Wednesday, 31 May 2023

சுக்ரீவனை விரட்டிய வாலி | கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் - 10 (35)

Vali banishes Sugriva | Kishkindha-Kanda-Sarga-10 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: வாலியுடன் ஏற்பட்ட பகை, ராஜ்ஜியத்தில் இருந்து தான் விரட்டப்பட்டது ஆகியவற்றுக்கான காரணங்களை ராமனிடம் சொன்ன சுக்ரீவன்...

Sugreeva falls at the feet of Vali who returned from cave

{சுக்ரீவன் தொடர்ந்தான்}, "அப்போது குரோதத்தால் நிறைந்து, மனங்கலங்கி வந்த என்னுடன்பிறந்தானிடம் {வாலியிடம்}, நலம் விரும்பி {பின்வருமாறு} நான் அருள் வேண்டினேன் {மன்றாடினேன்}:(1) "அனாதைகளுக்கு ஆனந்தமளிப்பவரே {வாலியே}, அதிர்ஷ்டவசமாக நீர் பகைவனைக் கொன்று, குசலமாக {நலமாகத்} திரும்பிவந்தீர். அனாதையான {நாதனற்றவனான} எனக்கு நீரே ஏக நாதனாவீர்.(2) சலாகைகள் {கம்பிகள்} பலவற்றைக் கொண்டதும், உதித்த பூர்ண சந்திரனைப் போன்றதும், வெண்சாமரத்துடன் கூடியதும், என்னால் ஏந்தப்படுவதுமான இந்தக் குடையை ஏற்பீராக.(3) 

நிருபரே {மன்னரே}, ஓராண்டு அந்த பிலத்வாரத்தில் {வளையின் வாயிலில்} காத்திருந்து, அந்த பிலத்தின் துவாரம் {வளையின் வாயில்} வழியாக ரத்தம் வழிவதைக் கண்டு வருந்தினேன். பிறகு, சோகத்தில் மூழ்கிய ஹிருதயத்துடனும், பெருங்கலக்கமடைந்த இந்திரியங்களுடனும் அந்த பிலத்வாரத்தை சைல சிருங்கத்தால் {மலைச்சிகரத்தால்} மூடிவிட்டு, அந்த தேசத்தில் {இடத்தில்} இருந்து நகர்ந்து மீண்டும் கிஷ்கிந்தையில் பிரவேசித்தேன்.(4-6அ) இங்கே என்னைச் சோர்வுடன் கண்ட நகரமக்களும், மந்திரிகளும் {எனக்கு} அபிஷேகம் செய்து வைத்தனரேயன்றி என் விருப்பத்தாலல்ல. எனவே இதை நீர் பொறுத்துக் கொள்வதே தகும்.(6ஆ,7அ) 

பெருமைக்குரிய ராஜா நீரே. நான் முன்பு போலவே இருப்பேன். என்னுடைய இந்த ராஜபாவம் {அரசநிலை} நீர் இல்லாததால் ஏற்பட்டது. அமைச்சர்களும், நகரமக்களும், நகரமும் கண்டகமின்றி {முட்களின்றி / இடையூறுகளின்றி} நிலைநிற்கின்றன.(7ஆ,8) நியாசபூதமான {அடைக்கலமாக இருந்த} இந்த ராஜ்ஜியத்தை நான் உமக்குத் திருப்பித் தருகிறேன். சத்ருசூதனரே {பகைவரை அழிப்பவரே}, சௌம்யரே {மென்மையானவரே}, என்னிடம் கோபங்கொள்ளாதீர்.(9) இராஜரே, சிரம்பணிந்து, கைக்கூப்பி உம்மை நான் யாசிக்கிறேன். மந்திரிகளும், புரவாசிகளும் ஒன்று சேர்ந்து, சூனியமான தேசத்தைக் கட்டுப்பாட்டில் வைப்பதற்காக, என்னை வலுக்கட்டாயமாக இந்த ராஜபாவத்தில் {அரசநிலையில்} நியமித்தனர்" {என்றேன்}.(10,11அ)

அந்த வானரன் {வாலி}, இவ்வாறு சினேகத்துடன் பேசும் என்னை நிந்தித்து, "உனக்கு ஐயோ" என்று சொல்லி அந்தந்தவென {சொல்லக்கூடாத} பலவற்றைச் சொன்னான்.(11ஆ,12அ) சாதாரண மக்களையும், {அவனுக்கு} சம்மதமான {தனக்கு இணக்கமான} மந்திரிகளையும் அழைத்து, நண்பர்களுக்கு மத்தியில் என் மீது ஹிதமற்ற கடும் வாக்கியங்களை வீசினான்:(12ஆ,13அ) "பூர்வத்தில் மஹாசுரனான மாயாவி, கடும் யுத்தத்தை விரும்பியவனாக அந்த ராத்திரியில் என்னை அழைத்ததை நீங்கள் அறிவீர்கள்.(13ஆ,14அ) அவன் அவ்வாறு சொன்னதைக் கேட்டு நான் நிருபாலயத்தில் {அரசமாளிகையில்} இருந்து வெளியேறினேன். உடன்பிறந்த இந்த பயங்கரனும் என்னைத் துரிதமாகப் பின்தொடர்ந்து வந்தான்.(14ஆ,15அ) அந்த மஹாபலவான் {மாயாவி}, ராத்திரியில் இருவராக வரும் என்னைக் கண்டு ஓடினான். நெருங்கிச் சென்ற எங்களைக் கண்டதும் அச்சத்தால் பீடிக்கப்பட்ட அவன், வேகமாக ஓடிச் சென்று ஒரு மஹாபிலத்திற்குள் {வளைக்குள்} புகுந்தான்.(15ஆ,16) 

அவன் அந்த கோரமான மஹாபிலத்திற்குள் பிரவேசித்ததை அறிந்ததும், என்னுடன் பிறந்தவனும், குரூரத் தோற்றம் கொண்டவனுமான இவனிடம் நான் {பின்வருமாறு} சொன்னேன்:(17) "{இவனைக்} கொல்லாமல் இங்கிருந்து புரிக்கு {தலைநகருக்குத்} திரும்பும் சக்தி எனக்கில்லை. நான் இவனைக் கொல்லும் வரை, நீ பிலத்வாரத்தில் காத்திருப்பாயாக" {என்றேன்}.(18) இவன் அங்கே {வளையின் வாயிலில்} நிற்பான் என்ற நம்பிக்கையில் நான் புகுதற்கரிய அந்த பிலத்திற்குள் {வளைக்குள்} பிரவேசித்தேன். அங்கே அவனை {மாயாவியைத்} தேடுவதிலேயே ஓராண்டு கடந்தது.(19) பயத்தால் பீடிக்கப்பட்ட அந்த சத்ருவை {மாயாவியைக்} கண்ட உடனேயே கவலையின்றி பந்துக்கள் அனைவருடன் சேர்த்து அவனைக் கொன்றேன்.(20) 

கதறும் அவனது வாயில் இருந்து பூதலத்தில் வழிந்த உதிரம் பெருகி அந்த பிலத்தை {வளையை} நிறைத்து அதைக் கடப்பதற்கு அரியதாக்கியது.(21)  விக்ராந்தனான அந்த சத்ருவை {படையெடுத்து வந்த பகைவனான அந்த மாயாவியை} நான் சுகமாகக் கொன்ற பிறகு, பிலத்தின் முகம் மூடப்பட்டிருந்ததால் வெளியேறும் வழியைக் கண்டேனில்லை.(22) "சுக்ரீவா" என்று மீண்டும் மீண்டும் உரக்கக் கதறினாலும், எனக்கு மறுமொழி ஏதும் வராததால் நான் பெருந்துக்கமடைந்தேன்.(23) என் பாதங்களால் பலமுறை உதைத்து {அந்தப் பாறையை} நொறுக்கினேன். பிறகு அந்தப் பாதையில் வெளியேறி இங்கே மீண்டும் வந்தடைந்தேன்.(24) உடன்பிறந்த அன்பை மறந்து, தனக்கு ராஜ்ஜியத்தை விரும்பி, கற்பனையில் ஆழ்ந்தக் கொடியவனான இந்த சுக்ரீவனால் நான் அங்கே அடைக்கப்பட்டிருந்தேன்" {என்றான் வாலி}.(25)

வானரன் வாலி, அங்கே இதைச் சொல்லிவிட்டு, என்னைக் குறித்த மனக்கலக்கமேதும் இல்லாமல், என்னை வசிப்பதற்கோர் இடமில்லாதவனாக ஏக வஸ்திரத்துடன் {ஒரே ஆடையுடன்} விரட்டிவிட்டான்.(26) இராகவரே, அவன் என்னை அடித்து {விரட்டி} தாரத்தையும் {மனைவியையும்} கவர்ந்து கொண்டான். நான் அந்த பயத்தால் வனங்கள், ஆர்ணவங்களுடன் {கடல்களுடன்} கூடிய இந்த மஹீ முழுவதிலும் திரிந்து வருகிறேன்.(27) பாரியை {மனைவி ருமை} பறிக்கப்பட்ட துக்கத்தில் இருக்கும் நான், வேறொரு காரணத்தால் வாலியால் புகமுடியாத சிறந்த கிரியான ரிச்யமூகத்தில் பிரவேசித்தேன்.(28) இராகவரே, இந்த மஹத்தான வைரத்தின் கதை அனைத்தையும் சொல்லிவிட்டேன். அப்பாவியான எனக்கு வாய்த்த விசனத்தை {துன்பத்தைப்} பார்ப்பீராக.(29) சர்வலோகபயாபஹரே {உலகங்கள் அனைத்திற்கும் அபயம் அளிப்பவரே}, வாலியிடம் கொண்ட பயத்தால் பீடிக்கப்பட்ட எனக்கு, அவனை நிக்ரஹம் செய்து {அழித்து} நீர் அருள்புரிய வேண்டும்[1]" {என்றான் சுக்ரீவன்}.(30)

[1] முரணுடைத் தடக் கை ஓச்சி 
முன்னவன் பின்வந்தேனை
இருள்நிலைப் புறத்தின்காறும் உலகு 
எங்கும் தொடர இக் குன்று
அரண் உடைத்து ஆகி உய்ந்தேன்
ஆர் உயிர் துறக்கலாற்றேன்
சரண் உனைப் புகுந்தேன் என்னைத்
தாங்குதல் தருமம் என்றான்

- கம்பராமாயணம் 3810ம் பாடல், நட்பு கோட் படலம்

பொருள்: "வலிமையுள்ள பெரிய கையை ஓங்கிக் கொண்டு என் அண்ணன் {வாலி}, தன் பின் வந்த என்னை, இருட்டின் இருப்பிடமான இவ்வுலகின் புறத்திலும், உலகங்கள் அனைத்திலும் தொடர்ந்து துரத்த, இம்மலையை அரணாகக் கொண்டு உயிர் பிழைத்தேன். ஆருயிரைத் துறக்க முடியாத நான், உன்னைச் சரண் புகுந்தேன். என்னை ஆதரிப்பதே தர்மம்" என்றான் {சுக்ரீவன்}.

{சுக்ரீவனால்} இவ்வாறு சொல்லப்பட்டதும், தர்மஜ்ஞனும் {தர்மத்தை அறிந்தவனும்}, தேஜஸ்வியுமானவன் {ராமன்}, புன்னகைத்தவாறே தர்மத்திற்கு இணக்கமான சொற்களை சுக்ரீவனிடம் சொல்ல ஆரம்பித்தான்:(31) "துர்விருத்தம் கொண்ட {தீய நடத்தை கொண்ட} அந்த வாலி, அமோகமானவையும் {வீண்போகாதவையும்}, கூர்மையானவையும், சூரியனைப் போன்றவையுமான என்னுடைய இந்தச் சரங்களால் வீழ்வான்.(32) உன் பாரியையை {மனைவியான ருமையை} அபகரித்த வாலியை எதுவரை நான் பார்க்கவில்லையோ, அதுவரையே பாபாத்மாவும், தூஷக சாரித்ரம் {நிந்திக்கத்தக்க வரலாற்றைக்} கொண்டவனுமான அவன் ஜீவித்திருப்பான்.(33) நீ சோக சாகரத்தில் மூழ்கியிருப்பதை என் ஆத்ம அனுமானத்தால் பார்க்கிறேன். உன்னை நான் {அதைக்} கடக்க வைப்பேன். {இழந்ததை} நீ நிச்சயம் முழுமையாக மீட்பாய்" {என்றான் ராமன்}.(34)

தன் மகிழ்ச்சியையும், பௌருஷத்தையும் {ஆண்மையையும்} அதிகரிக்கும் அந்த சொற்களைக் கேட்ட சுக்ரீவன், பரமபிரீதியடைந்து, இந்த மஹத்தான வாக்கியங்களைச் சொன்னான்.(35)

கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் – 10ல் உள்ள சுலோகங்கள்: 35

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அங்கதன் அசுவபதி அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அனசூயை அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இல்வலன் உமை கங்கை கசியபர் கபந்தன் கபிலர் கரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் குஹன் கேசினி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சரபங்கர் சாந்தை சித்தார்த்தர் சித்ரரதன் சிவன் சீதை சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சூர்ப்பணகை சூளி தசரதன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திலீபன் துந்துபி தூஷணன் நளன் நாரதர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பிரம்மதத்தன் பிரம்மன் பிருகு மதங்கர் மந்தரை மயன் மருத்துக்கள் மஹோதயர் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மோஹினி யுதாஜித் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விபாண்டகர் விராதன் விஷ்ணு விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஹனுமான் ஹிமவான்