரத்தைக்} கொடுத்தார்.(97) எனவே, தேவி, உன் ஆணையை விருப்பத்துடன் ஏற்பேன். நான் செய்ய வேண்டியது என்ன? நான் உன்னை ராமலக்ஷ்மணர்களிடம் அழைத்துச் செல்வேன். உன் பதில் என்ன?" {என்று கேட்டேன்}.(98)
இதைக் கேட்டுப் புரிந்து கொண்ட ஜனகநந்தினியான சீதை, "இராகவர், ராவணனைக் கொன்றுவிட்டு, என்னை அழைத்துச் செல்லட்டும்" என்று சொன்னாள்.(99) நிந்திக்கத்தகாதவளும், ஆரியையுமான தேவியை {சீதையை} சிரஸால் வணங்கிவிட்டு, ராகவரின் மனத்திற்கு மகிழ்ச்சி அளிக்கும் ஓர் அடையாளத்தைக் கேட்டேன்.(100) அப்போது, சீதை என்னிடம், "இந்த உத்தம மணியை எடுத்துக் கொள்வாயாக. மஹாபாஹுவான ராமர் உன்னை பஹுமானிப்பார் {கௌரவிப்பார்}" என்று சொன்னாள்.(101) சிறந்த இடையைக் கொண்டவளான அவள், இவ்வாறு சொல்லிவிட்டு, அற்புதமான, மிகச் சிறந்த மணியை {சூடாமணியைக்} கொடுத்தாள். பரம துன்பத்துடன் கூடிய செய்திகளையும் என்னிடம் சொன்னாள்.(102)
சமாஹிதத்துடன் கூடிய நான், அந்த ராஜபுத்திரியை வணங்கிவிட்டு, இங்கே வரும் மனத்துடன், அவளை பிரதக்ஷிணம் செய்தேன் {வலம்வந்தேன்}.(103) அவள், மனத்தில் ஒரு நிச்சயத்துடன் என்னிடம் மீண்டும் {பின்வருமாறு} சொன்னாள், "ஹனூமனே, ராமரிடம் என்னைக் குறித்த விருத்தாந்தத்தை {செய்தியைச்} சொல்வாயாக.(104) இராமலக்ஷ்மணர்களான அந்த வீரர்கள் இருவரும், இதைக் கேட்டுவிட்டு, சுக்ரீவன் சஹிதராக சீக்கிரமே {இங்கே} வருவதற்கு உண்டான வகையில் நீ செயல்படுவாயாக.(105) இது வேறுவகையானால், என் ஜீவிதம் இரண்டு மாசங்கள் மட்டுமே நீடிக்கும். {அதன்பிறகு}, காகுத்ஸ்தரால் {ராமரால்} என்னைக் காண முடியாது. அத்தகைய நான், அநாதையைப் போல மரிப்பேன்" {என்றாள் சீதை}.(106) கருணைக்குரிய வகையிலான அந்த வாக்கியத்தைக் கேட்டு, என்னில் குரோதம் மேலெழுந்தது. அதன்பிறகு செய்ய வேண்டியனவற்றில் எஞ்சியிருக்கும் காரியங்களை நான் கண்டேன் {நினைத்துப் பார்த்தேன்}.(107)
அப்போது பர்வதத்திற்கு ஒப்பாக என் உடலைப் பெருக்கிக் கொண்டேன். பிறகு, யுத்தத்தை எதிர்பார்த்து அந்த வனத்தை நாசம் செய்ய ஆரம்பித்தேன்.(108) கோர முகங்களைக் கொண்ட ராக்ஷசிகள் விழித்தெழுந்து, கலக்கமடைந்த மிருகங்களுடனும், பறவைகளுடனும் கூடிய அந்த வனஷண்டம் பங்கமானதை {காட்டுப்பகுதி நொறுங்கிப் போவதைக்} கண்டனர்.(109) ஆங்காங்கே இருந்து வந்து, அந்த வனத்தில் என்னைக் கண்ட அவர்கள், ஒன்றுகூடியவர்களாக சீக்கிரமே ராவணனிடம் ஓடிச்சென்று {பின்வருமாறு} தெரிவித்தனர்:(110) "மஹாபலவானே, ராஜரே, உமது வீரியத்தை அறியாமல், துராத்மாவான ஒரு வானரன், அடைதற்கரியதான உம்முடைய இந்த வனத்தை பங்கம் செய்தான்.(111) இராஜேந்திரரே, உமக்குப் பிரியமற்றதைச் செய்த அந்த துராத்மா அழிவடையும் வகையில், அவனை வதம் செய்ய சீக்கிரமே ஆணையிடுவீராக" {என்றனர்}.(112)
அவற்றைக் கேட்ட ராக்ஷசேந்திரன் {ராவணன்}, வெல்லப்பட முடியாதவர்களும், ராவணனின் மனத்தையே அனுசரிப்பவர்களும், கிங்கரர்கள் என்று பெயர்பெற்றவர்களுமான ராக்ஷசர்களை அனுப்பினான்.(113) சூலங்கள், முத்கரங்கள் ஆகியவற்றைக் கையில் கொண்டு வந்த அவர்களில் எண்பதாயிரம் பேரை, அந்த வனதேசத்தில், பரிகத்தைக் கொண்டு நான் அழித்தேன்.(114) அவர்களில் வேகமாகச் செல்பவர்கள் எவரோ, அவர்கள் கொல்லப்படாமல் விடுபட்டு, ராவணனிடம் சென்று, மஹத்தான சைனியம் அழிக்கப்பட்டதாக அறிவித்தனர்.(115)
அப்போது, என்னில் ஒரு புத்தி {ஓரெண்ணம்} எழுந்தது. இலங்கையை அலங்கரித்துக் கொண்டிருந்த ஒரு சைத்திய பிராசாதத்தை {வேள்வி மண்டபத்தை} அடைந்து, அதன் ஸ்தம்பத்தைக் கொண்டு நூறு ராக்ஷசர்களைக் கொன்றுவிட்டு, அங்கேயே நின்றிருந்தேன்.(116,117அ) பிறகு, பிரஹஸ்தனின் மகனான ஜம்புமாலி, கோர ரூபம் கொண்டவர்களும், பயங்கரமானவர்களுமான ஏராளமான ராக்ஷசர்களுடன் சேர்த்து அனுப்பப்பட்டான்.(117ஆ,118அ) மஹாபலம் பொருந்தியவனும், ரணகோவிதனுமான {போரில் திறம்பெற்றவனுமான} அந்த ராக்ஷசனையும், அவனைப் பின்தொடர்ந்து வந்தவர்களையும் கோரமான பரிகத்தைக் கொண்டு அழித்தேன்.(118ஆ,119அ)
இதைக்கேட்ட ராக்ஷசேந்திரன் ராவணன், மஹாபலவான்களும், பெரும் காலாட்படையுடன் கூடியவர்களுமான மந்திரிபுத்திரர்களை அனுப்பி வைத்தான்.(119ஆ,120அ) பரிகத்தைக் கொண்டு அவர்கள் அனைவரையும் யமனின் இருப்பிடத்திற்கு அனுப்பி வைத்தேன்.{120ஆ} வேகமும், வீரமும் கொண்ட மந்திரிபுத்திரர்கள், போரில் கொல்லப்பட்டதைக் கேட்ட ராவணன், சூரர்களான ஐந்து சேனாபதிகளை அனுப்பி வைத்தான்.(120ஆ,121) சைனியத்துடன் கூடிய அவர்கள் அனைவரையும் நான் அழித்தேன். அதன்பிறகு, தசக்ரீவனான ராவணன், மஹாபலவானான தன் புத்திரன் அக்ஷனை, ஏராளமான ராக்ஷசர்களுடன் சேர்த்து அனுப்பி வைத்தான்.(122,123அ) இரணபண்டிதனும், மந்தோதரி புத்திரனுமான அந்தக் குமாரன் {அக்ஷன்}, கையில் வாளுடனும், கேடயத்துடனும் வானத்தில் குதித்தபோது, அவனது பாதங்களைத் திடீரெனப் பிடித்து, நூறுமுறைச் சுழற்றி நசுக்கினேன் {தரையில் அடித்துக் கொன்றேன்}.(123ஆ,124)
தசானனனான {பத்து முகங்களைக் கொண்டவனான} அந்த ராவணன், போருக்கு வந்த அக்ஷன் பங்கமடைந்ததைக் கேட்டுப் பெரிதும் குரோதம் அடைந்து, யுத்தத்தில் துர்மதம் {வெறி} கொண்டவனும், பலவானும், இந்திரஜித் என்ற பெயரைக் கொண்டவனுமான தன் இரண்டாம் மகனை அனுப்பிவைத்தான்.(125,126அ) அந்தப் படை அனைத்தையும், அந்த ராக்ஷசபுங்கவனையும் {இந்திரஜித்தையும்} போரில் பலமிழக்கச் செய்து, பெரும் மகிழ்ச்சியை அடைந்தேன்.(126ஆ,127அ) மஹாபாஹுவும், மஹாபலவானுமான அவன் {இந்திரஜித்}, வெறியால் தூண்டப்பட்ட வீரர்களுடன் சேர்த்து, பெரும் நம்பிக்கையுடன் ராவணனால் அனுப்பி வைக்கப்பட்டிருந்தான்.(127ஆ,128அ) நான் தடுக்கப்படமுடியாதவன் என்பதையும், தன் படை அழிந்துவிடக்கூடும் என்பதையும் அறிந்த அவன், அதிவேகமாக பிரம்மாஸ்திரத்தைக் கொண்டு என்னைக் கட்டினான்.(128ஆ,இ) பிறகு, அங்கிருந்த ராக்ஷசர்கள், கயிறுகளால் என்னைக் கட்டி, அழைத்துக் கொண்டு, ராவணனின் சமீபத்தை அடைந்தனர்.(129,130அ)
துராத்மாவான ராவணன், என்னைக் கண்டதும், விசாரிக்கும் வகையில், லங்கைக்கு நான் வந்தது குறித்தும், ராக்ஷசர்களின் அந்த வதம் குறித்தும் கேட்டான்.(130ஆ,131அ) நான் அங்கே இவ்வாறு சொன்னேன், "அனைத்தும் அந்த சீதைக்காகவே. விபுவே, அவளைக் காண விரும்பியே நான் உன் பவனத்திற்கு வந்தேன். மாருதரின் {வாயு தேவனின்} ஔரசபுத்திரனான நான் ஹனுமான் என்ற வானரன் ஆவேன்.(131ஆ,132) என்னைக் கபியாகவும் {குரங்காகவும்}, ராமதூதனாகவும், சுக்ரீவரின் அமைச்சனாகவும் அறிவாயாக. இராம தூதனாகவே இங்கே உன் முன்னிலையில் நான் வந்திருக்கிறேன்.(133)
மஹாதேஜஸ்வியான அந்த சுக்ரீவர், உன் குசலத்தை விசாரித்தார். உனக்குப் பத்தியமான, தர்ம, அர்த்த, காம சஹிதமான ஹிதமானவற்றை {நற்சொற்களைச்} சொன்னார் {பின்வருமாறு சொல்லி அனுப்பினார்}.(134) "பெரும் மரங்களுடன் கூடிய ரிச்யமூகத்தில் வசித்து வந்த என்னிடம், ரணவிக்ராந்தரான ராகவர் மித்ரத்வத்தை {ராமர் நட்புநிலையை} ஏற்படுத்திக் கொண்டார்.(135) இராஜாவே {ராவணா}, அவர் ராமர், "என் பாரியை ராக்ஷசனால் அபகரிக்கப்பட்டாள். அதில் அனைத்துவகை சஹாய காரியங்களையும் நீ எனக்குச் செய்ய வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.(136) நான் அவரிடம், "வாலி, வதம் செய்யப்பட வேண்டும். அதில் எனக்கு நீர் சஹாயம் செய்ய வேண்டும்" என்று கேட்டுக் கொண்டேன்.(137)
மஹாபிரபுவும், லக்ஷ்மணருடன் கூடியவருமான ராகவர், வாலியால் ராஜ்ஜியம் அபகரிக்கப்பட்ட சுக்ரீவனுடன் {என்னுடன்}[5], அக்னி சாட்சியாக சக்கியத்தை {நட்பை} ஏற்படுத்திக் கொண்டார்.(138) போரில் ஒரே சரத்தால் வாலியை அழித்த அவர் {ராமர்}, பிலவதாம்பிரபுவான அவனை {தாவிச் செல்பவர்களின் தலைவனும், சுக்ரீவனுமான என்னை} வானரர்களின் மஹாராஜாவாக்கினார்.(139) இப்போது, நாங்கள் அவருக்கு அனைத்து வகையிலும் சகாயம் செய்ய வேண்டும். எனவே, தர்மப்படி இவன் {ஹனுமான்} உன் சமீபத்திற்கு அனுப்பப்படுகிறான்.(140) வீரர்களான ஹரயர்களால் {குரங்குகளால்} உன் படை அழிவடைவதற்கு முன்பே, சீதையை சீக்கிரமாகக் கொண்டு வந்து, ராகவரிடம் ஒப்படைப்பாயாக.(141) சஹாயம் வேண்டி தேவதைகளாலும் யார் அழைக்கப்படுவார்களோ, அந்த வானரர்களின் பிரபாவத்தை அறியாதவன் எவன்?" {என்று என் மூலம் உனக்கு சொல்லி அனுப்பியிருக்கிறார் சுக்ரீவர்}.(142)
[5] பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "இது சுக்ரீவன் சொல்லி அனுப்பிய செய்தியாக இருந்தாலும், சுக்ரீவன் இங்கு {பேசுபவனாகவும் இல்லாமல், கேட்பவனாகவும் இல்லாமல்} மூன்றாம் நபராகவே குறிப்பிடப்படுகிறான்" என்றிருக்கிறது.
வானரராஜா {சுக்ரீவர்} இவ்வாறே இதை உன்னிடம் சொல்லச் சொன்னார்" என்று நான் {ராவணனிடம்} சொன்னேன். அப்போது குரோதமடைந்தவன் {ராவணன்}, கண்களால் எரித்துவிடுபவனைப் போல என்னைப் பார்த்தான்.(143) ரௌத்திர கர்மங்களைச் செய்யும் ராக்ஷசனும், துராத்மாவுமான அந்த ராவணன், என் பிரபாவத்தை அறியாமல், என்னை வதைக்கும்படி ஆணையிட்டான்.(144) அப்போது, அவனுடன் பிறந்தவனும், விபீஷணன் என்ற பெயரைக் கொண்டவனுமான மஹாமதியாளன், என் காரணத்திற்காக அந்த ராக்ஷசராஜாவிடம் {பின்வருமாறு} யாசித்தான்:(145) "இராக்ஷசசார்தூலரே {ராக்ஷசர்களில் புலியே}, இவ்வாறு செயல்பட வேண்டாம். இந்த நிச்சயத்தைக் கைவிடுவீராக. இராஜசாஸ்திரங்களுக்கு முரணான மார்க்கத்தை நீர் பின்பற்றுகிறீர்.(146) இராக்ஷசரே, ராஜசாஸ்திரங்களில் தூதனை வதைப்பது காணப்படவில்லை. ஹிதமாகப் பேசி, தூதனிடம் இருந்து யதார்த்தத்தை {உள்ளபடியே அவன் கொண்டு வந்த செய்தியை} அறிய வேண்டும்.(147) அதுலவிக்கிரமரே {ஒப்பற்ற ஆற்றல்வாய்ந்தவரே}, தூதன் மஹத்தான அபராதம் செய்திருந்தாலும், விரூபமாக்குவது சாஸ்திரங்களில் காணப்படுகிறதேயன்றி, வதைப்பது காணப்படவில்லை" {என்றான் விபீஷணன்}.(148)
விபீஷணன் இவ்வாறு சொன்னதும், ராவணன், "இவனுடைய இந்த லாங்கூலம் {வால்} எரிக்கப்படட்டும்" என்று அந்த ராக்ஷசர்களுக்கு ஆணையிட்டான்.(149) அவனது சொற்களைக் கேட்டு என் வால் முழுவதும், பருத்திப் பஞ்சாலான, கிழிந்த கந்தல் துணிகளாலும், சணற்பிரிகளாலும் சுற்றப்பட்டது.(150) அப்போது, சண்டவிக்கிரமர்களான ராக்ஷசர்கள், ஏற்பாடுகளை முடித்து விட்டு, மரக்கட்டைகளாலும், முஷ்டிகளாலும் என்னைத் தாக்கி, என் வாலை எரித்தனர். நான் பல கயிறுகளால் கட்டப்பட்டிருந்தாலும், {அவை அனைத்துக்கும்} கட்டுப்பட்டிருந்தேன்.(151,152அ) நகர துவாரத்தை {வாயிலை} அடைந்தபோது, ராக்ஷச சூரர்கள், கட்டப்பட்டும், அக்னியால் சூழப்பட்டும் இருந்த என்னைக் குறித்து ராஜமார்க்கங்களில் அறிவித்தனர்.(152ஆ,153அ) பிறகு, என் மஹத்தான ரூபத்தைச் சுருக்கிக் கொண்டு, அந்த பந்தத்தில் {கயிறுகளின் கட்டுகளில்} இருந்து விடுபட்டு, மீண்டும் இயல்பான வடிவை அடைந்து, இரும்புப் பரிகத்தை எடுத்து, அந்த ராக்ஷசர்களைக் கொன்றேன்.(153ஆ,154)
பிறகு, அந்த நகர துவாரத்தின் {நகரவாயில் தோரணத்தின்} மீது வேகமாகத் தாவி, யுகாந்த {யுகத்தின் முடிவில் தோன்றும்} அக்னியைப் போல எரிந்து கொண்டிருந்த வாலைக் கொண்டு, சாட்டங்கள் {கடைவீதிகள்}, பிராகாரங்கள் {மதில்கள்}, கோபுரங்களுடனும், பிரஜைகளுடனும் கூடிய அந்தப் புரீயைத் தயக்கமில்லாமல் எரித்தேன்.(155,156அ) "இலங்கையில் எரிக்கப்படாத எந்த இடத்தையும் பார்க்க முடியவில்லை. மொத்த புரீயும் பஸ்மமாகிவிட்டது. எனவே, ஜானகியும் நிச்சயம் எரிந்திருப்பாள்" {என்று நினைத்தேன்}.(156ஆ-158அ)
இவ்வாறான சிந்தனையால் சோகத்தில் நிறைந்த நான், "ஜானகி எரிக்கப்படவில்லை" என்று ஆச்சரியத்துடன் பேசிக் கொள்ளும் சாரணர்கள் சொன்ன சுபச் சொற்களைக் கேட்டேன்.(158ஆ,159) அந்த அற்புதமான குரலைக் கேட்டபோது, "ஜானகி எரிக்கப்படவில்லை" என்ற புத்தி என்னில் எழுந்தது. நிமித்தங்களும் அதையே உணர்த்தின.(160) இலாங்கூலம் {வால்} எரிந்தாலும், பாவகன் என்னை எரிக்கவில்லை {நெருப்பு என்னைச் சுடவில்லை}. சுரபி கந்தத்துடன் கூடிய வாதமும் {நறுமணத்துடன் கூடிய தென்றலும்} என் ஹிருதயத்திற்கு மகிழ்ச்சியை அளித்தது.(161) நற்பலன்களைத் தரும் அந்த நிமித்தங்களாலும், மஹாகுணம் பொருந்திய காரணங்களாலும், சித்தார்த்தர்களான ரிஷிகளின் வாக்கியத்தாலும் நான் மனம் மகிழ்ந்தவன் ஆனேன்[6].(162)
[6] ஆண்தகை தேவி உள்ளத்து அருந்தவம் அமையச் சொல்லிபூண்ட பேர் அடையாளம் கைக்கொண்டதும் புகன்று போரில்நீண்ட வாள் அரக்கரோடு நிகழ்ந்ததும் நெருப்புச் சிந்திமீண்டதும் விளம்பான் தான் தன் வென்றியை உரைப்ப வெள்கி- கம்பராமாயணம் 6015ம் பாடல், சுந்தர காண்டம், திருவடி தொழுத படலம்பொருள்: ஆண்மை நிறைந்தவன் {ஹனுமான்}, தேவியின் உள்ளத்து அருந்தவத்தை {கற்பொழுக்கத்தைக்} குறித்துத் தெளிவாகச் சொல்லி, {அவள்} பூண்டிருந்த பெரிய அடையாளத்தை {சூடாமணியைக்} கையில் பெற்று வந்ததையும் சொல்லி, தன் வெற்றியின் சிறப்பைத் தானே சொல்ல வெட்கப்பட்டு, நெடும் வாள்களைக் கொண்ட அரக்கரோடு நிகழ்ந்த போரையும், {இலங்கையை} நெருப்பிட்டு மீண்டு வந்ததையும் சொல்லாமல் விட்டுவிட்டான்.
மீண்டும் வைதேஹியைக் கண்டு, அவளால் மீண்டும் விடுவிக்கப்பட்ட பிறகு, அரிஷ்ட பர்வதத்தை அடைந்து, உங்களைக் காணும் ஆவலுடன் மீண்டும் அங்கிருந்து நான் தாவ ஆரம்பித்தேன்.(163,164அ) அப்போது, பவனன், சந்திரன், அர்க்கன் {சூரியன்}, சித்தர்கள், கந்தர்வர்களால் சேவிக்கப்படும் பாதையில் வந்து உங்களை இங்கே காண்கிறேன்.(164ஆ,165அ) இராகவரின் பிரபாவத்தாலும், உங்களின் தேஜஸ்ஸாலும், சுக்ரீவரின் காரியம் நிறைவேறும் வகையில், அனைத்தையும் நான் அனுஷ்டித்திருக்கிறேன் {செய்திருக்கிறேன்}.(165ஆ,166அ) இவையனைத்தையும் நான் அங்கே முறையாகச் செய்திருக்கிறேன். இதில் செய்யப்படாமல் எஞ்சியிருப்பவை எவையோ, அவையனைத்தையும் இனி {நாம்} செய்ய வேண்டும்" {என்றான் ஹனுமான்}.(166ஆ,167)
சுந்தர காண்டம் சர்க்கம் – 58ல் உள்ள சுலோகங்கள்: 167
Previous | | Sanskrit | | English | | Next |