Intimidation of Rakshasis | Sundara-Kanda-Sarga-23 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: இராவணனை மணந்து கொள்வது தொடர்பாக சீதையிடம் பேசிய ராக்ஷசிகள்...
சத்ருக்களை ராவணஞ்செய்ய {கதற} வைக்கும் இராஜா ராவணன், மைதிலியிடம் இவ்வாறு சொல்லிவிட்டு, சர்வ ராக்ஷசிகளுக்கும் ஆணையிட்ட பிறகு புறப்பட்டுச் சென்றான்.(1) இராக்ஷசேந்திரன் சென்று, மீண்டும் அந்தப்புரத்தை அடைந்ததும், பீமரூபங்கொண்ட {பயங்கரத் தோற்றமுடைய} அந்த ராக்ஷசிகள் சீதையை நோக்கி விரைந்தனர்.(2)
சீதையை அணுகியதும், குரோதத்தில் மூர்ச்சித்த ராக்ஷசிகள், வைதேஹியிடம் கடுமொழியுடன் கூடிய இந்தச் சொற்களை சொன்னார்கள்:(3) “சீதே, பௌலஸ்தியரும் {புலஸ்தியரின் குலவழி வந்தவரும்}, மிகச் சிறந்தவரும், மஹாத்மாவும், தசக்ரீவங்களுடன் {பத்துக்கழுத்துகளுடன்} கூடியவருமான ராவணனின் பார்யாத்வத்தை {மனைவி என்ற நிலையை} நீ பெரிதாக மதிக்கவில்லை” {என்றனர்}.(4)
பிறகு குரோதத்தால் கண்கள் சிவந்த ஏகஜடை என்ற ராக்ஷசி, கரதலோதரீயான சீதையை அழைத்து {உள்ளங்கைகளில் பற்றிவிடக்கூடிய அளவே வயிற்றைக் கொண்டவளான சீதையை அழைத்து, இந்த} வாக்கியத்தைச் சொன்னாள்:(5) “ஆறு பிரஜாபதிகளில்[1], எவர் பிரம்மனின் மானஸபுத்திரரான {மனத்தில் பிறந்த} நான்காவது பிரஜாபதியோ, அவரே புலஸ்தியர் என்று அறியப்படுகிறார்.(6) அந்தப் புலஸ்தியரின் மானஸஸுதன், {மனத்தில் பிறந்த மகன்}, மஹரிஷியாகவும், தேஜஸ்வியாகவும், பிரஜாபதிக்கு சமமான பிரபையுடன் கூடியவராகவும், விஷ்ரவஸ் என்ற பெயரைக் கொண்டவராகவும் அறியப்பட்டார்.(7) விசாலாக்ஷி {நீள்விழியாளே}, சத்ருக்களை ராவணஞ்செய்ய {கதற} வைப்பவரான ராவணர், அவரது புத்திரனே ஆவார். நீ அவரது பாரியையாக {ராவணரின் மனைவியாகத்} தகுந்தவள். சாருசர்வாங்கி {அங்கங்கள் அனைத்தும் அழகாகக் கொண்டவளே}, நான் சொல்லும் வாக்கியத்தை நீ ஏற்காமலிருப்பதேன்?” {என்று கேட்டாள் ஏகஜடை}.(8,9அ)
[1] பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், “உரைக்கு உரை பிரஜாபதிகளின் எண்ணிக்கை வேறுபடுகிறது. பதினொன்று, அல்லது பதினான்கு என்பதே அதிகம் வழக்கத்தில் உள்ள எண்ணிக்கை. எனவே இங்கே குறிப்பிடப்படும் அறுவரைத் தீர்மானிப்பது கடினம்” என்றிருக்கிறது.
பிறகு, ஹரிஜடை என்ற பெயரைக் கொண்டவளும், பூனை போன்ற கண்களைக் கொண்டவளுமான ராக்ஷசி, கோபத்துடன் நயனங்களை உருட்டிக் கொண்டே {இந்த} வாக்கியத்தைச் சொன்னாள்:(9ஆ,10அ) எவரால் முப்பத்துமூன்று தேவர்களும்[2], தேவராஜனும் வெல்லப்பட்டனரோ அந்த ராக்ஷசேந்திரனின் பாரியை ஆவதற்கு நீ தகுந்தவள்” {என்றாள் ஹரிஜடை}.(10ஆ,11அ)
[2] பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், “அஷ்ட வசுக்கள், பதினோரு ருத்திரர்கள், பனிரெண்டு ஆதித்யர்கள், இரண்டு அசுவினிகள் {ஆகியோர் சேர்ந்து முப்பத்துமூன்று தேவர்கள்}” என்றிருக்கிறது. சில பல பதிப்புகளில் இந்த “முப்பத்துமூன்று தேவர்கள்”, என்பது “முப்பத்துமுக்கோடி” தேவர்கள் என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
பிறகு, பிரகஸை என்ற பெயரைக் கொண்டவளும், குரோதத்தில் மூர்ச்சித்தவளுமான ராக்ஷசி, அப்போது {சீதையை} அச்சுறுத்தியபடியே, இந்த கோரச் சொற்களைச் சொன்னாள்:(11ஆ,12அ) “வீரியத்தில் செருக்குடைவரும், போர்களில் புறமுதுகிடாதவரும், வீரியம் நிறைந்த பலவானுமான சூரரின் பார்யாத்வத்தை {மனைவி என்ற நிலையை} நீ அடைய மறுப்பதேன்?(12ஆ,13அ) மஹாபலவானான ராஜா ராவணர், பிரியத்திற்கும், மதிப்பிற்குமுரிய பாரியையை விட்டு வருகிறார்; அனைவரிலும் நீயே மஹாபாக்யவதி.(13ஆ,14அ) இராவணர், நானாவித ரத்தினங்களால் சோபிப்பதும், ஆயிரம் ஸ்திரீகளால் நிறைந்ததுமான அந்தப்புரத்தை விட்டு உன்னிடம் வருகிறார்” {என்றாள் பிரகஸை}.(14ஆ,15அ)
விகடை என்ற பெயரைக் கொண்ட மற்றொரு ராக்ஷசி {பின்வரும் இந்த} வாக்கியத்தைச் சொன்னாள்,{15ஆ} “எவரால் எண்ணற்ற தேவர்களும், நாக, கந்தர்வ, தானவர்களும் யுத்தத்தில் போரிட்டு வெல்லப்பட்டனரோ, அவர் உன் பக்கம் வந்திருக்கிறார்.(15ஆ,16) அதமையே {தீயவளே}, அனைத்தையும் நிறைவேற்றியவரும், மஹாத்மாவும், ராக்ஷசேந்திரருமான அந்த ராவணரின் பார்யாத்வத்தை {மனைவி என்ற நிலையை} நீ இப்போது விரும்பாதிருப்பதேன்?” {என்றாள் விகடை}.(17)
பிறகு, துர்முகி என்ற பெயரைக் கொண்ட ராக்ஷசி, {இந்த} வாக்கியத்தைச் சொன்னாள், “நீண்டு அகன்ற கடைக்கண்களைக் கொண்டவளே, எவருக்கு அஞ்சி சூரியனும் தபிக்க மாட்டானோ, எவருக்கு அஞ்சி, மாருதனும் வீசமாட்டானோ, அவருக்கு {ராவணருக்கு} நீ உடன்படாதிருப்பதேன்?(18,19அ) எவரிடம் கொண்ட பயத்தால், மரங்கள் புஷ்பமாரியையும், சைலங்களும், மேகங்களும் நீரையும், விரும்பியபோதெல்லாம் பொழியுமோ, அழகிய புருவங்களைக் கொண்டவளே,{19ஆ,20அ} பாமினி {அழகிய பெண்ணே}, அத்தகைய ராஜராஜரும், நைர்ருதராஜருமான[3]{20ஆ} ராவணரின் பாரியையாவதற்கு, உன் புத்தியை அமைக்காதிருப்பதேன்?(19ஆ-21அ) ஸுஸ்மிதே {நல்ல புன்னகை கொண்டவளே}, பாமினி {அழகிய பெண்ணே}, தேவி, உண்மையில் உன் நன்மைக்காகச் சொல்லப்பட்ட நல்ல வாக்கியத்தைப் புரிந்து கொள்வாயாக; இல்லையெனில் நீ இல்லாமல் போவாய்” {என்றாள் துர்முகி}.(21ஆ,22)
[3] தமிழில், தர்மாலயப் பதிப்பிலும், நரசிம்மாசாரியர் பதிப்பிலும், ஆங்கிலத்தில் மன்மதநாததத்தர், கேஎம்கே மூர்த்தி, கோரக்பூர் பதிப்புகளிலும் “நைர்ருதராஜன்” என்பதற்கு, “ராக்ஷச ராஜன்” என்ற பொருள் கொடுக்கப்பட்டிருக்கிறது. பிபேக்திப்ராய் பதிப்பில், “நைர்ருதர்களின் ராஜன்” என்று கொடுக்கப்பட்டிருக்கிறது, அதற்கும் “ராக்ஷசராஜன்” என்றே பொருள் வரும். வி.வி.சுப்பாராவ்-பி.கிரி ஆகியோரின் ஆங்கிலப்பதிப்பில், “தென்மேற்கின் ராஜன்” என்று கொடுக்கப்பட்டிருக்கிறது. தெற்கு, அல்லது தென்கிழக்கு என்று சொல்லப்பட்டிருந்தாலும், ராமாயண கால லங்காபுரி, இன்றைய இலங்கையைக் குறிக்கும் என்று கொள்ளலாம். இது போன்ற விளக்கங்களே சில ஆய்வாளர்களை, “ராமாயண லங்காபுரி, ஆரியவர்தத்திற்குத் தென்மேற்கே, அதாவது குஜராத்திற்குத் தெற்கே அரபிக்கடலில் இருந்தது” என்று ஏற்க வைக்கிறது. இருப்பினும், இந்த இடத்தில், “ராக்ஷச ராஜன்” என்பதே சரியான பொருளாக இருக்க வேண்டும். கவலை, முதுமை, மரணம் ஆகியவற்றின் தலைவனான நைர்ருதன், தென்மேற்குத் திசையின் லோகபாலன் என்பதும், நிர்ருதி என்ற ஒரு ராக்ஷசனின் வழிவந்தவர்கள் நைர்ருதர்கள் என்பதும் இங்கே கவனத்தில் கொள்ளத்தக்கது.
சுந்தர காண்டம் சர்க்கம் – 23ல் உள்ள சுலோகங்கள்: 22
Previous | | Sanskrit | | English | | Next |