Tuesday 13 February 2024

தான்யமாலினி | சுந்தர காண்டம் சர்க்கம் - 22 (46)

Dhanyamalini | Sundara-Kanda-Sarga-22 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: தன்னை மணந்து கொள்ள சீதைக்கு இரண்டு மாதக் கெடு விதித்த ராவணன்; சீதையை அச்சுறுத்தி தன் வசப்படுத்த ராக்ஷசிகளுக்கு ஆணையிட்டது...

Seetha and Ravana's wives. Dhanyamalini hugging Ravana

இராக்ஷசேஷ்வரன் {ராவணன்}, கடுமைநிறைந்த சீதையின் வசனத்தைக் கேட்ட பிறகு, பிரியதரிசனங்கொண்ட பிரியமற்ற சொற்களில் {இனிமையாகத் தெரியும் கடுஞ்சொற்களில் பின்வருமாறு} சீதைக்கு மறுமொழி கூறினான்:(1) “எப்படி எப்படி ஒருவன் ஸ்திரீகளிடம் சாந்தமாகப் பேசுகிறானோ, அப்படி அப்படி {அவளது} வசமடைகிறான். எப்படி எப்படி பிரியமாகப் பேசுகிறானோ, அப்படி அப்படி புறக்கணிக்கப்படுகிறான்[1].(2) நல்ல சாரதி, அமார்க்கத்தை அடைந்து ஓடும் ஹயங்களை {அடக்குவதைப்} போல, உன்னைப் பொறுத்தவரையில் எழுந்த {என்} காமம், குரோதத்தை அடக்குகிறது.(3) மனுஷ்யர்களின் காமம், ஒருதலையானது. எந்த ஜனத்திடம் {காமம்} கட்டுண்டுள்ளதோ, அதில் {அவர்களிடம்} தயையும், சினேகமும் பிறக்கிறது.(4) அழகிய முகத்தவளே, இதனாலேயே, போலியாக நாடு கடந்து வந்தவனிடம் {போலி வானப்ரஸ்தனிடம்} விருப்பமுள்ளவளான நீ, வதத்திற்குத் தகுந்தவளாகவும், அவமானத்திற்குத் தகுந்தவளாகவும் இருந்தாலும் கொல்லாதிருக்கிறேன்.(5) மைதிலி, இங்கே நீ என்னைக் குறித்து என்னென்ன கடுமையான வாக்கியங்களைப் பேசினாயோ, அவை ஒவ்வொன்றும் உன் பயங்கர வதத்திற்குத் தகுந்தவை” {என்றான் ராவணன்}.(6)

[1] பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், “ஓர் ஆண் சமரசமாகப் பேசினால், அவன் பெண்களுக்கு அடியபணிய வேண்டும். அவன் விரும்பி இனிமையாகப் பேசினால் அவளால் மறுக்கப்படுவான்” என்றிருக்கிறது.

இராக்ஷசாதிபனான ராவணன், வைதேஹியிடம் இவ்வாறு சொல்லிவிட்டு, குரோதமும், சீற்றமும் நிறைந்தவனாக அடுத்தடுத்து சீதையிடம் {பின்வருமாறு} பேசினான்:(7) “வரவர்ணினி {அழகிய நிறத்தாளே}, நான் உனக்கு விதித்த கெடு எதுவோ, அந்த இரண்டு மாசங்கள் என்னால் ரக்ஷிக்கத்தகுந்தவை {பொறுக்கத்தகுந்தவை}. அதன்பிறகு {நீ} என் சயனத்தில் ஏற வேண்டும்.(8) இவ்விரு மாசங்களுக்கும் மேலும், என்னை பர்த்தாவாக ஏற்க விரும்பவில்லை எனில், என் காலை உணவுக்காக, சமையலறையில் {நீ} சமைக்கப்படுவாய்” {என்றான் ராவணன்}[2].(9)

[2] வளர்ந்ததாளினன் மாதிரம் அனைத்தையும் மறைவித்து
அளந்த தோளினன் அனல் சொரி கண்ணினன் இவளைப்
பிளந்துதின்பென் என்று உடன்றனன் பெயர்ந்தனன் பெயரான்
கிளர்ந்தசீற்றமும், காதலும் எதிர் எதிர் கிடைப்ப

- கம்பராமாயணம் 5206ம் பாடல், காட்சிப்படலம்

பொருள்: வளர்ந்த கால்களை உடையவனும், திசைகள் அனைத்தையும் மறையும்படிச் செய்தவனும், பெருந்தோள்களைக் கொண்டவனும், நெருப்பை உமிழும் கண்களைக் கொண்டவனுமானவன் {ராவணன்}, “இவளைப் பிளந்து தின்பேன்” என்று சினந்து கூறினான். கிளர்ந்த சீற்றமும், காதலும் மாறி மாறி போரிட {மீண்டும் மீண்டும்} புறப்பட்டான், நின்றான்.

இராக்ஷசேந்திரனால் அச்சுறுத்தப்படும் ஜானகியைக் கண்டு, அங்கிருந்த தேவ, கந்தர்வ கன்னிகைகள், கலங்கிய விழிகளுடன் மனம் வருந்தினர்.(10) அந்த ராக்ஷசனால் அச்சுறுத்தப்படும்போது, அவர்களில் சிலர் உதடுகளை அசக்கியும், அதே போல, வேறு சிலர் முகங்களாலும், கண்களாலும் ஜாடை செய்தும் அந்த சீதையை ஆசுவாசப்படுத்தினர்.(11) அவர்களால் ஆசுவாசப்படுத்தப்பட்டவளும், நன்நடத்தையில் கர்வம் கொண்டவளுமான சீதை, ராக்ஷசாதிபனான ராவணனின் ஆத்மஹிதத்திற்கான {நன்மைக்கான பின்வரும்} வாக்கியத்தைச் சொன்னாள்:(12) “கண்டிக்கத்தகுந்த இந்தக் கர்மங்களைச் செய்யாமல் உன்னைத் தடுத்து, உனக்கான அத்தகைய நன்மையைச் செய்பவர் எவரும் இங்கில்லை.(13) சசிபதியும் {இந்திரனும்}, சசியும் போல தர்மாத்மாவின் பத்தினியான {ராமரின் மனைவியான} என்னை, மூவுலகங்களிலும் உன்னைத் தவிர வேறு எவன் மனத்தாலுங்கூடப் பிரார்த்திப்பான்?(14) இராக்ஷசாதமா {ராக்ஷசர்களில் இழிந்தவனே}, அமிததேஜஸ்வியான {அளவற்ற ஆற்றலுடைய} ராமரின் பாரியையிடம் எந்த பாபத்தைச் சொன்னாயோ, அதிலிருந்து தப்பித்து எங்கே செல்லப் போகிறாய்?(15) வனத்தில் நடக்கும் போரில் மத்தகஜமும் {மதங்கொண்ட யானையும்}, முயலும் எப்படியோ, அப்படியே ராமர் யானையைப் போன்றவர். நீசா, நீயோ முயலைப் போலக் கருதப்படுபவன்.(16) அத்தகைய உனக்கு, இக்ஷ்வாகு நாதரை எடுத்தெறிந்து பேச லஜ்ஜையாக {வெட்கமாக} இல்லையா? நீ அவரின் கண்களுக்கு இதுவரை புலப்படாதவனாக இருக்கிறாய்.(17) 

அநாரியா, குரூரமானவையும், கோரமானவையும், கறுத்துக் கடையில் சிவந்தவையுமான உன்னுடைய இந்த நயனங்கள் {கண்கள்} என்னைப் பார்த்தும் தரையில் விழாமல் இருப்பதேன்?(18) தர்மாத்மாவானவரின் பத்தினியும் {ராமரின் மனைவியும்}, தசரதரின் மருமகளுமான என்னைக் குறித்து இவ்வாறு பேசியும், உன் நாக்கு உதிராமல் இருப்பதேன்?(19) பஸ்மமாக்கப்படத் தகுந்த தசக்ரீவா {பத்துக் கழுத்துடைய ராவணா, நீ எரித்து சாம்பலாக்கப்படத் தகுந்தவன் என்றாலும்}, ராமரின் கட்டளை இல்லாததாலும், தபஸைக் கடைப்பிடிப்பதாலும் தேஜஸ்ஸால் உன்னை பஸ்மமாக்காமல் {சாம்பலாக்காமல்} இருக்கிறேன்.(20) மதிமிக்க ராமருக்குரியவளான நான், உன்னால் அபகரிக்கப்படும் சாத்தியமற்றவள். உன் வதத்திற்காகவே இது விதிக்கப்பட்டிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.(21) சூரனும், தனதனின் பிராதாவும் {குபேரனுடன் பிறந்தவனும்}, பலத்துடன் {படைகளுடன்} கூடியவனுமான நீ, ராமரை அகலச் செய்து, அவரது தாரத்தைத் திருடிச் சென்றதேன்?” {என்று கேட்டாள் சீதை}.(22)

இராக்ஷசாதிபன் ராவணன், சீதையின் வசனத்தைக் கேட்டு, தன் குரூர நயனங்களை {கண்களை} உருட்டியபடியே ஜானகியைப் பார்த்தான்.(23) நீலமேகத் தோற்றத்தையும், மஹாபுஜங்களையும், கழுத்தையும், சிம்ஹத்தின் வலிமையையும், நடையையும் கொண்டவனும், ஸ்ரீமானும், ஒளிமிக்க நாவுடனும், கண்களுடனும் கூடியவனும்,(24) அசையும் முன் பகுதி கொண்ட மகுடத்துடன் கூடியவனும், நெடியவனும், சித்திர மாலைகளையும், களிம்புப்பூச்சையும் கொண்டவனும், சிவந்த மாலைகளையும், அம்பரங்களையும் {ஆடைகளையும்} தரித்தவனும், புடம்போட்ட தங்கத்தாலான ஆபரணங்கள் பூண்டவனும்,(25) அம்ருத உற்பத்திக்காக புஜகத்தால் {பாம்பான வாசுகியால்} சுற்றப்பட்ட மந்தரத்தைப் போல, இடையில் மஹத்தான கரிய சூத்திரத்தால் {கயிற்றால் / அரைஞாணால்} சுற்றப்பட்டவனும்,(26) அசலத்திற்கு {மலைக்கு} ஒப்பானவனுமான ராக்ஷசேஷ்வரன் {ராவணன்}, சிருங்கங்களுடன் கூடிய மந்தரத்தை {சிகரங்களுடன் கூடிய மந்தரமலையைப்} போல, பரிபூரணமாக அமைந்த தன் புஜங்களுடன் ஒளிர்ந்தான்.(27) இளம் ஆதித்யனின் வர்ணங்கொண்ட குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்டவனும், சிவந்த தளிர்களையும், புஷ்பங்களையும் கொண்ட அசோகங்களுடன் கூடிய அசலத்தை {மலையைப்} போலிருந்தவனும்,(28) கல்பவிருக்ஷத்திற்கு {கற்பகத்தருவுக்கு}[3] ஒப்பானவனுமான அவன், வசந்த மூர்த்தியை {வசந்த காலமே வடிவெடுத்து வந்தவனைப்} போலிருந்தான். சுடலையில் இருக்கும் சைத்தியத்தை {இறந்தோரின் நினைவுச்சின்னத்தைப்} போன்றவன் அலங்கரிக்கப்பட்டவனாக இருந்தாலும், பயங்கரமாக இருந்தான்.(29)

[3] மன்மதநாததத்தர் பதிப்பின் அடிக்குறிப்பில், “விரும்பிய அனைத்தையும் தரும் அதிசய மரம்” என்றிருக்கிறது. பின்வருவது விவேகசிந்தாமணியில் உள்ள ஒரு பாடல் ஆகும். 

கற்பகத்தருவைச் சார்ந்த காகமும் அமுதமுண்ணும்
விற்பன விவேகமுள்ள வேந்தனைச் சேர்ந்தோர் வாழ்வர்
இப்புவி தன்னிலென்றும் இலவு காத்திடுங்கிளிபோல்
அற்பரைச் சேர்ந்தோர் வாழ்தல் அரிதரிது ஆகுமம்மா.

இது, "கற்பகத்தரு" என்ற சொல் அமைந்திருக்கும் ஓர் அழகிய பாடல் என்பதால் மட்டுமே இங்கே சுட்டிக்காட்டப்படுகிறது. 


கோபத்தால் சிவந்த கண்களுடன் கூடிய ராவணன், வைதேஹியைப் பார்த்தான். புஜங்கத்தை {பாம்பைப்} போல் பெருமூச்சுவிட்டுக் கொண்டே சீதையிடம் {பின்வருமாறு} சொன்னான்:(30) “அநீதி நிறைந்த அர்த்தமற்றவனை {செல்வமற்றவனைப்} பின்பற்றுகிறாய். சந்தியாவேளையைத் தன் ஓஜஸ்ஸால் {சக்தியால் ஒழிக்கும்} சூரியனைப் போல, இப்போது நான் உன்னை அழிப்பேன்” {என்றான் ராவணன்}.(31)

சத்ருக்களை ராவணஞ்செய்ய வைக்கும் {எதிரிகளைக் கதறச் செய்பவனான} ராஜா ராவணன், மைதிலியிடம் இவ்வாறு சொல்லிவிட்டு, கோர தரிசனந்தரும் சர்வ ராக்ஷசிகளுக்கும் {பின்வருமாறு} ஆணையிட்டான்.(32) ஏகாக்ஷி {ஒற்றைக் கண் கொண்டவள்}, ஏககர்ணை {ஒற்றைக் காது கொண்டவள்}, அதேபோல, கர்ணபிராவரணை {காதுகளால் மேனி மறைக்கப்பட்டவள்}, கோகர்ணி {பசுக் காதுள்ளவள்}, ஹஸ்திகர்ணி {யானைக் காதுள்ளவள்}, லம்பகர்ணி {தொங்கு காதுள்ளவள்}, அகர்ணிகை {காதில்லாதவள்},{33} ஹஸ்தபாத்யை {யானைக் காலுள்ளவள்}, அஷ்வபாத்யை {குதிரைக் காலுள்ளவள்}, கோபாதீ {பசுவின் காலுள்ளவள்}, பாதசூளிகை {மயிர்களால் கால்கள் மறைக்கப்பட்டவள்}, ஏகாக்ஷி {ஒற்றைக் கண்ணுள்ளவள்}, ஏகபாதீ {ஒற்றைக் காலுள்ளவள்}, பிருதுபாதீ {பருத்த காலுள்ளவள்}, அபாதிகை {காலில்லாதவள்},{34} அதிமாத்ரஷிரோக்ரீவை {பெருந்தலையும், கழுத்துமுள்ளவள்}, அதிமாத்ரகுசோதரீ {பெரும் மார்பகங்களையும், வயிற்றையும் கொண்டவள்}, அதிமாத்ராஸ்யநேத்ரை {பெரும் வாயையும், கண்களையும் கொண்டவள்}, தீர்கஜிஹ்வை {நீண்ட நாவுள்ளவள்}, அஜிஹ்விகை {நாவில்லாதவள்},{35} அநாசிகை {மூக்கில்லாதவள்}, சிம்ஹமுகீ {சிங்கமுகம் கொண்டவள்}, கோமுகீ {பசுமுகம் கொண்டவள், ஸூகரீமுகீ {பன்றிமுகம் கொண்டவள் ஆகியோரிடம்}[4],(33-36அ) “எப்படி ஜானகியான {ஜனகனின் மகளான} சீதை விரைவில் என் வசப்படுவாளோ, அப்படியே, ராக்ஷசிகளே, நீங்கள் அனைவரும் சேர்ந்து சீக்கிரமாகச் செயல்படுவீராக.(36ஆ,37அ) பிரதிகூலமாகவோ, அனுகூலமாகவோ {காரியங்களைச் செய்து}, சாம, தான, பேத, தண்ட {நல்வார்த்தை பேசும், கொடை கொடுக்கும், பிரித்தாளும், தண்டிக்கும்} முறைகளைப் பயன்படுத்தி, வைதேஹியை உடன்படச் செய்வீராக” {என்றான் ராவணன்}.(37ஆ,38அ) மனம் நிறைந்த காமத்தோடும், கோபத்தோடும் கூடிய ராக்ஷசேந்திரன் {ராவணன்} இவ்வாறு ஆணையிட்டும், மீண்டும் மீண்டும் ஜானகியை மிரட்டினான்.(38ஆ,39அ)

[4] இதேபோன்ற ஒரு பட்டியல் சுந்தரகாண்டம் 17ம் சர்க்கத்தில், 4 முதல் 8ம் சுலோகம் வரை சொல்லப்பட்டிருக்கிறது.

Dhanyamalini hugging Ravana

அப்போது, தான்யமாலினி என்ற ராக்ஷசி, தசக்ரீவனை சீக்கிரமே நெருங்கித் தழுவிக் கொண்டு, இந்த வசனத்தைச் சொன்னாள்:(39ஆ,40அ) “மஹாராஜா, என்னுடன் கிரீடிப்பீராக {விளையாடுவீராக}. இராக்ஷசேஷ்வரா, வர்ணமிழந்தவளும், கிருபைக்குரிய மனுஷியுமான இந்த சீதையால் உமக்கு என்ன பிரயோஜனம்?(40ஆ,41அ) மஹாராஜா, உமது பாஹுபலத்தால் ஈட்டப்பட்ட, சிறந்த, திவ்யபோகங்களை, அமரசிரேஷ்டன் {தேவர்களில் சிறந்த பிரம்மன்} நிச்சயம் இவளுக்கு விதிக்கவில்லை.(41ஆ,42அ) காமமற்றவளை காமுறுபவனின் சரீரம் {ஆசையற்றவளிடம் ஆசை கொள்பவனின் உடல்} வெதும்பும்; இச்சையுடன் கூடியவளைக் காமுறுபவனுக்கு சோபனமிக்க பிரீதி {திருப்தியுடன் கூடிய மகிழ்ச்சி} உண்டாகும்” {என்றாள் தான்யமாலினி}[5].(42ஆ,43அ)

[5] நரசிம்மாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், “இங்குக் கேவலம் தான்யமாலினியை மாத்ரம் சொல்லியிருப்பினும், மந்தோதரியையும் கூட்டிக் கொள்ள வேண்டும். மேல் ஹனுமான் தான் போய்வந்த வ்ருத்தாந்தங்களை அங்கதாதிகளுக்குச் சொல்லும்பொழுது, மந்தோதரி ராவணனைத் தடுத்ததாகச் சொல்லியிருக்கின்றனன்” என்றிருக்கிறது.

இராக்ஷசி இவ்வாறு சொன்னதும், மேகத்திற்கு ஒப்பானவனும், பலவானுமான அந்த ராவணன், சிரித்துக் கொண்டே திரும்பிச் சென்றான்.(43ஆ,44அ) மேதினியை நடுங்கச் செய்வது போல் திரும்பிச் சென்ற அந்த தசக்ரீவன் {பத்துக் கழுத்துகளைக் கொண்ட ராவணன்}, பாஸ்கர வர்ணத்தில் ஜுவலிக்கும் நிவேசனத்திற்குள் {சூரிய வண்ணத்தில் ஒளிரும் தன் வீட்டிற்குள்} பிரவேசித்தான்.(44ஆ,45அ) அனைத்துப் பக்கங்களிலும் ராவணனைச் சூழ்ந்திருந்த தேவ, கந்தர்வ கன்னிகைகளும், நாககன்னிகைகளும் அந்த உத்தம கிருஹத்திற்குள் நுழைந்தனர்.(45ஆ,46அ) தர்மநெறியில் திடமாக நிற்பவளும், நடுங்கிக் கொண்டிருந்தவளுமான மைதிலியை மிரட்டிய அந்த ராவணன், மதனனால் உண்டான மோஹத்துடன் சீதையை விட்டகன்று, ஒளிர்ந்து கொண்டிருக்கும் தன் வேஷ்மத்திற்குள் {வீட்டிற்குள்} பிரவேசித்தான்.(46ஆ,இ,ஈ,உ) 

சுந்தர காண்டம் சர்க்கம் – 22ல் உள்ள சுலோகங்கள்: 46


Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இந்திரஜித் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சம்பாதி சரபங்கர் சாகரன் சாந்தை சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகி தூஷணன் நளன் நாரதர் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் மண்டோதரி மதங்கர் மந்தரை மயன் மருத்துக்கள் மஹோதயர் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாயு வாலி வால்மீகி விகடை விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை