Seetha’s Reply | Sundara-Kanda-Sarga-21 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: இராவணன் ராமனின் நட்பை நாட வேண்டும் என்றும், தன்னை ராமனிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்றும் கண்டித்து மறுமொழி கூறிய சீதை...
ரௌத்திரனான {கொடியவனான} அந்த ராக்ஷசனுடைய {ராவணனுடைய} அந்த வசனத்தைக் கேட்டுத் துன்புற்ற சீதை, மெதுவாகவும், பரிதாபமாகவும் தீனமான சுவரத்தில் மறுமொழி கூறினாள்.(1) துக்கத்தால் பீடிக்கப்பட்டவளும், தபஸ்வினியும், அழகான அங்கங்களைக் கொண்டவளும், பதிவிரதையும், பதியை மட்டுமே சிந்திப்பவளும், அழகிய புன்னகையைக் கொண்டவளுமான சீதை, நடுக்கத்துடன் அழுது கொண்டே ஒரு துரும்பை[1] {ஒரு புல்லை ராவணனுக்கும், தனக்கும்} நடுவில் வைத்து {பின்வருமாறு} மறுமொழி கூறினாள்:(2,3அ) “மனத்தை என்னிடமிருந்து திருப்பிக் கொள்வாயாக. ஸ்வஜனத்திடம் {உன் மக்களிடம் / மனைவியரிடம்} மனத்தை நிலைக்கச் செய்வாயாக. பாபம் செய்பவன், சிறந்த சித்தியை {முக்தியை அடைய விரும்புவதைப்} போல, {நீ} என்னிடம் பிரார்த்தனை செய்வது முறையல்ல.(3ஆ,4அ) மகத்தான குலத்தில் பிறந்து, புண்ணிய குலத்தில் ஏகபத்தினியாகப் புகுந்த நான், நிந்திக்கத்தக்க அகாரியத்தை செய்ய மாட்டேன்” {என்றாள் சீதை}.(4ஆ,5அ)
[1] பிபேக் திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், “யாரேனும் ஒருவர், தகாதவருடன் பேசிக் கொண்டிருக்கும்போது, நடுவில் ஒரு புல்லை வைப்பது ஒரு வழக்கமாகும்” என்றிருக்கிறது.
புகழ்பெற்றவளான வைதேஹி, அந்த ராவணனிடம் இப்படி பேசிவிட்டுப் பின்னால் திரும்பிக் கொண்டு, ராக்ஷசனிடம் மீண்டும் இந்த வசனத்தைச் சொன்னாள்:(5ஆ,6அ) “பரபாரியையும், சதீயுமான {மற்றொருவர் மனைவியும், கற்புடையவளுமான} நான், உனக்குப் பொருத்தமான பாரியை அல்ல. நல்லோரின் தர்மத்தை உற்று நோக்குவாயாக. நல்லோரின் நல்விரதத்தைப் பின்பற்றுவாயாக.(6ஆ,7அ) நிசாசரா {இரவுலாவியே}, உன்னுடையவர்களை {பாதுகாப்பது} எப்படியோ, அப்படியே அந்நியரின் தாரங்களையும் ரக்ஷிப்பாயாக. உன்னையே உவமையாக {உதாரணமாக} வைத்துக் கொண்டு, உன் தாரங்களிடம் இன்புறுவாயாக.(7ஆ,8அ) சொந்த தாரங்களிடம் திருப்தியடையாமல், தீய பிரஜ்ஞையுடனும், கலங்கிய இந்திரியங்களுடன் கூடிய சபலனுக்கு, பரபாரியைகள் {அந்நியரின் மனைவியர்} அவமானத்தையே அளிப்பார்கள்.(8ஆ,9அ)
இங்கே நல்லவர்கள் இல்லையா? அவர்களை {நல்லவர்களைப்} பின்பற்றுபவர்கள் இல்லையா? ஆசாரத்தை {ஒழுக்கத்தை} இழந்த உன் புத்தி, விபரீதமானதாகவே இருக்க வேண்டும்.(9ஆ,10அ) பொய்யில் நாட்டங்கொண்ட மனத்தால் வழிநடத்தப்படும் நீ, நீதிமிக்க நல்லோரால் சொல்லப்படும் பத்தியமான சொற்களை ராக்ஷசர்களின் அழிவுக்காகவே புறக்கணிக்கிறாய்.(10ஆ,11அ) கட்டுப்பாடற்ற மனம் கொண்டவனும், தீய பாதையில் விருப்பம் கொண்டவனுமான ராஜனை அடைந்த செழிப்பான ராஷ்டிரங்களும் முற்றான நாசத்தையே அடையும்.{11ஆ,12அ} அதே போல, சிறந்த ரத்தினங்கள் நிறைந்த இந்த லங்கையும் உன்னை அடைந்த குறுகிய காலத்தில், உன்னுடைய ஒரே பாபத்தால் முற்றிலும் நாசமடையப் போகிறது.(11ஆ-13அ)
இராவணா, தீர்க்கதரிசனம் {தொலைநோக்குப் பார்வை} இல்லாமல் பாபகர்மம் செய்பவன், தன் செயல்களால் பீடிக்கப்பட்டு முற்றிலும் நாசமடையும்போது, பூதங்கள் {உயிரினங்கள்} மகிழ்ச்சியடைகின்றன.(13ஆ,14அ) பாபகர்மங்களைச் செய்பவனான நீ இவ்வாறாகும்போது, உன்னால் அவமதிக்கப்பட்ட ஜனங்கள், “ரௌத்திரன் {கொடியவன்} அதிர்ஷ்டவசமாக இந்த விசனத்தை அடைந்தான்” என்று சொல்லி மகிழ்ச்சி அடைவார்கள்.(14ஆ,15அ) நான், ஐஷ்வரியத்தாலோ, தனத்தாலோ லோபமடையக் கூடியவளல்ல. பாஸ்கரனுடன் கூடிய பிரபையை {சூரியனுடன் கூடிய ஒளியைப்} போல ராகவருடன் இருந்து பிரிக்கப்படமுடியாதவள் நான்.(15ஆ,16அ) உலக நாதரான அவரது {ராமரின்} வழிபடத்தகுந்த புஜத்தை {தோள்களைத்} தலையணையாகக் கொண்டவளால், எப்படி அந்நியன் எவனோவொருவனின் புஜத்தைத் தலையணையாகக் கொள்ள முடியும்?(16ஆ,17அ) விரதஸ்நானம் செய்த விதிதாத்மரான விப்ரரின் {வேத விரதங்களை முழுமையாக நிறைவேற்றி நீராடிய ஆத்மஞானங்கொண்ட ஒரு ஞானியின் / பிராமணரின்} வித்தையைப் போல, வசுதாபதியான அவருக்கு {பூமியின் தலைவரான ராமருக்கு} மட்டுமே பொருத்தமான பாரியை நான்.(17ஆ,18அ)
இராவணா, வனத்திலுள்ள கஜாதிபதியுடன் {யானைகளின் தலைவனுடன்} வசிக்கும் கரேணுவை {பெண் யானையைப்} போல, ராமருடன் என்னை சேர்த்து விடுவாயாக. சாது {நலமே விளையட்டும்}.(18ஆ,19அ) நீ கோர வதத்தை விரும்பாமல், நிலைக்க விரும்பினால், புருஷரிஷபரான {மனிதர்களில் காளையான} ராமரை மித்ரராக்கி {நண்பராக்கிக்} கொள்வதே தகுந்தது.(19ஆ,20அ) தர்மஜ்ஞரான அவர் {தர்மத்தை அறிந்தவரான ராமர்}, சரணாகதவத்ஸலர் {சரணடைந்தவரிடம் அன்பு பாராட்டுபவர்} என்பது நன்கு அறியப்பட்டதே. ஜீவிதத்தை விரும்பினால், அவருடன் நீ, மைத்ரீ பாவம் கொள்வாயாக {வாழ விரும்பினால் ராமருடன் நட்பு கொள்வாயாக}.(20ஆ,21அ) சரணாகதவத்ஸலரான அவரது {தஞ்சம்புகுந்தோரிடம் இரக்கமுள்ளவரான ராமரின்} அருளை நீ வேண்டுவாயாக. நல்ல அர்ப்பணிப்புடன் அவரிடம் என்னைத் திருப்பிக் கொடுப்பாயாக.(21ஆ,22அ) இரகோத்தமரிடம் இவ்வாறு {ரகு வம்சத்தில் சிறந்த ராமரிடம் என்னை இவ்வாறு} ஒப்படைத்தால் உனக்கு ஸ்வஸ்தி {நற்பேறு கிட்டும்}. இராவணா, மாறாக நடந்தால் வதம் செய்யப்படுவாய் {கொல்லப்படுவாய்.}(22ஆ,23அ)
ஏவப்பட்ட வஜ்ரம் {உன்னை} விட்டுவைக்கலாம்; அந்தகனும் நீண்ட காலம் {உன்னைத்} தவிர்க்கலாம்; பெரும் கோபத்துடன் கூடிய உலக நாதரான அந்த ராகவர், உன் விதமானவர்களை {விட்டுவைக்க} மாட்டார்.(23ஆ,24அ) சதக்ரதுவால் ஏவப்பட்ட அசனியின் {இந்திரனால் ஏவப்பட்ட வஜ்ராயுதத்தின்} பெரும் கோஷத்தைப் போல, ராமருடைய தனுசு சப்தத்தின் பேரொலியை நீ கேட்பாய்.(24ஆ,25அ) நல்ல கணுக்களை உடையனவும், கூரிய முனைகளைக் கொண்டனவும், ராமலக்ஷ்மணர்களின் லக்ஷணங்களைக் கொண்டனவுமான கணைகள், இங்கே சீக்கிரமே பாயப்போகின்றன.(25ஆ,26அ) கங்க இறகுகள் கட்டப்பட்ட கணைகள், இந்தப் புரீயில் {நகரத்தில்} ஓரிடமும் இல்லாத வகையில், எங்கும் ராக்ஷசர்களைத் தாக்கப் போகின்றன.(26ஆ,27அ) வைனதேயன் உரகங்களை {கருடன், பாம்புகளைத் தூக்கிச் செல்வதைப்} போல, அந்த ராமகருடர் வேகமாக வந்து, ராக்ஷசேந்திர மஹாசர்ப்பங்களைத் தூக்கிச் செல்லப் போகிறார்.(27ஆ,28அ)
அசுரர்களின் ஒளிமிக்க செல்வத்தை, மூவடிகளால் {அபகரித்த} விஷ்ணுவைப் போல, அரிந்தமரான என் பர்த்தா {பகைவரை அழிப்பவரான என் கணவர் ராமர்}, உன்னிடமிருந்து என்னை மீட்டுச் செல்வார். (28ஆ,29அ) இராக்ஷசா, ஜனஸ்தானம், ராக்ஷச பலம் {படைகள்} அழிக்கப்பட்டு ஹதஸ்தானமானது {கொல்லப்பட்டவர்களின் இடமானது}. {அதன் காரணமாகவே} சக்தியற்றவனான உன்னால், {என்னைக் கடத்தி வந்த} இந்தத் தீமை செய்யப்பட்டது.(29ஆ,30அ) அதமா {இழிந்தவனே}, அந்தப் பிராதாக்கள் {உடன் பிறந்தவர்களான ராமலக்ஷ்மணர்கள்} வெளியே சென்றிருந்தபோது, சூனியமான ஆசிரமத்தில் பிரவேசித்தவனான உன்னால் கடத்தப்பட்டேன்[2].(30ஆ,31அ) புலிகளின் கந்தத்தை நுகர்வதற்கு நாயால் எப்படியோ, அப்படியே ராமலக்ஷ்மணர்களின் பார்வையில் நிற்கவும் நிச்சயம் உனக்கு சக்தியில்லை.(31ஆ,32அ) ஒரு கை கொண்ட விருத்திரன், இரு கைகளைக் கொண்ட இந்திரனுடன் போல, {நீ அவர்களுக்கு} பகைவனாக இருப்பது ஸ்திரமானதில்லை[3].(32ஆ,33அ)
[2] அஞ்சினை ஆதலான் அன்று ஆரியன் அற்றம் நோக்கிவஞ்சனை மானொன்று ஏவி மாயையால் மறைந்து வந்தாய்உஞ்சனை போதியாயின் விடுதி உன் குலத்துக்கு எல்லாம்நஞ்சினை எதிர்ந்தபோது நோக்குமோ நினது நாட்டம்- கம்பராமாயணம் 5186ம் பாடல், காட்சிப்படலம்பொருள்: அச்சமுற்றாய் என்பதால், அன்று ராமர் இல்லாத நேரம் பார்த்து, சூழ்ச்சி வடிவம்பூண்டு, ஒரு மானை ஏவிவிட்டு, மாயத் தோற்றத்தால் உன்னை மறைத்துக் கொண்டு வந்தாய். தப்பிப் பிழைக்க விரும்பினால், என்னை விட்டுவிடு; போர் செய்யும் காலத்தில், உன் குலம் முழுமைக்கும் நஞ்சு போன்ற ராமரை உன் கண்களால் பார்க்கவும் இயலுமா?
[3] நரசிம்மாசாரியர் பதிப்பில், “ராமலக்ஷ்மணர்களின் வாஸனையையாவது மோந்திருப்பாயாயின் பெரும்புலிகளின் வாஸனையைக் கண்ட அற்ப நாய் போல் நீ அவ்விடத்தில் அவர்களது ஸம்மூகத்தில் நிமிஷமாயினும் நின்றிருக்கமாட்டாய். நீ முதலே பலமில்லாமையால் பயப்பட்டிருப்பவன். அப்படிபட்ட உனக்கு ராம லக்ஷ்மணர்களிருவருடன் யுத்தம் நேருமாயின், உனக்கு ஜயமுண்டாவது ஸம்பவிப்பதொன்றன்று; யுத்தத்திற்கு ப்ரஸக்தியே இல்லை; அவர்கள் உன்னைப் பார்த்தவுடனே பலாத்காரமாக வதித்து விட்டிருப்பார்கள். யுத்தம் நேரிடினும், வ்ருத்ராஸுரனுக்கும் இந்த்ரனுக்கும் யுத்தம் உண்டாகையில், இந்த்ரனுக்கு இரண்டு கைகளும் இருக்கையால் ஒரே கையுடைய வ்ருத்ராஸுரனுக்குத் தோல்வி நேரிட்டாற்போல், அவர்கள் இருவரும் நீ ஒருவனுமாகையால் உனக்குத் தோல்வி நேரிடுவது தப்பாது” என்றிருக்கிறது. மன்மதநாததத்தர் பதிப்பின் அடிக்குறிப்பில், "வலிமைமிக்க அசுரன் விருத்திரன், தன்னுடைய ஒற்றைக் கை துண்டிக்கப்பட்ட பிறகும் நீண்ட நேரம் இந்திரனுடன் போரிட்டான் என்பது இதன் மறைகுறிப்பு" என்றிருக்கிறது.
சௌமித்ரியுடன் {லக்ஷ்மணருடன்} கூடிய என் நாதரான அந்த ராமர், அல்ப நீரை {கிரஹிக்கும்} ஆதித்யன் போல, சீக்கிரமே சரங்களால் உன் பிராணனை எடுத்துவிடுவார்.(33ஆ,34அ) குபேரனின் கிரிக்கோ {மலைக்கோ}, ஆலயத்திற்கோ சென்றாலும், அல்லது ராஜா வருணனின் சபைக்குச் சென்றாலும், அசனியில் {இடியில் இருந்து, தப்ப முடியாத} பெரும் மரத்தைப் போல், சந்தேகமில்லாமல் தாசரதியிடம் {தசரதரின் மகனான ராமரிடம்} இருந்து நீ தப்பமாட்டாய்” {என்றாள் சீதை}.(34ஆ,இ,ஈ,உ)
சுந்தர காண்டம் சர்க்கம் – 21ல் உள்ள சுலோகங்கள்: 34
Previous | | Sanskrit | | English | | Next |