Search failed | Kishkindha-Kanda-Sarga-47 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: கிழக்கு, வடக்கு, மேற்குத் திசைகளில் தோல்வியடைந்த தேடல்; சீதை குறித்த செய்தி ஏதும் இல்லாமல் வினதன், சதபலி, சுஷேணன் ஆகியோர் திரும்பி வந்தது...
Bing - Artificial Intelligence Picture | செயற்கை நுண்ணறிவின் மூலம் "பிங்" வலைத்தளத்தில் கிடைத்த படம் |
கபிராஜனால் ஆணையிடப்பட்ட கபிகுஞ்சரர்கள் {குரங்குகளின் மன்னனான சுக்ரீவனால் ஆணையிடப்பட்டவர்களும், குரங்குகளில் யானைகளைப் போன்றவர்களுமான அந்த வானரர்கள்}, எப்படி சொல்லப்பட்டதோ அப்படி வைதேஹியை தரிசிக்கும் அர்த்தத்திற்காக எங்கும் சென்றனர்.(1) அவர்கள், சரஸ்கள் {பொய்கைகள்}, சரிதங்கள் {ஆறுகள்}, கக்ஷங்கள் {இருளடர்ந்த வனங்கள்}, ஆகாசம், நகரங்கள், அதேபோல நதிகளும் கடப்பதற்கரிய சைலங்கள் {மலைகள்} என எங்கும் முழுமையாகத் தேடினர்.(2) சர்வ வானரயூதபர்களும், சுக்ரீவனால் நன்கு சொல்லப்பட்ட சைலங்கள் உள்ளிட்ட, வனங்களிலும், கானகங்களிலும், தேசங்களிலும் கவனமாகத் தேடினர்.(3) சர்வ வானரர்களும், திவசங்களில் {பகல் வேளைகளில்} சீதையை அடைவதில் திடத்துடன் தேடினர்; நிசாகாலங்களில் {இரவு வேளைகளில்} மேதினியில் ஒன்றுகூடினர்.(4) அந்த வானரர்கள், அந்த நாட்கள் அனைத்திலும், சர்வ ருதுக்களிலும் பழங்களை விளைவிக்கும் மரங்களைக் கொண்ட தேசங்களை {இடங்களை} அடைந்து, அங்கே இரவு வேளைகளில் தங்கள் படுக்கையை அமைத்துக் கொண்டனர்[1].(5)
[1] தர்மாலயப் பதிப்பில், “வானரர்கள் எல்லோரும் சீதாதேவியைக் கண்டுபிடிப்பதில் ஊக்கமுடையவர்களாய் பகலில் பூமியில் தேடித்திரிந்து, இரவுகளில் ஓரிடத்தில் கூடியிருப்பார்கள். அந்த வானரர்கள் எல்லா தேசங்களிலும் ஒவ்வொரு தினங்களிலும், எல்லா ருதுக்களிலும் வேண்டியவைகளையளிக்கவல்ல பழங்கள் செறிந்த மரங்களை இரவில் அடைந்து உறங்கினார்கள்” என்றிருக்கிறது. நரசிம்மாசாரியர் பதிப்பில், “அந்த வானரர்கள் அந்தந்த இடங்களில் அம்மாதத்திலுள்ள எல்லாத் தினங்களிலும் பகல் முழுவதும் ஸீதையைத்தேடி, ராத்ரிகளில் ஸமஸ்தருதுக்களிலும் பூத்துக் காய்த்துப் பழுத்திருக்கின்ற வ்ருக்ஷங்களைச் சேர்ந்து, அங்குப் படுக்கையேற்படுத்திப் படுத்துக் கொண்டு வந்தனர்” என்றிருக்கிறது. தாதாசாரியர் பதிப்பில், “எல்லோரும் இவ்வண்ணம் பகல் முழுதும் ஆகாயத்தின்மேற்சென்று தேடி இரவில் பாரிலிறங்கினர்கள்; இவ்வண்ணம் புறப்பட்ட தினம் முதலாகக் கொண்டு, ஒரு மாசம் வரையிலும் தேடியெங்கும் பிராட்டியைக் காணாமல் ஆசையொடுங்கி மீண்டெய்தி, மஹாராஜரைக் கண்டு செய்தியுரைசெய்து, மாலியவந்த மலை சேர்ந்தனர்கள்” என்றிருக்கிறது. கோரக்பூர், கீதா பிரஸ் பதிப்பில், “சீதாப்பிராட்டியைக் கண்டுபிடிப்பதில் பேரார்வமுடைய அந்த வானரர்கள், பகல் முழுவதும் பூமியில் சுற்றித் திரிந்து தேடிவிட்டு, இரவுகளில் ஓரிடத்தில் வந்து கூடுவார்கள். பகல் முழுவதும் வெவ்வேறு இடங்களில் சுற்றித் திரிந்துவிட்டு, எல்லாக் காலங்களிலும் பழங்களைக் கொடுக்கக்கூடிய மரங்கள் இருக்கும் இடத்தின் அருகே வந்து களைப்பாறினார்கள்” என்றிருக்கிறது. இந்த அடிக்குறிப்பில் உள்ளவை அனைத்தும், தமிழில் நாம் ஒப்புநோக்கும் பதிப்புகளில் இருந்து மட்டுமே தரப்பட்டிருக்கின்றன.
அந்த நாள் முதலாகக் கொண்டு, ஒரு மாசத்திற்குள் நிராசையுடன் கூடிய அந்த கபிகுஞ்சரர்கள் பிரஸ்ரவணத்தை {நம்பிக்கையிழந்தவர்களும், குரங்குகளில் யானைகளுமான அந்த வானரர்கள், மால்யவத மலையை} அடைந்து, கபிராஜனை {குரங்குகளின் மன்னனான சுக்ரீவனைச்} சந்தித்தனர்.(6) மஹாபலவானான வினதன், {சுக்ரீவனால்} எப்படிச் சொல்லப்பட்டதோ, அப்படி அமைச்சர்கள் சகிதனாகப் பூர்வ {கிழக்குத்} திசையில் தேடி, சீதையைக் காணாமல் திரும்பிவந்தான்.(7) பிறகு, வீரனும், மஹாகபியுமான {பெருங்குரங்குமான} சதபலி, சைனியத்துடன் கூடியவனாக உத்தர {வடக்குத்} திசை முழுவதையும் தேடிவிட்டுத் திரும்பிவந்தான்.(8) வானரர்களுடன் கூடிய {சுக்ரீவனின் மாமனாரும், தாரையின் தந்தையுமான} சுஷேணன், பஷ்சிம {மேற்குத்} திசையைத் தேடிவிட்டு, மாசம் பூர்ணமடைந்ததும், திரும்பி வந்து சுக்ரீவனை அடைந்தான்.(9)
இராமன் சகிதனாக {மால்யவத மலையின்} பிரஸ்ரவண சிகரத்தில் அமர்ந்திருந்த அந்த சுக்ரீவனை அடைந்ததும், வணங்கிவிட்டு {அவர்கள் அனைவரும்} இதைச் சொன்னார்கள்:(10) “சர்வ பர்வதங்களிலும், கஹனங்களிலும் {ஆழமான பகுதிகளிலும்}, வனங்களிலும், ஆறுகளிலும், சாகர அந்தங்களிலும் {கடலின் எல்லைகளிலும்}, அதே போல சர்வ ஜனபதங்களிலும் {நாடுகளிலும் / கிராமங்களில்} தேடிவிட்டோம்.(11) நீர் புகழ்ந்து சொன்ன அனைத்துக் குகைகளிலும் தேடிவிட்டோம். லதைகள் {கொடிகள்} படர்ந்து மூடிக்கிடந்த மஹாகுல்மங்களிலும் {பெரும்புதர்களிலும்} தேடிவிட்டோம்.(12) கஹனங்களிலும் {ஆழ்ந்த காடுகளிலும்}, துர்கங்களிலும் {கடப்பதற்கரிய இடங்களிலும்}, சமமற்ற தேசங்களிலும் அதிபிரமாணம் கொண்ட {பேருடல் படைத்த} உயிரினங்களை வேட்டையாடி, கஹன தேசங்களிலும் {கடப்பதற்கரிய இடங்களிலும்} மீண்டும் மீண்டும் தேடிவிட்டோம்.(13) வானரேந்திரரே, உதார ஸத்வ அபிஜனனான {சிறந்த நற்குணங்களுடன் பிறந்த} அந்த ஹனுமான், மைதிலியைக் குறித்து அறிந்து கொள்வான். சீதை எந்த திசையில் சென்றாளோ, அப்படியே வாயுசுதனான ஹனூமானும் சென்றிருக்கிறான்” {என்றனர்}.(14)
கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் – 47ல் உள்ள சுலோகங்கள்: 14
Previous | | Sanskrit | | English | | Next |